top of page

En Manathai Aala Vaa 45

Updated: Nov 8, 2022

மித்ர-விகா-45


தேன்நிலவுக்குச் செல்லக் கூட நேரம் அமையாமல், அலுவலகம் ஸ்டூடியோ ஷூட்டிங் என இயந்திரத்தனமாகவும், இடையிடையே காதல் ஊடல் கூடல் என இலக்கியத்தனமாகவும் அக்னிமித்ரன் மாளவிகாவின் திருமண வாழ்க்கையின் அடுத்த இரண்டு மாதங்களும் அவ்வளவு வேகமாகச் சென்றிருந்தன.


அன்று புதையல் வேட்டை படப்பிடிப்பு முடிந்து வந்த மித்ரன், தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தான்.


அன்று மாலை வரை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க ‘செட்’டில் அவனுடன்தான் இருந்தாள் மாளவிகா.


அன்று காலையிலிருந்தே அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான் அவன். அப்படி ஒரு சோர்வு அவளுடைய முகத்தில். அதுவும் ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்த வாக்கிலேயே அவள் உறங்கியிருக்க, அவளை எழுப்பியவன், அவளை வற்புறுத்தி அங்கிருந்து அனுப்பியிருந்தான்.


அதுவும் வீட்டில் போய் தனியாக இருக்கவேண்டாம் என்று அவளுடைய அம்மாவின் வீட்டிற்கு அவளைப் போகுமாறு அவன் சொல்லியிருக்க, அவள் இல்லாத அந்த வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை அவனுக்கு.


காலை அலுவலக வேலை, பின் படப்பிடிப்பு என அவனை அடித்துத் துவைத்திருக்க அவ்வளவு அசதியாக இருக்கவும் வந்துவிட்டான். அப்படியே போய் கட்டிலில் விழலாம் போல இருக்கவும் அவனுடைய அறைக்குள் வர, இன்பமாய் அதிர்ந்தான் அவன், காரணம் அவனுடைய அஜூபா அங்கேதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.


"ஜெகன் மோகினி! அவ்வளவு சொல்லியும் தனியா இங்க வந்து தூங்கிட்டு இருக்க... இருடி உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கறேன்' என்று மனதிற்குள்ளேயே அவளைக் கொஞ்சியவன், குளியலறை நோக்கிப் போனான் தன்னைச் சுத்தப் படுத்திக்கொள்ள.


குளித்து வேறு உடைக்கு மாறி அவன் திரும்ப அங்கே வரவும், 'சைலன்ட்'டில் போடப்பட்டிருந்த அவனுடைய கைப்பேசி ஒளிர்ந்து ஏதோ அழைப்பு வருவதை அவனுக்குச் சொல்ல, 'இந்த நேரத்துல யாரா இருக்கும்?' என்ற யோசனையுடன் அவன் அதை எடுத்துப் பார்க்க, அது விக்ரம் என்று காண்பிக்கவே, "என்ன அண்ணா இந்த நேரத்துல கூப்படற? அம்மா அப்பா ஓகே தான" எனக் கேட்டான் அவன் பதட்டத்துடன்.


"ம்ம்.. அவங்க நல்லாத்தான் இருகாங்க" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, "எப்படி சொல்றதுன்னு தெரியல மித்து" எனத் தயக்கத்துடன் இழுத்தவன், "நம்ம கௌதம் தவறிட்டான் மித்து" என்று உடைந்த குரலில் சொல்ல, "என்னடா சொல்ற" என அதிர்ந்தான் மித்ரன்.


"ஆமாம்டா, ஹாஸ்பிடல்ல இருந்துதான் பேசிட்டு இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, "ஒன் வீக்கா லைஃப் சப்போர்ட்லதான் இருந்தானாம். இப்பதான் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணாங்க" என்றான் கூடுதல் தகவலாக.


என்ன இருந்தாலும் கௌதம் அவனுடைய அத்தையின் மகன், தர்ஷினியின் சகோதரன். மனதை ஏதோ பிசைந்தது மித்ரனுக்கு. "ப்ச்... அவனை நான் நேர்ல பார்த்து ஒரு அஞ்சாறு மாசத்துக்கு மேல இருக்கும்" என உண்மையாகவே வருந்தியவன், "நல்லாதானே இருந்தான்? ஏன் அவனுக்கு இப்படி அடிக்கடி உடம்பு சரியில்லாம போச்சு?" என மேலும் கேள்வி கேட்க, "என்னத்த சொல்றது... அவனுக்குதான் ஊருல இருக்கற எல்லா பிரச்னையும் இருந்ததே" என்றவன், "அப்பாதான் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டாங்க. கொஞ்ச நாளா அத்தையைக் கூட கிட்ட விடல. நானும் தர்ஷினியும் விசிட்டிங் ஹவர்ஸ்ல போய் பார்த்துட்டு வரதோட சரி. இப்ப கூட அப்பா கூப்பிடவும்தான் இங்க வந்தேன்" என விளக்கம் கொடுத்தவன், "இன்னும் வீட்டுல யார் கிட்டயும் சொல்லல. அத்தையையும் தர்ஷினியையும் நினைச்சாதான் பயமா இருக்கு" என்றவன், "முடிஞ்சா கொஞ்சம் வீட்டுக்கு வரியா? அப்பா வேற ரொம்ப தளர்ந்து போயிருக்காங்க?" என விக்ரம் கெஞ்சலாகக் கேட்கவும்,


"என்ன இப்படியெல்லாம் பேசற? வாடான்னா வந்துட்டுப் போறேன். அதை விட்டுட்டு" என்றவன், "இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல அங்க இருப்பேன். நீ ஸ்ட்ரெஸ் ஆகாத" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அதற்குள் குரல் கேட்டுக் கண் விழித்தவள் அனைத்தையும் கேட்டுக் கொஞ்சம் ஆடித்தான் போனாள் மாளவிகா.


உடனே அவன் கிளம்பவும் கூடவே கிளம்பியவளைத் தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளையும் உடன் அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றான் மித்ரன்.


அங்கே போனதும் சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டவன், கௌதம் பற்றிய செய்தியை அனைவருக்கும் சொல்லி, ஒருவாறு அனைவரையும் தயார் செய்திருக்க, அதிகாலை அவனுடைய சடலத்தை அங்கே கொண்டு வந்தனர் இறுதி கடன்களை முடிக்க.


அதற்குள் அந்தச் செய்தி ஊடகங்கள் மூலம் வெகுவாகப் பரவியிருக்க, பொழுது புலரவும் தொலைப்பேசியில் விசாரிப்பவர்கள் நேரில் வருபவர்கள் என வீடு பரபரப்படைந்தது.


கண்ணாடி பெட்டிக்குள் அவனுடைய உடல் வைக்கப்பட்டிருக்க, நகரின் முக்கிய புள்ளிகள் பலரும் வந்து சென்ற வண்ணமிருக்க, வீட்டின் வாயிலில் ஊடகத்தினர் வேறு குவிந்திருந்தனர்.


தமக்கையை அரவணைத்தபடி பரமேஸ்வரன் ஒரு பக்கம் தளர்ந்துபோய் அமர்ந்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் தீபாவின் மடியில் புதைந்தபடி அழுது கொண்டிருந்தாள் தர்ஷினி.


குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்த பிருந்தாவும் தீபாவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். மாளவிகாதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இங்கேயும் அங்கேயும் அலைந்துகொண்டிருந்தாள். மித்ரனும் விக்ரமும் வந்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.


அப்பொழுதுதான் அங்கே வந்தாள் அவள்... ரூபா!


நேராக சென்று கௌதமின் உடலை சில நிமிடங்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவள், பிருந்தாவை ஒரு பார்வை பார்க்க, பதிலுக்குக் கடுப்புடன் அலட்சியமாக அவளை ஒரு பார்வை பார்த்தாள் பிருந்தா. அதில் சுற்றென்ற ஒரு கோபம் ஏற, அவள் முகத்தைத் திருப்பவும், அவளுடைய பார்வைக்குள் விழுந்தாள் மாளவிகா.


உடனே விஷத்தைக் கக்கும் கண்களால் அவள் மித்ரனைத் தேட அங்கே நின்று பிரபல இயக்குனர் ஒருவருடன் பேசிக் கொண்டிருதான் அவன். அவர் அகலும் வரை பொறுத்திருந்தவள், அவனை நோக்கிச் சென்று, "ஹை அமித்” என்று அழைக்க, 'ஹை..” என ஒரு இயல்பான தலை அசைப்புடன் அவன் அவளை எதிர்கொள்ளவும், 'எவ்வளவு திமிர் இவனுக்கு' என்ற எண்ணத்தில் அவளுடைய சீற்றம் அதிகமாக, "கௌதம் எப்படி செத்துபோனான்னு தெரியாதா உனக்கு?” எனக் கேட்டாள் வன்மத்துடன்.


‘இது என்ன கேள்வி?' என்பதுபோல் அவன் அவளை ஒரு பார்வை பார்க்க, 'இவ்வளவு கூலா இருக்கான். உண்மையாவே இவனுக்கு ஒன்னும் தெரியாது போலிருக்கே!' என்ற எண்ணம் மேலும் அவளைச் சீற்றம் கொள்ள வைக்க, "இங்க வேணாம். நீ தனியா வா. உனக்கு சின்னதா ஒரு ஷாக் கொடுக்கிறேன்!" என்றாள் அவள் நக்கலாக.


அதில் சுறுசுறுவென கோபம் ஏற, அனிச்சையாக "நான்சன்ஸ்" என்றவன், சூழ்நிலை உணர்ந்து "பார்த்த இல்ல சுத்தி எவ்வளவு பேர் இருக்காங்கன்னு. மீடியா பர்சன்ஸ் வேற இருக்காங்க. இப்ப எந்தப் பேச்சும் வேண்டாம்" என்றான் அவன் தன்மையாகவே.


"எனக்கு ஒண்ணும் இல்ல. தெரிஞ்சுட்டா நீ கொஞ்சம் சேஃபா இருக்கலாம் இல்ல. அதுக்காகதான் சொன்னேன்" என்றவள், "நீ உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டயே உன்னோட அஜூஊஊஊபா! அவளுக்காவும்தான்!" என மாளவிகாவைப் பார்த்துக்கொண்டே ரூபா சொல்லவும், அவளுடைய கண்களில் தெரித்த வன்மம் அவனையே கொஞ்சம் அதிர வைத்தது.


இடம் பார்த்து அடிப்பது போல் அவள் மாளவிகாவை நடுவில் இழுக்கவும் மறுக்க இயலாமல், அங்கே இருந்த ஒரு அறையைக் காண்பித்து, "யாரோட அட்டென்ஷனையும் கேதர் பண்ணாம அங்கப் போய் வெயிட் பண்ணு. ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்" என்றான் அவன் பற்களைக் கடித்தவாறே.


எங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் மாளவிகாவின் விழிகள் மித்ரனையே தொடர்ந்து கொண்டிருக்க, அவனுடன் சேர்ந்து ரூபாவும் அவளது பார்வை வட்டத்துக்குள் இருக்கும் பொழுதே கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அந்த அறைக்குள் அவள் செல்ல, அனல் மேலே நிற்பது போல் நின்றிருந்த மித்ரனும் சில நிமிடங்களில் அதே அறைக்குள் செல்லவும் யோசனையில் மாளவிகாவின் நெற்றிச் சுருங்கியது.


அங்கே இருந்த சோஃபாவில் தோரணையாக கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த ரூபா, "ப்பா... அவ்வளவு லவ்வா உன் பொண்டாட்டி மேல?" எனக் கிண்டலாகக் கேட்க, "ப்ச்... எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்சு. சொல்ல வந்ததைச் சொல்லிட்டு கிளம்பு" எனச் சிடுசிடுத்தான் அவன்.


"நீங்க எல்லாம் ஒரே ஃபேமிலிதான? நிஜமாவே கௌதமுக்கு என்ன வியாதின்னு உனக்குத் தெரியாதா?" என அவள் அதிசயிப்பதுபோல் கேட்க, "நீதான இப்ப கரன்ட்ல அவன் கூட லிவ்விங் இன்ல இருக்க... உனக்கு தெரிஞ்சா நீதான் சொல்லேன்?" என்றான் அவன் அலட்சியமாக.


"எனக்கு தெரியும்... உனக்குதான் இன்னும் தெரியாது போலிருக்கு. ஏன்னா யாருக்குமே தெரியாம உங்க அப்பாதான் அப்படியே மூடி மறைச்சிட்டாரே" என்றவள், "அவனுக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ். அதாவது எய்ட்ஸ்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.


ஆடிதான் போனான் அக்னிமித்ரன்.


"நீ என்ன சொல்ற?" என அவன் தடுமாற, கசப்பான ஒரு புன்னகையைச் சிந்தியவள், "முதல்ல எனக்குதான் டெஸ்ட் பாசிட்டிவ்னு வந்துது. உடனே பதறிப்போய் அவன் டெஸ்ட் பண்ணான். தென் அவனுக்கும் பாசிட்டிவ்" என்றவள், "உன்னை மாதிரி என்னை மாதிரி அவனுக்கு ஹெல்த் கான்ஷியஸ் கிடையாது. சீக்கிரமே இந்த நிலைமைக்கு வந்துட்டான். நாம நார்மலா தெரியறோம்" என அவள் சர்வ சாதாரணமாகச் சொல்ல, அவள் சொல்ல வருவது புரியவும் உயர் அழுத்த மின்சாரத்தைத் தொட்டதுபோல் அதிர்ச்சியில் தகித்துப்போனான் அக்னிமித்ரன்.


சில நிமிடங்கள் கூட பொறுக்க முடியாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த மாளவிகா பார்த்ததது அலட்சிய பாவனையுடன் உட்கார்ந்திருந்த ரூபாவையும், கண்கள் கலங்கி நிலைகுலைந்து தளர்ந்துபோய் உட்கார்ந்திருந்த அக்னிமித்ரனையும்தான்.


மாளவிகாவுக்கு அவனது அந்த நிலை உச்சபட்ச கலக்கத்தைக் கொடுக்க, ரூபாவோ முழு திருப்தியுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


மலர்களின் ஒரே கடமை அந்த வண்டுகள் சுவைக்கத் தேனைக் கொடுப்பது மட்டும்தான் என்பது போல, பெண்களை மலர்களாகவும் ஆண்களை வண்டுகளாகவும் தும்பிகளாகவும் சித்தரித்துப் பல கதைகளும் காவியங்களும் புனையப்பட்டிருக்கிறது.


சாம, தான, பேத, தண்டம் என அனைத்து உபாயங்களையும் பயன்படுத்தி ஒரு பெண்ணை அடைவது மட்டுமே இன்றளவும் கூட ஆண்களின் குறிக்கோளாக இருக்கிறது.

ஆனால் ஊனுண்ணி தாவரங்கள் என்று ஒரு வகை தாவரங்கள் இருக்கிறது என்பதை எந்தக் காவியங்களும் சொல்லவில்லை.


'வீனஸ் ஃப்ளை ட்ராப்' தமிழில் வில்பொறி - என்றொரு தாவரம் உண்டு.


கண்களைக் கவரும் அதன் வண்ணமிகு அழகில் மயங்கி அதை நாடிச் செல்லும் தும்பிகள் அதற்கு இரையாகி மாண்டுபோகும்.


அந்த வில்பொறி போன்ற பெண்களும் இங்கே உண்டு என்பதை யாரும் நினைப்பதே இல்லை.


வாசகர்கள் மனநிலை கருதி Happy Ending தான் வைத்திருக்கிறேன் Friends.

STAY COOL!

1 comment

1件のコメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加

Gowtham ku aids ok Athu en ipapdi vandu ivan kitta nakkal ah sollitu iruka avan pondatti ah love panran ivaluku enna vandathu

いいね!
© KPN NOVELS COPY PROTECT
bottom of page