top of page

En Manathai Aala Vaa 46

Updated: Nov 9, 2022

மித்ர-விகா 46


மாளவிகா உள்ளே நுழைந்ததும் ஒரு நொடி ஸ்தம்பித்த மித்ரன் சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டு, "என்னம்மா" என்று சலிப்புடன் கேட்க, அவன் கேட்ட விதமே, 'நீ இப்ப எதுக்கு இங்க வந்த?' என்பதுபோல்தான் தோன்றியது அவளுக்கு.


அவன் பதட்டத்துடன் நின்றிருந்த கோலம் மனதை ஏதோ செய்ய, ஒரு உந்துதலில் கொஞ்சமும் யோசிக்காமல் உள்ளே நுழைந்துவிட்டாளே ஒழிய அவளுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது.


சில நொடிகளே என்றாலும் உள்ளே நுழையும்போது அவனிருந்த கோலம், ஏதோ சரி இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்க, என்ன சொல்வது எனப் புரியாமல், "ஒண்ணும் இல்ல, விக்ரம் மாமா தேடினாங்க. நீங்க இந்த ரூமுக்குள்ள வரத பார்த்தேன். சாரி..." எனத் தடுமாறினாள் அவள்.


ரூபா சொல்வது உண்மையா பொய்யா என்று அவனாலேயே ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இவள் வேறு எதையாவது கேட்டு வைத்தாள் என்றால் அவனுடைய மொத்த நிம்மதியும் பறந்துவிடும். ரூபா அவளிடம் எதையும் சொல்லிவிடும் முன் அவளை அங்கிருந்து அனுப்பிவிடும் பதைபதைப்பில், "ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லு" என்று சொல்லி அவன் அவளை அங்கே நிற்க விடாமல் துரத்த, ரூபாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள் அவள்.


"அவ்வளவு பயமா உன் பொண்டாட்டியைப் பார்த்து. அப்படியே அடக்கி வாசிக்கற?" என ரூபா அதற்கும் அவனை நக்கலடிக்க, "ப்ச்... ஏதோ போனா போகுதுனு பார்த்தால் ஓவரா பேசிட்டுப் போற" என்றவன், "இப்ப எதுக்கு இங்க வந்த? சும்மா இல்லாததையெல்லாம் சொல்லி என்னை டென்ஷன் பண்றதுக்கா" என அவன் கடுப்பாக, "கரெக்ட்டா சொல்ற. நான் இங்க வந்தது உன்னை டென்ஷன் பண்ண மட்டும்தான். ஆனா இல்லாததைச் சொல்லி இல்ல, உள்ளதை உள்ள படி சொல்லி!" என்று சொல்லி கோணல் சிரிப்பு சிரித்தவள், "ஆனா உன்னோட இந்த மினிமம் டென்ஷன் எனக்கு போறாதே" என அவள் கிண்டலாகவே சொல்ல, "ப்ச்..” என அலுத்துக்கொண்டான் அவன்.


தன் கைப்பேசியைக் குடைந்துகொண்டே அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், அதை அவனுடைய முகத்திற்கு நேராக நீட்ட, அது அவளுடைய மருத்துவ அறிக்கை. அதை அவள் பொறுமையாக அப்படியே தள்ளிக்கொண்டே போக, கவுதமுடையதும் இருந்தது அதில்.


எல்லாமே அவள் சொன்னது உண்மை என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க, வெலவெலத்து போனான் மித்ரன்.


அவனுடைய அந்தத் தொய்ந்த நிலை அவளுக்கு அப்படி ஒரு உவகையைக் கொடுக்க, "போ... போய் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஒரு டெஸ்ட் எடு. உன்கிட்ட இருந்து எனக்கு வந்திருந்தாலும், என் கிட்ட இருந்து உனக்கு வந்திருந்தாலும், எப்படியும் பாசிடிவ்ன்னுதான் வரும்" என்றாள் அவள்.


சில விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் கட்டாயம் இருக்கும் என்றோ கட்டாயம் இல்லை என்றோ நிச்சயமான ஒரு முடிவுக்கு வர இயலாது.


அதுவும் சொல்லப்படும் சூழ்நிலையும் சொல்பவர்களையும் பொறுத்து, அதை இல்லை என்று முற்றிலும் மறுக்கவும் முடியாது. அந்த நிலைமையில்தான் இருந்தான் மித்ரன்.


அதுவும் வார இறுதி உற்சாகங்களும் பார்ட்டிகளும் மதுவும் கூடவே பெண்களும் என்பது ஒரு வித விபரீதமான சேர்க்கை அதாவது 'காம்பினேஷன்'. அப்படி இருக்க கலவியல் பாதுகாப்பு முறைகள் தோல்வி அடைவதும் சாத்தியமே.


தனக்கு இப்படிப்பட்ட நோய் இருப்பதையே அறியாமல் கர்ப்பிணியான அண்ணன் மனைவிக்கு எய்ட்ஸ் நோயாளி ஒருவர் இரத்தம் கொடுத்த சம்பவமெல்லாம் கூட இங்கே அரங்கேறியிருக்கிறதே!


தவிக்கதான் முடிந்தது அக்னிமித்ரனால்.


"உன்னோட லைஃப் ஸ்டைல்தான் வேறயாச்சே, உனக்கு எதுக்கு கல்யாணம் எல்லாம்" எனக் கிண்டலாகக் கேட்டவள், "ப்ச்... தெய்வீக காதல் இல்ல? அதான் அன்னைக்கு ஷோல பார்த்தனே. அஜூபா... அஜூபா..ன்னு நீ உருகினத" என அவள் சொல்லும்போதே அவளுடைய கண்களில் நீர் கோர்த்தது.


மறுபடியும் அவன் உடல் அதிர, "அப்படினா... நீதான் அந்த வீடியோவை ட்விட்டர்ல ரிலீஸ் பண்ணதா?" எனக் கேட்டான் அவன்.


"பின்ன... அதை செய்யற நிலைமையில கௌதம் இருந்தான்னு நினைச்சியா? அவனுக்கு எய்ட்ஸ்னு தெரிஞ்ச உடனேயே அவன் பாதி செத்துட்டான்" என்றவள், "என்னைக்கு உன்னோட சேர்ந்து அந்தப் பொண்ணைப் பார்த்தேனோ அன்னைல இருந்து அவதான் என் டார்கெட்.


உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கா. என் கிட்டயும்தான் இருக்கு. புகழ் உன்னைவிட அதிகமாவே இருக்கு. நான் காலால சொல்றத தலையால செய்ய, என் அழகுக்கு அடிமையாகிப்போன ஒரு கூட்டமே இருக்கு" என உச்சபட்ச கர்வத்துடன் சொன்னவள், "உன்கிட்ட இருக்கறது என் கிட்ட இல்லாததுன்னா அது நிம்மதி மட்டும்தான். அதுலயும் இப்ப நம்ம ஈக்வல் ஈக்வல் ஆகிட்டோம் இல்ல" என எரிமலையாய் கனன்றாள் அவள்.


சத்தியமாக இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை அவன். வெகு சில மாதங்கள் மட்டுமே அவளுடனான உறவிலிருந்திருக்கிறான். மாளவிகாவைப் பார்த்த பிறகு இவளை என்று இல்லை வேறு எந்தப் பெண்ணையும் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு.


அப்படியே அவளுடைய உறவைத் துண்டித்துக்கொண்டான். அவளுக்கும் தெரியும் அது தற்காலிக உறவுதான் என்று. ஏன் இவ்வாறு கொதிக்கிறாள் என்றே புரியவில்லை அவனுக்கு.


அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு விளங்கவில்லை இது ஆண் வர்க்கத்தின் மீதே அவளுக்கு இருக்கும் ஒரு வித காழ்ப்புணர்ச்சி என்று.


அன்று அந்த ஏலத்தில் மாளவிகாவைப் பார்க்கும் பொழுதே, 'காதலா?' என்றுதான் கேட்டாள் இவள். அவனே உணராத ஒன்றை அவள் உணர்ந்திருக்கிறாள் என்றால், அந்த அளவுக்கு வெளிப்படையாகவே நடந்து கொண்டிருக்கிறோமோ என்றுதான் தோன்றியது அவனுக்கு.


அவனைப் பற்றிய பயம், அதைவிட அதிகமாக மாளவிகாவைப் பற்றிய பயம் விஸ்வரூபம் எடுத்து நிற்க, இவளிடம் கோபத்தைக் கூட காண்பிக்க இயலாமல் செயலற்றுப் போயிருந்தான் அக்னிமித்ரன்.


"ஏன்... ஏன்... இப்படி பண்ண? அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணா? இதெல்லாம் முன்னாலேயே சொல்லியிருந்தா அவளையாவது காப்பாத்தியிருக்கலாமே?" என அவனால் கெஞ்சலாகதான் கேட்கமுடிந்தது அவளிடம்.

இகழ்ச்சியுடன் கோணலாகச் சிரித்தவள், "ஏன்னா... அவளைதானே உனக்கு உள்ளுக்குள்ள இருந்து பிடிச்சிருந்தது. அவளுக்கு ஒண்ணுன்னாதான உனக்கு வலிக்கும்" என்றவள், "எனக்கு இப்படின்னு தெரியறதுக்கு முன்னால அவளை உன் கிட்ட இருந்து பிரிக்கணும்னுதான் நினைச்சேன். அதனாலதான் முதல்ல அவளோட அந்த சொந்தகார பையனை நீ மிரட்டின வீடியோவை... அதுவும் அவளுக்கே அனுப்பினேன்.


அப்பா... அன்னைக்கு ஏர்போர்ட்ல பார்த்தேனே உங்க ரெண்டு பேரையும். என்ன ஒரு ஹாப்பி உன் ஃபேஸ்ல” எனக் கொதித்தவள், "ஆனா எனக்கு இப்படின்னு தெரிஞ்ச பிறகு என் ஐடியாவே மாறிப்போச்சு" என்றவள், முடிந்தது என்பது போல் அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்க, "அந்த ரிலேஷன்ஷிப் நிரந்தரமில்லன்னு தெரிஞ்சேதான என் கூட இருந்த. தென் ஏன் உனக்கு இவ்வளவு பழிவெறி?" எனக் கேட்டே விட்டான் மித்ரன்.


அதுவரை இருந்த அந்த மொத்த அகங்காரமும் வடிந்துபோக ஒரு கசந்த புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவள், ஒரு வார்த்தை கூட பேசாமல் உடனே அங்கிருந்து சென்றுவிட்டாள் ரூபா அவனுக்கு நரகம் என்றால் என்ன என்பதைப் புரியவைத்துவிட்டு.


அவனுக்குத் தன்னைப் பற்றிக் கூட கவலை இல்லை. அவன் விதைத்த வினையை அறுவடைச் செய்ய மொத்தமாகக் கடமைப் பட்டவன் அவன் மட்டுமே. ஒருவேளை இது அவனுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை என்று அவன் ஏற்றுக்கொண்டாலும், மாளவிகாவுக்கு?


இதில் அவளை இழுத்துவிட்டிருப்பதுதான் அவனுடைய மனதை வாள் கொண்டு அறுத்தது.


அக்னிமித்ரன் போன்ற வலிமையான ஒரு ஆண் மகனையே சர்வ சாதாரணமாக அடித்து வீழ்த்த கூடிய அளவுக்கு உடல் அளவிலும் சரி, மிகப்பெரிய மனோரீதியான பாதிப்பிலிருந்து மீண்டு ஒரு இயல்பான வழக்கை வாழும் அளவுக்கு மனதளவிலும் சரி அவ்வளவு வலிமையையும் ஆரோக்கியமும் நிறைந்த பெண் அவள்.


செய்யக் கூடாததையெல்லாம் செய்து துரத்தி... துரத்தி, நிர்ப்பந்த படுத்தி ஒரு திருமண உறவுக்குள் கொண்டுவந்து, அவளை இப்படி ஒரு உயிர்க்கொல்லி நோயின் பிடியில் சிக்க வைக்கக் கூடிய அளவுக்கு அப்படி என்ன உன்னதமான காதல் தன்னுடையது என்றுதான் தோன்றியது அவனுக்கு.


தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. உறைந்து போய் அவன் அப்படியே உட்கார்ந்திருக்க, ரூபா அங்கிருந்து சென்றதைப் பார்த்தவள், சில நிமிடங்கள் ஆகியும் அவன் வெளியில் வராமல் போக மறுபடியும் அவனைத் தேடி வந்தாள் மாளவிகா.


அவனுடைய இயல்பிற்கு மாறாக அவன் ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்த தோற்றம் அவளை வெகுவாகப் பாதிக்க, அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்தவள், "என்ன ஆச்சு மித்து? ஏன் இப்படி இருக்கீங்க?" எனக் கவலையுடன் கேட்க, அவள் குரலில் தொனித்த நடுக்கத்தில் பதறி எழுந்தவன் வேகமாக அவளை அணைத்து உடனே விடுவித்து, "ஒண்ணும் இல்ல வா போகலாம்" என்று சொல்லி அவளை வெளியே அழைத்து வந்துவிட்டான்.


இந்த விஷயங்கள் அவளுக்குத் தெரிந்தால் அது அவளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை அவனால். தன்னையும் மீறி அவனுடைய கால்கள் தளர்ந்த நடையுடன் கௌதமை வைத்திருக்கும் கண்ணாடி பெட்டி நோக்கி அவனை இழுத்துச்செல்ல, அவனுடைய முகத்தையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.


அவன் எவ்வளவோ இடைஞ்சல்களைக் கொடுத்தவன்தான், இருந்தாலும் ரூபா செய்த தவறுக்கு இவனை உண்டு இல்லை என்று செய்தது நினைவில் வர வேதனையாக இருந்தது அவனுக்கு.


மாளவிகா அவனைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியிலிருந்ததால் வழக்கம் போல அவனை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை என்பது மட்டும் ஒரு சிறு ஆறுதல். இல்லையென்றால் அந்தக் குற்ற உணர்ச்சி வேறு அவனைக் கொன்றிருக்கும்.


அருகிலிருந்த பிருந்தாவை பார்த்தவனுக்கு நல்லவேளை இவள் அவனுடன் சேர்ந்து வாழவில்லை இல்லையென்றால் அவளுடைய பிள்ளைகளின் நிலையும் கேள்விகுறியாகியிருக்கும் என்ற சிறு நிம்மதியும் தோன்றியது.


அப்பொழுதென்று பார்த்து மூர்த்தியும் துளசியும் துக்கம் விசாரிக்க அங்கே வர, பின் பெரியவர்களிடம் பேசிவிட்டு, மதுவுக்கு பிரசவம் முடிந்து அவர்களுடைய வீட்டில் இருப்பதால் உடனே அவர்கள் அங்கிருந்து கிளம்பவும், வற்புறுத்தி மாளவிகாவையும் அவர்களுடனேயே அனுப்பி வைத்தான் மித்ரன்.


"இந்த நேரத்துல இப்படி பாதியில விட்டுட்டுப் போகக் கூடாது" என வீட்டின் மருமகளாக அவள் மறுக்கவும், முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, "போன்னு சொன்னா கிளம்பி போ. நானே வந்து திருப்ப அழைச்சிட்டுப் போறேன். அதுவரைக்கும் நீ வரவேண்டாம். ஆஃபிஸ்க்கும் வரவேண்டாம்" என அவள் மேலும் மறுத்துப் பேச இடங்கொடுக்காமல் கட்டளையாகச் சொல்லி, அவளை அவர்களுடன் அனுப்பி வைத்தான் மித்ரன்.


அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் எங்கே தான் உடைந்து போய்விடுவோமோ என்ற பயம்தான் காரணம்.


ஒரு வழியாக அன்று மாலை கௌதமின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிய, அவனுடைய குடும்பம் மொத்தமுமே நிலைகுலைந்து போயிருந்தது. தனக்கும் இதே நிலை என்று வந்தால் இவர்கள் எல்லோரும் எப்படித் தாங்குவார்கள்? என்ற எண்ணம் தோன்ற மேலும் மேலும் ஓய்ந்துதான் போனான் அக்னிமித்ரன்.

0 comments

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page