கிருஷ்ணப்ரியா நாராயணின்…
இசைத்தேனே!
1.ஜீவனின் பாடல்
தேனு…
தேனு…
கண்ணு தேன்மொழி…
என விடாப்பிடியாக அழைத்த அன்னையின் அழைப்பு, வந்திருக்கும் உற்றார் உறவினருக்கு கொடுக்கத் தாம்பூலப் பைகளை தயார் செய்வது போல ஒதுங்கிக் கொண்ட தேன்மொழியை நிர்பந்தமாக சபை நடுவில் இழுத்து வந்து நிற்க வைத்தது. யாரும் அறியா வண்ணம், இப்படி அழைத்த செல்வியை கண்டனமாக பார்க்கவும் வைத்தது.
மகளின் மனநிலையை உள்வாங்கி சற்றே பம்மினாலும், “பாப்பாவ தொட்டில்ல போடப்போறாங்க கண்ணு, நீ கூட இருக்கனும் இல்ல?” என தன் செயலுக்கு நியாயம் கற்பித்தவர், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், “கண்ணு, ஒரு பாட்டுப் பாட சொன்னா யாருமே வாய திறக்க மாட்டேங்கறாங்க, உன் தங்கச்சி மகளுக்காக நீதான் ஒரு தாலாட்டு பாடணும்” என்று வேறு இழுத்து விட்டார்.
மடியில் தன் மூன்று மாத பெண் குழந்தையை வைத்தபடி அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த அவளுடைய தங்கை கனி வேறு, அவளுடைய மாமியார் அவளைப் பார்த்த அழுத்தமான பார்வையில் அக்காவை சங்கடமாக நோக்கினாள்.
இது போல எதையும் செய்யக் கூடாது என்பதை ஊரிலிருந்து கிளம்பும்போதே படித்து படித்து அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தாள் தேனு. ஆனாலும் பேத்தியை தொட்டிலில் போடும் குதூகலத்தில் எல்லாமே காற்றில் பறந்துபோய்விட்டது போலும்.
அதற்குள் கனியின் கணவன் விஸ்வா சூழ்நிலையை உணர்ந்து, “அதான் அத்த சொல்றாங்க இல்ல தேனு, நீங்க ஒரு பாட்டு பாடித்தான் ஆகணும். ரியலி, இந்த மூணு மாசமா உங்க பாட்ட கேட்டுதான் ஜில்லு தூங்கியிருக்கும். இனிமே ரொம்ப மிஸ் பண்ண போகுது பாருங்க” என்றான் தேனொழுக.
“ஆமாப்பா, தேனும்மா ராராரோ பாடினா, பாப்பா அப்படியே அழுகய ஸ்டாப் பண்ணிடுவா தெரியுமா? தேனும்மா பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் யூ நோ” என்றான் அவர்கள் மூத்த மகன் சர்வேஷ் பெருமையாக.
அதில் முகம் பிரகாசித்தாலும், சென்னை திரும்பிய பின் இந்தப் பிள்ளைகள் இல்லாமல் ஒரு வெறுமை சூழ்ந்துகொள்ளுமே என்கிற வேதனையும் தேனுவின் மனதைப் பிசைந்தது.
“பாருங்க உங்களுக்கு எவ்வளவு ஃபேன் பேஸ்ன்னு” என விளையாட்டு போல சொன்ன விஸ்வா, “ம்மா, பாப்பவ வாங்கி உங்க கையால தொட்டில்ல போட்டு, அப்பாவ அவ காதுல பேர் சொல்லச் சொல்லுங்க” என்றான் அவனுடைய அம்மாவிடம்.
மகன் வாயிலிருந்து வந்துவிடவே, பட்டென கனிமொழியின் மடியில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தன் பேத்தியை கைகளில் அள்ளி, மலர்களால் அலங்கரைப்பட்டிருத்த தொட்டிலிமல் விட்ட அவனுடைய அம்மா வைரம், “மொத பேர கனகான்னு சொல்லுங்க, எங்கம்மா பேரு, அடுத்தது வேணா அம்புஜம்னு உங்கம்மா பேர சொல்லிக்கோங்க, அடுத்து, ஸ்ரவணி சொல்லுங்க, இவங்க ஸ்டெயிலா செலக்ட் பண்ணி வெச்சிருக்காங்க” என்றார் கவரிடம் கட்டளையாக.
ராஜாராமனும் பெயரைச் சொல்ல பேத்தியின் செவியருகில் குனிய, உதடுகள் லேசாக வளைய, ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த செல்வியை கிண்டலாக ஏறிட்டாள் தேனு. அவருக்கு தன் அம்மாவின் பெயரையும் வைக்க வேண்டும் என ஆசை. பிள்ளை பிறந்தது முதல் ஒரு நூறு முறையாவது அதை சொல்லியிருப்பார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமுதா என்கிற பெயரை சுருக்கி மறைமுகமாக அம்மு… அம்மு… என்றே குழந்தையை கொஞ்சி பழகியும் இருந்தார். ஆனால் இங்கே நிதரிசனம் வேறாக அல்லவா இருக்கிறது!
மகளுடைய பார்வையின் வீச்சை தாள முடியாமல் அவர் பார்வையை தழைத்துக் கொள்ள, அதற்குள் சர்வேஷ் வேறு, “நானும் தத்தா மாறி பாப்பாக்கு பேர் சொல்லணும்” என்று பிடிவாதம் பிடித்தபடி எழும்பித் தொட்டிலை இருக்க, அவனை தூக்கி குழந்தையின் அருகில் கொண்டு சென்றான் விஸ்வா.
நாவில் நுழையாமல், திக்கித் திணறி அவன், “சரவணி… சரவணி” என, அந்தப் பெயரை சத்தமாகச் சொல்ல, அதில் சூழ்ந்திருந்த உறவினரெல்லாம் கொல்லென்று சிரிக்க, உறக்கம் கலைந்து நெளிய ஆரம்பித்தது குழந்தை.
அதில் பதறி கனி தொட்டிலின் அருகில் வந்து நிற்க, பெயர் சூட்டுதல் முடிந்துவிடவே, வாங்கி வந்திருந்த செயின் மற்றும் கொலுசை பிள்ளைக்கு சூட்டச் சொல்லி தேனுவிடம் கொடுத்தார் செல்வி. அவள் அதை பிள்ளைக்கு சூட்டியதும், பரிசுகளைக் கொடுக்க மற்ற உறவினரெல்லாம் தொட்டிலை சூழ்ந்துகொள்ள, அலறி அழ ஆரம்பித்து குழந்தை.
அனிச்சையாக எல்லோரையும் விலக்கிக் கொண்டு மீண்டும் தொட்டில் அருகில் வந்து நின்ற தேன்மொழி,
‘ராராரோ ராரிரரோ…
என்கண்ணே… ராராரோ ராரிரரோ’ எனத் தாலாட்டத் தொடங்கினாள். அவள் குரலில் வியந்து சுற்றி நின்ற கூட்டம் அமைதியாகிவிட, பழக்கப்பட்ட குரலில் குழந்தை தன் விழிகளை சுழற்றி அவளது முகம் பார்த்து சினுங்கியது.
தொட்டிலை மெதுவாக அசைத்தபடியே, ச்சுச்சு…ச்சு..ச்சுச்சுச்சு… என அமைதிப் படுத்தியவள்,
‘ஓடுமான் ஓடிவர எங்கண்ணே ஓடுமான் ஓடி வர…
ஒன்பது மான் பின்தொடர எங்கண்ணே ஒன்பது மான் பின்தொடர…
அந்த மானோடும் பாதையெல்லாம் என்கண்ணே…
நீதானோடி வந்தவளே!
என் வாலக் கனி கரும்பே…
எங்கண்ணே நீ மனது வையி….
என் ஏலங் கிராம்பு சக்கர நீயே…
எங்கண்ணே உன்ன என்ன சொல்லி நான் தாலாட்ட?
‘ராராரோ ராரிரரோ…
என்கண்ணே… ராராரோ ராரிரரோ’
என்று தேனு இனிமையாகப் பாட, இதமாக உறங்கிப் போனது குழந்தை.
‘போதும் குழந்தையை அறைக்குள் எடுத்துப் போ’ என விஸ்வா மனைவியிடம் ஜாடை செய்ய, அதிராமல் மகளை கைகளில் அள்ளி அவள் தங்கையிடம் கொடுக்க, அப்படியே அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள் கனிமொழி.
மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த சாமியானா பந்தலின் கீழ் உணவு மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்க, தேனுவும் சர்வேஷுமாக, வந்திருந்த உறவினர்களை உபசரித்து அழைத்து போக, சாப்பாட்டு பந்தி முடிந்தது. அதன்பின் தாம்பூலம் வங்கிக் கொண்டு ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றனர்.
கடைசியாக வீட்டு மனிதர்கள் மட்டுமே எஞ்சி இருக்க, எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கனிக்கு மட்டும் அறைக்குள்ளேயே உணவை கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்த தேனு சர்வேஷை அருகில் அமர்த்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
“ஆமா, இந்த வருஷமாவது தேனுக்கு ஒரு இடம் பார்த்து முடிப்பீங்களா? இல்ல வழக்கம் போல தட்டி போகுதுன்னு சாக்கு போக்கு சொல்லுவீங்களா” என வைரம் செல்வியின் வாயைப் பிடுங்க, உணவு தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சங்கடப்பப்டுப் போனார்.
காதல் கீதல் என்று சொல்லிக்கொண்டு நிர்ப்பந்தமான ஒரு சூழ்நிலையை இழுத்து விட்டபடி வந்து நின்ற இளையவளுக்கு, வாழ்ந்த வீட்டையே சீதனமாகக் கொடுத்து, முதலில் திருமணம் முடித்த பாவம்தான் மூத்தவளுக்கு இன்னும் திருமணம் தகைந்து வரவில்லை என்பதை முகத்தில் அடித்தாற்போல சொல்ல முடியாதே அவரால். எதிர் காற்றில் எச்சில் உமிழ்வது போலல்லவா ஆகிவிடும்!
அதை உணர்ந்தவனாக அம்மாவை விஸ்வா ஒரு கண்டனப் பார்வை பார்க்க, அதற்கெல்லாம் அடங்காதவராக, “சும்மா இல்லாம நீங்க எல்லாரும் சேர்ந்து இவள முன்னால கொண்டு வந்து நிக்க வெக்கறீங்க. வந்திருந்த சொந்தக் காரங்க எல்லாம் ஜாடை மாடையா கேக்கறாங்க இல்ல, நான் என்ன பதில் சொல்றது” என வைரம் நொடிக்க, அவரை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தபடி, “வரதட்சன வாங்காத ஒரு மாப்பிளை கிடைச்சா மட்டும்தான் அவ கல்யாணம் செஞ்சுப்பா, அப்படி ஒருத்தன் கூட இப்ப வரைக்கும் பொண்ணு கேட்டு வரலையாம்ன்னு சொல்லுங்க அத்த! அதோட எங்க அம்மா ஒண்டியாளா என்ன செய்வாங்க? அதான் நீங்க பெரியவங்க எல்லாம் வேற இருக்கீங்கல்ல. நீங்களே எனக்கு ஒரு மாப்பிள்ளைய பார்க்கக் கூடாதா?” என நாசூக்காக சொல்வது போல ஒரு கூடை தணலை அவர் தலையில் கொட்டினாள் தேன்மொழி.
நன்றாக தகித்தது, அவருக்கு மட்டுமல்ல, விஸ்வாவுக்கும்தான். ‘இதெல்லாம் தேவையா?’ என்பதாக அன்னையை எரித்தான் அவன் பங்கிற்கு. ‘இவளுக்கு தேன்மொழின்னு பேர் வெச்சதுக்கு பதிலா தேள்மொழின்னு வெச்சிருக்கலாம்!’ என மெல்லியதாக முணுமுணுத்தாலும் அதற்கு மேல் பேச நா எழாமல் வைரத்தின் வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
‘இங்கே நடக்கும் எதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது போல இவை எதிலும் பட்டுக் கொள்ளாமல், பால் பாயசத்தை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜாராமன்.
***
கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்து வந்து உதறி மடித்து ட்ராலி பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அந்த அறையின் ஓரமாக போடப்பட்டிருந்த ஒற்றைக் கட்டிலில் துவண்டுபோய் படுத்திருந்தார் செல்வி. மொட்டை மாடியில் இருக்கும் தகரக் கூரை வேய்ந்த ஒற்றைப் படுக்கையறை அது. தடதடவென மின்விசிறி ஒன்று சுற்றிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் என்ன, குளுமையை கொடுப்பதற்கு பதிலாக இன்னும் அதிகமாக வெப்பத்தைதான் அது வாரி இறைத்துக் கொண்டிருந்தது.
அன்றிரவே சென்னை கிளம்ப இரயிலுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்க, போடப்பட்டிருந்த சாமியானா பந்தலை களைந்து மேசை நாற்காலிகளை எடுத்துப் போகும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, சாப்பிட்டு முடித்ததும், உள்ளூரிலேயே இருக்கும் அவளுடைய கலா அத்தை வீட்டிற்கும் அம்மாவின் தங்கையான மீனா சித்தி வீட்டிற்கும் போய் எல்லோரையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என எண்ணியிருந்தனர்.
மதியம் சாப்பிடும்போது கனியின் மாமியார் பேசிய பேச்சில், பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து செல்விக்கு ரத்தக் கொதிப்பு கூடிப்போய் விட்டது. முடியாமல் வந்து படுத்துவிட்டார். மருத்துவமனைக்குப் போகலாம் என இவள் சொன்னதற்கு, "கனிக்கு தெரிஞ்சா இப்ப ஊருக்கு போகவிடாது. நிர்பந்தமா ரெண்டு மூணு நாள் இங்கயே தங்கற மாதிரி ஆயிடும். அப்பறம் கை குழந்தையை வெச்சிட்டு அதுதான் நமக்கும் சேர்த்து வடிச்சு கொட்டணும். ஏற்கனவே, மூணு மாசம் கூட முழுசா முடியறதுக்குள்ள கொண்டுவந்து விட்டுட்டோமேன்னு மனச குத்திட்டே இருக்கு.
அதுவுமில்லாம, இந்த மூணு நாளா இந்த கோடோன் மாதிரி ரூமுக்குள்ள இருந்து அவிஞ்சு போயி வயித்துல எல்லாம் கொப்பளம் வந்துடுச்சு, தேனு. இதுக்கு மேல என்னால ஒரு நாள் கூட இங்க இருக்க முடியாது. பேசாம இழுத்து பிடிச்சிட்டு நம்ம ஊருக்கு போயி, நம்ம சாரதா டாக்டர் கிட்ட காமிச்சுக்கலாம்" என புலம்பித் தள்ளிவிட்டார்.
கரிகால சோழன் கட்டிவைத்த கல்லனைக் கொண்டு மலைக்கோட்டையை மடி சுமக்கும் திருசிராப்பள்ளி அசலூராகி, சென்னை எப்படி ‘நம்ம ஊர்’ ஆகிப் போனது என்றே விளங்கவில்லை அவளுக்கு.
பிறந்து வளர்ந்த தங்கள் சொந்த ஊரில், தங்களுக்கு சொந்தமான வீட்டிலேயே ஒரு விருந்தாளி போல தங்குவது, அதுவும் கடனே என கண்துடைப்புக்காக, இவர்கள் வந்தால் தங்குவதற்காக விஸ்வா கட்டி வைத்திருக்கும் இந்த அறையில் அகதி போல இருப்பது கொடுமையிலும் கொடுமைதான் அல்லவா?
சரி அத்தை வீட்டிலோ அல்லது மீனா சித்தி வீட்டிலோ தங்கலாம் என்றாலும் அதற்கும் விடமாட்டார்கள். வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, அவர்கள் வந்து தங்கக் கூட உரிமை இல்லாமல் செய்துவிட்டார்கள் என ஊர் பேசிவிடக் கூடாதாம்!
இந்த அழகில், இவர்களை சமயலறைக்குள் நுழையக் கூட விடமாட்டார் வைரம். வேற்று மனிதரை போலத்தான் நடத்துவார். அதற்காக, தானாவது வீட்டுவேலைகளை பகிர்ந்து கொள்வாரா என்றால் அதுவும் கிடையாது. விஸ்வாவுக்கோ தண்ணீர் வேண்டும் என்றாலும் அதையும் கனிதான் கொண்டுவது கையில் கொடுக்க வேண்டும். அதற்காகவே, கருவுற்று எட்டு மாதங்கள் முடியும் வரை அவளை பிறந்தவீட்டிற்குக் கூட அனுப்பவில்லை அவர்கள். சர்வேஷின் இரண்டாம் வகுப்பு பரிட்சையை காரணமாக சொல்லிக் கொண்டார்கள்.
வேலை பளுவை எண்ணி, இங்கே வைத்து பிரசவம் பார்க்கவும் அவர்கள் தயாராக இல்லை. சரி சர்வேஷையாவது கூட வைத்து பார்த்துக் கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை.
மே மாத மத்தியில் அவளுக்கு பிரசவமாகி விட, ஐந்தாம் மாதம் இங்கே கொண்டு வந்து விடலாம் எனப் பார்த்தாலும், சர்வேஷ் படிப்பை காரணமாகச் சொல்லித்தான் மூன்றாம் மாதம் கொண்டுவந்து விடச் சொல்லி நிர்பந்தப் படுத்தினார்கள். எல்லமே விஸ்வா, கனியிடம் சொல்லி அவள் மூலம் பேசுவதுதான். நேரடியாக செல்வியிடம் எதையும் சொல்ல மாட்டார்கள். தேனு அவர்களிடம் பேசிப் பார்க்கிறேன் என சொன்னதற்குக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் கனி. அவர்கள் நினைத்ததே நடந்தேறியது.
எல்லாமே தெரிந்தும்… புரிந்தும்… இருந்தாலும் கூட ஒரு வார்த்தை அவர்களை கேள்வி கேட்க வாய் வராது கனிக்கு. என்னதான் விஸ்வா நல்லவன் போல நடந்து கொண்டாலும், அவர்கள் வீட்டில் யார் மனமும் கோணும்படி அவள் நடந்துகொள்ளக் கூடாது. கோபத்திலோ வருத்தத்திலோ அவள் வாய் தவறி ஏதாவது வார்த்தையை விட்டுவிட்டால் கூட பளார் என அவனுடைய கை அவளது கன்னத்தை பதம்பார்துவிடும்.
அடியை வங்கிக் கொண்டு அவமானத்தில் அந்த நேரத்துக்கு மனம் பொருமினாலும், அவன் மீது அவளுக்கு இருக்கும் அபரிமிதமான காதல் எல்லாவற்றையும் சகித்து, மன்னித்து, சட்டென மறக்கவும் வைத்துவிடும். 'இதையெல்லாம் சகித்துப் போகாதே, உன் தேவை அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால் நியாயமாக எதிர்ப்பை காண்பிக்க வேண்டிய நேரத்தில் நீ காண்பித்துதான் ஆகவேண்டும்' என சுயமரியாதை பற்றி எவ்வளவு வகுப்பெடுத்தலும், அது அவளது மண்டைக்குள் ஏறவே ஏறாது. என்ன பயமோ? என்ன கன்றாவிக் காதலோ? ஒன்றும் புரியவில்லை தேனுவுக்கு.
சென்னையிலிருந்து அத்தை மற்றும் சித்தி இருவருக்கும் புடவையும் இனிப்புகளும் வாங்கி வந்திருந்தாள். அதையெல்லாம் அப்படியே திரும்ப எடுத்துப் போக வேண்டும்.
இந்தத் தொட்டில் போடும் வைபவம் இவ்வளவு விமரிசையாக இங்கே நடந்து முடிந்திருகிறது. ஆனால் இவர்கள் பக்க உறவினர் யாருக்கும் முறையான அழைப்பு கிடையாது. பாவம் அவர்களும் இவர்கள் மீது இருக்கும் அன்பால், கண்டும் காணாமலும் எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறார்கள்.
எல்லாம் யோசித்தபடி நின்றவளுக்கு, எப்பொழுதடா நேரம எழாகும், எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்று இருந்தது. மனதின் புழுக்கம் தாங்காமல் வெளியில் வந்து கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு நின்றவளின் பார்வை அனிச்சையாக பக்கத்து காம்பவுண்ட்டில் பதிந்தது.
அந்த வீடு அவளுடைய சொந்தச் சித்தப்பாவுடையதுதான். இவர்கள் வீடு கட்டுவதற்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்பே வீட்டைக் கட்டிக் கொண்டு அவர்கள் குடும்பம் அங்கே குடியேறிவிட்டது.
அங்கே ஓரமாக போடப்பட்டிருந்த மேடையில் அமர்ந்தபடி அவளுடைய சித்தி கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும், பழைய நினைவுகளையெல்லாம் இன்னும் அதிகமாக கிளறிவிட்டு அவளுடைய மனதின் புழுக்கம் கூடித்தான் போனது.
தேனுவின் அப்பா சிவசாமி அரசுப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார். அவர் சர்வீஸில் இருந்த சமயம், கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு, தாத்தா விட்டுச் சென்ற காலி மனையில் இவர்களுக்கு என்று வந்த பங்கில், லோன் போட்டு ஆசை ஆசையாக இந்த வீட்டைக் கட்டினார்.
நான்கு கிரவுண்டுக்கும் சற்று குறைவாக இருந்த அந்த நிலத்தை பிரிக்கும் பொழுது, தன் சகோதரிக்கும் சமமான பங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசாமி நேர்மையாக நின்றதில், அதற்கு உடன்படவில்லை அவருடைய தம்பி.
ஒரு பெரிய சண்டைக்கு பிறகு அந்த நிலத்தை இரண்டு பங்காகப் பிரித்து ஒரு பங்கை அவருக்குக் கொடுத்துவிட்டு தன்னுடைய பாகத்தில் ஒரு மதிப்பு போட்டு, வங்கியில் கடன் வாங்கி அதை தங்கைக்கு பணமாக கொடுத்துவிட்டார். அதனால் சற்று தாமதமாகத்தான் இந்த வீட்டைக் கட்ட முடிந்தது.
அவரது இந்த நடவடிக்கையால் இவளுடைய சித்தப்பாவுக்கும் அவருக்கும் உறவே விட்டுப் போகும் அளவுக்கு நிரந்தரப் பகை உண்டாகிப்போனது.
யோசனை சென்று கொண்டே இருக்க அப்பா, அம்மா, தங்கையுடன் மகிழ்ச்சியாக இந்த வீட்டில் வாழ்ந்த குழந்தைப் பருவ நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன.
இவளுடைய பார்வை தன் மீதே விழுந்து கொண்டிருப்பதை உணர்த்தோ என்னவோ இவளுடைய சித்தி தலையை தூக்கி மேலே பார்க்க, இவளைக் கண்டதும் முகம் எல்லாம் இறுகிப்போக தலையை ஒரு வெட்டு வெட்டி முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
அதுவும் சேர்ந்து மனதின் பாரத்தை கூட்ட, 'ச்ச… இந்த ஊருக்கு வந்தாலே தேவையில்லாத வருத்தமும் ஆதங்கமும்தான் நமக்கு மிச்சம் ஆகும். இங்க இருக்கற வரைக்கும், ஒரு கண்ட்ரோலுக்குள்ளயே வராம மனசு இப்படி குரங்கு மாதிரிதான் ஆட்டம் போடும். அம்மா சொன்ன மாதிரி 'நம்ம ஊரு'க்கு போயிட்டா வாரத்துல ஏழு நாளும் வேல வேலன்னு சொல்லி நமக்கு பிடிச்ச விஷயத்துல் ஈடுபட்றதால வேற எதைப் பற்றியும் யோசிக்க நேரம் இருக்காது. அதுதான் நிம்மதி. அதுதான் நிரந்தரம்' என எண்ணிக்கொண்டாள், இங்கே நிரந்தரம் என்பது எதுவுமே கிடையாது என்பதை உணராமல். திரும்ப அறைக்குள் வந்தவள் மீதமிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து சரிபார்த்துக் கொண்டாள்.
பின், அந்த அறையை ஒட்டி இருந்த சிறிய குளியலறைக்குள் போய் அணிந்திருந்த பட்டுப் புடவையை களைந்து சுடிதாரை மாற்றிக்கொண்டு திரும்ப வந்து அந்தப் புடவையை மடித்து பெட்டிக்குள் வைத்து பூட்டினாள்.
சிவசாமி இறந்ததற்கு பின், அவர்கள் குல வழக்கப்படி தினமுமே செல்வி உடுத்துவது வெண்மை நிறத்தால் ஆன பிரத்தியேகப் புடவைதான். அதனால் அவர் உடை மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமல் போக, கீழே சென்றவள் தங்கையிடம் கேட்டு இருவருக்குமாக காஃபியை வாங்கி வந்தாள்.
அன்னையை எழுப்பி அதை பருக வைத்தவள் தானும் பருகி விட்டு பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே வந்து போர்டிகோவிலேயே ஓரமாக வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
அதற்குள் முகம் கழுவி செல்வியும் வந்துவிட, வைரத்திடமும் ராஜாராமனிடமும் சொல்லிக்கொண்டு, அறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்த கனியிடம் சென்று, "உடம்ப பாத்துக்கோ கண்ணு, பச்சை உடம்புக்காரி தண்ணில கை வைக்காத. குழந்தை அழுதுகிட்டே இருக்கேன்னு வயத்தை காயப்போடாத. சத்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா வேளைக்கு சாப்பிடு. இந்த ரெண்டு பிள்ளைகளையும் நல்லபடியா நீ தான் வளர்த்து ஆளாக்கணும்" என்று தொண்டை அடைக்க சொல்லி இரண்டு சொட்டு கண்ணீரை வடித்துவிட்டு கிளம்பி வாயிலில் வந்து நின்றார்.
வழியனுப்ப அவள் வாயில் வரை வந்தால் அதற்கு கூட ஏதாவது சொல்லுவார்கள் என பயந்து, கனி அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள்.
இவர்களை ரயில் நிலையம் வரை சென்று வழி அனுப்ப விஷ்வா தன் காரை கிளப்பிக் கொண்டு வந்து வீதியில் நிறுத்த, ஏறி பின் இருக்கையில் அமர்ந்தார்.
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பயணப் பையை எடுக்க வெளியில் வந்தவள், உள்ளே தொலைக்காட்சியிலிருந்து ஒலித்த புதிய திரைப்படப் பாடலில் அப்படியே தேங்கி நின்று விட்டாள்.
காதலே! என் காதலின் தேடலே!
காதலே! என் காதலின் தேடலே!
பாடலே! என் பாடலின் தேடலே!
பாடலே! என் பாடலின் தேடவே!
வசந்தத்தின் ஓர் நாளில் என் வாழ்வில் பூவாய் நீ பூத்தாயே!
கொடிதென ஒரு நாளில் தீயாகி நீயே எனை சுட்டெரித்தாயே!
பூந்தென்றலாய் வந்தெனை தழுவியவளும் நீதான்...
கொடும் புயலாய் எனை சாய்த்து போனவளும் நீயேதான்!
பூவாய் நீ பூத்தாலும்...
தீயாகி தகித்தாலும்...
தென்றலாய் தழுவி முத்தமிட்டாலும்...
புயலாய் சுருட்டி எனை வேரோடு சாய்த்தாலும்...
நீ தந்த நினைவில் மட்டும் உயிர்த்தேனே நானடி...
என் ஜீவனின் பாடலாக இசைத்தேனே உனைத்தானடி...
காதலே! என் காதலின் தேடலே! (Composed by KPN)
அனிச்சையாக பார்வை தொலைக்காட்சியில் போய் நிலைத்திருந்தாலும், அதில் வந்த காட்சிகள் எல்லாம் மங்கி மறைந்து புகைமூட்டமாகி போக அந்தப் பாடலின் ஆழ்ந்த வரிகளும் பாடியவனின் குரலும் மட்டுமே உயிர் வரை சென்று தீண்டியது.
காரின் கதவை திறந்து வைத்தபடி அமர்ந்திருந்த செல்வி, சில நிமிடங்கள் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, இவள் தானாக வரமாட்டாள் என்பதை உணர்ந்து, "தேனு, நேரம் ஆகுது பாரு, என்ன பண்ணிட்டு இருக்க! மாப்பிள்ளை வேற காத்துட்டு இருக்காரு. சீக்கிரம் வா" என்று குரல் கொடுக்க, தலையை சிலுப்பி தன்னை மீட்டுக் கொண்டவன் பையை உருட்டி கொண்டு வந்து காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு அம்மாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
விஸ்வாவுக்கு அருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சர்வேஷ், "எல்லாரும் வந்தாச்சு, ஸ்டார்ட்" என உற்சாகமாகக் குரல் கொடுக்க அந்த வாகனம் கிளம்பியது.
******
Comments