மித்ர-விகா 48
சில தினங்களுக்குப் பின் அலுவலகம் வந்திருந்தாள் மாளவிகா மித்ரனுடன். அவளுடைய பேச்சுக்கள் கொஞ்சம் குறைந்தது போலவே தோன்றியது. நடந்து முடிந்த குழப்பங்களுக்குப் பிறகு இந்த மட்டுமாவது இருக்கிறாளே என்றுதான் தோன்றியது அவனுக்கு.
அவனும் கூட அந்த அதிர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்காத காரணத்தினால் அவளிடம் அதிகம் பேச்சுக்கொடுக்கவில்லை.
மதியம் வரை அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்தவள், மதியம் சாப்பிட்ட பிறகு பால்கனியில் வந்து நின்றுகொண்டு சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள்.
வானம் லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. இடியும் மின்னலுமாக வேறு இருக்க, அவளைத் தேடி வந்தவன், "அஜூபா ஏன் இங்க நிக்கற? வா உள்ள போகலாம்" என்று அழைக்க, "எனக்கு அவங்கள பார்க்கணும்" என்றாள் அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே.
"யாரை?" என அவன் புரியாமல் கேட்க, "ரூபாவ" என அவள் சொல்லவும், "லூசா நீ" என்றான் மித்ரன் கடுமையாக. "இல்ல பாக்கணும். அப்பதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்?" என அவள் சொல்ல, அந்த வார்த்தை அவனை என்னவோ செய்தது.
"ஏன் அவ பேர்ல உனக்கு இவ்வளவு கரிசனம். எப்ப அவ உன்னோட சர்க்கிள் குள்ள வந்தா" எனக் கேட்டான் அவன் அவளைப் புரிந்தவனாக.
"எப்ப நீங்க அவ சர்க்கிள விட்டு வெளியில வந்தீங்களோ, இல்ல உங்க சர்கிளை விட்டு அவளை வெளியில அனுப்பினீங்களோ அப்பவே" என்றவளுக்கு அந்த ஏலத்தில் கலந்து கொண்ட அன்றைக்கு ரூபா அவளைப் பார்த்த அந்தப் பார்வை நினைவில் வந்தது.
ஏற்கனவே அன்று ரூபா சொன்னதை வைத்துப் பார்க்கும்பொழுது மாளவிகா சொல்வது உண்மையே என்று தோன்றியது மித்ரனுக்கு. இவ்வளவு நடந்த பிறகு அவளைத் தடுப்பது சரியில்லை என்று உணர்ந்தவன், "சரி நான் ஏற்பாடு செய்யறேன். நாம போயிட்டு வருவோம்" என்று சொல்ல, "இல்ல நீங்க வேண்டாம். நான் அவங்ககிட்ட தனியா பேசணும்" என்றாள் உச்சபட்ச பிடிவாதத்துடன்.
மறுவார்த்தை பேசாமல் அடுத்த நாள் மதியமே ஒரு நட்சத்திர விடுதியில் அவளைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டான் மித்ரன். ரூபா வேறு உடனே சம்மதித்துவிட மாளவிகாவை எண்ணி உள்ளுக்குள்ளே அவ்வளவு பயமாக இருந்தது மித்ரனுக்கு. இருந்தாலும் தானே அழைத்துக்கொண்டு போய் அவளை அங்கே இறக்கிவிட்டுவிட்டு அலுவலகம் திரும்பினான் மித்ரன்.
அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இடத்தில் போய் உட்கார்ந்தவள் ரூபாவிற்காக காத்திருக்க, சொன்ன நேரத்தைவிட சில நிமிடங்கள் காக்க வைத்த பிறகே அங்கே வந்தாள் அவள்.
அவளைப் பார்த்ததும், "ஹை எப்படி இருக்கீங்க?” என மாளவிகா சினேகமாகப் புன்னகைக்க, ஏதோ கோபப்படுவாள், சீறுவாள் என்றெல்லாம் எண்ணி வந்தவள், அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவளாக, "ஃபைன்" எனத் தயக்கத்துடன் கூடிய ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தாள் ரூபா.
"என்ன சாப்பிடறீங்க? உங்களுக்கு என்ன பிடிக்கும்?" எனக் கேட்டு அவளே உணவையும் ஆரடர் செய்ய, அவளுடைய இந்த அணுகுமுறையை ரூபாவால் நம்பவே முடியவில்லை.
"எதுக்கு என்னை மீட் பண்ணனும் சொன்னீங்க" எனக் கேட்டாள் மாளவிகாவிடம். அவளையும் அறியாமல் ஒரு மரியாதை பன்மை வந்து ஒட்டிக்கொண்டது.
"இதை கேக்கறதுக்கு சாரி!” என்றவள், "ப்ராப்பர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறீங்களா" என்று மாளவிகா கேட்க, என்ன பதில் சொல்வது என்று கூட புரியவில்லை ரூபாவுக்கு. இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு விரக்தி நிலை. மருந்துகள் கூட சரியாக எடுப்பதில்லை. மாளவிகாவின் அந்தக் கரிசனத்தில் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
அவளுக்கு அம்மா மட்டுமே. அவருக்கோ மகள் ஒரு பணம் காய்க்கும் மரம் மட்டுமே. அதை அவள் எந்த வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை அவருக்கு. கூடவே அதை அழிக்க சில ஒட்டுண்ணிகள் வேறு. அவளிடம் அக்கறை என்பதே யாருக்கும் கிடையாது. அதனால்தானோ என்னவோ ரூபாவின் நோய் பற்றி அவள் இதுவரை யாரிடமும் சொல்லக்கூட இல்லை.
பதிலுக்காக மாளவிகா காத்திருப்பது புரியவும், "ஏதோ" என்றவள், "உங்களுக்கு எல்லாம் தெரியுமா?" என்று கேட்க, "தெரியும்" என்றவள், 'உன் நிலைக்கு காரணம் என் கணவன் இல்லை' எனும் பொருள்படும் படியாக, "எங்க ரெண்டு பேருக்குமே நெகட்டிவ்" என்றாள் மாளவிகா.
மளவிகாவைத் திரும்ப அழைத்து வந்த பிறகும்கூட அவனது பயம் விலகாமல் போக, முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டு, திட்டவட்டமாக அவனுக்கு நோய்த் தொற்று இல்லை என அறிந்த பின்புதான் நிம்மதி உண்டானது இருவருக்கும்.
வியந்துதான் போனாள் ரூபா. அதற்குள் சூப் வர சாப்பிடத் தொடங்கினர் இருவரும். "உங்களுக்கு மித்ரனைப் பிடிக்குமா?" என மாளவிகா வெளிப்படையாகவே கேட்க, "ரொம்ப" என்றாள் ரூபா ஒரே வார்த்தையில் மனதை மறைக்காமல்.
"எமோஷனலா அட்டாச் ஆகிட்டிங்களா?" என அடுத்த கேள்வியைக் கேட்க, "ஆப்வியஸ்லி" என்றாள் ரூபா.
அவளுக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும், "அவர் ஏதாவது கமிட் பண்ணாற... கல்யாணம்ங்கற மாதிரி" எனக் கேட்டாள் அவள் பிரச்சினையை முடிக்கும் நோக்கத்துடன். "இல்ல" என்றுதான் பதில் வந்தது ரூபாவிடமிருந்து.
"கல்யாணம் இல்லாத ரிலேஷன்ஷிப்லதான இருந்தீங்க. அது நிரந்தரம் இல்லனு உங்களுக்குத் தெரியும்தானே? தென் ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு?" என அவள் தயங்காமல் கேட்கவும், மறுபடியும் கோபம் பொங்க, "ம்ம்... பணத்துக்காக, சான்ஸ்காக, அதைத் தக்க வெச்சுக்கறதுக்காக நிறைய பேர் கிட்ட காம்ப்ரமைஸ் பண்ணியிருக்கேன்... செக்ஸுவலி.
பட் நான் ஃபேமஸ் ஆன பிறகு, அதுவும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு கொஞ்சம் ஸ்டாண்டர்ட் மெயின்டைன் பண்ண ஆரம்பிச்சேன். அப்பதான் அமித் எனக்குப் பழக்கம். அவன் கூட உண்டான பழக்கம், பணத்துக்காகவோ இல்ல சான்ஸ்காகவோ இல்ல. எனக்கு அவனைப் பிடிச்சதால மட்டும்தான்.
நிறைய வக்கிரம் பிடிச்சவங்கள பார்த்திருக்கேன். பட் ஹி இஸ் டிஃபரண்ட். கூட இருக்கறவங்கள நல்லா கேர் பண்ணுவான். யாருக்குமே அவன் கூட இருக்கும்போது ஒரு கம்ஃபர்ட் ஜோன்ல இருக்கற ஃபீல் இருக்கும்.
வொர்க் பிஸில நேர்ல பார்க்க முடியலன்னா கூட அடிக்கடி ஃபோன்ல பேசிப்போம். லைக் லவ்வர்ஸ்.
அந்த டேஸை ரொம்ப லைக் பண்ணேன் மிஸ்ஸஸ் அக்னிமித்ரன்" என அந்த மிஸ்ஸர்ஸை அழுத்திச் சொன்னவள், "திடீர்னு ஒரு நாள்... பை கூட சொல்லாம என்னை அப்படியே கட் பண்ணி விட்டுட்டான் அவன். கால்ஸ் எதையும் அட்டென்ட் பண்ணல. என்னால அவனை ரீச் பண்ண கூட முடியல.
ஏற்கனவே எனக்குன்னு யாரும் இல்ல. எல்லாருக்கும் என் மூலமா வர பணம் மட்டும்தான் வேணும். இன்க்ளூடிங் என்னோட மாம். இவனும் என்னைக் கேவலமா பார்த்தால், எனக்கு எப்படி இருக்கும் சொல்லு” எனக் கோபத்தில் ஒருமைக்குத் தாவியவள், “அவனோட பீஏ மூலமா எனக்கு ரேட் பேசினான். என்கிட்ட இல்லாத பணமா? நான் பேசட்டுமா உன் புருஷனுக்கு ரேட். ஆம்பளைல அவன் எப்படியோ... பொண்ணுல நான்” என்று சீறினாள் ரூபா. மித்ரனை அவன் இவன் எனப் பேசுவதை வைத்து அவளுக்கு அவனிடம் உள்ள கோபத்தின் அளவு புரிந்தது.
அவள் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லைதான். ஆனாலும் உயிர் பயத்தில் இருப்பவளிடம் இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது என்பதினால் ஒரு பார்வையாளராக மட்டும் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் மாளவிகா.
“அப்படியும் அதை மறந்துட்டு நான் கால் பண்ணா, எவ்வளவு இன்சல்ட்டா பேசினான் தெரியுமா அவன். எவ்வளவு ஆக்வர்டா ஃபீல் பண்ணேன் தெரியுமா? என நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனவள், “அதுக்கெல்லாம் காரணம் யாருன்னு தெரியுமா? நீ... நீதான்... நீ மட்டும்தான். அப்படி என்ன நீ ஒசத்தி... நான் மட்டம்" என உணர்ச்சிவசப்பட்டதால் உண்டான பெருமூச்சுடன், "அக்னிமித்திரனுக்கு மட்டுமில்ல, இவனைப் போல திமிரு பிடிச்ச ஆண் வர்க்கத்துக்கே நானெல்லாம் யூஸ் அண்ட் த்ரோதான் தெரியுமா? ஆனா பாரு, அவனுக்கெல்லாம் உன்னை மாதிரி பியூரான ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்ணு, அதுவும் அவனை மனசார அக்சப்ட் பண்ணி, கல்யாணமும் செஞ்சுகிட்டு, அவனுக்காக இந்த அளவுக்கு இறங்கி வந்து நளாயினி வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க? அவனுக்கு மட்டும் என்ன மாதிரியான ஒரு சமூக அங்கீகாரம் இல்ல? ஆனா என் நிலைமை?" என்று அவள் கொதிக்க, அவள் கண்களில் உதிர்ந்த நீர் அவளுடைய கன்னத்தைச் சுட்டது. அவள் சொன்னதிலிருந்த உண்மை புரியவும் ஒரு பெண்ணாக மாளவிகாவுக்கு மனதைச் சுட்டது.
அதுவும் ரூபா சொன்ன 'நளாயினி' என்ற வார்த்தையில் அவளது தன்மானம் நன்றாக அடிவாங்கிதான் போனது.
அவனைப் பற்றி எல்லாமே தெரிந்திருந்தும் அக்னிமித்ரன் என்கிற போதைக்கு அடிமையானவள் போல் அவனிடம் பித்தம் கொண்டு, விடுபடமுடியாமல்தானே அவள் அவனைத் திருமணம் செய்துகொண்டாள்? ஆனால் இப்படி ஒரு பரிமாணத்தில் அவள் கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்ததில்லையே.
அவன்தான் அவளைத் துரத்தித் துரத்தி திட்டமிட்டு இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தினான் என்று சொல்லிக்கொண்டால் கூட அவனிடம் பிடித்தம் என்கிற ஒரு சிறு விதை கட்டுப்பாடில்லாமல் முளைத்து, துளிர்த்து மேலே வராமல் போயிருந்தால் அதற்கு உரம் போட்டு நீரூற்றி மிகப்பெரிய விருட்சமாக அவனால் வளர வைத்திருக்க முடிந்திருக்காது என்பது அவளுடைய மனம் மட்டுமே அறிந்த உண்மை.
மாளவிகா, சில நொடிகள் அசைவற்று ரூபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, 'என்ன?' என்பது போல் ரூபா புருவத்தை ஏற்றி இறக்கவும் பட்டெனத் தெளிந்தவளாக, கொஞ்சம் சுதாரித்து, "சாரி… நான் உங்கள மீட் பண்ணம்னு சொன்னது மித்ரனுக்காக இல்ல?" என்றவள், "இனிமேல் நடக்க வேண்டியதை பாருங்க" என்று சொல்லிக்கொண்டிருக்க, உணவு வரவும் அதையும் சாப்பிட்டுக் கொண்டே, "ப்ராப்பர் மெடிகேஷன் எடுத்தா ரொம்ப நாள் நல்லா ஆரோக்கியத்தோட இருக்க முடியும். கூடவே கௌன்சிலிங் எடுத்துக்கோங்க. அதை சொல்லதான் வந்தேன். மனசு கேக்கல" என்று அவள் சொல்ல, அதில் தொனித்த உண்மையான அக்கறை மனதிற்கு புரிய, "ப்ச்... யாருக்காக வாழனும் சொல்லுங்க?" என்றவள், அவளுடைய கழுத்தைச் சுட்டி காட்டி, "இப்படி சமூக அங்கீகாரத்தோட ஒரு தாலி கட்டிட்டு, வகிட்டுல குங்குமம் வெச்சிட்டு... இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை என்னோட ட்ரீம். அதெல்லாம் இனிமேல் சாத்தியமே இல்ல" என அவள் சொல்ல, வேதனையாக இருந்தது மாளவிகாவுக்கு.
ஒரு சராசரி பெண்ணிற்கு உரிய எல்லா ஆசாபாசங்களும் நிறைந்தவளாகவே அவள் கண்களுக்குத் தெரிந்தாள் ரூபா. கிட்டத்தட்ட இவளுடைய வயதுதான் இருக்கும் ரூபாவுக்கும். எப்படியும் மிகச் சிறிய வயதிலேயே இந்தத் துறைக்குள் வந்திருப்பாள். அந்த அந்த வயதிற்குரிய எந்த ஒரு சந்தோஷத்தையும் கண்டிருக்க மாட்டாள் என்றே தோன்றியது.
பரிதாபமாகதான் இருந்தது அவளைப் பார்க்க. ஆனால் அதைக் காண்பித்துக் கொள்ளாமல், அவளுடைய கையைப் பிடித்து அழுத்தியவள், "எது எப்படியோ... என்னை உங்க ஃப்ரெண்டா ஏத்துக்கோங்க... நான் இருக்கேன் உங்களுக்கு" என்றவாறு எழுந்து நின்று தன் கையை நீட்டியவள், "ஃப்ரெண்ட்ஸ்" என்று சொல்ல, எதிரியாக நினைக்க வேண்டியவளை கூட, அவளுடைய இடத்திலிருந்து நிதானமாகச் சிந்தித்து, மன்னிக்கவும், மறக்கவும், அவளுக்கே நன்மையை நினைக்கவும் முடிந்த விசாலமான அன்பு மனம் கொண்டவள் அவள் என்பது புரிய, பதிலுக்குப் புன்னகைத்தவாறே, கையிலிருந்த ஸ்பூனைப் போட்டுவிட்டு மென்தாளினால் கையைத் துடைத்துக்கொண்டவள், "எஸ்... ஃப்ரெண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு, "சாரி... உங்களைப் பழி வாங்கணும்னு நான் என்னென்னவோ செஞ்சேன். கடவுள் கருணையும்... உங்க நல்ல மனசும்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு" என்றாள் ரூபா மனதிலிருந்து.
பதிலுக்கு ஆறுதலாக அவளுடைய கையை அழுத்திப் புன்னகைத்தாள் மாளவிகா. அவளுடைய மனதை அறுத்துக்கொண்டிருந்த பாரம் இறங்கியதுபோல் தோன்றியது மாளவிகாவுக்கு.
சொன்னதோடு நிற்காமல், தொடர்ந்த நாட்களில் அவளை முறையான மருத்துவமும் எடுக்க வைத்தாள் மாளவிகா. அடிக்கடி ஃபோன் செய்து மருந்துகளைச் சரியாக எடுப்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டாள். இத்தனைக்கும் அதன் பின் ரூபாவை நேரில் சந்திக்கவே இல்லை அவள்.
அன்று அவர்கள் என்ன பேசினார்கள் என மித்ரனுக்கும் தெரியாது. அதே போல் அன்றைய தினத்துக்குப் பிறகான ரூபாவுடனான பேச்சில் ஒரு இடத்தில் கூட மித்ரன் வராமலும் பார்த்துக்கொண்டாள் மாளவிகா.
அவன் என்னவன். எனக்கு மட்டுமே உரியவன் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் மேலோங்கி இருந்தது.
***
Comments