மித்ர-விகா-39
கௌதமுடன் திருமணம் முடிந்தவுடனேயை அவன் தனிக்குடித்தனம் சென்றுவிட, அவனுடைய நிஜ முகம் தெரியும் வரை, இரண்டு வருடங்கள் மட்டுமே இனிமையாகக் கடந்திருந்தன அவளுக்கு.
அவனைப் பற்றி அறிந்து அவள் கேள்வி கேட்கத் தொடங்கிய பிறகு மோனாவை செய்ததைவிட அவளை அதிக கொடுமைக்கு உட்படுத்தியிருந்தான் கௌதம் வக்கிரத்துடன், அவள் அக்னிமித்ரனின் தோழி என்கிற ஒரே காரணத்தினால். அதையே தவறான விதத்தில் சித்தரித்து, சொல்லிச் சொல்லி.
தந்தை சொன்னதால் மட்டுமே அவனைத் திருமணம் செய்துகொண்டவள், பெற்றவர்களுக்காக எண்ணியே அந்த வாழ்க்கையைத் துறக்காமலிருந்தாள்.
குடும்ப அரசியலால் மித்ரன் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தால் கௌதம் வேறு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை. பிள்ளைகளின் கண்களில் அம்மாவானவள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீபாவைப் போன்று சுயகௌரவத்தைத் தொலைத்தோ அல்லது வாசுகி போன்று அடக்குமுறை செய்தோ தாழ்ந்து போகவே கூடாது. அது ஏதோ ஒரு விதத்தில் அவள் பெற்ற பிள்ளைகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
அதையெல்லாம் யோசிக்கவில்லை மித்ரன். தன் தோழியை அப்படி ஒரு நிலையில் பார்க்கவும். கொஞ்சம் அதிகமாகவே கொந்தளித்துவிட்டான். நேரில் போய் கௌதமைத் துவைத்து வெளுத்துவிட்டான்.
குடும்பத்தில் பஞ்சாயத்தைக் கூட்டி, பிருந்தாவுக்கு அவள் விரும்பியபடி கௌதமிடமிருந்து விடுதலையை வாங்கிக்கொடுத்தான். அதன்பின் அவள் வாழ்க்கையை அவளே பார்த்துக்கொள்ளவும், கொஞ்சம் நிம்மதியாகிப்போனது மித்ரனுக்கு.
மகன் சொன்னதை அப்பொழுதே கேட்டிருக்கலாம் என பரமேஸ்வரன் நியாயமாக வருந்த, வாசுகியால் அதை உணரக்கூட முடியவில்லை. மித்ரன் தன் மகன் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாகவே நம்பினார். அவனுடைய அம்மாவை கௌதம் அப்படி நம்பவைத்திருந்தான் என்றால் அது மிகையில்லை.
இவ்வளவு நடந்தபின்னும் அமைதியாக இருக்காமல், அவ்வப்பொழுது மித்ரனைச் சீண்டும்படி எதையாவது செய்து அதற்கு ஒரு படி மேல் சென்று அவனுக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு நெருக்கடியை மித்ரனுக்கு ஏற்படுத்துவான் கௌதம்.
அதையும் ஒரு அளவுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் அவன். வீனஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் வளர்ச்சியும் அதன் புகழும் அவனுடைய கண்ணை உறுத்த, 'டிஆர்பி'யில் உச்சத்திலிருந்த 'புதையல் வேட்டை'தான் அவனுடைய கருத்தில் நின்றது.
அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருத்த நடிகர் அனுபவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு பிரச்சினையைத் தொடங்கினான் அவன்.
அதாவது அவனுக்கு அந்த நிகழ்ச்சிக்காகக் கொடுக்கப்படும் தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் கேட்டான் அவன் அதன் அடுத்த சீசனுக்கு.
அவன் உச்சத்தில் இருக்கும் நடிகன். அந்த நிகழ்ச்சியின் அவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமானவன்.
மக்கள் அவனைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருக்க, புதிதாக யாரையாவது மாற்றினால் அந்த நிகழ்ச்சி அடிவாங்கும். சேனலின் வளர்ச்சி பாதிக்கப்படும். இவை எல்லாம் அவனது பலமாக இருந்தது.
புதையல் வேட்டையின் முதல் சீஸனின் இறுதிச் சுற்றுப் பிரமாண்டமாகத் திட்டமிடப்பட்டிருக்க, அவர்களுடைய ஸ்டூடியோவிலேயே அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
பல திரை பிரபலங்களுக்கும் அதில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, நிகழ்ச்சித் தொடங்க சில மணி நேரம் இருக்கவும் அங்கே வந்திருந்தான் மித்ரன்.
அவன் அங்கிருப்பது தெரிந்து அவனைக் காண அங்கே வந்திருந்தாள் பிருந்தா. அவர்கள் இருவரும் அங்கே இருக்கும் அலுவலக அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, அனுபவ் அவனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் அவனை அங்கே வருமாறு சொல்லி அனுப்பினான் மித்ரன்.
அப்பொழுதுதான் அனுபவின் சம்பளம் தொடர்பான இந்த பேச்சு வார்த்தைகள் அரங்கேறின பிருந்தாவின் முன்னிலையிலே. அவன் சம்பளத்தை அப்படி உயர்த்திக் கேட்டது கூட மித்ரனுக்குப் பிரச்சனையாக இல்லை. அவன் கேட்ட விதமும் மிரட்டும் தொனியும் பொறுமை என்றால் என்னவென்று தெரியாத மித்ரனை எரிச்சல் படுத்திவிட, கொஞ்சம் கூட யோசிக்காமல், அடுத்த நொடியே கவிக்கு அழைத்தவன், "அனுபவ்க்கு என்ன பே பண்ணணுமோ அதை மொத்தமா செட்டில் பண்ணிடுங்க கவி. அடுத்த சீசனுக்கு நம்ம ஜெகதீஸ்வரன்... ஐ மீன் மிஸ்டர் ஈஸ்வர் கிட்ட கேட்டுப்பாருங்க" என்றான் கட்டளையாக.
இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அனுபவின் முகம் சுருங்கி போக, "பின்ன... இந்த மாதிரி பாப்புலரா இருக்கறவங்க யாரையாவது பிடிச்சாதான் உண்டு. உன்னால எல்லாம் ஹாட் சீட்ல உட்கார முடியுமா?" என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் அவன். அது அருகிலிருந்த பிருந்தாவுக்கு நன்றாகவே கேட்டுவிட்டது.
அனுபவ் கௌதமுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று பிருத்தாவுக்கு நன்றாகவே தெரியும். மித்ரனைச் சொல்லவும் கோபம் வந்துவிட்டது அவளுக்கு.
"என்ன சொன்னீங்க... கம் அகைன்" என்றாள் அவள் சீற்றமாக.
"ஹேய்... நீங்க கௌதமோட எக்ஸ்தான? மித்ரனைப் பேசினா உங்களுக்கு ஏன் கோபம் வருது? இப்ப புரியுது கௌதம் ஏன் உங்களை டைவர்ஸ் பண்ணாருன்னு" என்றதுடன் நிற்காமல் தான் சொன்னதை மறுபடியும் சத்தமாகச் சொன்னான் அனுபவ்.
கோபத்தில் மித்ரன் கையை ஓங்கிக்கொண்டு வர, இடையில் புகுந்து "இப்ப தடுத்துட்டேன். இனி ஒரு தடவ இந்த மாதிரி பேச்சு வந்தது... நான் மித்ரனைத் தடுக்க மாட்டேன். நீங்கதான் கான்சீக்வன்ஸஸை ஃபேஸ் பண்ணனும்" என நண்பனைப் பற்றி அறிந்தவளாகச் சீறியவள், "அடுத்த சீசன் நீ பண்ணு மித்து. எனக்காக" என்று மித்ரனிடம் சொல்லிவிட்டு, "அடுத்த சீசன் நிச்சயமா ஹிட் ஆகும். அப்படி நடந்தா நீங்க நடிப்பையே விட்டுடனும்" என்றாள் அனுபவிடம் சவாலாக.
தான் சொல்ல நினைத்ததையெல்லாம் அவள் சொல்லியிருக்க, அமைதியாக அதை ஒப்புக்கொண்டான் மித்ரன். அதையும் பார்க்கலாம் என்பதுபோல்தான் அங்கிருந்து சென்றான் அனுபவ்.
அன்று மாலை நிகழ்ச்சியிலேயே அந்த ஏற்பாட்டை அவன் அறிவிக்கவும் செய்தான் பிருந்தாவை மனதில் வைத்து.
அவளுடைய வாழ்க்கை சிதைந்து போனதில் உண்டான வருத்தம் இன்னமும் அவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
பிருந்தாவைப் பற்றிச் சிந்தித்தவாறே அந்த நட்சத்திர விடுதிக்கு வந்திருந்தான் மித்ரன். அதன் வரவேற்பில்லேயே அவனுக்காகக் காத்திருந்தாள் பிருந்தா.
அவளைப் பார்த்ததும் அவனது முகம் மலர, அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவளுடைய குட்டி மகனை அள்ளி தன் தோள் மேல் போட்டுக்கொண்டவன், அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருந்த அவளுடைய மகளை அருகில் அழைத்தான்.
குழந்தை தயங்கியவாரே அம்மாவிடம் வந்து ஒண்டிக்கொள்ள, "ஹேய். அவந்தி குட்டி. அங்கிளைத் தெரியலையா உனக்கு" எனக் குழந்தையின் கையை மென்மையாகப் பற்றி அவன் அவளை தன்னிடம் இழுக்க, கையை விடுவித்துக்கொண்டு, "பாட்டி யார்கிட்டயும் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க" என்றாள் குழந்தை.
அவன் பிருந்தாவை ஒரு பார்வை பார்க்க, "சாரி மித்து. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல அதுதான்" என்றவள், "இவளுக்கு செவன் இயர்ஸ் ஆகுது இல்ல. அம்மாதான் குட் டச். பேட் டச். எல்லாம் சொல்லி கொடுத்து, எல்லார் கிட்டயும் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க.
வீட்டுல நிறைய பேர் வேலை செய்யறாங்க. யாரை நம்பறது... யாரை நம்பக் கூடாதுன்னு புரியல. என் விஷயத்துல ஏமாந்து போனதால அவங்களுக்கு ரொம்ப பயம்” என்றவள், மறுபடியும், "சாரி” என்றாள்.
அவள் வார்த்தைகளில் அவனுடைய அப்பாவை எண்ணி அவன் மனம் அதிகமாக அடிவாங்கிப் போனது. அவர் தெரியாமல் செய்தாலும் அவர்கள் கண் முன் அவர் ஏமாற்றுக்காரர்தானே?
அதற்குமேல் அவனுக்குச் சிந்திக்க நேரம் கொடுக்காமல், சின்னவன் அவனிடமிருந்து நழுவி இறங்கி இங்கும் அங்கும் ஓட, அவன் பின்னாலேயே சென்று அவனைப் பிடித்து, பின் உண்ணப் போனார்கள் குழந்தைகளுடன்.
"போன தடவ நீ ஏன் இந்த ப்ரோக்ராமை செஞ்சன்னு எனக்குத் தெரியும். அதுக்குப் பிறகு அந்த ப்ரோக்ராமே வேண்டாம்னு நீ விட்டதும் தெரியும். இது என்ன மறுபடியும்? இப்ப யாரடா சேலஞ் பண்ணி வெச்சிருக்க" எனக் கேட்டாள் அவள் கொஞ்சம் அதீத குதூகலத்துடன்.
இதை அறிந்து கொள்ளும் ஆவலில்தான் அவள் தன்னை காண வந்திருக்கிறாள் என்பது விளங்க, "அது சஸ்பென்ஸ். சீக்கிரமே உனக்குத் தெரியவரும்” என்றான் அவன் உல்லாசமாக. பின்னே 'உன் காலேஜ் ஃபங்ஷன்ல டான்ஸ் பண்ண பெண்ணை கரெக்ட் பண்ணத்தான்!' என்றா சொல்ல முடியும்?
கூடவே மளவிகாவை அவன் சந்திக்க அவள் காரணமாக இருந்ததால் "தேங்க்ஸ்” என்றும் அதே உணர்வுடன் சொல்ல, ஆச்சர்யத்துடன் அவள் நண்பனை ஒரு பொருள் விளங்காத பார்வை பார்க்கவும், "இது எதுக்குன்னும் சீக்கிரமே தெரிய வரும்" என்று சொல்ல, "என்னமோ போ. நீ ஒரு சரியான சஸ்பென்ஸ் மன்னன்தான்" என்றாள் கொஞ்சம் கோபம் போல.
அதன் பின் ஏதேதோ பேசிக்கொண்டு குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு, அவர்களுக்கும் உணவை ஊட்டி விட்டு தாங்களும் உண்டு முடித்து அவளையும் குழந்தைகளையும் பத்திரமாக அனுப்பிவிட்டு தானும் கிளம்பினான் மித்ரன்.
காரைச் செலுத்திக்கொண்டிருந்தவன், அவனையும் அறியாமல், பொறுமையாக நிதானமாக மென்மையாகப் பேசும் பிருந்தாவையும் படபடவென பொரியும், பயம் என்பதே இல்லாமல் ஒரு ஆளுமையுடனேயே பேசும் மாளவிகாவையும் ஒப்பிட்டு பார்க்க, அவளுடைய இயல்புக்கு மாறாக அந்த காணொலியில் முகத்தில் எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் கண்களில் வெறுமையுடன் அன்று அவள் சரவணனுடன் பேசியது வேறு நினைவில் வரவும், அவள் என்ன பேசியிருப்பாள் என்பதை அறியும் ஆவல் மறுபடி தோன்ற, அப்பொழுதுதான் ஒரு யோசனை வந்தது அவனுக்கு.
உடனே கவியை அழைத்தவன், "நம்ம டப்பிங் ஸ்டுடியோல பேசி... பேசறவங்க லிப் மூவ்மெண்ட் வெச்சு அவங்க பேசறத கண்டுபிடிக்க முடியுமான்னு கேட்டுச் சொல்லு" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அதன் பின் வந்த நாட்களில் அவன் புதையல் வேட்டை படப்பிடிப்பில் மும்முரமாகிவிட, கவியிடம் விசாரிக்கச் சொன்னதையே மறந்துபோனான் மித்ரன்.
அன்று இரவு தான் புதையல் வேட்டையின் முதல் எபிசொட் ஒளிபரப்பாக இருக்க, ஏதோ சரியில்லை என்பது போல் மனம் படபடவென அடித்துக்கொண்டது அவனுக்கு.
இன்னும் சற்று நேரத்தில் அந்த நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவனை அழைத்தான் கவி.
"சொல்லு கவி” என அவன் அந்த அழைப்பை ஏற்க, "பாஸ்... அந்த வீடியோ சொல்லியிருதீங்க இல்ல. அதுல இருந்த கண்டண்டை அப்படியே ஸ்க்ரிப்ட் பண்ணிட்டாங்க. இப்ப டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வெச்சு பேச வைக்க போறாங்க. நீங்க இங்க வரீங்களா. இல்ல முடிச்சு உங்களுக்கு அனுப்பினா போதுமா?" என எதிர்முனையில் அவன் கேட்க, "ஐயோ அதை மறந்துட்டேனே" எனத் தலையில் தட்டிக்கொண்டவன் மேலும் காத்திருக்க பொறுமையில்லாமல், "ஸ்டார்ட் பண்ண சொல்லு, நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்” என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பி அங்கே சென்றான் மித்ரன்.
அதற்குள் அவர்கள் ஒரு டப்பிங் கலைஞரை வைத்து குரலைப் பதிவு செய்து முடித்திருக்க, பேசிய அந்தப் பெண் வெளியே வந்தார். அவரது கண்கள் கலங்கியிருக்க, அவருடைய முகம் தெளிவில்லாமல் இருத்தது.
மித்ரனைப் பார்த்தது ஒரு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் மரியாதை நிமித்தமாக அவனுக்கு முகமன் தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து அகன்று விட, அவரது குரலிலிருந்த கரகரப்பே சொன்னது அவர் அழுதிருக்கிறார் என்று.
ஏதோ சரியில்லை என்பது அவனது உள்ளுணர்வுக்குப் புரிய மனதைப் பிசைந்தது மித்ரனுக்கு. உள்ளே நம்பிக்கைக்குரிய ஒரு சிலரே இருக்க, அவர்களுடைய முகமும் சரியில்லை.
அவனைப் பார்த்ததும் அவனை நோக்கி வந்த கவி, "வாங்க பாஸ். அந்த வீடியோவை ஆடியோவோட பிளே பண்ண சொல்றேன்” என்றவன், சற்று தயங்கியவாறு, "மாளவிகாவை டார்கெட் பண்றத விட்டுடுங்க பாஸ்” என்றான் கொஞ்சம் கூட தயங்காமல் அவனுக்கு மட்டுமே கேட்கும் மென் குரலில்.
சொல்லும்பொழுதே அவனது தொண்டை அடைக்க கண்களும் கலங்கியிருந்தது. அவனது அந்தப் பாவனை கோபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக ஒரு அச்சத்தைக் கொடுக்க, அந்தக் காணொலியைக் காண உள்ளே சென்றான் மித்ரன்.
அதே நேரம் புதையல் வேட்டையின் முதல் எபிசோடின் ஒளிபரப்பு தொடங்கியிருக்க, அதைப் பார்க்க விரும்பாமல் தன் அறைக்குள் புகுந்துகொண்டாள் மாளவிகா.
சில நிமிடங்களுக்கெல்லாம் அவளைத் தேடி உள்ளே வந்த சாத்விகா, "அக்கா வந்து பாரேன். அந்த செட் செம்மையா இருக்குக்கா. அதுல ரெண்டுபேர் 'ஃபேஸ் ஆஃப்’ டைப்ல டான்ஸ் பண்ற மாதிரி ஒரு தீம் போட்டிருக்காங்க" என அவளை வற்புறுத்தி அழைக்க, மறுக்கத் தோன்றாமல் அவளுடன் சென்றாள் மாளவிகா. ஒரு தயக்கத்துடன் தொலைக்காட்சித் திரையை நோக்கி அவளது பார்வை செல்ல, மித்ரனும் அவளும்தான் அது. மற்றவர் பார்வைக்கு அவளுடைய முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அவளுடைய மனதுக்குதான் யாரென்பது தெரியுமே. படபடப்பாக ஆகிப்போனது மாளவிகாவுக்கு.
முதல் நிகழ்ச்சி என்பதால் மூத்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்க, அட்டகாசமாக திரையில் தோன்றியவன், “ஹாய். ஹாய். ஹாய். நான் உங்க அக்னிமித்ரன்!” என விசிய புன்னகையுடன் அமர்த்தலாகத் தொடங்கி, "என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அப்படியே நீங்க என்னை மறக்கணும்னு முயற்சி செஞ்சாலும் உங்களால அது முடியாதுன்னு என்னால சேலஞ் பண்ணி சொல்ல முடியும்.
ஏன்னா அந்த அளவுக்கு உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து அவளுக்காகவே பேசி அவளுடைய இதயத் துடிப்பை அவளையே கேட்க வைத்தான் அவன்.
“ரொம்ப பெரிய கேப்க்கு பிறகு உங்களை சந்திக்கிற ஆவலோட உங்க வீட்டுக்குள்ளேயே வந்திருக்கேன்?” எனத் தொடர்ந்தவன், “யூசுவலா எல்லாரும் அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்காக சாங் டெடிகேட் பண்ணுவாங்க. ஒரு சின்ன மாறுதலுக்காக இந்த ஷோவை அதாவது இந்தப் புதையல் வேட்டையின் மூன்றாவது சீசனை நான் என்னோட அஜுபாவுக்காக டெடிகேட் பண்றேன். அஜூபா யாருன்னு கேக்கறீங்களா?
கூடிய சீக்கிரமே அதை உங்க எல்லாருக்கும் சொல்றேன். அதுவும் லைவ்ல" என்று அவன் சொல்லி முடிக்க, அந்த நிகழ்ச்சித் தொடங்கியது.
"அஜூபா. எவ்ளோ அழகா அந்தப் பேரை சொல்றார் பாரேன் கா... உன்னோட எக்ஸ்... பாஸ்... லவ்லி...ல்ல" என வாய் பிளந்தவள், கடுப்பாகி மாளவிகா முறைத்த முறைப்பையும் கண்டுகொள்ளாமல், "ப்ச் செம்ம லக்கி இல்ல அந்த அஜூபா” என்றாள் சாத்விகா லேசான பொறாமையுடன்.
தொடர்ந்து, "அந்தப் பொண்ணு கட்டியிருக்கற சாரீயைப் பாரேன். நாம போன பொங்கலுக்கு வாங்கின சாரீ மாதிரியே இல்ல?" என்று வேறு அவள் கேட்க எல்லாம் சேர்ந்து மாளவிகாவின் படபடப்பு அதிகமாகிப்போனது.
"உனக்கு எக்ஸாம்ஸ் வரப்போகுது இல்ல? இந்த ரோதனைப் பிடிச்ச ப்ரோக்ராம் எல்லாம் பார்த்து ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க?" எனத் தங்கையிடம் காய்ந்தவள், கண்களைத் திரையிலிருந்து திருப்ப முடியாமல், தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் அப்படியே போய் கட்டிலில் சரிந்தாள் மாளவிகா கதவை சாற்றிவிட்டு, அறைக்குள் ஒளிர்ந்துகொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு.
கண்களை மூடினால் கூட அவனது பிம்பமே வந்து உயிரைக் குடிக்க, அவனைத் துரத்தப் போராடத்தொடங்கினாள் அவள்.
அன்றைய தினத்திற்கு இதெல்லாம் போதாது என்பது போல, அப்பொழுதென்று பார்த்து அவளது கைப்பேசி வேறு ஒலிக்க, அவளுடைய தோழி சல்மா என்பதால் அந்த அழைப்பை ஏற்றாள் மாளவிகா.
"என்ன மாலு இது. இப்படி ஒரு வீடியோ வந்திருக்கு. ஐ வாஸ் ஷாக்ட்" என படபடத்தாள் அவள் அதிர்ச்சி தொனிக்க.
"சல்லூ. என்னடீ சொல்ற?" என மாளவிகா அச்சத்துடன் கேட்க, "அப்படினா உனக்கு தெரியாதா?" என்றவள், "ஒரு லிங்க் அனுப்பறேன் பாரு" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் சல்மா.
அடுத்த சில நொடிகளில் அவள் அனுப்பிய அந்த இணைப்பில் போய் பார்க்க, அது அக்னிமித்ரனின் பெயரில் இருக்கும் ஒரு ட்விட்டர் பதிவு.
ஆனால் அது அவன் வழக்கமாக உபயோகிக்கும் ஐடி இல்லை என்பது அவளுக்குப் பார்த்த உடனே புரிந்துவிட, அதிலிருந்த காணொலியை ஓடவிடவும், அவள் நினைத்து பயந்தது போலவே அவனும் அவளும் நடனமாடும் காணொலிதான் அது.
அதைப் பார்த்ததும் சிந்திக்க இயலாமல் அவள் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட, எல்லோர் முகத்திலும் எப்படி விழிப்பது என்கிற குற்ற உணர்ச்சி மட்டும்தான் மேலோங்கியிருந்தது அவளுக்கு.
கண்கள் இருட்டிக்கொண்டு வந்து அப்படியே மயக்க நிலைக்கு அவள் போய்க்கொண்டிருக்க அப்பொழுதும் மூடிய கண்களுக்குள் அவன் முகமே தோன்றி முள்ளெனத் தைக்க, மனமும் அவனையே தேட, அந்த நினைவைக் கலைப்பது போல் அந்த சந்தரின் முகம் கண்ணுக்குள் தோன்ற அவன் அன்புக்கரசியை மாடியிலிருந்து வீசிய காட்சி மனத்திரையில் ஓட, கடைசியாக அன்புக்கரசியின் முகம் மட்டுமே மனதில் அப்படியே நிலைக்க, ஏதோ ஒரு விதத்தில் மித்ரனுடன் தன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம் என்ற கசப்பான நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவளுடைய மனதையே ஜெயிக்க முடியாமல் அவளது அறிவு வேலை நிறுத்தம் செய்ய, தன்னிடமே தோற்றுப் போனாள் மாளவிகா.
அவள் நாசியிலிருந்து வழிந்த குருதி அவளது தோல்வியை அப்பட்டமாக பறைசாற்றியது.
அதே நேரம் அவள் சரவணனிடம் பேசிய அனைத்தையும் ஒலியுடன் பார்த்து முடித்திருந்தான் மித்ரன்.
அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவனது கன்னத்தைத் தாண்டவும்தான் தான் அழுத்திருக்கிறோம் என்பதையே உணர்ந்தான் அவன்.
அவனையும் அறியாமல் அவன் எண்ணம் அவனுடைய மகள் உருவிலிருக்கும் சாம்பவியிடம் செல்ல, கூடவே அவனிடம் கூட வரத் தயங்கிய, குழந்தை அவந்திகாவின் நினைவும் வந்தது. அன்று பிருந்தா ‘குட் டச் பேட் டச்' என்று சொன்ன பொழுதுகூட அதை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டான் அவன். ஆனால் அந்த வார்த்தை எந்த அளவுக்கு வீரியமானது என்பது புரியவும், அதைத் தாங்க முடியாத அளவுக்கு அவனுடைய மனம் பதைபதைத்தது.
அதற்குள் பதறியவண்ணம் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த கவி, "பாஸ். எங்கயோ தப்பு நடந்திருக்கு. இதைப் பார்த்தால் மாளவிகா எப்படி தாங்குவான்னே தெரியல" என உண்மையான அக்கறையும் வருத்தமுமாகச் சொன்னவன், அந்த ட்விட்டரில் வந்த காணொளியைப் பற்றி அவனிடம் சொல்லவும், அவசரமாக தன் கைப்பேசியில் தேடி அதைப் பார்த்து முடித்தவன், துடித்துத்தான் போனான் அக்னிமித்ரன் தன் தவறுகளை எண்ணி.
"பாஸ். அந்த ஃபேக் ஐடி பத்தி ரிப்போர்ட் பண்ணியிருக்கேன். நீங்க மாளவிகாவைப் போய் பாருங்க ப்ளீஸ்” என்றான் கவி.
“ஏதாவது ஒரு சூழ்நிலைல மறுபடியும் ஒரு தடவ என் கிட்ட நானே தோத்துப்போகற நிலைமை வந்தால் அதை என்னால கடந்துவர முடியுமான்னே எனக்கு தெரியல” என இருதியாக அவள் சொல்லியிருந்தது அவனது நினைவில் வர அதற்குதான் அவன் அவளைத் தூண்டிக்கொண்டிருக்கிறான் என்பது உச்சியில் சம்மட்டிக் கொண்டு ஓங்கி அடித்தது போல் நன்றாக உரைக்க, அவனுடைய உயிரே போனதுபோல் இருந்தது அக்னிமித்ரனுக்கு.
மாளவிகா சரவணனிடம் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகு அவளுடைய மனநிலை முற்றிலுமாக விளங்க, இந்தக் காணொலி எப்படிப் பட்ட பாதிப்புகளை அவளிடம் உருவாக்கியிருக்குமோ? எந்த ஒரு நிலையிலிருக்கிறாளோ அவள்? என்கிற அச்சம் மட்டுமே மேலோங்கி இருந்தது அவனுக்கு.
அந்த நொடி தான் அவளுக்கு அருகில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், மாளவிகாவை நேரில் காணக் கிளம்பியிருந்தான். அவளைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக மாற, காரில் இல்லை நெருப்பாற்றில்தான் நீந்திச் சென்றான் அக்னிமித்ரன்.
பக்கத்தில் நீயும் இல்லை...
பார்வையில் ஈரம் இல்லை...
சொந்தத்தில் பாஷை இல்லை...
சுவாசிக்க ஆசை இல்லை...
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை...
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை...
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை!
Oh ava pesinadu dan ketutana ah ipo avathu nee panra thappu enna nu puriyuda da agni, achi avaluku ennagumo