Isaithene 10
- Krishnapriya Narayan

- Oct 11
- 4 min read
10. உன்னை நினைத்து…
நிரஞ்சனாவின் அக்காவுடைய திருமணம் அவர்கள் சொந்த ஊரான மதுரையில் நடந்துமுடிந்திருந்தது. சென்னையில் ஒரு கிரான்ட் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
விடுமுறை நாட்கள் என்பதால் தேன்மொழிக்குத் திருமணத்தில் கலந்துகொள்ள வசதியாகிப் போனது. நிரஞ்சனா வீட்டில் ஏற்பாடு செய்திருந்த பேருந்திலேயே மதுரை சென்று திருமணத்தில் கலந்துகொண்டாள். அங்கிருந்து நேராக திருச்சி சென்று அங்கே இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினாள்.
திருமணத்தில் எந்த அரட்டையும் அடிக்கக் கூடாது, அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத ஏச்சுப் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என நிரஞ்சனா முதலிலேயே படித்துப் படித்துச் சொல்லியிருந்தாள். எனவே அப்படியே பதவிசாக அடக்கி வாசித்துவிட்டு, விட்டால் போதும் என்று ஓடி வந்திருந்தாள்.
எதையாவது சொல்லி ரிசப்ஷனுக்கு வராமல் தப்பித்து ஓடிவிடலாம் என்று கூட அவளுக்குத் தோன்றிவிட்டது . ஆனாலும் அதைச் செய்ய அவளால் இயலவில்லை, காரணம் பாலா.
அவன் மதுரை திருமணத்துக்கு வரவில்லை. ஆனால் ரிசப்ஷனில் அவனுடைய குழுவின் இன்னிசை நிகழ்ச்சியல்லவா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?!
கண்ட நாள் முதலாய் அவன்மீது ஒருவித ஈர்ப்பு அவளுக்கு உண்டாகித் தொலைத்துவிட்டதே. அவனது பார்வையில் புதுவித கிரக்கம். அவனது தோற்றத்தில் ஒருவித மயக்கம். அதைவிட அவனுடைய குரலில் அதீதப் போதை. அவனை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இதை விட்டால் வேறு வாய்ப்பும் அமையாது. சரி, சென்று தொலைக்கலாம் என முடிவு செய்தாள்.
இதற்காகவே ஒரு புது லெஹங்காவும், அதற்குப் பொருத்தமான ஃபேஷன் ஜுவெல்லரி அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தாள். வழக்கத்தை விட, இன்னும் அதிக சிரத்தை எடுத்து தன்னை அலங்கரித்துக் கொண்டு, பீஜியிலிருந்து கிளம்பினாள்.
***********
பணம் கொடுத்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கி திருமண மாளிகைக்குள் நுழைந்தாள் தேன்மொழி.
பாப்கார்ன், சேட் உணவுகள், மெஹந்தி, பலூன் என மண்டபத்தில் வெளிப்பகுதியில் இருக்கும் காலி இடத்தில் ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன, சுற்றி மக்கள் கூட்டம்.
உணவுப் பண்டங்களின் மணம் பசியைத் தூண்டியது. அவளுக்கு பானி பூரி சாப்பிடலாம் என்றும் தோன்றியது. ஆனால் சாப்பிட்டால் லிப்ஸ்டிக் கலைந்து போய் மறுபடியும் போட வேண்டியதாகிவிடும். எனவே வேண்டாம் என்று மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலம் வந்திருந்த பெண்கள்தான் எல்லோரையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தனர். தெரிந்த முகங்கள் எதுவும் கண்களில் தென்படபில்லை. ‘எங்க போய் தொலைச்சா இந்த நிரஞ்சனா? கல்யாணம் என்னவோ இவ அக்காவுக்கு, ஆனா இவதான் ஓவர் சீன போட்டுட்டு திரிஞ்சிட்டு இருக்கா’ என மனதுக்குள் கடுப்படித்தபடி, அலங்கரிக்கப்பட்ட மேடையை நோக்கினாள். காலியாக இருந்தது.
மற்றொரு பக்கம் இசைக்குழுவினர், வாத்தியங்களைப் பொருத்தி, இன்னிசை நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவளுடைய கண்கள் பாலாவைத் தேடிச் சுழன்றன, அவன் அங்கே இல்லை.
‘ப்ச்… கெஸ்ட் எல்லாம் வந்து காத்துட்டு இருக்காங்க. வரவேடியவங்க யாரும் வரல’ என உள்ளுக்குள்ளேயே சலித்தாள்.
சரியாக அந்த நொடி, “வாவ்” என்றபடி அவளுக்கு அருகில் வந்து நின்று பெரிதாகப் புன்னகைத்தான் ஆனந்த். கருமி போன்று பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“ஏஞ்சல் மாதிரி இருக்க தேனு” என்று அவன் சொன்னதில் “தேங்க்ஸ்” என்றாள்.
“உலகத்து ஒளியெல்லாம் ஒன்றாகக் கூடியதோ!
பூக்களாய் உருவெடுத்து நீயாக மாறியதோ!
கூட்டத்தில் நீ மட்டும் தனியாக மின்னுவது இதனாலோ…
வேறெதனாலோ?
புயலான உன் விழி வீச்சு எனைச் சுழன்றடித்துத் தாக்கிடவே…
ஆகாயக் கடலும் உன் விழிகளுக்குள் மூழ்கியதோ!
ஓரிடத்தில் நிற்காத காற்றைப்போலச் சுற்றிச் சுழல்பவளே!
பார்க்காமல் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு…
அடித்தே எனை சாய்த்தவளே!
என் இனிய என் தேனிசையே!
என்னுள்ளிருந்து இசைப்பாயோ?
இன்றி… சுருதி பேதமாய் எனை பேதலிக்க வைப்பாயோ?”
என அவன் தொடரவும்தான் அவளுக்கு ஒரு மாதிரி கூச்சமாகிப் போனது.
சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றிவிட்டு, “என்ன பாஸ், கவிதையெல்லாம் சொல்றீங்க! சொந்த சரக்கா, இல்ல மண்டபத்துல யாரோ எழுதிகொடுத்தத சொல்லி பொற்கிழி வாங்க பிளான் பண்றீங்களா?” என்று கேட்டாள் கிண்டலாக.
“ஸோ சேட்… இவ்வளவு பாஸ்டா கண்டுபிடிப்பன்னு நினைச்சு கூட பார்க்கல!”
“ஹா… ஹா… அப்படினா யார் அந்த உண்மையான கவிஞரோ?”
“வேற யாரு? எல்லாம் பாலாதான்”
அவனுடைய பெயரைக் கேட்டதுமே உள்ளம் முழுவதும் பூ பூத்துக் குலுங்கியது.
“என்ன, பாலா கவிதையெல்லாம் கூட எழுதுவாரா?”
“ஹும்… எப்பவாவது…”
“யாரையாவது லவ் பண்றாரா என்ன… இவ்வளவு ரசிச்சு எழுதியிருக்காரு”
அதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற உந்துதலில் தேனு இப்படிக் கேட்கவும் பக்கெனச் சிரித்தான் ஆனந்த்.
“யாரு… பாலாவா`? சரியான ஆள பார்த்த… அவன் சரியான சாமியார் பீசு… இன்ட்ரோவர்ட்… ஒரு சிடு மூஞ்சி… ஒரு பொண்ணையும் கிட்ட நெருங்க விடமாட்டான், ஒரு பொண்ணும் கிட்ட வராது. இது, அவன் அதிகம் நேசிக்கற மியூசிக்க, ஒரு பெண்ணா உருவகப் படுத்தி எழுதி இருக்கானாம்”
“ஒஹ்”
உள்ளுக்குள்ளே மாறி மாறி ஊற்றெடுக்கும் உணர்வுகளை மறைத்து, போராடி தன்னை அவள் இலகுவாகக் காண்பித்துக் கொண்டிருக்க, நல்ல வேளையாக அவளை நோக்கி வந்தாள் நிரஞ்சனா.
"என்னடி முறைச்சுட்டே வர?"
“பின்ன என்னடி பக்கி, ஆடி அசங்கிட்டு இவ்வளவு லேட்டா வந்திருக்க?”
“எதுக்கு… இதோ உட்கார்ந்து கொட்டாவி விட்டுட்டு இருக்காங்களே… அவங்கள மாதிரி மொக்கையாகவா?”
“ஏய்… என்னடி ஓவரா போற?’
“எதே… ஓவரா போறனா? இங்க நிக்காத… அங்க உக்காராதன்னு உங்க வீட்டு ஆளுங்க நம்மளவெச்சு செஞ்சதுல, கல்யாணத்துல நான் பட்டதே போதும். அதோட நீட்சியா இங்கயும் நான் மாட்டிக்கனுமா?”
“இந்த பல்பு உனக்கு தேவையா நிரூ” எனச் சிரித்தான் ஆனந்த்.
“ச்சீ...ப்ப… உன்ன பஞ்சாயத்து செய்ய கூப்டாங்களா இப்ப” என அவன்மேல் எரிந்துவிழுந்துவிட்டு தேன்மொழியின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போனாள் நிரஞ்சனா. அவனுடைய சத்தமான சிரிப்பொலி அவர்களைப் பின்தொடர்ந்தது.
அவளுடைய அக்கா இருந்த அறைக்கு வந்து சேர்ந்தனர். ஒரு வழியாக ஒப்பனைகள் முடிந்து தயாராகயிருந்தாள் அவளுடைய அக்கா. எல்லோருமாக வெளியில் வர, மேடை ஏற விடாமல் வழியிலேயே அவளைப் பிடித்து, போட்டோஷூட் செய்ய அழைத்துப்போய்விட்டார்கள்.
உதவிக்கு நிரஞ்சனாவும் போய்விட, “போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” என முணுமுணுத்தாள் தேனு. அதற்கு ஆனந்த் சிரித்துவைக்க, “இது அவ்வளவு பெரிய ஜோக்கெல்லாம் இல்ல. சும்மா சும்மா சிரிச்சி எல்லாரையும் என் மூஞ்சிய பார்க்க வெக்காதீங்க” எனப் புலம்பியபடி முன்வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் உட்கார்ந்தாள்.
ஆனந்தும் அருகில் வந்து உட்கார, ‘இவன் ஏன் நம்ம போற இடமெல்லாம் வந்துட்டே இருக்கான்’ என்று சற்றே மனம் துணுக்குற்றது. நிரஞ்சனாவை நினைத்து கவலையும் பயமும் ஒரு சேர மனதை அலைக்கழிக்கத் தொடங்கியது.
‘கணபதியே வருவாய் அருள்வாய்’ என சம்பிரதாயமாக இன்னிசைக் கச்சேரி தொடங்க, ஒருவாறு மனம் ஒன்றி அதில் கவனம் செலுத்த முயன்றாள். அடுத்தடுத்து வந்த பாடல்களில் ஒரு துள்ளல் இல்லாமல், மொக்கையாக அழுதுவடிய, அவளுடைய எரிச்சலை மிகைப்படுத்தவே செய்துவிட்டது.
“என்ன இது, உங்க ப்ரெண்டோட ம்யூசிகல் பேண்ட்ல யங் சிங்கர்ஸ் யாருமே இல்லையா. நல்ல நல்ல சாங்க்ஸ போய், சித்ரா தேவிப்ரியா கணக்கா இந்த சொதப்பு சொதப்பறாங்க?” என ஆனந்திடம் வாய்விட்டே சொல்லிவிட்டாள்.
“மேல் சிங்கர்ஸ் கூட பரவாயில்ல தேனு, ஃபீமேல் சிங்கர்ஸ் சரியா கிடைக்கவே மாட்டேங்கறாங்க. பிரோக்ராம்ஸ் முடிஞ்சி வீட்டுக்கு போக லேட் ஆகிடுது இல்ல” என விளக்கம் கொடுத்தான்.
“நீங்க சொல்றத பார்த்தா, உங்க பாலா ஒரு ஆள் மட்டும்தான் தேறுவார் போலிருக்கு. ஆனா அவரே வரல” என்றாள், இன்னும் கூட வராமல் அவன் அவளை ஏங்க வைக்கும் கோபத்தில்.
“கடைசி நேரத்துல அவனுக்கு ஏதோ நெருக்கடி… அதான் லேட் ஆகுது. பிரோகிராம ஆரம்பிச்சு மேனேஜ் பண்ண சொல்லியிருக்கான். அஸ் எர்லியஸ்ட் பாசிபிள்… வந்துடுவான். அன்ட் ஒன் மோர் திங்க், அவன் ஃபீமேல் வாய்ஸ்ல, ஈவன் டூயட் கூட பாடுவான்”
“ரியலி!”
“யா… நீயே இன்னைக்கு பாரு”
“ஆனாலும் பயங்கரமா முட்டு கொடுக்கறீங்க தலைவரே”
“ஓ… இவ்வளவு பேச்சு பேசர இல்ல… நீதான் ஒரு பாட்டு பாடேன், பார்க்கலாம்”
“எதே… சவாலா… பாடமாட்டேன்னு நினைச்சீங்களோ”
பேச்சு தடிக்க, “அதான் உங்க தெறமைய நிச்சயதார்தத்துலயே பார்த்தோமே” என்றான் எகத்தாளம் தொனிக்க.
சரியாக ஒரு பாடல் முடிந்திருக்க, அவனுக்குப் பதில் கூட கொடுக்காமல், நேரே இசை மேடை நோக்கிப் போனவள், “அடுத்த சாங் நானே பாடறேன்” என்றாள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் போல் தோன்றியவரிடம்.
“உங்க நேம் என்ன, என்ன பாட்டு பாடப்போறீங்க” என்று கேட்டார், மறுக்க இயலாத சங்கடத்துடன்.
“சகாயனே சாங் ஃப்ரம் சாட்டை மூவி… அண்ட் நான் தேன்மொழி”

மைக்கை வாங்கிக்கொண்டு, அவள் வெகு இயல்பாகப் பாடத்தொடங்க, பாடல் வரிகள் முழுவதிலும் பாலாவின் நினைவு மட்டுமே!
சரியாக மணமக்கள் மேடை ஏற, அங்கே அப்படி ஓர் ஆரவாரம்.
அதையும் தாண்டி, இசையுடன் ஒன்றி அவள் குரல் செய்த மாயத்தில், மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல மொத்தக் கூட்டமும் அப்படியே அவள் பக்கம் திரும்பிவிட்டது.
அவள் பாடி முடிக்கும் வரை, அப்படி ஓர் அமைதி. பாடி முடித்த பிறகோ, அந்த மண்டபமே அதிரும்படியான கைதட்டல்.
பெருமிதத்துடன் அவள் ஆனந்தை பார்க்க, அதிர்ச்சியில் ஆனந்த் அசைவற்று அமர்ந்திருந்தான்.
நன்றி சொல்லிவிட்டு மைக்கை அருகில் இருந்தவரிடம் கொடுக்கத் திரும்பும்பொழுதுதான் அவளுக்குப் பின்னால் நின்றிருந்த பாலாவையே கவனித்தாள்.
அவனுடைய பார்வை அவள்மீது பாய்ந்தவிதத்தில் மின்சாரப் பூக்கள் அவளின் மேனியெங்கும் பூத்தன.
உண்டான படபடப்பில் அங்கிருந்து நழுவி ஓடி நிரஞ்சனாவிடம் போய் ஒட்டிக்கொண்டாள்.
அதன்பின் பாலாவின் பார்வை ஒருமுறை கூட அவளைத் தீண்டவேயில்லை. அவன் பாடிய பாடல்கள் மட்டும் அவளின் உயிருக்குள் ஒட்டிக்கொண்டு அவளை மீளாச் சிறைக்குள் சிக்கவைத்தது.
*******


Very interesting
Next eppi eppo sis