மித்ர-விகா 41
ஒரு வழியாக அடுத்த நாள் அதிகாலை கண் விழித்த மாளவிகா அவளிருக்கும் சூழ்நிலையையும் நன்றாகவே உணர்ந்துகொண்டாள்.
முதன்முதல் அவள் பார்த்தது இருக்கையில் அமர்ந்திருந்தவாறே அவளது முகத்துக்கு அருகில் தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த அக்னிமித்ரனைதான்.
மெல்லிய புன்னகை அரும்பியது அவளுடைய முகத்தில். ஒரு கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டிருக்க மற்றொரு கை அக்னி மித்திரனுடைய முகத்திற்குக் கீழே இருந்தது. மொள்ள அந்தக் கையை உருவிக் கொண்டவள் மெதுவாக எழுந்து உட்கார முற்பட, அந்த சிறு அசைவிலேயே கண் விழித்துவிட்டான் அக்னிமித்ரன்.
அதுவரை, கண்விழித்ததும் தன்னைப் பார்த்தால் எப்படி நடந்து கொள்வாள் என்ற யோசனையே இல்லாமல் இருந்தவனுக்கு அவளது நினைவு திரும்பியதைப் பார்த்ததும் மனதில் திகில் சூழ்ந்தது.
அது அவன் கண்களில் அப்படியே பிரதிபலிக்க, ‘என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?’ என்றுதான் தோன்றியது மாளவிகாவுக்கு. அவள் ஏதும் பேசுவதற்கு முன்னமே அங்கிருந்து வேகமாக வெளியே சென்றவன் அவளுக்காகப் பிரத்தியேகமாக இருந்த செவிலியரை அழைத்து அவள் கண் விழித்துவிட்டதைச் சொன்னான்.
உடனே சாத்விகாவைக் கைப்பேசியில் அழைத்தவன் அவள் கண் விழித்ததைச் சொல்ல, அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்த சாத்விகா, துளசி இருவரும் அவளைக் காணும் ஆவலில் உடனே ஐசியு நோக்கி வந்துவிட, அவனே வெளியில்தான் நின்றுகொண்டிருந்தான் அவளை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்ததால்.
சில நிமிடங்களில் அவள் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகச் சொல்லி, அவளைத் தனி அறைக்கு மாற்ற, அதற்குள் மூர்த்தியும் வந்துவிட எல்லோருமாக அவளைப் பார்க்க உள்ளே நுழைந்தனர். அவளை நேருக்குநேர் சந்திக்க அஞ்சி வெளியிலேயே நின்றுவிட்டான் அக்னிமித்ரன்.
எல்லோரையும் பார்க்கவும், அந்தக் காணொலி நினைவுக்கு வரக் கொஞ்சம் தடுமாறியவள், "அப்பா, சாரி" என்று மன்னிப்பு வேண்ட, அவளுடைய கண்கள் நீர் கோர்த்தது. அவள் அழுகையை அடக்க மிகவும் போராட, பதறிபோனவர், "பாப்பா, வேணாம் விடு. நாங்க உன்னை எந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம். உனக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யலாம்” என்றார் அவர் அவசரமாக.
மகள்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் அவருக்கு அதிகமாகிப் போயிருப்பதை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது மாளவிகாவுக்கு. அன்னையின் முகத்திலும் வேதனை மண்டிக்கிடந்தது. கண்களை மூடி சில நிமிடங்கள் தன்னை சமன்செய்துகொண்டவள்,
"போதும் பா... ஏற்கனவே என்னால நீங்க எல்லாரும் ரொம்ப கஷ்ட பட்டுடீங்க. இனிமேலும் யாருக்கும் டென்ஷன் கொடுக்க நான் விரும்பல. குழப்பம் இல்லாம ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்" என்றவள், "மித்ரன் வீட்டுல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க" என்று முடித்தாள்.
அவள் முகத்திலும் குரலிலும் அப்படி ஒரு தெளிவு வந்திருந்தது. மகளை உணர்ந்தவராகத் துளசி கணவரை ஒரு பார்வை பார்க்க அதைப் புரிந்து கொண்டவராக மூர்த்தி வேகமாக வெளியே சென்றார். கூடவே துளசியும் செல்ல, "அக்கா கடைசில நீதானா அந்த அஜூபா?" எனக் கேட்டாள் சாத்விகா குதூகலத்துடன்.
"ஒத வாங்க போற" என மாளவிகா சொன்ன விதத்திலேயே அவள் இயல்பிற்குத் திருப்பியிருப்பது புரிய, அதற்குள் மது சாத்விகாவைக் கைப்பேசியில் அழைக்கப் பேசிக்கொண்டே வெளியில் சென்றாள் அவள்.
சில நிமிடங்களில் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அக்னிமித்ரன் முகம் கொள்ளா புன்னகையுடன். அவளுக்கு அருகில் வந்து நின்றவன் அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "சாரி... சாரி... சாரி... அஜூபா! நான் உனக்கு செஞ்சதெல்லாம் ரொம்ப அதிகம். ரியலி வெரி சாரி" என அவன் திரும்பத் திரும்ப சொல்ல, "ஷ்... முடியல ப்ளீஸ்" என்றாள் அவள் சலிப்புடன்.
"அப்படின்னா... உங்க அப்பா என்னவோ சொல்றாரே. அது நிஜம்தானா அஜூபா? நீ என்னை அக்சப்ட் பண்ணிட்டியா?” எனக் கேட்டான் அவன் வியப்பு மேலிட.
"எஸ். ஓகே” என இரண்டே வார்த்தைகளில் அக்னிமித்ரனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள் மாளவிகா சிறு புன்னகையடன்.
"அந்த வீடியோ லீக் ஆனதாலயா?" அவன் வேதனையுடன் கேட்க, "இல்லை" என்று தலை அசைத்தாள் அவள்.
"அந்த வீடியோவ... நான்..” எனக் குற்ற உணர்ச்சியில் அவன் தடுமாற, "அது உங்க ஃபோன்ல இருந்த வீடியோ இல்லன்னு எனக்கு தெரியும். அது உங்க நேம்ல இருக்கற ஃபேக் ஐடின்னும் எனக்கு தெரியும்" என்று அவள் இயலபாகச் சொல்ல, உணர்ச்சியின் பிடியில் சிக்கியவனாக, "லவ் யூ லயன்னஸ்!" எனக் கண்கள் பணிக்கத் தழுதழுத்தான் அவன்.
மனதிலிருந்த சஞ்சலங்கள் மறைந்து இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன நிம்மதியுடன்.
***
அக்னிமித்ரன் புதையல் வேட்டையில் தலையைக் கொடுத்திருக்க, அவனது அதிகப்படியான நேரத்தை அந்த நிகழ்ச்சியே எடுத்துக்கொண்டது. இடையில் அந்த இரண்டு காணொலிகளையும் பதிவு செய்தது யார் என்ற தேடலில் வேறு இருந்தான் அவன்.
அங்கே இங்கே சுற்றி அந்த தேடல் கௌதமிடம் போய் முடிய, வீட்டில் பெரியவர்கள் முன் பஞ்சாயத்தை வைத்து அவனை நன்றாக வைத்துச் செய்துவிட்டனர் மித்ரன் விக்ரம் இருவரும்.
கடைசி வரை அதைத் தான் செய்யவே இல்லை என அவன் சாதிக்க, தர்ஷினி கூட நம்பவில்லை அதை. அதற்கு மேல் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் எனத் தீபா சொல்லிவிட, நல்ல மனநிலையிலிருந்ததால் அதை அப்படியே விட்டுவிட்டான் மித்ரனும்.
மருத்துவமனையிலிருந்து அவளை டிஸ்சார்ஜ் செய்து பின் வீட்டில் கொண்டு போய் விட்டதுடன் சரி அதன் பின் அவளை நேரில் பார்க்கவோ, பேசவோ கொஞ்சம் கூட முயற்சி செய்யவே இல்லை அக்னிமித்ரன். எங்கே புதிதாக ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம்.
அவனுடைய வீட்டில் திருமணம் என அவன் சொன்னதுதான், அவ்வளவு மகிழ்ச்சி எல்லோருக்கும். தீபா சந்தோஷத்தில் துள்ளிவிட்டார்.
வாசுகிதான் அந்தஸ்து, அது இது எனக் குதிக்க, "மித்ரன் விஷயத்துல நீ தலையிடாதே" என ஒரே வார்த்தையில் அவரை அடக்கிவிட்டார் பரமேஸ்வரன்.
அந்த மட்டும் மகன் கல்யாணம், குடும்பம் என நல்லபடியாக வாழக்கையை அமைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலையிலிருந்தவருக்கு மற்றதெல்லாம் பின்னுக்குப் போய்விட்டது.
ஏற்கனவே அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடியுடன் சேர்த்து கௌதமுக்கு சில நாட்களாக அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலேயே அவன் வாசம் செய்யவும், அந்தக் கவலை வேறு இருந்ததால் வாசுகியும் சட்டென அடங்கிவிட்டார்.
மித்ரன் திட்டவட்டமாகச் சொல்லிவிட, சென்னையில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் முறைப்படி முன்பதிவு செய்து, தொடர்ந்து வந்த முகூர்த்தத்திலேயே எளிமையாகத் திருமணத்தை நடத்தி முடித்தார் மூர்த்தி.
மித்ரன் குடும்பத்தில் அவனுடைய அத்தையைத் தவிர மாற்ற எல்லோரும் வந்திருக்க, பிருந்தாவும் குழந்தைகளுடன் வந்திருந்தாள். மதுவும் அவளுடைய கணவரும் மட்டும் வந்திருக்க, அவளுடைய வீட்டிலிருந்து வேறு யாரும் வரவில்லை.
அன்பு அவனுடைய அம்மா அப்பாவுடன் வந்திருக்க, சாமிக்கண்ணு அய்யாவும் கண்ணம்மாவும் வந்திருந்தனர். கவி வந்திருந்தான் ரீமாவை உடன் அழைத்துக்கொண்டு!?
பெரும் குழப்பங்களுக்கு இடையே இந்த திருமணம் நடக்கவே, அன்புவும் சாத்விகாவும் அடக்கி வாசித்தார்கள். பெரியவர்கள் வேறு அவர்களை அடக்கி வைத்திருந்தனர்.
இல்லாமல் போனால் அந்த இடத்தையே ஒரு வழி செய்திருப்பார்கள் இருவரும். அந்த சில நாட்களுக்குள்ளேயே சாம்பவியும் அக்ஷையும் மாளவிகாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டனர்.
டாக்டர் அகிலா சொன்ன எச்சரிக்கைகள் மனதை ஆக்கிரமித்திருந்ததால் மித்திரன் ஒரு அழுத்தத்துடனேயே இருக்க, மாளவிகா மட்டும் வெகு இயல்பாக இருப்பதுபோல்தான் தெரிந்தது.
மிதமான ஒப்பனையில், எளிமையான பச்சைப் பட்டுடுத்தி, அதிகம் கண்களைப் பறிக்காதவாறு நகைகள் அணிந்திருந்தாலும், ஆளுமையான நிமிர்ந்த அவளது தோற்றம் அவளைப் பேரரசி போல காண்பிக்க, அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்த மாளவிகாவின் கழுத்தில் அக்னிமித்ரன் தங்கச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட தாலியை அணிவிக்க, முறைப்படி திருமண வாழ்வில் இணைந்தனர் இருவரும்.
அதன் பின் அங்கேயே ஏற்பாடு செய்திருந்த சிறிய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அவர்களுடைய அந்தத் திருமணம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது.
முகூர்த்தம் முடிந்தவுடன் மூர்த்தி அவர் வீட்டிலேயே எல்லோருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்க, எல்லாம் முடிந்து அன்று மாலையே மித்ரனின் வீட்டிற்குச் சென்றவர்கள், ஆலம் சுற்றி வீட்டிற்குள் சென்று விளக்கேற்றி என முறைப்படி செய்ய வேண்டிய சின்ன சின்ன சடங்குகள் முடிந்து சிறு ஓய்வுக்குப் பின் மாளவிகாவை அழைத்துக்கொண்டு தன் ஃப்ளாட்டுக்கே சென்றுவிட்டான் மித்ரன்.
தீபாவுக்கு அது குறையாகத் தெரிந்தாலும் ஏதும் சொல்லாமல் மகனுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டார் அவர். அதன் பின் வந்த நாட்களில் அக்மி ரீடைல்ஸ் மொத்த நிர்வாகத்தையும் அவள் பெயரில் மாற்றி அமைத்தவன், புதையல் வேட்டை படப்பிடிப்பு நேரம் போக, அவனுக்கு பீஏவாக இருந்தவளுக்கு பீஏவாக மாறிப்போனான் மொத்த நிர்வாகத்தையும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு. அதாவது அவன் விருப்பப்படி ‘ட்வெண்டிஃபோர் பை செவன்’ மனைவியை தன்னுடனேயே வைத்துக்கொண்டு சுற்றினான் மித்ரன்.
அவனுடைய அம்மாவிடமும் தர்ஷினியிடமும் எப்படி இருப்பானோ அப்படி சில நேரங்களில், சாம்பவி அக்ஷய் இருவரையும் எப்படி நடத்துவானோ அப்படி பெரும்பாலான நேரங்களில் மளவிகாவை நடந்தினானே தவிர மனைவி என்கிற உரிமையிலோ அல்லது எதிர் பாலினம் என்கிற ஈர்ப்பிலோ மறந்தும் ஒரு ஆர்வமான பார்வையைக் கூட அவளை நோக்கி வீசவில்லை அவன்.
'இவ்வளவு ஸ்ட்ராங்காடா நீ?' என்று அவளையே வியக்கதான் வைத்தான் அக்னிமித்ரன் அவனது நடத்தையால்.
'வாக் இன் வார்ட்ரோப்' பாணியில் அமைந்திருக்கும் உடை மாற்றும் அறையையும் குளியல் அறையையும் இணைத்ததாக அவன் படுக்கை அறை அமைந்திருக்க, தேவையற்ற சங்கடங்கள் இல்லாமல் அவனுடன் அங்கே இருப்பது, சாத்விகாவுடன் அறையைப் பகிர்ந்து இருக்கும்பொழுது எப்படி இருந்ததோ அப்படியே வெகு இயல்பாகவே இருந்தது அவளுக்கு.
ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் ஒன்றாகச் சாப்பிட்டு ஒரே அறையில் உறங்கினாலும் காதல் காமம் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுப் பார்கக அவளுடைய அருகாமை மட்டுமே அவனுக்கு அவ்வளவு நிம்மதியைக் கொடுத்தது என்றால் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவனுடைய அருகாமையை விரும்பி ஏற்க முடிந்தது மாளவிகாவால்.
வார இறுதிகளில் அட்டவணைப் போட்டு நேரம் ஒதுக்கி மித்ரனின் வீட்டிற்கு, மாளவிகாவின் பிறந்த வீட்டிற்கு, சாமிகண்னு அய்யாவை சந்திக்கவெனச் சென்று வருவார்கள்.
அன்புவும் 'யுபிஎஸ்சி மெயின்ஸ்' பரீட்சையை நல்லபடியாக எழுதி முடித்திருக்க, சென்னைக்கே வந்துவிட்டதால் அவர்களைப் பார்க்க அடிக்கடி வந்து சென்றான்.
மதுவுடன் மட்டும் ஒரு சுமுகமான நிலை ஏற்படவில்லை. அவர்களுடைய திருமணத்தன்று அவளைப் பார்த்ததுடன் சரி. அதன் பிறகு அவளைப் பார்க்கவே இல்லை.
மித்ரன் சரவணனை மிரட்டியதெல்லாம் இதுவரையும் கூட யாருக்கும் தெரியாது என்றாலும் மாளவிகாவைக் கொண்டு இரண்டு குடும்பங்களுக்குள்ளும் சிறு உரசல் உருவாகிதான் இருந்தது.
அந்தக் குறை மட்டும் அவள் மனதிலிருக்க, அவள் மன அழுத்தத்திலிருந்து விடுபட சில மாத்திரைகளை வேறு தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க, அதிக அழுத்தம் கொடுக்காமல் அவர்களுடைய நாட்கள் அதன் போக்கில் தெளிந்த நீரோட்டத்துடன் சென்றன.
Comments