மித்ர-விகா-40
மருத்துவமனை ஐசியுவில் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் கண் மூடி படுத்திருந்தவளின் கையை தன் முகத்தில் புதைத்தவாறு அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தான் அக்னிமித்ரன்.
அவளிடம் சிறிதேனும் அசைவு வந்துவிடாதா என அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தன.
தொன்றுதொட்டு பெண்களை தங்களுடைய உடைமையாக மட்டுமே கருதிவரும் ஆணாதிக்க மனோபாவம்தான் தன்னிடமும் இருந்திருக்கிறது.
அவளை தன்னுடைய சொந்தமான உடைமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிரம் மட்டுமே இருந்ததே ஒழிய இதனால் அவளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகவே மனதைச் சுட்டது அவனுக்கு.
அதுவும் அவள் அந்தக் காணொலியில் பேசியது அவனுடைய நினைவில் தோன்றும்போதெல்லாம் அவனது முகத்தைப் பொத்தி வைத்திருந்த அவளது அந்தக் கை அவனுடைய கண்ணீரால் நனைந்து போகும்.
'என்னதான் நான் மொத்தமா மாறிட்டேன்னு சொன்னாலும் கூட இன்னைக்கு வரைக்கும், ஆண்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு சின்ன அவநம்பிக்கை என்கிட்ட இருந்துட்டுதான் இருக்கு.
ஒரு சிலரைத் தவிர யாரையும் என்னால முழுமையா நம்ப முடியல.
சக மனுஷங்களைக் குறிப்பா பெண்களை மதிக்கறவங்கங்கற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டால் மட்டும்தான் ஒருத்தரை ஃப்ரெண்டாக்கூட என்னால முழுமையா ஏத்துக்க முடியும்' - இதை அவள் சொன்னது நினைவைச் சுடும்போதெல்லாம், தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்தும் அவளது இந்த மனநிலையைத் தள்ளி வைத்து அவளுடைய வாழ்க்கையில் அவள் தன்னை ஏற்றுக்கொள்ள முற்பட்டிருக்கிறாள் என்றால் அவள் எந்த அளவுக்கு தன்னை விரும்பியிருப்பாள் என்ற எண்ணம் தோன்ற, 'அவளிடம் என்ன மாதிரி நடந்துகொண்டிருக்கிறேன் நான்?' என்ற கேள்வியில் அவன் உடல் அதிரும்.
அப்பொழுதெல்லாம், "என்னை நம்பு அஜூபா. நீ வேணும்ங்கற வெறில யோசிக்காம என்னென்னவோ பண்ணிட்டேன். மத்த பொண்ணுங்கள பொறுத்தவரைக்கும் நான் எப்படியோ... உன்னை நான் ரொம்ப மதிக்கறேன் லயன்னஸ்.
அதை நீ நம்பித்தான் ஆகணும். இது வரைக்கும் நான் எந்தப் பெண்ணையும் எந்த ஒரு விதத்திலும் துன்புறுத்தி சந்தோஷப்பட்டதில்ல. யாரையும் எதுக்காகவும் கம்பல் பண்ணதில்ல.
அதே சமயம் அவங்களாவே என்னை நெருங்கி வந்த போது தவிர்த்ததும் இல்ல. இதையும் நீ நம்பிதான் ஆகணும். இப்ப கூட நீ எனக்கு வேணும்கற எண்ணத்தை என்னால மாத்திக்கவே முடியல. பிகாஸ் ஐ லவ் யூ. ஐம் இன் நீட் ஆஃப் யூ அஸ் ஆக்சிஜன் டு ப்ரீத். இதையும் நீ நம்பித்தான் ஆகணும்.
இனிமேல் உன் விஷயத்துல எந்த தப்பும் செய்ய மாட்டேன். உனக்காக மட்டுமே இனிமேல் என் வாழ்க்கை இருக்கும்.
நீ அன்னைக்குச் சொன்ன மாதிரி உன்னை என்னோட மகாராணியா வாழ வைப்பேன்னு சொல்றதவிட அப்படி உன்னை முழுமையா உணர வைப்பேன்.
வாய் வார்த்தையா சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்றத விட, நீ நல்லபடியா திரும்பி வா. இதையெல்லாம் நாம வாழற வாழ்க்கைல உன்னை உணர வைக்கறேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுப்பான் அவன்.
இதை ஒரு முறை இரண்டு முறை சொல்லவில்லை, இதையே ஒரு மந்திரம் போலப் பல முறை சொல்லிவிட்டான் அக்னிமித்ரன். மொத்தமாக மூன்று இரவுகள் இரண்டு பகல்கள் முடிந்துவிட்டது அவளை இங்கே கொண்டு வந்து அனுமதித்து.
எவ்வளவு பேசினாலும் கண்ணீர் சிந்தினாலும் ஒரு சிறு அசைவு கூட இல்லை அவளிடம். ஓய்ந்துதான் போனான் அக்னிமித்ரன்.
அன்று அந்த டப்பிங் ஸ்டூடியோவிலிருந்து கிளம்பியவுடன் அவன் மாளவிகாவை கைப்பேசியில் அழைக்க, அழைப்பு போய்க்கொண்டே இருந்ததே ஒழிய அதை ஏற்கவில்லை அவள்.
ஏற்கனவே இருக்கும் குழப்பம் போதாதென்று அந்தக் காணொலி வேறு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்க அதை தான் செய்யவில்லை என்ற தன்னிலை விளக்கத்தை அவளுக்குக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் நேராக அவளது வீட்டை நோக்கிச் சென்று விட்டான் அக்னிமித்ரன்.
படுக்கை அறைக்குள் கதவை மூடிக்கொண்டு விளக்குகளை அணைத்துவிட்டு மாளவிகா உறங்கச் சென்றிருக்க, அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டு மாடிப் படியில் வந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தாள் சாத்விகா.
வரவேற்பறையில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது. அவர்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் காலி மனையில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் வீடு நோக்கி வந்தவன் சிறு தயக்கத்துடன் கேட்டை தட்ட வெளியிலேயே உட்கார்ந்திருந்த சாத்விகா எழுந்து வந்தாள்.
சற்று நேரத்திற்கு முன் தொலைக்காட்சி திரையில் பார்த்தவனை நேரில் காணவும் ஒரு ஆனந்த அதிர்ச்சி அவளுக்கு. அதில் அவள் அப்படியே பேச்சற்று நிற்க, "மாளவிகா இருந்தா கொஞ்சம் வர சொல்லுங்க. அவங்கள பார்க்கணும்" என்றான் மித்ரன் நேரடியாக.
என்னதான் மாளவிகா அக்னிமித்ரனிடம் முன்பு வேலை செய்திருந்தாலும் அவன் நேரிலேயே வந்திருக்கவும், என்னவோ ஏதோ என்று பதறியபடி அவனை உள்ளே அழைக்கக் கூட மறந்தவளாக அவசரமாக அவர்கள் அறைக்குள் சென்று, "அக்கா சீக்கிரம் எழுந்திரு. உன்னைத் தேடி உன்னுடைய எக்ஸ் பாஸ் வந்திருக்கார்" எனக் குரல் கொடுக்க, அதற்கான எதிரொலியே இல்லை மாளவிகாவிடம். 'அதுக்குள்ள தூங்கி இருக்க மாட்டாளே!' என்ற எண்ணம் தோன்ற அறையின் விளக்கைப் போட்டவள் தமக்கையை உலுக்கி எழுப்ப அப்போதுதான் உணர்ந்தாள் அவள் ஏதோ சரியில்லை என்று.
உடனே, "அம்மா அக்காவை வந்து பாரேன்" என அவள் போட்ட கூச்சலில் என்னவோ ஏதோ என்று துளசி பதறியடித்து ஓடிவர வெளியில் நிற்கப் பொறுமையில்லாமல் அதேநேரம் மித்ரனும் வீட்டிற்குள் வந்திருந்தான்.
பதட்டத்திலிருந்ததால் அங்கு ஒருவன் நிற்பதையே கவனிக்கவில்லை துளசி. அவர் உள்ளே சென்று பார்க்கவும் மாளவிகாவின் மூக்கிலிருந்து வழிந்த குருதியில் அவளது தலையணை லேசாக நனைந்து இருக்க மேலும் பதறிவிட்டார் துளசி.
"ஐயோ சாவி. அப்பாவுக்கு ஃபோன் பண்ணு. அக்காவுக்கு மறுபடியும் ஸ்ரெஸ் அட்டாக் மாதிரி இருக்கு" என அவர் அழுகையுடன் சொல்ல, அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை மித்ரனால்.
நேராக அவளுடைய அறைக்குள்ளேயே சென்றவன், "என்ன ஆச்சு?" என்று கேட்கத் துளசி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும், ஏற்கனவே அவன் வந்தது தெரிந்ததால் சாத்விகா கொஞ்சம் சமாளித்துக்கொண்டு, "அக்காவுக்கு ஏதோ உடம்பு சரியில்ல. மயக்கமாயிட்டா" என்று மட்டும் சொன்னாள் அழுகையினூடே.
அவன் அனிச்சையாக அருகே சென்று அவளை ஆராய, அவள் மூக்கிலிருந்து ரத்தம் வந்திருக்கவும், அவள் நிலை அவனுக்குப் புரிய, துடிதுடித்துப் போனவன் கொஞ்சம் கூட சிந்திக்காமல் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு வெளியில் வர, செய்வதறியாமல் பின்னாலேயே ஓடி வந்தனர் துளசியும் சாத்விகாவும்.
அந்தக் காணொலியைப் பார்த்து விட்டு மது அவர்கள் அப்பாவை அழைத்துச் சொல்லி இருக்க அவசரமாகக் கடையைப் பூட்டிவிட்டு அவமானமும் அது கொடுத்த கோபமுமாக அப்போதுதான் அங்கே வந்தார் மூர்த்தி.
அந்த நேரத்தில் அக்னிமித்ரனை அங்கே காணவும் ஒன்றுமே புரியவில்லை அவருக்கு. அதுவும் மகளை அவன் கைகளில் ஏந்திச் செல்வதைப் பார்க்கவும் நடப்பது புரியாமல் அவர் அதிர்ந்து போக, அவரிடம் மகளின் நிலையைச் சொன்னார் துளசி.
மேற்கொண்டு யோசிக்காமல், அவளுக்குத் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் மருத்துவமனையைப் பற்றி அவர் மித்திரனிடம் சொல்ல நேராக அங்கே அழைத்து வந்துவிட்டான் அவன்.
மகளின் நிலைமை அச்சத்தைக் கொடுக்க, அவள் இருக்கும் நிலைமையும் மித்ரன் துடிக்கும் துடிப்பும், இது காதல்தான் என்பதைச் சொல்லவிட, அவனிடம் மறுத்து ஏதும் பேசும் நிலையையெல்லாம் கடந்துவிட்டார்கள் அவர்கள்.
அவள் அவனது கைக்குள் வந்தபின் வேறு யாரையும் மாளவிகாவிடம் நெருங்கவே விடவில்லை அக்னிமித்ரன். சிகிச்சைகளைத் தொடங்குவதற்காக சில நிமிடங்கள் மட்டுமே அவளை விட்டுவிட்டு விலகி இருந்தவன், அதன்பின் அவளை விட்டு ஒரு நொடி கூட அங்கே இங்கே நகரவில்லை.
மாளவிகாவுக்குச் சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவர் அகிலா ஸ்ரீதரனும் அவனை மட்டும் அவளுடன் இருக்க அனுமதிக்க, அவனிருந்த நிலை பார்த்து ஐசியுவை விட்டு அவனை வெளியேற்றும் தைரியம் அங்கே யாருக்கும் இல்லை.
மாளவிகாவின் இந்த நிலைமையே அவளுடைய மனதைச் சொல்லாமல் சொல்ல தங்களுடைய உரிமையைக் கூட விட்டுக் கொடுத்தனர் அவளுடைய அம்மா அப்பா தங்கள் மகளுக்காக.
***
கதவு திறக்கும் சத்தத்தில் தலை நிமிர்ந்த மித்ரன் டாக்டர் அகிலா உள்ளே நுழையவும் எழுந்து நின்றான்.
அவள் அங்கே அனுமதிக்கப்பட்ட பிறகு அடிக்கடி வந்து அவளைப் பார்த்து விட்டுப் போவார் அகிலா. “ஒண்ணும் பயப்படாதீங்க, இது மனசுல ஏற்பட்டிருக்கிற ஒரு ஜெர்க் அவ்வளவுதான். அந்த அதிர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு இருக்கு. சீக்கிரமே சரியாயிடும்” இதுதான் ஒவ்வொரு முறையும் அவர் மித்ரனிடம் சொல்லும் வார்த்தை.
அப்பொழுதும் அவனைப் பார்த்துக் கனிவாகப் புன்னகைத்தவர், அவளைப் பரிசோதித்தவாறே, “இவள ரொம்ப லவ் பண்றீங்களா?” என்று கேட்க, ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான் மித்ரன்.
"இப்படி தலையை அசைச்சா எனக்கு புரியாது. தெளிவா சொல்லுங்க" என அவர் தீவிரமாகச் சொல்ல, "எஸ்... ஐ லவ் மாளவிகா" என்றான் அவன் உணர்ச்சி ததும்பும் குரலில்.
உடனே, “அவளும் உங்கள லவ் பண்றாளா?” என அவர் கேட்க, “அப்படிதான் நினைக்கறேன்” என்றான் அவன்.
“இவளை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கற எண்ணத்துல தீவிரமா இருக்கீங்களா?” என அவர் மேலும் கேட்ட கேள்விக்கு, “ஆமாம்” என அழுத்தமாக அவன் சொன்ன பதிலிலிருந்த தீவிரம் மனோதத்துவ மருத்துவரான அவருக்கு நன்றாகவே புரிந்தது.
“மாளவிகா ரொம்ப வருஷமா என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கா. உங்களுக்குத் தெரியுமா?” என அவர் கேட்க, ‘ஆமாம்’ என்பதாகத் தலையசைத்தான் அவன்.
“அப்படின்னா, அவளோட பாஸ்ட் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?!” என வியப்பு மேலிட அவர் கேட்கவும், “தெரியும்” என்றான் அவன்.
தீவிரமாக அவனைப் பார்த்துக் கொண்டே, “அப்ப உங்களுக்குப் புரிய வைக்கறது ஈசின்னு நினைக்கறேன்” என்றவர், “ஒருவேளை உங்களை விரும்பறதாலயோ, அவளுக்கு உங்களைப் பிடிச்சிருக்கறதாலயோ, அதோட இல்லாம உங்களைப் பத்தின விஷயங்களெல்லாம் மீடியால வந்து ஒரு ஃபேமிலி பிரஷர் உருவாகிட்டதாலயோ அவ உங்களை மேரேஜ் பண்ணிட்டாலும் ஒரு இயல்பான குடும்ப வாழ்க்கையை அவளால வாழ முடியுமான்னு இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது.
அவளோட கண் முன்னால நடந்த அந்தக் கோரமான சம்பவத்தால ஏற்பட்ட பாதிப்பு இன்னும்கூட அவகிட்ட இருக்கு. அதோட வெளிப்பாடுதான் இந்த ஸ்ட்ரெஸ் அட்டாக்.
அதாவது தனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயம் தன்னையும் மீறி நடந்திடுமோங்கற ஒரு பயம் அவளுக்கு அதிகமா இருக்கு. அந்த விருப்பமில்லாத விஷயம் என்னன்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு.
அது செக்ஸ பத்தின பயமா இல்ல கல்யாணமேவான்னு அவ கண் விழிச்சதுக்கு பிறகு அவ கிட்ட பேசிப் பார்த்தால்தான் புரியும்.
ஒருவேளை இதனால எதிர்காலத்துல, கல்யாண வாழ்க்கையில, அதாவது கணவன் மனைவி அந்தரங்க வாழ்க்கையில சிக்கல் ஏற்படலாம்” என்றவர் தன் பார்வையை அகற்றாமல், “இப்ப சொல்லுங்க உங்களால் அவள கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்று கேட்க, “அவளுக்கும் விருப்பம்னா எங்க கல்யாணம் நடக்கும். அவளுக்கு விருப்பம் இல்லன்னா எந்த விதத்துலயும் அவளை நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.
அவ என் கூட இருக்கணும் அப்படிங்கறத விட... அவ இருக்கணும். அதுவும் ஹாப்பியா நிம்மதியா இருக்கணும்” என்றவன், “எங்க கல்யாணம் நடந்ததா அவ என் கூட இருக்காங்கற ஒரு சந்தோஷமே எனக்கு போதும். வாழ்நாள் முழுமைக்கும் அவளோட இப்படியே இருந்துடுவேன். எங்களுக்குள்ள எமோஷனல் பாண்டிங் இருந்தால் போதும் மற்றபடி எனக்கு அவளோடான பிசிகல் பாண்டிங் அவசியமில்லை” என்றான் வெளிப்படையாக.
“என்ன மித்ரன் யோசிக்காம இப்படி டக்குனு சொல்லிட்டீங்க? இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா? நாளைக்கே குழந்தை ஆசை வந்தா என்ன செய்வீங்க?” என அவர் விடாப்பிடியாகக் கேள்விகேட்க, “நீங்க மனுஷங்களோட மனச படிக்கிறவங்கதானே? என்னைப் பார்த்தால் நான் மேலோட்டமா பேசற மாதிரி தோணுதா?” எனக் கேட்டவன் அவர் பதில் பேசும் முன்பே, “ஒருவேளை எதிர்காலத்தில் குழந்தை ஆசை அவளுக்கு வந்தா அது கட்டாயம் நிறைவேறும். இன்னைக்கு இருக்கும் மாடர்ன் உலகத்துல குழந்தைப் பிறக்க பிசிகல் காண்டாக்ட் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே.?” என்றவன் “என்ன நடந்தாலும்… என்னோட அஜூபா என் கூடவே இருந்தாலும்… இல்லாமல போனாலும்… அவ என்னோட அஜூபாதான்” என்றான் மித்ரன் உறுதியுடன்.
சில நொடிகள் புன்னகையுடனேயே அவனுடைய முகத்தைப் பார்த்திருந்தவர், “இந்த மாதிரியான ஒரு மெச்யூர்டான மனநிலையை நிச்சயமா நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல. கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்” என்றவர் மாளவிகாவின் செவி அருகில் குனிந்து “ஹேய் அஜூபா உன்னோட இந்த ஃபயர் மேனுக்காகவாவது நீ சீக்கிரம் கண் விழிக்கணும். போதும் எல்லாரையும் டென்ஷன் பண்ணது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அகிலா
Comments