top of page

En Manathai Aala Vaa! 6

Updated: Sep 27, 2022

மித்ர-விகா 6


சவாலாக சொல்லவில்லைதான், ஆனாலும் கோபத்தில் மாளவிகாவின் குரல் சற்று உயர்ந்து ஒலித்துவிட, "என்ன இந்த ஜென்மத்துல நடக்காதா. ஆர் யூ சேலஞ்சிங் மீ? நடத்திக் காட்டிட்டேன்..னா என்ன பண்ணுவ?” - அவன்தான் அதைச் சவாலாக மாற்றிக்கொண்டிருந்தான் வேண்டுமென்றே!


"ப்ச்.. இது என்ன வம்பா போச்சு. நான் எதார்த்தமாத்தான் சொன்னேன். நீங்க இப்படி பேசினா உடனே உணர்ச்சிவசப்பட்டு சேலஞ்ச்லாம் பண்ணற ஆள் நானில்ல. எனக்குன்னு வாழ்க்கைல சில லட்சியங்கள் இருக்கு அமித். நான் இந்த செகண்ட் வரைக்கும் அதை நோக்கித்தான் போயிட்டு இருக்கேன். ஸோ என்னை என் வழில விட்ருங்க”


அவள் தெளிவாகப் பதில் சொல்ல, "எங்க இவன் எண்ணத்துக்கு பணிஞ்சிருவோமோன்னு பயப்படற இல்ல. உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்ல. அதனாலதான் இப்படி பின்வாங்கற" கிண்டலாகச் சொன்னான் மித்ரன்.


அவன் கண்களை நேராகச் சந்தித்தவள், "பயமா? என் மேல எனக்கே நம்பிக்கை இல்லையா? ஜோக் ஆஃப் தி இயர்”


"ஸோ எந்த ஒரு சந்தர்பத்துலயும் நீ என் கிட்ட மயங்க மாட்ட? உனக்கு அவ்வளவு தன்னம்பிக்கை அப்படித்தான” தன் நோக்கத்தில் முன்னேறிக் கொண்டிருந்தான் மித்ரன்.


"எஸ். அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்” அழுத்தம் திருத்தமாக வந்தது அவளுடைய பதில். "மயங்கவே போறதில்லனா, தென் அடுத்த ஸ்டெப் போறத பத்தின பேச்சே இல்லையே. அப்பறம் என்ன?


ஒய் காண்ட் யூ டேக் இட் அஸ் எ த்ரீ மந்த்ஸ் சேலஞ். கம்ப்ளீட் மூணு மாசம் நீ என் கூட ஒர்க் பண்ணு. அதுக்கு பிறகும் நீ அட்ராக்ட் அகலன்னா நான் உன்னை இந்த வேலைல இருந்து ரிலீவ் பண்றேன். நீ உன் வழிய பார்த்துட்டு போயிட்டே இருக்கலாம்” இலகுவாகச் சொன்னான் அவன். அவளுடைய மனதை தன் பக்கம் திருப்ப அந்த மூன்று மாதமே அதிகமாகப்பட்டது அவனுக்கு.


அவளிடமிருந்து துரிதமான பதில் இல்லை என்றதும் அவளைத் திரும்பிப் பார்க்க கண்கள் மூடி உட்கார்ந்திருந்தாள். ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள் என்றுதான் எண்ணினான் அவன். ஆனால் உண்மையில் அவள் தன்னை நிலைப் படுத்திக்கொண்டிருந்தாள்.


“உன் முன்னால எத்தனை பேர் நின்னுட்டு இருக்காங்கங்கறது முக்கியமில்ல மாலும்மா. அது ஒருத்தனே ஒருத்தனா இருந்தாலும், பத்து பேரா இருந்தாலும், ஏன் நூறு பேரா இருந்தக்கூட நீ அதை பத்தி கவலை படாத. உன்னோட பலம், பலவீனம் ரெண்டுமே நீதான். அதனால நீ கவனம் செலுத்த வேண்டியது உன் கிட்ட மட்டும்தான். உன் மேல நம்பிக்கை வை. அதுதான் முக்கியம். அதனால நீ வேற யாரை பத்தியும் கவலை பட வேண்டாம்”


முந்தைய தினம், அவளுடைய குருவான 'சாமிக்கண்ணு' அய்யாவைச் சந்திக்கச் சென்றிருந்த பொழுது, அவர் சொன்ன அறிவுரைகள் நினைவுக்கு வந்தது. ‘இவனை ஜெயிக்கறது ஒண்ணும் அவ்வளவு கஷ்டம் இல்ல மாளவிகா. இவனை ஜெயிக்கறது மூலமா ஒரு சிறப்பான பாடத்தை இவனுக்குக் கத்துக்கொடுக்கறது ரொம்ப முக்கியம். இவன் கசாப்புக் கடைகளைத் தானாகத் தேடி வரும் ஆட்டு மந்தைகளையே பார்த்து பழக்கப்பட்டவன். சிங்கம்னா எப்படி இருக்கும்னு இவனுக்குக் காண்பிக்க வேண்டாமா? இந்த சவாலை ஒத்துக்கோ!'


அவளது அறிவு அவளைத் தூண்டிவிட அந்த வாகனம் நின்றது கூட கவனமில்லாமல் உட்கார்ந்திருந்தாள்.


"ஹேய், அஜூபா. இப்படியே ஏதாவது லாங் ட்ரைவ் போலாமா? எனக்கு ஓகேதான்” அவன் கேலி போல் சொல்ல, சட்டென்று கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள்.


மறுபக்கத்தில் அவனும் இறங்கவும் வேகமாக அவர்களை நோக்கி வந்த காவலாளி ஒருவர் அந்த வாகனத்தை அதை நிறுத்துமிடம் நோக்கிச் செலுத்த, உள்ளே நுழைந்து இருவருயும் மின்தூக்கியை அடைந்தனர்.


அவளுடைய கண்களை ஆழமாகப் பார்த்துக்கொண்டே, "ஸோ... உண்மையிலேயே நீ பயப்படற. அதை ஒத்துக்கோ. அந்த கான்ட்ராக்ட கேன்சல் பண்ணிட்டு உன்னை இன்னைக்கே ரிலீவ் பண்ணிடறேன்” வேண்டுமென்றே அவளைச் சீண்டுவது போல் சொன்னான் அவன்.


அவனுடைய நோக்கம் நன்றாகவே புரிந்தாலும், "அதுக்கு அவசியம் இல்ல மிஸ்டர் அக்னிமித்ரன். நான் உங்க சேலஞ்சை அக்சப்ட் பண்ணிக்கறேன். நான் தான் ஜெயிப்பேன். அதுல சந்தேகமே இல்ல. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது எந்த நிபந்தனையும் இல்லாம நான் சொல்றத அப்படியை நீஈஈஈஈங்க கேட்கத்தான் போறீங்க. எனக்கு அதுல எந்த செகண்ட் தாட்டும் இல்ல” கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் தெளிவாக மொழிந்தாள்.


"கான்ஃபிடன்ஸ் இருக்கலாம். அதுக்காக ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்கக் கூடாது மேடம்” அவன் சற்றுக் கிண்டலுடன் மொழிய, "எப்படி வேணா எடுத்துக்கோங்க. இது செல்ஃப் கான்ஃபிடன்ஸா இல்ல ஓவர் கான்ஃபிடன்ஸான்னு மூணு மாசம் முடியும்போது தெரியும். மத்த படி உங்க உடல் பலத்தை காமிச்சு என்னை ஜெயிக்க ட்ரை பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்... அப்படி ஏதாவது" அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக இடை புகுந்தவன், "ஒரு விஷயத்தை ஃபோர்ஸ்ஃபுல்லி அடையறதுல எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை டார்லிங். அது இன்னுமா உனக்குப் புரியல. நீயாவே என்னை அக்ஸப்ட் பண்ணிட்டு என்னைத் தேடி வரணும். அதுதான் எனக்கு தேவை. மத்தபடி நான் என் பலத்தை... ஐ மீன் உடல் பலத்தை உன் கிட்ட காமிக்க மாட்டேன்! நீ நம்பலாம்”


அவன் கிண்டலாகவே சொல்ல, பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாமல், ஏளனம் கலந்த சிறு புன்னகையைச் சிந்திவிட்டு அவர்கள் இறங்க வேண்டிய தளத்தில் நின்ற மின்தூக்கியிலிருந்து வெளியேறினாள் மாளவிகா. அந்தப் புன்னகையின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாமல் தன் அலுவலக அறை நோக்கிப் போனான் அக்னிமித்ரன்.


அவன் அறிவு மங்கி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்திருந்தாலும், அவன் அதை உணர்ந்திருக்க மாட்டான் என்பதே உண்மை. அனுபவப் பூர்வமாக உணரும் பொழுது அந்தப் புன்னகையின் பொருளைப் கட்டாயம் சரியாகப் புரிந்துகொள்வான் அக்னிமித்ரன். மாளவிகாவையும்தான்!


***


உள்ளே நுழைந்ததும், "ரைஸ் பர்சேஸ்க்காக சப்ளையர்ஸ் கிட்ட இருந்து கொட்டேஷன் மெய்ல்ஸ் வந்திருக்கும். எல்லாத்தையும் செக் பண்ணி, லிஸ்ட் ரெடி பண்ணு. அப்படியே லோயஸ்ட் ப்ரைஸ் என்னன்னு பார்த்து சொல்லு” என மாளவிகாவைப் பணித்துவிட்டு அவனுடைய இருக்கையில் போய் அமர்ந்தான் மித்ரன்.


மாளவிகா நியமிக்கப்பட்டிருந்த 'அக்மி ரீட்டைல் லிமிடெட்'இன் அலுவலகம் 'தீபலக்ஷ்மி டவர்ஸ்' கட்டடத்தின் ஒன்பதாவது தளத்திலிருந்தது.


மித்ரனின் பிரத்தியேக அலுவலகம் பத்தொன்பதாவது தளத்தில் அமைந்திருந்தது.


'வீனஸ் டெலிவிஷன்ஸ் லிமிடெட்' நிறுவனத்துடன் சேர்த்து அவர்களுடைய மேலும் சில நிறுவனங்களின் முக்கிய கணக்கு வழக்குகள் சார்ந்த பிரிவு அது.


மாளவிகாவை அருகிலேயே வைத்துப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த பொழுதிலும், கவியுடன் சேர்த்து மற்றவர்களையும் கருத்தில் கொண்டு அவளுக்கென்று தனிப்பட்ட கேபின் ஒதுக்கச் சொல்லியிருந்தான்.


அவளை தன் வழிக்குக் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு மேலோங்கி இருந்தது. கவி அவளைப் பற்றி விசாரித்துச் சொன்ன வரையில், 'எல்லா ஆசைகளும் நிரம்பியிருக்கும் ஒரு சாதாரண கல்லூரி மாணவி' என்ற எண்ணத்தைத் தவிர அவளைப் பற்றிப் பெரிய அபிப்ராயமெல்லாம் ஏற்படவில்லை அவனுக்கு.


அவளுடைய வயதிற்கே உரித்தான சின்ன சின்ன ஆசைகளையும் தேவைகளையும் அறிந்து அவற்றை பூர்த்தி செய்தாலே போதும். அவளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எளிதாக எண்ணிவிட்டான் அவன்.


ஆனால் அவனது எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறாள்.


எடுத்த எடுப்பிலேயே “இந்த வேலையே வேண்டாம்” என்றாள். அவளிடம் பேசி அவள் முடிவை மாற்றலாம் என்ற எண்ணத்தில் அவளை அழைத்தால், 'வரமாட்டேன்' எனக் கொஞ்சமும் அசராமல் பிடிவாதம் பிடித்து அவன் பிடிவாதத்தை அவள் மிகைப்படுத்த, இதுதான் சாக்கென்று அவளை அவனுக்கு அருகிலேயே இருந்துகொண்டு வேலை செய்யும்படி செய்துவிட்டான்.


அன்று கல்லூரி விழாவில் அவள் நடனமாடும் அந்தக் காணொளியில் அவளது நண்பன் அன்புத்தமிழனுடன் ஆடுவதைப் பார்க்கும்போதெல்லாம் அவனது உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு எரிமலை குமுறுவது போன்றே தோன்றும். இத்தனைக்கும் அதில் தவறான நடன அசைவுகளோ தீண்டலோ இல்லவே இல்லை. ஆனாலும் ஏனோ அவனால் அதை ஏற்க இயலவில்லை.


அதுவும் அவள் அன்புவுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்த பிறகு, அவனால் அதை அனுமதிக்கவே முடியவில்லை. அதுவும் அவன் அனுப்பிய காரில் அவள் செல்ல மறுக்கவும், அவளிடம் வெளிப்படையாக நடந்துகொள்கிறோம் என்பதைக் கூட உணராமல் ஆத்திரம் அவன் கண்களை மறைக்கப் பிடிவாதம் மேலோங்க தன் வாகனத்தில் அவளை ஏற வைத்தான். வார்த்தை ஜாலத்தால் அவளை அந்த சவாலை ஏற்கவும் வைத்துவிட்டான்.


ஆனால் அதற்கு அவள் ஆற்றிய எதிர்வினையும் அவளது உடல் மொழியும் அவன் எந்தப் பெண்ணிடமும் காணாத ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அது அவனுக்குக் கொஞ்சம் வியப்பாகக் கூட இருந்தது.


அவளைப் பொறுத்தமட்டில் அவன் ஒன்று நினைக்க, அவன் திட்டமிடாத ஏதோ ஒன்று அதன்பாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அவளைப் பற்றிய சிந்தனை கொஞ்சமும் கலையாமல் உட்கார்ந்திருந்தவனை, அவனது அலைபேசியின் இசை நிகழ்வுக்குக் கொண்டுவர, அது கவியின் அழைப்பு என்பதால் அதை ஏற்றான்.


"பாஸ். காலைல வாக்கிங் போகும்போது ஒரு பைக்காரன் தட்டிட்டான். கைல ஒரு ஹேர் லைன் க்ராக். எக்ஸ்-ரே எடுத்துட்டு டாக்டரை பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கட்டுப் போட வேண்டி இருக்கும்” என தயக்கத்துடன் இழுத்தான்.


சுருக்கெனக் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்க்க, "ப்ச்... எவ்வளவு முக்கிய பொறுப்புல இருக்க கவி. கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்க வேண்டாம். இன்னைக்கு அந்த துர்கா தியேட்டர் ஏலம் வேற இருக்கு"


அவனைக் கடிந்தவாறு, "ஓகே.. கட்டோட இன்னைக்கே ஆஃபிஸ் வர வேண்டாம். டேக் கேர்" என்றவாறு அந்த அழைப்பைத் துண்டித்தான்.



பின் கணினிக்குள் தலையை நுழைத்திருந்த மாளவிகாவை நெருங்கி, "ஹெச் ஆர் ல உனக்கு டேப் கொடுத்திருக்காங்க இல்ல?" என்று கேட்க, "ம்" என்றவாறு தலை அசைத்தாள்.


பின் தன் கைப்பேசியிலிருந்து சில கோப்புகளை அதற்கு அனுப்பியவன், "கமான்... கெட் ரெடி ஃபாஸ்ட். ஒரு முக்கியமான ஆக்ஷன் அட்டென்ட் பண்ணனும்" என அவளைத் துரிதப் படுத்தினான் மித்ரன்.


அதை பற்றி அவனோ அல்லது கவியோ முன்பே எதுவும் சொல்லாத காரணத்தால், அவள் அவனை ஒரு புரியாத பார்வை பார்க்க, "அஃப் கோர்ஸ், இது உன்னோட வேலை இல்ல. கவி சொதப்பிட்டான். ஸோ வேற வழி இல்ல. ஐ நீட் யுவர் சப்போர்ட்”


அவன் தணிவாகவே சொல்லவும், அவன் குண இயல்பு கொஞ்சம் பிடிபட்டிருக்க, மறுக்காமல் அவனுடன் கிளம்பினாள்.


***


காரை செலுத்திக்கொண்டே அருகில் உட்கார்ந்திருந்தவளிடம், "நான் உன் டேப்க்கு சில ஃபைல்ஸ் அனுப்பியிருக்கேன். அதுல அந்த ப்ராப்பர்டி பத்தின டீடெய்ல்ஸ், அதோட மார்க்கெட் வேல்யூ, கைட்லைன் வேல்யூ எல்லாம் இருக்கு. அதெல்லாம் நோட் பண்ணிக்கோ. பிட் பண்ண அப்பப்ப சின்ன சின்ன கேல்குலேஷன்ஸ் தேவை படும். நான் கேட்கும்போது கொஞ்சம் கவனமா பார்த்து சொல்லு” என்றவன் நிதானமாகக் கவிக்கு அடி பட்டிருப்பதை அவளிடம் சொன்னான்.


"இதை முன்னாலேயே சொல்லியிருக்கலாமே” எனக் குறையாகச் சொன்னவள் தன் கைப்பேசியில் கவியை அழைக்க, "சொல்லுங்க மாளவிகா” என்றவாறு அவன் அதை ஏற்கவும், "கொஞ்சம் பார்த்து போயிருக்க கூடாதா கவிண்ணா" என்றாள் முழு அக்கறையுடன்.


'கவி அண்ணாவா? இது எப்ப இருந்து?' என்ற எண்ணத்துடன் விழி வெளியே தரிதெறித்து விடும் போல் அவளைப் பார்த்தான் மித்ரன். அவளது அக்கறையான கேள்வியில் இளகியவன், "ஸ்கூல் பசங்க கைல எல்லாம் பைக்கை கொடுத்து அனுப்பறாங்க. நாம என்ன கவனமா இருந்து என்ன செய்ய?"


சிறிது நேரத்திற்கு முன் மித்ரனிடம் இந்தப் பதிலைச் சொல்ல யோசித்தவனுக்கு இவளிடம் சொல்ல அந்தத் தயக்கம் ஏற்படவில்லை.


"ரொம்ப வலிக்குமே கவிண்ணா. என்ன பண்றீங்க? கூட ஹெல்ப்புக்கு யாராவது இருக்காங்களா?"


தன்னியல்பாக மேலும் மேலும் தன் அக்கறையை வெளிப்படுத்தினாள் அவள்.


"வலி கொஞ்சம் இருக்கு. பட் டாலரபிள்தான்” என்றவன், "என் டர்ன் வந்துடுச்சு. அப்பறம் பேசறேன்" என அவசரமாக அழைப்பிலிருந்து விலகினான் கவி.


உடனே 'டேப்'பை எடுத்து அவன் சொன்ன விவரங்களை ஆராயத் தொடங்கிவிட்டாள் மாளவிகா. அவளிடம் போலி நாடகம் போன்ற சாயல் கொஞ்சம் கூட இல்லை. 'இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பார்த்துப் பழகிய ஒருவனிடம் இவ்வளவு அக்கறை செலுத்த முடியுமா?' ஆச்சரியமாக இருந்தது மித்ரனுக்கு.


அவனது வாகனம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியை அடைய, அதன் ‘வேலட் பார்க்கிங்’ பணியாளரிடம் அதை ஒப்படைத்துவிட்டு மாளவிகா பின் தொடர உள்ளே நுழைந்தான் மித்ரன்.


அந்த விடுதியின் கருத்தரங்கு கூடத்தில் அந்த ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அங்கே இருந்த இருக்கைகளை ஆக்கிரமித்திருக்க, முதல் வரிசையில் சில இருக்கைகள் காலியாக இருந்தன.


அவன் உள்ளே நுழைந்ததும், அவனைப் பார்த்தவர்கள், ஒவ்வொருவராக இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவனிடம் முகமன்களைப் பகிர்ந்துகொள்ள, எல்லோருக்கும் ஓரிரு வார்த்தைகளால் பதில் சொல்லிக்கொண்டே முதல் வரிசையில் போய் உட்கார்ந்தான் மித்ரன். மற்றவர்கள் காட்டிய பணிவும் மரியாதையும் அவனுடைய ஆளுமையைச் சொல்லாமல் சொல்ல, சிறு ரசனைப் பூத்தது மாளவிகாவின் விழிகளில்.


அவனுக்கு அருகில் உட்காருவதா வேண்டாமா என அவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, அவனது பக்கத்து இருக்கையைச் சுட்டிக்காட்டி, "உட்காரு. அப்பத்தான் உன் கிட்ட டீடெய்ல்ஸ் கேட்க முடியும்" என்றான் கட்டளை போல.


அவள் அருகில் வந்து உட்கார, அங்கே சிறு சலசலப்பு ஏற்படவும் பின்னால் திரும்பிப் பார்த்தாள் மாளவிகா.


"யாரு அந்த கௌதம் வந்திருக்கானா?” திரும்பிப் பார்க்காமலே அவளிடம் கேட்டான் மித்ரன் ஒரு எகத்தாள குரலில்.


திரைப்பட தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான கௌதம்தான் வந்திருந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டவள், 'எஸ்... அமித்' என்றாள் வியப்பு மேலிட. "எதிர்பார்த்தேன்" என்றான் அவன் ஒரு கோணல் புன்னகையுடன்.


அவர்களைக் கடந்து அவனுக்கு அருகில் ஒரு இருக்கை தள்ளி அந்த கௌதம் போய் உட்கார, "ஹவ் ஆர் யூ அமித்?" என்றவாறு அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் அவள்... ரூபா!


அவன் அவளை இந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது பார்வையின் மாற்றமே சொல்லிவிட, அக்னிமித்ரனைத் தாண்டி மாளவிகாவிடம் வந்து நிலைத்தன ரூபாவின் பார்வை ஒரு அசூயை கலந்த ஆராய்ச்சியுடன். அதில் தன்னையும் மீறி முகத்தைச் சுளித்தவள், நொடியில் தன்னை மீட்டுக்கொண்டாள் மாளவிகா.


ரூபாவின் இந்தப் பார்வையின் பொருளை என்றாவது புரிந்துகொள்வாளா மாளவிகா?

3 comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
Sumathi Siva
Sumathi Siva
27 sept 2022

Wow awesome

Me gusta

chittisunilkumar
27 sept 2022

Enda summa irundavalai sorimji vittuta da avalai pathi unaku innum teriala iduku ellam ava asarama irupa da, roopa vera aalai pudichitala roopa yar nu ivaluku teriala terimja innum nalla kili kili nu kilipala

Me gusta

Haritha Hari
Haritha Hari
23 mar 2020

Yaru kitta man saval vitara.. Mr. TT.. nee than perippa parupa iru.. but athu lady singam ku pudikathu...

Nee thokka pora nanga paka porom atha😎😎😎

Me gusta
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page