top of page

En Manathai aala Vaa! 5

Updated: Sep 27, 2022

மித்ர-விகா-5


மாளவிகா அவனைப் பெயர் சொல்லி அழைத்த விதத்தில் மித்ரனுக்குக் கோபம் வந்தாலும் கூடவே மெல்லியதாய் சிரிப்பும் வர, அதை மறைக்க முயன்று "ஹேய். அது என்ன இப்படி பேர் சொல்ற" எனக் கண்டனமாகக் கேட்டான் அவன்.


"கார்ப்பரேட் கல்ச்சர்ல ஒருத்தரை ஒருத்தர் பேர் சொல்லி கூப்பிடறதுல ஒண்ணும் சர்ப்ரைஸ் இல்லையே மிஸ்டர் அக்னிமித்ரன்" என வேண்டுமென்றே இன்னுமொருமுறை அவனுடைய பெயரைச் சொல்லியே அவள் மனதில் பட்டதை அப்படியே கேட்க, "பட் எங்களோடது ஒரு ட்ரெடிஷனல் கம்பெனி. தாத்தா காலத்துல இருந்து வேலை செய்யறவங்க சிலபேர் இன்னும் கூட இங்க இருகாங்க. உன்னை மாதிரி யாரும் என்னைப் பேர் சொல்லி இது வரைக்கும் கூப்பிட்டதில்ல. பெட்டெர் அவாய்ட் திஸ்” எரிச்சலுடன் மொழிந்தான் அவன்.


"அதுக்காக சார்.. பாஸ்.. இப்படியல்லாம் நான் கூப்பிட மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஏன்னா சார்னா 'ஸ்லேவ் ஐ ரிமைன்' அப்படின்னு அர்த்தம். பாஸ்னு சொல்றதுக்கும் மொதராளின்னு சொல்றதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. இங்கதான் கார்ப்பரேட் கல்ச்சர் ஃபாலோ பண்றதில்லன்னு சொல்லிடீங்களே. நான் வேணா மரியாதையா ‘ப்ரோ’ன்னு கூப்பிடட்டுமா?" பேசிக்கொண்டே போனாள் அவள். 'ப்ரோ' என்ற வார்த்தையைக் கேட்டதும் இதயத்தில் ஏதோ பட் பட் என வெடிப்பது போல் இருந்தது மித்ரனுக்கு.


‘ஏய் அஜூபா! என்னைப் பார்த்து ப்ரோன்னு சொன்ன முதல் பொண்ணு நீதான். ஆனாலும் இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?’ மனதில் தோன்றினாலும் அதை அவளுக்கு முன் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவா முடியும்!? அவள் பேசும் விதத்தைப் பார்க்கும்பொழுது அவள் விளையாட்டாக கிண்டலுடன் அப்படிப் பேசுவதாகவும் தோன்றவில்லை அவனுக்கு.


அவள் இயல்பே அதுதான் போலும் என்றுதான் எண்ணிக்கொண்டான். அதில் அவளிடம் வெளிப்பட்ட நிமிர்வு அவனையும் அறியாமல், அவனைச் சற்று அதிகமாகக் கவர்ந்தது.


தலை சாய்த்து வியப்புடன் அவளைப் பார்த்தான் மித்ரன். அவள் இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகு 'சார்' 'பாஸ்' என அவள் அழைப்பது ஏனோ அவனுக்குமே உவப்பில்லாமல் போக சிறு யோசனைக்கு பிறகு, "ஒண்ணு பண்ணு, இந்த மிஸ்டர் சிஸ்டர்லாம் வேண்டாம். ஜஸ்ட் கால் மீ அமித். ஜஸ்ட் அமித். என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல எல்லாரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஸோ இது வித்யாசமா தெரியாது" என்றான் அவன் ஒரு விஷம புன்னகையுடன். அந்த புன்னகையின் பொருள் புரியாமல், ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள் அவள்.


அவன் ஏன் அப்படி விளிக்கச்சொன்னான் என்பது மட்டும் தெரிந்திருந்தால் அவனைக் கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பாள். அவளைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறான் அவன். தெரிய வரும்போது அவனை எரிக்கும் அவள் மீதான காமம் காதலாகக் கசிந்துருகுமோ என்னவோ?


***


அதன் பின் அன்றைய வேலைகள் செம்மையாகத் தொடங்கின. அவளுக்கு அது உண்மையிலேயே அனுபவப்பூர்வமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புள்ள வேலையாகத்தான் இருத்தது.


ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது முதல் அதை அவர்களுடைய ஒவ்வொரு அங்காடிக்கும் கொண்டு போய் சேர்ப்பதுவரை கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டி இருக்கும் என்பதை அந்த ஒரு நாளிலேயே புரிந்துகொண்டாள் அவள்.


ஒரு 'ஃப்ரஷ்ஷர்' போன்று இல்லாமல் வேலையில் அவள் காட்டும் ஈடுபாடும் அதில் அவளது வேகமும் அவனைக் கொஞ்சம் பிரமிக்கத்தான் வைத்தது.


அதே சமயம் தேவை இல்லாத பேச்சோ அல்லது ஒரு பார்வையைக் கூட அவனை நோக்கி வீசவில்லை அவள். தன் தோற்றம் குறித்தும், ஆளுமை குறித்தும் கொஞ்சம் அதீத கர்வம் கொண்ட மித்ரன், அதில் சிறிது அடி வாங்கித்தான் போனான்.


அதனால்தானோ என்னவோ அவளது கவனத்தை எப்படி தன்னை நோக்கித் திருப்புவது என்ற வன்மமான யோசனை மட்டுமே அவனது மண்டைக்குள் சுழன்று கொண்டிருந்தது. கொஞ்சம் காரசாரமான விவாதத்துடன் தொடங்கிய வேலைகள் விறுவிறுப்பாகவே செல்ல, கடைசியாக அவன் சொன்ன ஒரு மின்னஞ்சலையும் அனுப்பி முடித்திருந்தாள் அவள்.


அடுத்த வேலைக்காக அவள் காத்திருக்க, "ஹெச்.ஆர்ல போய் மத்த பார்மாலிடீஸ்லாம் முடிச்சிட்டு நீ வீட்டுக்குக் கிளம்பலாம்” அவன் சொல்லவும் அடுத்த நொடி அங்கிருந்து பறந்தவள் அவன் சொன்னது போல் 'ஹெச் ஆர்' பிரிவிலிருந்தாள் மாளவிகா.


அடுத்து வந்த அரைமணி நேரம் அங்கே கழிந்தது. அவள் வேலைகள் முடிந்து வெளியில் வரவும் அவளைக் கைப்பேசியில் அழைத்த கவி, "ஆஃபிஸ் பிக் அப் ட்ராப்க்கு உங்களுக்கு கார் அனுப்பச் சொல்லி பாஸ் சொல்லியிருக்கார். ஸோ ஒரு டென் மினிட்ஸ் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுத் துண்டித்தான்.


அங்கே வரவேற்பிலிருந்த இருக்கையில் அவள் உட்கார்ந்திருக்க, சில நிமிடங்களில் சீருடை அணிந்த ஓட்டுநர் ஒருவர் அவளை நெருங்கி வந்து, "மேடம்! கவி சார் உங்களை வீட்டுல ட்ராப் பண்ண சொன்னாரு. போகலாமா?" என்று கேட்க, 'கேப்' வாகனமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் அவரை தொடர்ந்து அவள் வெளியில் வரவும் அங்கே நின்றிருந்த உயர் ரக காரை பார்த்ததும் அதிர்ந்து, "ஆஃபிஸ் கேப் இல்லையா? பிரைவேட் வெஹிகிள் மாதிரி இருக்கே" எனத் தயக்கத்துடன் அவள் அந்த ஓட்டுநரிடம் கேட்க, "இது கவி சாருக்கு கம்பெனில கொடுத்திருக்க கார்ங்கம்மா” என்றார் அவர்.


அதில் செல்ல சற்றுத் தயக்கமாக இருந்தது அவளுக்கு. "பரவாயில்ல அண்ணா. எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும். அதனால நீங்க போங்க. நான் பஸ்லேயே போய்க்கறேன்" என்றவள் அவரது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் மாளவிகா.


சில நிமிடங்களில் அவளது கைப்பேசி ஒலிக்க. அது கவி என்று காண்பிக்கவும், வேண்டுமென்றே அந்த அழைப்பைப் புறக்கணித்தவள், பேருந்து நிறுத்தத்தை அடைய, சரியாய் அவள் செல்லவேண்டிய பேருந்து வரவும் அதில் ஏறிக்கொண்டாள்.


அதன் பின் வீடு, அம்மா, அப்பா, தங்கை, ஓய்வு, உணவு உறக்கம் என அன்றைய நாள் இனிமையாக முடிந்தது.


***


காலை எழுந்து வழக்கம்போல கிளம்பி அடித்துப் பிடித்து மாளவிகாவும் சாத்விகாவும் பேருந்து நிறுத்தத்தை அடைய, சின்னவளின் கல்லூரி வாகனம் வரவும் அதில் ஏறிச் சென்றாள் அவள்.


மாளவிகா அவளுக்கான பேருந்திற்காகக் காத்திருக்க, அப்பொழுது அவளுக்கு அருகில் வந்து நின்றது ஒரு ஆடம்பர சொகுசு கார். “பஸ் வர நேரத்துல எந்த அதி புத்திசாலிடா இப்படி வண்டிய குறுக்க கொண்டு வந்து நிறுத்தறான்” என அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ‘நான்தான் அந்த அதிபுத்திசாலி’ என்று சொல்லாமல் சொல்வது போல் அவள் நின்றிருந்த புறமாக அந்த காரின் கதவைத் திறந்து அவளுக்கு காட்சிகொடுத்த அக்னிமித்ரன், "கெட் இன்" என்று சொல்ல, அதிர்ந்தாள் அவள்.


ஒரு நொடி என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறியவள், "ப்ச்.. உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் மிஸ்டர் அமித்”


கொஞ்சம் தகைந்த குரலில் சொன்னவள், "எனக்கு இந்த மாதிரி காஸ்ட்லீ ட்ரைவர்லாம் வேண்டாம். நம்ம அரசாங்கம் கொடுக்கற பஸ் இருக்கு. அதுவே போதும்" என அவள் சொல்ல அதற்குள் அவள் செல்ல வேண்டிய பேருந்து வரவும், அவனுடைய வாகனம் வழி மறித்து நிற்க, "ப்ளீஸ் நீங்க கிளம்புங்க" என்றாள் கலவரத்துடன். "நீ இப்ப இதுல ஏறலன்னா, என் கார் ஒரு இன்ச் கூட நகராது. எப்படி வசதி?” என அவன் சவாலாக, கிட்டதட்ட மிரட்ட, அவன் முகத்தில் தெரிந்த பிடிவாதம் அவன் சொன்னதைக் கட்டாயம் செய்வான் என்றது. அருகிலிருந்தவர்கள் வேறு கடுகடுக்க, பின்னாலிருந்த பேருந்திலிருந்து கிளம்பிய ஒலிப்பானின் சத்தம் வேறு சேர்ந்துகொண்டு அவளை நிர்ப்பந்திக்க வேறு வழி தெரியாமல் அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள் மாளவிகா.


இந்த ஒரு மணி நேரப் பயணம் அவர்கள் இருவருடைய வாழ்க்கையையே மாற்றிப் போடப் போகிறது என்பதை அறியாமல் வாகனத்தைக் கிளப்பினான் மித்ரன்.


காலை போக்குவரத்தில் வாகனம் ஊர்ந்து ஊர்ந்து செல்ல, அமைதியாக உட்கார்ந்திருந்தாள் மாளவிகா. அவளிடமிருந்து பதில் தாக்குதலை எதிர் நோக்கி இருந்தவன், ஓர பார்வையால் அவளைப் பார்க்க, ஒரு தீவிர பாவத்துடன் சாலையை வெறித்திருந்தாள் அவள்.


அவள் பேச மாட்டாள் என்பதை உணர்ந்தவன், "இப்படி ஒரு கார்ல ட்ராவல் பண்ண எத்தனை பேர் துடிச்சிட்டு இருகாங்க தெரியுமா. நான் உனக்கு லிஃப்ட் கொடுக்கலாம்னு நினைச்சா எவ்வளவு சீன் போட்ற நீ. ம்ம்.. என்ன சொன்ன நான் உனக்கு ட்ரைவரா? உனக்கு என்னோட லெவல் இன்னும் தெரியலன்னு நினைக்கறேன்” என கர்வமாகச் சொன்னான் மித்ரன்.


அதற்குக் கோணலாக ஒரு சிரிப்பு சிரித்தவள், "இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசை படறவ நான் இல்ல. கவர்மண்ட் பஸ்ல, ரோடை வேடிக்கை பார்த்துட்டு ஸ்டாண்டிங்ல ட்ராவல் பண்றத கூட என்ஜாய் பண்ணுவேன் நான். புரிஞ்சுக்கோங்க" என்றவள், எனக்கா உங்களைப் பத்தி தெரியாதுன்னு சொன்னீங்க?" என நக்கலாகச் சொல்லிவிட்டு, "ப்ச்.. நீங்க பரம்பரை பணக்காரர். பெரிய பிசினஸ் டைக்கூன். மீடியா செலிபிரிட்டி.


பொண்ணுங்களோட கனவு கண்ணன். உங்க லெவல் எனக்கு நல்லாவே தெரியும் அமித்.


ஆனா என்னோட லெவல்தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்க நியாயம் இல்ல” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே போக்குவரத்து சமிக்கைக்காக அவன் வாகனத்தை நிறுத்த, "அந்த சிச்சுவேஷன்ல வெச்சு என்னை கார்னர் பண்ணதாலதான் உங்க கார்ல ஏறினேன். இப்ப இந்த செகண்ட் நான் நினைச்சா கூட இறங்கிப் போயிட்டே இருப்பேன் அமித். ஆனா நான் அப்படி செஞ்சேன்னா அது என்னோட அறிவு முதிர்ச்சியைக் கேள்விக்குறி ஆக்கிடும்”


அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் பேசிக்கொண்டே போனவளைக் கேள்வியாகப் பார்த்தவன் சமிக்கையில் பச்சை விளக்கு ஒளிர்ந்ததை உணர்ந்து வாகனத்தைக் கிளப்பினான். "வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஒரு லக்ஸுரி கார்ல நான் வந்து இறங்கினா என்னோட அக்கம் பக்கத்துல அதை நல்ல விதமா பார்க்க மாட்டாங்க. இதுவே அது நம்ம ஆஃபிஸ் கேபா இருந்தா கூட பரவாயில்ல"


அவள் தன் நிலையை விளக்க முற்பட, "இதுதான் உங்கப் பிரச்சனை. மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி. மத்தவங்கள பத்தி எதுக்கு கவலை படணும்? மத்தவங்க கூட உரசிட்டு ட்ராவல் பண்றத விட இப்படி நிம்மதியா கார்ல போய் இறங்கறது ஒண்ணும் தப்பில்ல”


அவன் குதர்க்கமாகச் சொல்ல, கண்களில் கனல் தெறிக்க பட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள் மாளவிகா. அவள் பார்வையில் ஏதோ ஒரு கேள்வி தொக்கி நிற்க, "எப்படி? இந்த நடிகைங்க.. மாடல்ஸ் கூடலாம் இன்டிமேட்டா இருக்கற உங்க ஃபோட்டோஸ் வீடியோஸ்ல்லாம் சோஷியல் மீடியால வரும்போது நீங்க கண்டுக்காம இருப்பீங்களே அப்படியா?” அந்த மாதிரியெல்லாம் எங்களால, ஐ மீன் என்னால இருக்க முடியாது.


இது என்னை மட்டும் பாதிக்காது. எங்க அம்மாவை அப்பாவை சிஸ்டர்ஸை எல்லாரையும் பாதிக்கும். ஏன்னா இந்த சமூகத்துலதான் நாங்க வாழ்ந்தாகணும். இப்ப கூட அதுதான் எனக்கு நெருடலா இருக்கு. எங்க அப்பா அங்க மெயின் ரோட்லயே கடை வெச்சிருக்கார். அங்க எங்களை எல்லாருக்கும் தெரியும். நான் உங்க கார்ல ஏறினத யார்லாம் பார்த்தாங்களோ?"


இதை சொல்லும்பொழுதே அவள் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது.


அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவனுடைய பெற்றவர்கள் கூட இந்த அளவுக்கு அவனை விமர்சித்ததில்லை. இவள் இப்படி கேட்கவும், ‘ச்ச... இவ மேல ஏற்பட்ட ஒரு சின்ன க்ரஷ்காக இவ பேசறதையெல்லாம் கேட்கணுமா?’ என அவனது தன்மானம் அவனைக் கேள்வி கேட்க, "என் கூட கார்ல வந்தா உன்னோட மானமே போயிடும்னு பேசறியே, இதே ஒருத்தன் கூட பைக்ல உரசிட்டு போனியே அப்ப மட்டும் போகாதா?"


அவன் சீற்றமாகக் கேட்க, அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.


"ஓஹ்... அன்பு! அவன் கூடப் போனதை பார்த்துட்டுதான் சொல்றீங்கன்னா... அவன் என் ஃப்ரெண்ட். இங்க எல்லாருக்கும் என்னையும் தெரியும். அவனையும் தெரியும். பனை மரத்தின் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும் அதை கள்ளுன்னு நினைக்கற உலகம் இது. நீங்க அந்த பனைமரம் மாதிரி. உங்க சவகாசம் என் கேரெக்டரை கேள்விக்குறி ஆக்கிடும். ஆனா அன்பு கறந்த பால் மாதிரி சுத்தமானவன்"


கோபத்தில் முகம் சிவக்கச் சொல்லிக்கொண்டே போனவள் இடையில் ஏதோ பேச வந்தவனைத் தடுத்து, "எங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல நான் டான்ஸ் பண்ணதையே கவனிக்காத மாதிரி நீங்கக் கேள்வி கேட்டது பொய். ஏன்னா அன்னைக்கு என்னோட பெர்ஃபார்மன்ஸ் அப்..படி இருந்தது.


ஒரு வேளை அந்த மேக்கப்ல இருந்ததால என்னை அடையாளம் தெரியலையோன்னு நினைச்சேன். ஆனா அது அப்படி இல்ல. அன்னைக்கே என்ன தெளிவா நோட் பண்ணியிருக்கீங்க. இல்லன்னு சொல்லாதீங்க?" கூர்மையாய் எய்தாள் அவள் வார்த்தைகளை.


கொஞ்சம் அதிர்ந்தாலும், "யு ஆர் ஸோ பிரில்லியண்ட்" என அவளைப் புகழ்ந்தவன், "அன்னைக்கு ஏன் அந்த டான்ஸை ஆடின? என்னவோ எனக்காகவே நீ ஆடின மாதிரி ஏன் அப்படி ஒரு பீல் கொடுத்த? ஏன் உன்னைத் தவிர வேற எந்தச் சிந்தனையும் இல்லாத அளவுக்கு என்னை டாமினேட் பண்ண? உன்னை மறக்க ரெண்டு நாள்ஃ புல்லா ட்ரிங்க் பண்ணி கூட பார்த்தேன். நோ யூஸ்.


வேற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உன் முகம் குறுக்க வந்து என்னைக் கொன்னு புதைச்சுதே ஏன்? ஒரு மாசம் ப்ரான்ஸ சுத்தினேன் உன்னை மறக்க. முடியலையே. என்னை என்ன பண்ண சொல்ற? ஒரு ஆயிரம் தடவையாவது உன் டான்ஸ் வீடியோவை பார்த்திருப்பேன்.


அந்த அளவுக்கு நீ என்னைப் பாதிச்சது எனக்கு பிடிக்கல. ஐ ஹேட் மை ஸெல்ப். இதுல இருந்து நான் வெளியில வரணும்னா நீ ஏன் கூடவே இருக்கணும்னு தோனுச்சு. அதுக்கு உன்னை என் பக்கத்துல கொண்டு வரணும்னு முடிவு பண்ணேன். அதை செஞ்சுட்டேன்”.


”என்கிட்ட இன்னும் க்ளோசா உன்னை எப்படிக் கொண்டு வரதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்”


அன்று மின்தூக்கியில் அவள் அவனைப் பார்த்த பார்வை அவனது நினைவில் வர, சவாலாகச் சொன்னான் அவன்.


"அது இந்த ஜென்மத்துல நடக்காது”


கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள் மாளவிகா.


தயக்கம் பயம் இவற்றின் சாயல்கள் கொஞ்சம் கூட இல்லாமல் மிகத் தெளிவாக இருந்தது அவளுடைய முகம்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page