En Manathai Aala vaa! 7
Updated: Sep 29, 2022
மித்ர-விகா-7
ரூபா ஒரு பிரபல மாடல். அவளது முகத்தைப் பார்க்காமல் ஒரு நாள் கூட கழியாது இங்குள்ள மக்களுக்கு. அனைத்து ஊடகங்களிலும் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் அவள் நடித்த ஒரு விளம்பரமாவது வராமல் இருக்காது.
முக்கிய சாலைகளில் அவள் மாடலிங் செய்த விளம்பர பலகைகளைக் கடக்காமல் யாராலும் பயணம் செய்ய இயலாது. அந்த அளவிற்கு அழகும் கவர்ச்சியும் கொண்டவள்.
அவற்றை மூலதமாகக்கொண்டு அவள் தரும் சேவையைக் கொள்முதல் செய்ய அக்னிமித்ரன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே முடியும்.
அப்படிப்பட்ட தன்னை விட இந்தப் பெண் எந்த விதத்தில் சிறப்பாக இருக்கிறாள் என்கிற ரீதியில் மாளவிகாவை எடை போட்டன ரூபாவின் விழிகள்.
அழகான ஒரு பருத்திப் புடவையை மடிப்பு கலையாமல் நேர்த்தியாக உடுத்தி இருந்தாள். புடவையின் நிறத்திற்குப் பொருத்தமான 'பெண்டண்ட்' கோர்க்கப்பட்ட செயின், அதைப் போன்றே காதணிகள் அணிந்திருந்தாள். இரு கைகளிலும் அதே நிறத்தில் கொஞ்சம் கனமான ஒற்றைக் கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள். மற்றபடி மிதமான ஒப்பனையுடன் பார்க்க பளிச்சென்ற தோற்றத்திலிருந்தாலும் மேல்தட்டு வர்க்கத்தின் சாயல் கொஞ்சம் கூட மாளவிகாவிடம் இல்லை.
ரூபா சாதாரணமாக அணியும் உடைகள் கூட அவளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரே ஒரு உடைக்கு ஆகும் செலவில் இவள் உடுத்தியிருப்பதுபோல் குறைந்தது ஐம்பது புடைவையேனும் வாங்கிவிடலாம். கட்டாயம் தன்னுடன் இவளை ஒப்பிடவே இயலாது.
அவனுக்கு அருகில் சமதையாக அவள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவும், அவன் வாழ்வில் அடுத்ததாக நுழைந்திருக்கும் பெண் இவள் என சந்தேகத்துக்கு இடமின்றி அவள் மனதிற்குப் புரிய, 'இவளுக்காகவா இவன் தன்னைத் திடுமென உதறித்தள்ளினான்' என்ற ஏளனமே தோன்றியது அவளுக்கு.
அதற்குள், சிறிய வரவேற்புரைக்குப் பின், அந்த இடத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் தொகையுடன் அந்த ஏலம் ஆரம்பிக்கவும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.
சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பழைய, சிறிய திரை அரங்கத்திற்கான ஏலம் அது. இருபதாயிரம், ஐம்பதாயிரம் எனச் சிறு தொகையாக உயர்த்தப்பட்டு நான்கரை கோடியில் ஆரம்பித்த அந்த அந்த ஏலம் எட்டு கோடியில் வந்து நிற்க, அதுவரைக்கும் அனைத்தையும் மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.
ஒவ்வொருவரும் தொகையை உயர்த்தும்போதும் 'அனைத்து முன்னேற்பாடுகளுடன் வந்துவிட்டு இப்படி அமைதியாக இருக்கிறானே' என்ற யோசனையுடன் அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மாளவிகா. அவள் பார்வை அவனைத் தீண்டும்போதெல்லாம் உள்ளுக்குள்ளே அதை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
ஒரு வழியாக அந்தத் தொகை எட்டு கோடியைத் தொட்டதும் அதற்கு மேல் எல்லோரும் அடங்கி விட, "எய்ட் க்ரோர் டுவெண்டிஃபைவ் லேக்ஸ்" அப்பொழுதுதான் முதன் முதலாக வாயைத் திறந்தான் கௌதம்.
"வேற யாராவது பிட் பண்ண போறீங்களா?" என்று கேட்ட அங்கே இருந்த அதிகாரி, "எய்ட் க்ரோர் டுவெண்டிஃபை லேக்ஸ். பிட் ஒன்... பிட் டூ...” என சொல்லிக்கொண்டே போக, "எய்ட் சீ அண்ட் ஃபிஃப்டி எல்"
மேலும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதன் விலையை உயர்த்தினான் மித்ரன். அதன் பின் மற்ற அனைவரும் மொத்தமாக அடங்கிவிட, "நைன் க்ரோர்ஸ்" விலையை மேலும் உயர்த்திக் கேட்டான் கெளதம்.
பின் மாளவிகாவின் பக்கமாய் சாய்ந்தவன், அவளிடம் அந்தத் தொகையுடன் ஒப்பிட்டு சில கணக்கீடுகளைக் கேட்க, தனது 'டேப்லெட்'டின் உதவியுடன் அதை அவனிடம் சொன்னாள் மாளவிகா. அந்தத் திரை அரங்கத்தை வெளியிலிருந்து பார்த்திருக்கிறாள். மிகப் பழமையான கட்டடம்.
அங்கே மறுபடியும் ஒரு நவீன திரை அரங்கம் கட்டவோ அல்லது 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்'ஸோ அடுக்குமாடிக் குடியிருப்புகளோ கொண்டுவரும் அளவிற்கு அதிக பரப்பளவு கொண்ட இடமும் இல்லை.
சிறிய உணவு விடுதியோ அல்லது கடைகளோ கட்டி வாடகைக்கு விடலாம் அவ்வளவுதான். மற்றபடி முக்கிய சாலையிலிருப்பதால் அதற்கு அதிக பட்சமாகப் பத்து கோடி வரை கொடுக்கலாம்.
இந்த சிறிய திரை அரங்கத்தை வாங்க இவன் ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான் என்று அவளுக்கு வியப்பாக இருந்தது.
"நைன் க்ரோர்ஸ் அண்ட் ஃபிஃப்டி எல்” அவன் அலட்சியமாகச் சொல்ல,
'டென் க்ரோர்ஸ்" அவசரமாக தன் தொகையைச் சொன்னான் கௌதம்.
அது வரை ஐம்பது லட்சங்களாகத் தொகையை உயர்த்தி கேட்டவன், அதன் பின் கோடிகளில் உயர்த்த, கொஞ்சமும் சளைக்காமல் கவுதமும் தன் பங்கிற்கு உயர்த்திக்கொண்டே போனான்.
இடையிடையே அவன் சில கணக்குகளை மாளவிகாவிடம் கேட்கவும், அதனைச் சொல்லும்பொழுது, 'இது என்ன இவன் இப்படி சர்வ சாதாரணமா அமௌண்ட்ட ஏத்திட்டே போறான்? இதோட நிறுத்திட்டான்னா பரவாயில்லை' என்கிற ரீதியில் பதட்டத்துடன் அவளது பார்வையால் 'வேண்டாம்' என அவனைத் தடுக்க முயல அவளது விழி பேசும் வார்த்தைகளில் இன்னும் குதூகலமானவன், தொகையை இருபது கோடி வரை கொண்டுவந்துவிட்டான்.
கௌதமின் முகம் கோபத்தில் சிவந்துபோக, அவன் கொஞ்சம் கூட பின்வாங்க விரும்பாமல், "டுவென்டி டூ க்ரோர்ஸ்" என தன் தொகையைச் சொல்ல, எங்கே அவன் இன்னும் விலையை உயர்த்தி கேட்டுவிடுவானோ என்ற பதட்டத்தில், அனிச்சையாக அவனது கையில் அழுத்தம் கொடுத்தவள், அவன் தன்னைக் கவனிப்பதை உணர்ந்து வேண்டாமென்று ஜாடை செய்ய, அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளது கரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கையில் வாகாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான். அப்பொழுதான் தன் செயலை உணர்ந்தவள், பட்டென்று கையை எடுத்துக்கொண்டாள்.
"வேற யாராவது பிட் பண்ண போறீங்களா? பிட் ஒன். டுவென்டி டூ க்ரோர்ஸ்; பிட் டூ” என சொல்லிக்கொண்டிருக்க, மித்ரனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாளவிகா கொஞ்சம் பதட்டத்துடன். அவன் அவளைப் பார்த்து 'மேலும் கேட்கவா?' என்பது போல் புருவம் உயர்த்த, வேண்டாம் எனத் தலை அசைத்தாள்.
அதற்குள், “பிட் த்ரீ” என்ற குரலில் இழுத்துப்பிடித்திருந்த மூச்சை விட்டவள், இயல்பு நிலைக்குத் திரும்பினாள். அவளுடைய பாவனைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறங்கிக்கொண்டிருதான் அவன், அவள் அதனைக் கண்டுகொள்ளாத வகையில்.
அவன் கேட்டத் தொகைக்கு அந்த ஏலம் முடிந்தாலும், முகத்தில் உற்சாகமில்லாமல் அவனுடைய உதவியாளருடன் ஏல அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டான் கௌதம்.
"அமித் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு ஓய்வறையைத் தேடிக்கொண்டு மாளவிகா சென்றுவிட, அங்கிருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து கொண்டிருந்தது.
"அமீ...த்! ம்ம்" என ஏளனமாக உதட்டைச் சுழித்தவள், "என்ன அமித் உன் டேஸ்ட் கொஞ்சம் கொஞ்சமா மட்டமாயிட்டே போகுது” என்றாள் ரூபா கிடைத்த சிறு தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு.
"ஹேய்... கரெக்ட்டா சொன்ன. அது புரிஞ்சதாலதான் உன்னோட பிரேக் அப் பண்ணேன்” என அவன் சர்வ அலட்சியமாக அவளைத் தாக்க,
பற்களைக் கடித்தபடி, "என்ன தெய்வீக காதலா?" என ஒரு மாதிரி குரலில் கேட்ட ரூபா, "உன் கண்ணைப் பார்க்கும் போதே தெரியுதே. அவளைப் பார்த்து அந்தப் பொங்கு பொங்கற" ஆற்றாமையும் கோபமும் கலந்து ஒலித்தது அவளது குரல்.
'நான்சன்ஸ், காதலாவது கத்தரிக்காயாவது' மனதில் அப்படித் தோன்றினாலும் அதை அவளிடம் சொல்ல அவன் விரும்பவில்லை.
அவள் பொறாமையில்தான் அப்படிப் பேசுகிறாள் என்றே எண்ணிக்கொண்டான். "எதுவோ பயங்கரமா கருகற வாடை வருது. பார்த்து அல்சர் வந்துட போகுது. அப்பறம் உன் மார்க்கெட் கெட்டுபோயிடும். பீ கேர் ஃபுல்." அவனுடைய அந்தரங்கத்தில் அவள் மூக்கை நுழைப்பதை விரும்பாமல் மறைமுக எச்சரிக்கையாகவே சொன்னான். அதில் முகம் கன்றிப்போய் மேற்கொண்டு ஏதும் பேசாமல எழுந்து சென்றுவிட்டாள் ரூபா.
ஆண்களைக் காட்டிலும் முக உணர்வுகளைப் படிப்பதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள். அதுவும் ரூபாவைப் போன்ற தூண்டில் பெண்கள் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவனே அறியாத ஒரு உண்மையை அவனது சிறு பார்வையிலேயே அவள் கண்டு கொண்டதை அவன் உணரும்பொழுது காலம் வெகுவாக கடந்து போயிருக்கும்.
மாளவிகா அங்கே திரும்ப வரவும், அவளுடன் அந்த விடுதியின் நுழைவயிலை அடைந்தவன், அவனது வாகனத்திற்காகக் காத்திருந்தான்.
அதே நேரம் ரூபாவுடன் அங்கே வந்த கௌதம் அவனைப் பார்த்ததும் அவளைத் தன்னுடன் நெருக்கிக்கொண்டு அவனுக்கு அருகில் வந்து நின்றவாறு, "ப்ச்... இந்த ப்ராப்பர்டியை என்ன வாங்க விடாம பண்ணனும்னு நினைச்ச இல்ல? பாவம், ரொம்பவே டிஸபாயிண்ட் ஆயிருப்ப?" அவன் வேண்டுமென்றே மித்ரனை வம்புக்கு இழுத்தான்.
ரூபாவின் அரைகுறை உடையையும் அவள் அந்த கௌதமுடன் இழைந்துகொண்டு நிற்கும் கோலத்தையும் பார்த்து முள் மேல் நிற்பது போல் துன்பமாக இருந்தது மாளவிகாவுக்கு. மேலும் இந்த வம்பு சண்டை வேறு. கடனே என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கௌதம் சொன்னதற்கு, 'ஹா ஹா' என வாய் விட்டுச் சிரித்தவன், சற்று இறங்கிய குரலில், "மண்ணானாலும் சரி... பெண்ணானாலும் சரி... தேவையில்லனு நான் தூக்கிப் போட்டதைத்தான் நீ கெட்டியா பிடிச்சிட்டு இருக்க" கிண்டல் தொனிக்கச் சொன்னான் அக்னிமித்ரன்.
அதில், அவளை இறுகப் பற்றியிருந்த கௌதமின் பிடி பட்டெனத் தளர முகம் கறுத்தது ரூபாவுக்கு. அவமானத்தில் கௌதமின் முகம் போன போக்கைப் பார்த்து மனம் நிறைந்தவன், "பின்ன இவன் ஏண்டா இந்த ஏலத்துக்கு வந்தான்னு நினைக்கறியா?" எனக் குதர்க்கமாகக் கேட்டுவிட்டு, "உனக்கு அந்த தியேட்டர் எவ்வளவு அவசியம்னு எனக்குத் தெரியும் கௌதம். ஏன்னா அதைச் சுத்தி இருக்கற இடம் மொத்தத்தையும் வளைச்சுப் போட்டு வெச்சிருக்கியே. இதை வாங்கினாதான உன்னால அதையெல்லாம் டெவலப் பண்ண முடியும்? ஏதோ என்னால முடிஞ்சது, உனக்கு ஒரு டென் சி நஷ்டம் பண்ணேன். இப்ப எனக்கு நிம்மதியா தூக்கம் வரும்" நிதானமாகச் சொன்னான் அவன்.
மேலும் மேலும் அவன் கௌதமை சீண்ட, கோபத்தின் உச்சத்தை அடைந்தவன், "இந்த தியேட்டர் உனக்கு வேணாம் சரி. ஆனா கதிர் காம்ப்ளக்ஸ்? அதையும் இதே மாதிரி வேண்டாம்னு சொல்லிடு பார்க்கலாம்" அவசரத்தில் வார்த்தையை விட்டான் கௌதம்.
மித்ரன் கேள்வியாய் அவனைப் பார்க்க, "என்ன பாக்கற. ஒரு வருஷமா அதுக்கு விலைப் பேசிட்டு இருக்க இல்ல? நான் அதை வாங்கிட்டேன். அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன். இப்ப போய் நிம்மதியா தூங்கு போ” சவாலாகச் சொல்லிவிட்டு அங்கே வந்த தன் வாகனத்தை நோக்கிப் போனான் கௌதம்.
'ஓஹ்... நல்லவேள நாம சொன்னதுக்காக இந்த டீ.டீ அதை செய்யல. தானே ஒரு முடிவுலதான் இருந்திருக்குப் போல இருக்கு'
மனதிற்குள்ளேயே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டாள் மாளவிகா. பின் அவர்கள் வாகனம் வந்து சேர அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.
***
தோல்வி என்ற வார்த்தையே அக்னிமித்ரனுக்கு பிடிக்காது.
அதுவும் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கௌதம் அப்படிப் பேசியது அவனது தன்மானத்தை வெகுவாகச் சீண்டிவிட்டது. அவனை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற வெறி மனதில் கொழுந்துவிட்டு எரிய வாகனத்தில் ஏறி உட்கார்ந்தவன் மாளவிகாவைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பற்றியிருக்க கண்கள் சாலையை வெறித்திருக்க, அவனுடைய முகம் கருங்கல்லைப் போன்று இறுகிப் போயிருந்தது.
அவனுடன் நேரில் அறிமுகமாகி இரண்டு மூன்று நாட்களே ஆகியிருந்தாலும் அவன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை விடாமல் பார்த்திருக்கிறாள். சமூக வலைத்தளங்களில் கூட அவனது புகைப்படங்கள் பலவற்றையும் பார்த்திருக்கிறாள். எப்பொழுதுமே அவன் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தவண்ணம் இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும். இப்படி ஒரு முகத்தை அவன் பொதுவெளியில் யாருக்கும் காட்டியதில்லை. ஏனோ அவனுடைய இந்த முகத்தைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கவில்லை. மௌனமாக தன் கைப்பேசியைக் குடையத் தொடங்கிவிட்டாள்.
சில நிமிடங்களில் அவள் அதில் மூழ்கித் தன்னை மறந்திருக்க, "சொல்லுங்க தம்பி” என்ற கரடு முரடான ஒரு குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவனுடைய கைப்பேசி ப்ளூ டூத் மூலம் இணைக்கப்பட்டிருக்க, கார் ஆடியோ சிஸ்டத்திலிருந்து ஒலித்தது அந்தக் குரல்.
"கதிர் தியேட்டர் காம்ப்ளஸ் இருக்கில்ல அதோட ஓனரைத் தெரியும் இல்ல?" மித்ரன் கேட்க, திடுக்கிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.
'ஐயோ... இவளை மறந்துட்டோமே. நம்மள ஒரு ஆன்டி-ஹீரோவா கூட கன்சிடர் பண்ண மாட்டாளே... ஸ்ட்ரைட்டா வில்லன் கேரக்டர் இல்ல கொடுப்பா' என அவன் எண்ணிக்கொண்டிருக்க,
"ஆமாம் தம்பி. கதிர்வேலன் சார்தான? அவரோட பையன் பேர் கூட ஏதோ ஆச்சே.. அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவாங்கல்ல?"
எதிர்முனையிலிருந்து பவ்யமாக வந்த பதிலில், தன்னை மீட்டுக்கொண்டவன், "அப்பன் பிள்ளை ரெண்டு பேரும் இன்னும் ஒரு மணிநேரத்துல எனக்கு முன்னால இருக்கணும்” என்றான் கட்டளைத் தொனிக்க.
"எங்க வரணும் தம்பி”
அவர் கேட்கவும், "ம்... நம்ம ஆஃபிஸ்ல, என்னோட ப்ரைவேட் ஃப்ளோர்க்கு வந்திருங்க” என்று சொல்ல, "ஆங்... ஆஃபீசுக்கா" என்றவரின் குரலில் தொனித்த வியப்பில், மாளவிகா விழிகளை விரிக்க,
“ஆமாம், ஆஃபீஸ்க்குதான்” என அழுத்தமாகச் சொன்னவன், “ஆங்.. ஒரு முக்கியமான விஷயம், டேட்க்கு இதெல்லாம் தெரிய வேணாம்" கட்டளையாகவே சொல்லிவிட்டு அந்த அழைப்பைத் துண்டித்தவன் அருகில் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல வாகனத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டான். அதற்குமேல் மாளவிகாவும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.