மித்ர-விகா-47
அன்று இரவே, அவர்களுடைய குடும்ப மருத்துவர் ஆனந்தை அழைத்து அவரை நேரில் சந்திக்க வருவதாகச் சொன்னவன் சில நிமிடங்களிலேயே அவருக்கு முன் உட்கார்ந்திருந்தான் "கௌதம் இறந்தது எயிட்ஸாலதானே?" என்ற கேள்வியுடன். காரணம் அங்கேதான் அவனுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. அவருக்குத் தெரிந்துதான் அங்கே எல்லாமே நடந்திருக்கும், அதனால்தான்.
"ஏய்... நீ என்னப்பா... அதிகமா குடிச்சு குடிச்சு லிவர் மொத்தமும் கெட்டுப்போச்சு அவனுக்கு. இது தெரியாதா உனக்கு" என மழுப்பினர் அவர்.
"அங்கிள், எனக்கு தெரியும்! அவனுக்கு எய்ட்ஸ்தான்!" என அவன் அழுத்தமாகச் சொல்ல, "யார் உங்க அப்பா சொன்னாரா?" எனக் கேட்டார் அவர் அவஸ்த்தையுடன்.
"இல்ல... எனக்கு தெரியும்னு அப்பாவுக்குத் தெரியாது. ஏன்... விக்ரமுக்கு கூட தெரியாது" என்றவன், "நீங்க சொல்லுங்க?" என்று கேட்க, மறுக்க இயலாமல், "ஆமாம்" என்றவர், "ஆனா... அது ஒரு சிக்ஸ் மந்த்ஸ்கு முன்னாலதான் தெரிஞ்சுது. அதுக்கு கொஞ்சம் முன்னாலதான் அவனுக்கு அந்த நோய் தொற்று ஏற்பட்டிருக்கணும்" என்றார்.
"அவனுக்கு போய் எப்படி அங்கிள் இந்த டிசீஸ் வந்திருக்கும்" என ஒன்றுமே தெரியாதவன் போல் அவன் கேட்க, "வேற என்ன பொண்ணுங்க சகவாசம்தான்" என ரூபாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே சாதுரியமாக அவர் பதில் கொடுக்க, "ஏன் அங்கிள்... எய்ட்ஸ் வந்தா இவ்வளவு சீக்கிரம் செத்துபோவாங்களா என்ன?" எனக் கேட்டான் அவன் ஒரு பீதியுடனேயே.
'இவன் ஏன் இவ்வளவு கேள்வி கேக்கறான்?' என்று தோன்றியபொழுதும், "இல்லப்பா... இன்னும் சொல்லப்போனா எய்ட்ஸ் த்ரூ செக்ஸுவல் ட்ரான்ஸ்மிஷன்னு பார்த்தால் ரொம்ப ரேர்தான். பத்தாயிரத்துல நாலு பேருக்குதான் இந்த மாதிரி தோற்று ஏற்பட வாய்ப்பிருக்கு. ஹெல்தி ஹாபிட்ஸோட நல்ல ஃபுட் மெடிசின்ஸ்னு பல வருஷம் உயிர் வாழறவங்க நிறைய பேர் இருகாங்க. ஆனா இவனுக்கு உண்மையாவே ஒன் இயர்கு மேல லிவர் பங்க்ஷன் சரி இல்ல. இப்ப இதுவும் சேர இம்யூன் சிஸ்டம் மொத்தமா கெட்டுப்போச்சு. அதனாதான் அவனைக் காப்பாத்த முடியல" என விளக்கம் கொடுத்தார் அவர்.
தலையில் கை வைத்துக்கொண்டான் மித்ரன். கௌதமுக்காக வருந்துகிறான் என்றே தோன்றியது அவருக்கு. சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன், "ஒருவேள ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டால் எவ்வளவு நாள்ல வெளியில தெரியும்" என அவன் கேட்க, "இட் டிபென்ட்ஸ். சிலருக்கு சில நாட்கள்லயே தெரிய வரும். சிலருக்கு வருஷ கணக்குல கூட தெரியாம இருக்கும். அவங்க அவங்க இம்யூனிட்டிய பொறுத்தது" என்றார் அவர் எதார்த்தமாக.
ரூபாவை விட்டு விலகி பல மாதங்கள் ஆகியிருந்ததால் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையோ என அவன் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க, அவருடைய இந்த பதில் அவனைக் குழப்பத்தான் செய்தது.
எய்ட்ஸ் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அவனுக்கு மிக மிகக் குறைவாக இருந்த போதிலும், உடனே பரிசோதனை செய்துகொள்ள வசதிகள் இருந்தும் அதைச் செய்ய அவ்வளவு பயமாக இருந்தது அவனுக்கு.
அதாவது, கௌதமுக்கு நோய் தாக்கி மரணித்திருக்க, அது இப்படி ஒரு பெரும் பயத்தை விதைத்துவிட்டது அவனுக்குள்.
மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான் மித்ரன்.
***
மாளவிகாவை கண்களால் பார்த்து அவளுடைய குரலைக் கேட்டு நான்கு நாட்கள் ஆகியிருந்தன. நேராக எதிர்கொள்ளும் துணிவு இல்லாமல் அவளை முற்றிலுமாகத் தவிர்த்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.
வீட்டிற்கும் செல்லவில்லை அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ஸ்டுடியோவே கதி என்று கிடந்தான். நாள் முழுவதும் படப்பிடிப்பு, ஃபோட்டோ ஷூட்ஸ் என உணவு உறக்கம் எல்லாமே அங்கேதான் அவனுக்கு.
புகை பிடிக்கும் பழக்கம் எப்பொழுதுமே கிடையாது. மது அவனுக்கு ஒவ்வாது. எனவே தன் பயத்தைப் போக்கிக்கொள்ள நாள் முழுவதும் தன்னை வேலையில் மூழ்கடித்துக்கொண்டான் அவன்.
அங்கே ஷூட்டிங் இல்லை என்கிற பட்சத்தில் ‘ஆடி வா தமிழா’ செட்டில் கதிருடன் போய் உட்கார்ந்திருப்பான். சிறு தனிமை கிடைத்தாலும் மனம் மாளவிகாவை நாட, உயிர் வலியை அனுபவித்தான் அக்னிமித்ரன்.
ஆனாலும் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள மனம் துணியவில்லை அவனுக்கு. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் அக்னிமித்ரனுக்கு இது ஒரு அக்னிப்பரீட்சை காலம் எனலாம்.
அவனுடைய இந்தச் செய்கையால் தவித்துப்போனது என்னவோ மாளவிகாதான். 'ஏன் இப்படி நடந்துகொள்கிறான்?' என வருத்தமாக இருந்ததே தவிர, அவனுடைய அணைப்பிலும் முத்தங்களிலும் ஏன் சிறு சிறு தொடுகைகளிலும் கூட அவனுடைய கண்ணியத்தை… நேர்மையை உணர்ந்தவளால் அவனை ஒரு துளி அளவு கூடத் தவறாக எண்ண முடியவில்லை.
ரூபாவுடன் பேசிய பின்புதான் அவன் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிய, ஏதோ குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொண்டிருக்கிறான் என்றே நினைத்தாள் அவள்.
அவள் அனுப்பும் வாட்சப் தகவல்களைக் கூட அவன் பார்த்தானா என அறிந்துகொள்ள முடியவில்லை அவளால். வாய்ஸ் அனுப்பினால் கூட அதைக் கேட்கவில்லை அவன். அதிகம் வலித்தது அவளுக்கு.
கவியிடம் கேட்டாலும் சரியான தகவல் இல்லை. ஷூட்டிங்கில் இருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது.
தானாகத் தேடிப்போய் அவனைப் பார்க்க ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் சொல்லியிருந்தபடி அவனாக வந்தால் பரவாயில்லை என்று காத்திருந்தாள் அவள்.
***
பல வருட காத்திருப்புக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஆண் மகவு பிறந்திருந்ததால் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியில் இருக்க, இந்த பிரச்சனைகள் எதுவும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள் மாளவிகா தன்னையும் அந்தக் குதூகலத்தில் இணைத்துக்கொண்டு.
பொதுவாகவே குழந்தைப் பிறந்திருக்கும் வீட்டில் வேலைக்குப் பஞ்சம் இருக்காது. அவளுடைய நேரம் முழுவதையும் அவளுடைய அக்காவின் மகன் எடுத்துக்கொள்ள, நாள் முழுவதும் மித்ரனைப் பற்றிய சஞ்சலத்திலேயே உழன்றுகொண்டிருக்கும் அவசியம் இல்லாமல் போனது.
சாத்விகாவும் விடுமுறையில் வீட்டிலிருக்கச் சகோதரிகள் மூன்று பேரும் நீண்ட நாட்களுக்குப் பின் ஒன்றாக இருந்தனர். அன்று குழந்தையின் துணிகளைத் துவைத்து கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தவளுக்கு அதிகம் தலைச் சுற்றுவது போல் தோன்ற, அப்படியே வந்து உட்கார்ந்துவிட்டாள் மாளவிகா.
அவளை கவனித்துக்கொண்டே இருந்த மது, "என்னடி மாலு என்ன ஆச்சு?" என்று கேட்க, "தெரில கா... ஏனோ தலை சுத்துது" என்று சொல்ல, அவளுடன் உட்கார்ந்துதான் சாப்பிட்டாள் என்பதால் பசி இல்லை என்பது புரிய, "ஹேய்... மாலு. பப்புக்கு தம்பியோ தங்கச்சியோ ரெடிபண்றியா" எனக் குதூகலித்தாள் மது.
அது காதில் விழ, சமையல் அறையிலிருந்து வேகமாக வெளியில் வந்த துளசி, "என்ன மாலு மது கேக்கறாளே அதுதானா?" என ஆவலுடன் கேட்க, நாட்களைக் கணக்குப் போட்டவள், "அப்படி இருக்குமாம்மா?" எனக் கேட்டாள் நெகிழ்ச்சியுடன்.
"ஹேய் மாலு, எதுக்கு யோசனை? பேசாம டெஸ்ட் பண்ணிடுவோம்" என்றவள் சாத்விகாவை அழைத்து, "சாவி மாலதி அக்காவைக் கொஞ்சம் கூப்பிடேன்" என்று சொல்ல, அவளை அழைக்கத் துள்ளிக் கொண்டு ஓடினாள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சாத்விகா.
உடனே மாலதியும் அங்கே வர, தங்கள் யூகத்தைச் சொன்னவள், "அக்கா உங்க கிட்ட டெஸ்ட் கிட் இருந்தா எடுத்துட்டு வாங்க” என்று சொல்ல, அவர்கள் 'லேப்'பிலிருந்து உடனே அதை வரவழைத்தாள் மாலதி.
உடனே பரிசோதனையும் செய்துவிட, தெள்ளத்தெளிவான இரண்டு கோடுகளுடன், குழந்தையேதான் என்று சொன்னது அந்தக் கருவி.
அப்படி ஒரு மகிழ்ச்சி அங்கே எல்லோருக்கும். அதை உடனே மித்ரனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ, மாடியில் புதிதாகக் கட்டியிருந்த அவர்களுடைய அறைக்கு வந்தவள், கைப்பேசியில் அவனை அழைக்க, அப்பொழுதும் அவன் எடுக்கவே இல்லை.
வீட்டில் எல்லோருமே அவளைக் கேள்வி கேட்கும் ஒரு நிலை உண்டாகி இருக்க, ஓய்ந்துதான் போனாள் மாளவிகா.
அவர்களிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து, அங்கேயே இருக்கும் அவர்கள் வழக்கமாகக் காண்பிக்கும் மகப்பேறு மருத்துவரிடம் சென்று காண்பிக்க, அவர் எழுதிக் கொடுத்த ஸ்கேனிங் மற்ற பரிசோதனைகள் செய்யவென மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க, நேரில்தான் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதத்திலிருந்தவள், படிப்படியாக முடிவை மாற்றிக்கொண்டு அந்தக் கருவியைக் கைப்பேசியில் படம் எடுத்து, அதை மட்டும் அவனுக்கு அனுப்பினாள் மாளவிகா.
அதேநேரம் சரியாக அவன் கைப்பேசியைக் குடைந்துகொண்டிருக்கவும், வாட்சப்பில் அவள் அனுப்பிய அந்தப் படம் வந்து விழ, அனிச்சையாக அதைப் பார்த்த மித்ரனுக்கு அது என்ன என்பதே புரியவில்லை.
உடனே அருகிலிருந்த கதிரிடம் அதைக் காண்பித்தவன், "என்னடா இது" என்று கேட்க, அது மாளவிகாவிடமிருந்து வந்தது என்பது புரிய, "டேய்... மச்சான் என்னடா இது?!" என பதிலுக்கு நண்பனைப் பார்த்து குதூகலித்தான் கதிர்.
"டேய்... என்னனு சொல்லுடா" என மித்ரன் புரியாமல் தவிக்க, "டேய் மச்சான்... அப்பா ஆகப் போறடா" என கதிர் உடைத்துச் சொல்ல, பதறியே விட்டான் மித்ரன்.
அவன் அங்கிருந்து சென்ற வேகத்தில், 'இவன் என்ன இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கறான்!' என கதிருக்குத்தான் தலைச் சுற்றிப் போனது.
***
அவள் அனுப்பிய ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு மித்ரன் உடனே அழைப்பானோ என்ற எதிர்பார்ப்புடன் அவள் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருக்க, மாளவிகா அங்கே இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளைப் பார்க்க வந்தாள் மாலதி.
“வாங்கக்கா உட்காருங்க” என மாளவிகா இருக்கையை இழுத்துப் போட, “உன்னோட ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் எல்லாத்தையும் அவங்க இப்பதான் எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க. அதை கொடுக்கதான் வந்தேன்” என அவளுடைய கணவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு உரையை நீட்டினாள் மாலதி. காரணம் அவர்களுடைய ரத்தப் பரிசோதனை மையத்தில்தான் வழக்கமாகச் செய்யும் கர்ப்ப கால ரத்தப் பரிசோதனைகளை செய்துகொண்டாள் மாளவிகா.
“அக்கா எல்லாம் நார்மல் தானே... கொஞ்சம் பயமா இருக்கு” என அவள் சிறு படபடப்புடன் கேட்க, “பயம் எதுக்கு மாலு… எல்லாமே நார்மல் தான். கவலைபடாத” என்றவள், “எதுக்கும் டாக்டர்கிட்ட ஒரு தடவை காமிச்சிடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் மாலதி.
அவள் அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க கார் ஹாரன் சத்தம் காதை கிழித்தது. அதில் வேகமாக வந்து அவள் தெருவை எட்டிப் பார்க்க மித்ரன்தான் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு எவ்வளவு வேகமாக வந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் வந்திருப்பான் என்ற எண்ணம் தோன்ற, 'இவ்வளவு நாளா தவிக்க விட்டுட்டு இப்ப குழந்தைன்னதும் பார்க்க வந்துட்டானா?' எனக் கோபம்தான் வந்தது மாளவிகாவுக்கு.
அவன் வாகனத்தை நிறுத்த வழி விடாமல் பழம் விற்பனை செய்யும் சின்ன யானை வேன் ஒன்று குறுக்கே நின்று கொண்டிருக்க, பொறுமையில்லாமல் அப்படி ஹாரனை அடித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அந்தச் சத்தத்தில் அந்த வேன் கொஞ்சம் நகர, வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான் மித்திரன்.
அந்த வேனில் பழம் வாங்கிக் கொண்டிருந்த துளசி அவனைப் பார்த்து விட்டு, “வாங்க மாப்ள” என்றவாறு அவன் பின்னாலேயே வர, “அத்தை... மாள்வி” என்று மித்ரன் கேட்க, அவனுடைய கண்களும் அவளைத் தேட, “மாடில இருக்கா” என்றார் அவர் சிறு புன்னகையுடன்.
உடனே வேகமாக மாடி ஏறி வந்தான் அவன். அவனைப் பார்த்ததும் கைகளைக் கட்டிக்கண்டு. கைப்பிடி சுவரில் சாய்ந்தவாறு அவனை முறைத்தபடி நின்று கொண்டாள் மாளவிகா. ஒரு வார்த்தை கூட பேச முற்படவில்லை அவனுடன்.
அவளைப் பார்த்ததும் ‘எப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான தருணம். அதை அனுபவிக்கக்கூட முடியவில்லையே’ என்ற வேதனையில் அவனுடைய கண்களில் நீர் கோர்த்தது.
குழந்தை உண்டாகி இருப்பதைத் தெரிந்து கொண்ட பிறகும் அவன் அவளைப் பார்க்க வரவில்லை என்றால், காரியம் முடிந்ததும் கழற்றி விட்டுவிட்டான் என்பதுபோல, அவனால் திருமண உறவில் நிலைத்திருக்க முடியாது என்பதுபோல, அவனைக் குறித்து அவள் எதற்காக பயந்தாளோ அதை நிரூபிப்பது போல ஆகிவிடும் என்பதால் உடனே ஓடி வந்திருந்தான் அவன்.
அவள் தானாகப் பேச மாட்டாள் என்பது புரிய, கைப்பேசியில் அந்தப் படத்தைக் காண்பித்து, “நிஜமாவே பேபியா?” என்று அவன் தழுதழுக்க அதற்கும் பதில் சொல்லாமல், நேராக அறைக்குள் சென்று கட்டிலில் அவள் உட்கார்ந்து கொள்ள, அவளுக்கு அருகில் வந்தவன் அப்படியே தரையில் மண்டியிட்டு அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
அவளுடைய மடி தந்த இதத்தில் அதுவரை அவன் அடக்கி வைத்திருந்த வேதனை அனைத்தும் கரை உடைக்க, தன்னிலை மறந்து அவன் உடல் அழுகையில் குலுங்கவும், அதில் அவளது கோபம் அப்படியே காணாமல் போக, “மித்து என்ன ஆச்சு?” எனப் பதறினாள் அவள்.
ஏற்கனவே கண்முன்னே ஒரு குழந்தை சிதைக்கப்பட்டதைப் பார்த்து தூள் தூளாக நொறுங்கிப் போனவள், அவளுடைய மணிவயிற்றில் சூல் கொண்டிருக்கும் அந்தக் கரு பிறப்பதற்கு முன்பே அப்பன் செய்த பாவத்தைச் சுமந்திருக்கக்கூடும் என்று எப்படி அவளிடம் சொல்வது எனப் புரியாமல் மேலும் அவனது உடல் குலுங்க அதில் நிலைகுலைந்தவள், ஆறு நாட்களாக அவன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்று கோபம் வேறு சேர்ந்து கொள்ள “இப்ப சொல்ல போறீங்களா இல்லையா” என தன் நிலை மறந்து கத்தியேவிட்டாள் மாளவிகா.
அதில் உணர்வுக்கு வந்தவன், இனி மறைப்பதில் பயன் இல்லை என்பதை உணர்ந்து, இருவருக்குமே பரிசோதனை செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவனாக, தன்னை சமன்படுத்திக் கொண்டு, அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டான் மிதாரன்.
அவள் முகம் பேய் அறைந்தது போல மாறிப்போக, அனிச்சையாக அவள் கை வயிற்றைப் பிடித்துக்கொண்டது.
"ஒரு தனி மனிதனின் ஒழுக்கமீறல் அடுத்த தலைமுறை வரை கூட பாதிக்கும்ன்னு கொஞ்சம் கூட யோசிச்சே பார்க்காம நான் ஏன் இந்தப் பந்தத்துக்குள்ள நுழைஞ்சேன்? எத்தனையோ குழந்தைகள் இந்தப் பயங்கர நோயோடவே பிறக்கறாங்களே, அவங்களோட வாழ்க்கையே ஒரு போராட்டமா இருக்கே. அதையெல்லாம் ஒரு பார்வையாளரா பார்க்கும்போதே குலை நடுங்கி போகுதே. என் குழந்தைக்கும் அந்த நிலை வந்தால் என்னால் தாங்க முடியுமா? என் சலனம், என்னைப் பாதிக்கலாம் ஆனால் அது இந்தப் பூமியையே தொடாத ஒரு பிள்ளையைப் பாதிக்கலாமா?" என்ற கேள்விகள் அவள் மனதில் அணிவகுத்து நிற்க,
"இந்த திருமணமே தவறோ? இனி எங்கள் வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போய்விடுமோ?!" என்ற கேள்வி விஸ்வரூபமாய் எழுந்து நின்றது அவள் முன்னால். பேச்சே வரவில்லை மாளவிகாவிற்கு. மித்ரன் அவளை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, பலவாறான எண்ணங்களுடன் மனம் தடுமாற சில நிமிடங்கள் அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருந்தவளின் கண்களில் சற்றுமுன் வந்த அவளுடைய ரத்தப் பரிசோதனை முடிவுகள் விழவும், 'பயம் எதுக்கு மாலு… எல்லாமே நார்மல் தான். கவலைப்படாத!' என மாலதி சொல்லிச்சென்ற வார்த்தைகள் அவளது நினைவுக்கு வர, ஒரு ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தது அவளிடம்.
மெதுவாக எக்கி அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்தவள், “மித்து இத கொஞ்சம் பாருங்க. நமக்கு எதுவும் இல்ல” என்று வெகு இயல்பாக அவள் சொல்ல, “திடீர்னு இவ என்ன இப்படி ஒரு கூல் ரியாக்ஷன் கொடுக்கறா?!” என்ற எண்ணத்துடன் கைகள் நடுங்க அவன் அதைப் பிரித்துப் பார்க்கவும், அவள் தன் விரல் கொண்டு ஒரு இடத்தைச் சுட்டிக் காட்ட அதில் அவளுக்கு எச்ஐவி டெஸ்டுகள் எடுக்கப்பட்டிருக்க, அது நெகட்டிவ் என்று காண்பித்தது. தொய்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டான் அக்னிமித்ரன்.
சில தினங்களாக உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவன் பட்ட வேதனை அனைத்தும், ஒரு வேர்க்கடலையை விட சிறிதான உருவத்துடன் அவனவளின் கருவறைக்குள் உயிர் துளிர்த்திருந்த அவனுடைய மகவால் ஒரு நொடிக்குள் தீர்ந்து போனது.
அப்படியும் கூட பயம் தெளியாதவனாக, "உனக்கு ஏன் ஹெச்.ஐ.வி டெஸ்ட்டெல்லாம் எடுத்தாங்க" என அவன் நடுங்கும் குரலில் கேட்க, "எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் எடுப்பாங்க. இது ஒரு நார்மல் ப்ரொசீஜர்" என அவள் விளக்கம் கொடுக்க, "தேங்க் காட்" என்றான் ஒரு நிம்மதி பெருமூச்சுடன்.
அவனுடைய மனநிலை அறிந்து சிறு புன்னகையுடன், "மித்து ரிலாக்ஸ். நமக்கும் நம்ம பேபிக்கும் ஒண்ணும் ஆகாது. ட்ரஸ்ட் மீ" என்றவாறு அவள் தன் கைகளை விரிக்க வாகாக அவளிடம் அடங்கிப் போனான் அக்னிமித்ரன்.
மேற்கொண்டு அதைப் பற்றி அவள் ஒரு வார்த்தை கூட பேசாதது அவனுக்கு வியப்பாக இருந்தது. மனதில் வைத்துக்கொண்டு வருந்துவாளோ எனப் பயமாகவும் இருந்தது. அவளிடம் அதைப்பற்றிய பேச்சை வளர்க்கத் தயக்கமாகவும் இருந்தது அவனுக்கு.
ஒருவாறு சில நிமிடங்களில் அவன் சம நிலைப் படவும் அவளை முகம் அலம்பி வரச்சொல்லி, பின் இருவருமாகக் கீழே சென்றனர்.
அதற்குள் அவன் வந்திருப்பதை அறிந்து மூர்த்தியும் வீட்டிற்கு வந்திருக்க, வழக்கமான உபசரிப்புகளுக்குப் பின் சில நிமிடங்கள் மதுவின் குழந்தையைக் கொஞ்சிவிட்டு மனைவியைக் கையுடன் அழைத்துக்கொண்டு தங்கள் வீடு நோக்கிச் சென்றான் அக்னிமித்ரன்.
அப்படி ஒரு யோசனையுடன் உட்கார்ந்திருந்தாள் மாளவிகா. அவனும் அவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. இவ்வளவு மௌனமான ஒரு கார் பயணம் இதுவரைக்கும் இருந்ததே இல்லை இருவருக்கும். புயலுக்குப் பின் வரும் அமைதி போன்ற நிலை.
கார் நின்ற பிறகுதான் அவர்களுடைய மொத்த குடும்பமும் இருக்கும் பங்களாவிற்கு வந்திருக்கிறோம் என்றதையே உணர்ந்தவள் அவனைக் கேள்வியாய் பார்க்க, "நம்ம குழந்தை தனிமையை உணரவே கூடாது. நம்ம குழந்தைகளுக்கு நம்ம ரெண்டு குடும்பங்களோட அரவணைப்பும் வேணும்" என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டான் அக்னிமித்ரன்.
இதற்கு மேலும் அவனுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுப் பிரிந்திருக்க அவனுக்கு மனமில்லை என்பதும் ஒரு காரணம். அவளுக்குமே இந்த முடிவு பிடித்திருக்க அவளுடைய முகம் மலர்ந்தது.
உள்ளே வந்தவர்கள், தீபாவிடம் சென்று மாளவிகா தாய்மை அடைந்திருப்பதுடன் சேர்த்து இந்தச் செய்தியையும் சொல்ல, ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. துக்கத்தில் மூழ்கியிருந்த வீடு நிமிடத்தில் மகிழ்ச்சியில் திளைத்தது.
மகனைத் தழுவிக்கொண்டு தன் சந்தோஷத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார் பரமேஸ்வரன். விக்ரம் தர்ஷினி பிள்ளைகள் என ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொல்ல, வாசுகியிடம் கூட கொஞ்சம் மாற்றம் தெரிந்தது.
ஓரிரு தினங்களுக்குள்ளேயே அந்த வீட்டின் நடைமுறைக்குத் தன்னைப் பொருத்திக்கொண்டாள் மாளவிகா.
***
Comments