மித்ர-விகா 49
ரூபா கொடுத்த அதிர்விலிருந்து மீண்டு வரவே பல நாட்கள் பிடித்தது அக்னிமித்ரனுக்கு. முன்பைவிட இன்னும் அதிகமாக கவனம் எடுத்துக்கொண்டான் மாளவிகாவிடம். பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி அப்படித் தாங்கினார்கள் மாளவிகாவை. சாம்பவியும் அக்ஷையும் ‘சித்தி... சித்தி...' என்று பசைப் போட்டதுபோல ஒட்டிக்கொண்டனர் அவளிடம்.
பெரிய பெரிய சங்கிலித்தொடர் தொடர் பல்பொருள் அங்காடிகளை (செயின் ஆஃப் சூப்பர் மார்கெட்ஸ்) எல்லாம் பார்க்கும் பொழுது அதைப் போல தானும் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான் நினைவு தெரிந்த நாள் முதல் அவளது கனவாக இருந்தது.
ஆரம்பத்தில் மாளவிகா அந்தப் பயிற்சி நிறுவனத்தில் இணைந்தபொழுது அவனுடைய வெவ்வேறு நிறுவனங்களிலிருந்த பணியிடங்களைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க, அவளாகத் தேர்ந்தெடுத்ததுதான் இந்த அக்மி ரீடைல்ஸ் நிறுவன பணி. அவளுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்த பிறகு இதைப் பற்றி அறிந்துகொண்டான் அக்னிமித்ரன்.
அவனுடைய தாத்தா அவனுக்குக் கொடுத்த, அவன் பெயரிலிருந்த அக்மி ரீடைல்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை மொத்தமாக அவளுடைய பெயரில் மாற்றிவிட்டான் அவன். இப்பொழுது அதன் மொத்த பொறுப்பையும் தனியாகப் பார்த்துக்கொள்வது மாளவிகாதான்.
குழந்தை பிறப்பதற்குள் புதையல் வேட்டை நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வேகத்தில் அதில் தன் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தான் அக்னிமித்ரன், மாளவிகாவிடம் செலுத்துவதுபோல்.
மித்ரனுக்கு பீஏ கவியரசு என்றால், இப்பொழுது மாளவிகாவின் பீஏ ரீமா. கவியும் ரீமாவும் சேர்ந்து அவர்களுடைய காதல் பயிரைச் செழிப்பாக வளர்த்துக்கொண்டிருப்பது ஒரு தனிக் கதை.
இதற்கிடையில் அவளுடைய ஆசைப் படி மூர்த்தியும் தன்னுடைய கடையை டிபார்ட்மென்டல் ஸ்டோராக மாற்றியிருந்தார். சாத்விகா விடாப்பிடியாகக் கைப்பேசியிலேயே சரவணனுடன் கடலை வறுத்துக்கொண்டிருக்க, மதுவின் குடும்பத்துடனான உரசல்கள் முடிவுக்கு வந்திருந்தன.
அன்பு ஐ.ஏ.எஸ் பயிற்சியில் இருந்தான். அன்புவுடன் பேசாமல் ஒரு பொழுதும் புலராது ஒரு இரவும் முடியாது மாளவிகாவுக்கு. அதாவது காலை இரவு என இரண்டு முறை அவனை அழைத்துப் பேசிவிடுவாள். சில சமயம் அக்னிமித்ரனும் அவர்களுடன் இணைந்துகொள்வான்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மணிமங்கலம் போய் வருவார்கள், சாமிக்கண்ணு அய்யாவையும் கண்ணம்மாவையும் சந்திக்க.
தொழிலிலும் சரி இல்லறத்திலும் சரி அக்னிமித்ரன் மாளவிகா இருவரின் கைகளும் இணைத்தே இருந்தது. வாழ்க்கை வசந்தகால தென்றலில் கலந்து வரும் மலர்களின் வாசம் போலச் சுகமாகச் சென்றது.
***
சில மாதங்களுக்குப் பிறகு...
வளைகாப்பு முடிந்து சரியாக ஒரு வார ஓய்வுக்குப் பிறகு அக்னிமித்ரனுடன் அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் மாளவிகா.
அரக்கு நிறத்தில் எளிமையான பருத்திப் புடவைதான் உடுத்தியிருந்தாள். அதுவே அப்படி ஒரு ஆளுமையான தோற்றத்தைக் கொடுத்தது அவளுக்கு.
கை நிறைய அடுக்கியிருந்த பல வண்ண கண்ணாடி வளையல்கள் தனி அழகைக் கொடுக்க, கழுத்தில் திருமணத்தன்று அவன் அணிவித்த கனமான தாலி சங்கிலியை மட்டுமே அணிந்திருந்தாள்.
காதில் அணியும் ஜிமிக்கியை மட்டும் விதவிதமாக மாற்றுவாளே தவிர, கழுத்தில் அந்த சங்கிலியைத் தவிர வேறு நகையே அணிவதில்லை அவள். ஆனால் அதுவே அவளுக்குப் பொருத்தமாக இருக்க, வீட்டில் யாரும் எதுவும் சொல்வதில்லை அவளை.
அவன் கேட்டாலும் கூட, "எனக்கு அதிகமா ஜுவெல்ஸ் போட பிடிக்காது. இந்த செயினைக் கூட இன்னும் கொஞ்சம் மெல்லிசா வாங்கியிருக்கலாம்" என்றுதான் சொல்லுவாள். வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கமெல்லாம் இல்லை அவளுக்கு.
ஒரு முறை அவளை குங்குமம் வைக்கச் சொல்லி அவன் சொல்ல, அவளுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்ததும் அப்படியே விட்டுவிட்டான் அவன். இந்த அடையாளங்கள் குறித்த இரு வேறு கருத்துக்கள் இருவருக்குமே இருக்க ஒருவருடையதை மற்றவர் அறிய வாய்ப்பே வரவில்லை இதுவரை.
கண்கள் மனைவியையே களவாடிக்கொண்டிருக்க, மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து அவனுடைய இதழ்களோ உல்லாசமாகச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தது.
இனியவளே உனது இரு விழி முன்
பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசய(னே)மே பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்த்து எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே
வேறாரும் வாழாத பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே
தலையினில் வானம் போதுமே
ஒரு கனமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காய்ந்து போகுமே.
நீதானே பொஞ்சாதி.
நான்தான் உன் சரி பாதி.
அவனுக்குப் பிடித்தபடி அஜூபா என்ற பொருள்பட, அதிசயமே என வார்த்தையை மனதிற்குள்ளேயே மாற்றிப்போட்டு அதை அவன் பார்வையிலேயே வேறு கொண்டுவர, அதை உணர்ந்து முகத்தில் படரும் செம்மையை மறைக்க இயலாமல், "யோவ்..” என்றவள், “ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டுங்க... பார்வையாலயே என்னை ஓட்டாதீங்க" என்றாள் அவள் கிண்டலாக.
"யோவ்ன்னு சொன்ன இல்ல அதனால முடியாது போடி..” என்றவனின் கண்கள் இன்னும் பிடிவாதமாக அவளை மட்டுமே பருக, அவனுடைய கன்னத்தைப் பற்றி, அவன் முகத்தை சாலையின் பக்கம் திரும்பினாள் மாளவிகா.
அந்தக் கையை அப்படியே பற்றி விரல் நுனியில் அவன் இதழ் பதிக்க, போலியாக முறைத்துக்கொண்டே அவள் கையை உருவிக்கொள்ள, அவன் வாய்விட்டுச் சிரிக்க என இதமாக சில நிமிடங்கள் செல்ல, மாளவிகாவின் கைப்பேசி அபஸ்வரமாக ஒலித்தது.
"சொல்லுங்க அங்கிள்" என்றவாறு அவள் அந்த அழைப்பை ஏற்க, யார் என்பது போல் அவன் பார்க்கவும், "ஆனந்த் அங்கிள்" என உதட்டசைவால் சொன்னவள், "ஆஃபிஸ் போய்ட்டு இருக்கோம் அங்கிள்" என்றாள், "இப்ப எங்க இருக்கீங்க" என அவர் கேட்ட கேள்விக்கு.
"உடனே ஹாஸ்பிடல் வர முடியுமாம்மா?" என அவர் கேட்ட விதமே பிரச்சனை என்னவென்று சொல்ல, "ரூபாவுக்கா அங்கிள்" என்றாள் சட்டென்று உண்டான கலக்கத்துடன்.
"ஆமாம்மா... உடனே வா" என்று அழைப்பைத் துண்டித்தார் அவர். கௌதம் இருக்கும்போதிருந்தே ரூபாவும் அவரிடம்தான் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மாளவிகா இதில் தலையிட ஆரம்பித்த பிறகு, அவளுடைய உடல்நிலைப் பற்றி அவரிடமே நேரடியாகக் கேட்டுக்கொள்ளுவாள். அதனால் அவளை அழைத்திருந்தார் அவர்.
விளம்பர படப்பிடிப்பு, 'ஃபேஷன் ஷோ' என சொல்லிக்கொண்டு அவள் வெளிநாடு சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. தினமும் அவளை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனாலும் அவ்வப்பொழுது பேசிக்கொண்டுதான் இருந்தாள் மாளவிகா.
சமயத்தில் அவள் குரல் தெளிவில்லாமல் ஒலிக்கும்பொழுது, "இதெல்லாம் தேவையா" என்று கேட்டால், "நாய் வேஷம் போட்டா குலைச்சுதான் ஆகணும்" என்பாள்.
அவளுடைய அம்மா மற்றும் மேனேஜர் இருவரும் கொடுக்கும் அழுத்தம்தான் என்பது தெரியவர, ஒன்றும் சொல்ல இயலாமல் போய்விடும் இவளுக்கு.
கடைசியாக ரூபாவிடம் பேசி பத்துநாட்களுக்கு மேல் ஆகியிருக்க, எப்பொழுது இங்கே திரும்ப வந்தாள் என்றே தெரியவில்லை அவளுக்கு. அனைத்தும் மனதிற்குள் ஓட, மித்ரனுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தாள் மாளவிகா.
அவர்கள் நேராகச் சென்று டாக்டர் ஆனந்தைப் பார்க்க, "உடம்பை ரொம்ப கெடுத்துவெச்சிட்டு இருக்காம்மா. ஒன் வீக் ஆச்சு இங்க அட்மிட் ஆகி. மீடியாக்கு தெரியாம பார்த்துக்கணும்னு ரொம்ப கான்பிடென்ஷியலா வெச்சிருக்கோம். உன்கிட்ட சொல்லவே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா.
எங்களால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம். இம்ப்ரூவ்மென்ட் இல்ல. ஹீமோகுளோபின் ஜஸ்ட் மூணுதான் இருக்கு. அல்மோஸ்ட் முடிஞ்சா மாதிரி" என்றவர், "இன்னைக்கு மார்னிங்தான் உன்னை பார்க்கணும்னு கேட்டா அவ" என்று முடித்தார் அவர்.
அவளை வைத்திருந்த ஐ.சி.யு உள்ளே போய் பார்க்க, ஏற்கனவே அவள் செய்யும் மாடலிங் தொழிலுக்குத் தகுந்த மாதிரி உடலை ஒல்லியாகதான் வைத்திருப்பாள், இப்பொழுது எலும்பில் தோல் போர்த்தியதுபோல் அவ்வளவு வேதனையான தோற்றத்திலிருந்தாள் ரூபா.
மாளவிகாவைப் பார்த்ததும் அவளுடைய கண்களில் கொஞ்சம் உயிர்ப்பு வர, ரூபாவின் பார்வை மாளவிகாவின் வயிற்றில் நிலைத்தது. "ட்விட்டர்ல பேபி ஷவர் ஃபோட்டோஸ் பார்த்தேன். நல்லா இருந்துது" என முனகலாகச் சொன்னவள், "எப்படி இருக்க?" என்றாள் ஹீனமான குரலில். "நல்லா இருக்கேன் ரூபா" என்ற மாளவிகாவின் கண்கள் கண்ணீரை உகுக்கத் தயாராக இருக்க, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள் அவள்.
அவளுக்கு அருகில்தான் நின்றுகொண்டிருந்தான் அக்னிமித்ரன். உள்ளே நுழைந்தவுடன் ஏக்கமாக அவனை ஒரு பார்வை பார்த்ததுதான் சரி. அதன் பின் ரூபாவுடைய கண்கள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.
அவளை எப்படி எப்படியெல்லாமோ பார்த்திருக்கிறான். ஆனால் சத்தியமாக இப்படி ஒரு கோலத்தில் அவளைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு. முதன்முதலாக அவளை நேரில் பார்த்த பொழுது அவளிடம் தெரிந்த கவர்ச்சிதான் அவளை அவனிடம் நெருங்க அனுமதிக்க வைத்ததே. நம்பவே இயலவில்லை அவனால்.
மனதால் இவ்வளவு பாடு பட்ட பின், ரூபாவை இப்படி ஒரு கோலத்தில் பார்க்கவும், 'ஆணோ பெண்ணோ ஒழுக்க நெறி பிறழ்தலை இயற்கையே அனுமதிக்காத பொழுது, நாம் கொஞ்சம் ஒழுக்கமாகவே வாழ்ந்திருக்கலாமோ' என்றுதான் தோன்றியது மித்ரனுக்கு. கால்கள் வேரோடியதுபோல நின்றிருந்தான் அவன்.
சுய நினைவுடன் இருந்தாலும் வெகுவாக அவள் மூச்சு விடப் போராட, ஒரு நொடி அன்புக்கரசியின் முகம்தான் நினைவுக்கு வந்தது மாளவிகாவுக்கு. மனதில் ஒரு பொறி தோன்ற, அருகில் நின்ற டாக்டர் ஆனந்திடம், "மஞ்சள் கயிறு கொண்டுவரச் சொல்லமுடியுமா அங்கிள்" எனக் கேட்டாள் அவள். 'இப்ப எதுக்கு இவ இதை கேக்கறா' என மித்ரன் திடுக்கிட்டு 'எதற்கு' என அவளிடம் பார்வையால் கேட்க, "எதுக்கும்மா" என அதை ஆனந்த் வாய்விட்டே கேட்டு விட, இருவருக்கும் பொதுவாக, "எடுத்துட்டு வர சொல்லுங்க" என அவள் பிடிவாதமாகச் சொல்லவும், அவள் குரலிலிருந்த தீவிரத்தில் செவிலியர் ஒருவரை அழைத்தவர், "ஒரு தாலிக் கயிறு கொண்டு வாம்மா" என்றார் ஆனந்த்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும்போது நோயாளிகள் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றிவிடுவார்கள், பெண்களின் தாலிச் சரடு உட்பட. அந்த மன உளைச்சலைத் தடுக்க, நோயாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் அணிந்துகொள்ள மஞ்சள் நூலினால் ஆன தாலிக் கயிறுகளை அங்கே வாங்கி இருப்பு வைத்திருப்பார்கள். அதில் ஒன்றைக் கொண்டுவந்து அந்த செவிலியர் கொடுக்க, அதன் கூடவே குங்குமமும் இருக்க, அதை அக்னிமித்ரனின் கையில் கொடுத்து 'அவளுடைய கழுத்தில் கட்டு' என்பதுபோல் ஒரு மாளவிகா ஒரு பார்வை பார்க்க, 'இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?' என்பதுபோல் உக்கிரமாக அவளை முறைதான் மித்ரன்.
அதில் அவள் "ப்ளீஸ்... எனக்காக" என உதட்டசைவால் அவனிடம் இறைஞ்சுவது போல் கேட்க, 'பிடிக்கல... ஆனா உனக்காக' என்பதுபோல், அவன் மனதிற்கு உவப்பாக இல்லாத போதிலும், உயிர் பிரியும் தருவாயில் இருப்பவள் முன் மறுத்து, ரூபாவை அவமதிக்கவும் மனமில்லாமல் அமைதியாக அதை வாங்கி அதை அவள் கழுத்தில் மாட்டினான் மித்ரன்.
அந்த நொடி, வியப்புடன் கூட ரூபாவின் முகத்தில் தோன்றிய ஒரு ஒளி அக்னிமித்ரனையே கொஞ்சம் ஆட்டம் காண வைத்தது என்றால் அது மிகையில்லை.
அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அதைத் துடைத்த மாளவிகா, தன் கையில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அவளுடைய வகிட்டில் வைக்க, அவளுடைய கையைப் பற்றியவள், அப்படியே தன் மார்பில் புதைத்துக்கொண்டாள் ரூபா. அவளுடைய கண்களில் அப்படி ஒரு நிம்மதி குடி கொண்டது.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவருக்குக் கூட மனதை என்னவோ செய்தது. சில நிமிடங்கள் கடந்தும் கூட மாளவிகாவின் கையை விடவேயில்லை ரூபா.
அப்படியே அவள் மயக்க நிலைக்குச் சென்றுவிட மெதுவாக தன் கையை விடுவித்துக்கொண்டவள், "கிளம்பறோம் அங்கிள். மறுபடியும் நினைவு வந்து ரூபா என்னை பார்க்கணும்னு கேட்டா சொல்லுங்க. வரோம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மாளவிகா அக்னிமித்ரனுடன்.
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் போனது. காரணம் அதன் பிறகு ரூபாவுக்கு நினைவு திரும்பவே இல்லை. உச்சத்தைத் தொட்டு எத்தனையோ பேரின் கனவுக் கன்னியாக மின்னிய நடிகைகள் பலரின் மோசமான மரணங்களை ஒரு செய்தியாகக் கடந்திருக்கிறாள். இந்த உயிர் போராட்டத்தை நேரில் பார்க்கவும் தாங்கவே முடியவில்லை மாளவிகாவால். வாகனத்தில் அவள் அமைதியாக உட்கார்ந்து வர, கட்டுக்கடங்காத கோபத்திலிருந்தான் மித்ரன்.
Comentarios