En Manathai Aala Vaa! 4
Updated: Sep 25, 2022
மித்ர-விகா-4
"இவங்க ஃப்ரெஷ்ஷர்தான" வேண்டுமென்றே ஒன்றுமே தெரியாதவன் போல மித்ரன் கேட்கவும், கடுப்பானது கவிக்கு. இருந்தாலும், 'எஸ் பாஸ்” என்றான் பவ்யமாக.
அதற்குள் கவியின் கைப்பேசி ஒலிக்கவும், அவன் மித்ரனின் முகத்தைப் பார்க்க, "யா கவி! நீ போ” என்றான் அவன் பெருந்தன்மையுடன். மாளவிகாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கவி வெளியில் சென்றுவிட, "எந்த காலேஜ்ல படிச்சீங்க?"
அவன் எதார்த்தமாய் கேட்க, பதில் சொன்னாள் மாளவிகா.
"ஓஹ் யா... நான் உங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்க்கு வந்திருந்தேனே”
அவன் சொல்ல, "ம்ம்.. தெரியும். நான் அன்னைக்கு ஒரு டான்ஸ் பண்ணேன்" என்றாள் சற்றுப் பெருமையுடன்.
அவனுக்கு அவளை நினைவிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பை அவளுடைய வான் மிதக்கும் கண்களுக்குள் கண்டுகொண்டவன், "ஓஹ். அப்படியா? ஏதவாது க்ரூப் டான்ஸ்லயா?" எனக்கேட்டான் அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து.
"இல்லை" என்பதற்கு மேல் விளக்க அவளுக்குமே விருப்பமில்லாமல் போக, 'எனக்கு இங்கே வேலை செய்ய விருப்பமில்லை' என்று அவனிடம் சொல்லிவிடத் துடித்த நாவை அடக்கியவள், மௌனத்தைத் தத்தெடுத்தாள்.
அதற்குள் கதவைத் தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே நுழைந்த கவி, "அருணா ஆக்ரோல இருந்து ரேட் ஃபைனலைஸ் பண்ணி மெயில் அனுப்பியிருக்காங்களாம். செக் பண்ண சொல்லி அவங்க மார்க்கெட்டிங் ஹெட் ஃபோன் பண்ணாரு. நீங்க ஒரு தடவ பார்த்துடீங்கன்னா நான் ரிப்ளை பண்ணிடுவேன்" என்றான் பழக்கத் தோஷத்தில்.
"நீ மத்த வேலையைக் கவனி கவி. இதுக்குத்தானே இவங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கோம். இனிமேல் இந்த வேலையெல்லாம் மால்வி பார்த்துப்பாங்க" அவன் கட்டளை போலச் சொல்ல, 'என்னாது... மாளவியா?' என உள்ளுக்குள்ளேயே கடுப்பாகிப் போனவள், 'ஐயோ. இப்போதைக்கு வெளிய போகவே விடமாட்டான் போலிருக்கே. ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் இந்த கவியரசு கிட்ட சொல்லிட்டு நாம எஸ் ஆகிடலாம்' என நினைத்தவாறே அவனுடைய முகத்தை யோசனையுடன் பார்த்தாள் மாளவிகா.
அதற்குள் கவி அங்கிருந்து சென்றிருக்க, தன்னுடைய மடிக்கணினியில் அந்த மின்னஞ்சலைப் படித்தவன், அவனுடைய அறையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கணினியைச் சுட்டிக் காண்பித்து, "அதை இனிமேல் நீ யூஸ் பண்ணிக்கலாம். அதுல நம்ம கம்பெனி மெயில் ஐடி லாக் இன் ஆகியிருக்கு. அருணா ஆக்ரோஸ், கோட் செஞ்சிருக்கற அமௌன்ட்க்கு ஓகே பண்ணி அதுல இருந்து இந்த மெயிலுக்கு ரிப்ளை பண்ணிடு”
மித்திரன் சொல்லவும், 'என்ன ‘ங்க’லாம் காணாம போயிருக்கு. திமிரு பிடிச்சவன். கவி எப்படியும் இவனை விட வயசுல பெரியவராதான் இருப்பாரு. அவரையே வா போன்னு சொல்றான். நாமெல்லாம் எம்மாத்திரம்' மனதிற்குள் அவனை வருத்தாலும் அவன் சொன்ன வேலையைத் தட்ட இயலாமல் செய்து முடித்தாள் மாளவிகா.
அதன் பின் 'ஒரு கொட்டேஷன் அடிக்கணும்' 'ஒரு எஸ்டிமேஷன் ரெடி பண்ணனும்' என அவளது பணி நீண்டு கொண்டே போக, மதிய இடைவேளை வரை அவளை அங்கே இங்கே நகரவிடவில்லை அவன்.
சாப்பிட நேரம் ஆகவும் விட்டால் போதுமென்று கவியைத் தேடி வந்தவள் அவன் அங்கே இல்லாமல் போக தன் 'கேபின்'னுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள். சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லை அவளுக்கு.
பெண்களுக்கே உரித்தான ஒரு எச்சரிக்கை மணியின் ஓசை அவளுடைய மனதிற்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது. யோசனையுடன் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, அவளை தன் 'கேபினு'க்கு வரச்சொல்லி 'இண்டர்காம்' மூலம் அழைத்தான் கவி. அவள் ஒரு முடிவுடன் அங்கே செல்ல, "உங்க அக்சஸ் கார்ட் ரெடியா இருக்கு. நம்ம ஹெச் ஆர்ல கலெக்ட் பண்ணிக்கோங்க. அண்ட் அட்டெண்டன்ஸ்க்கு பயோ மேட்ரிக்ஸ் அண்ட் தென் பேஸ் ரெகக்னிஷன் எல்லாம் அங்கேயே எடுத்திருவாங்க. ஈவினிங் வீட்டுக்குக் கிளம்பறத்துக்கு முன்னால முடிச்சிட்டு கிளம்புங்க” அவன் சொல்லிக்கொண்டே போக, அதைக் கண்டுகொள்ளாமல், "என்னால இங்க கண்டின்யு பண்ண முடியாது மிஸ்டர் கவியரசு! ரிலீவ் ஆக என்ன ப்ரொசீஜர்ன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"
கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அவள் கேட்கவும் அதிர்ந்த கவி, "ஐ காண்ட் கெட் யூ" எனப் புரியாமல் கேட்க, "இல்ல.. என்னை ரிலீவ் பண்ண என்ன பார்மாலிடீஸ்ன்னு கொஞ்சம் சொல்லுங்க"
அவள் அழுத்திச் சொல்ல, "நீங்க காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருக்கீங்க மிஸ் மாளவிகா. இப்ப இப்படி சொல்றீங்க?"
அவன் கொஞ்சம் கண்டிப்புடன் கேட்க, "நேத்துதானே சைன் பண்ணேன். கேன்சல் பண்ண முடியாதா?"
சற்று தகைந்த குரலில் அவள் கேட்கவும், "நல்ல சேலரி பேக்கேஜ். வைட் ஸ்கோப் இருக்கற வேல. நீங்க ஏன் வேண்டாம்னு சொல்றீங்கன்னு புரியல. நான் எதுக்கும் பாஸ் கிட்ட கேட்டுச் சொல்றேன்”
அவன் பட்டும் படாமல் சொல்லவும் தன் அறைக்குத் திரும்ப வந்தாள் அவள்.