En Manathai Aala Vaa 38
Updated: Nov 1, 2022
மித்ர-விகா 38
தன் மீது அதீத விருப்பம் இருக்கிறது அதனால் சர்வ நிச்சயமாக அவனுடைய அஜுபாவே தன்னைத் தேடி வந்து அவளுடைய மனதைத் திறப்பாள் என அக்னிமித்ரன் காத்திருக்க, அவனது பொறுமை காற்றில் கரைந்துபோனதுதான் மிச்சம்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கியும், அவள் வரவே இல்லை. வருவாள் என்ற நம்பிக்கையும் குறைந்துகொண்டே வந்தது அவனுக்கு. தானாக இவனைத் தேடி வந்து, பித்துப் பிடித்து அவன் பின்னால் சுற்றிய பெண்களைதான் அறிவான் அவன்.
இப்படி மதி மயங்கி அவனை தன் பின்னால் அலைய வைத்தவள் முதலும் கடைசியுமாக இவள்தான். அவளுக்குத் தன்னை எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவன் அறிந்தேயிருந்ததால் 'அப்படி என்னடி இவ்வளவு தெனாவெட்டும் பிடிவாதமும் உனக்கு?' என்றுதான் தோன்றியதே ஒழிய அந்தப் பிடிவாதத்துக்குப் பின் இருக்கும் அவளுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கூட முற்படவில்லை அவன்.
வேண்டுமென்றே தன்னை சுற்றில் விடுகிறாளோ என்ற கோபம் மட்டுமே மேலோங்கியிருந்தது அவனுக்கு. என்ன நடந்தாலும் சரி 'நீதான் வேண்டும்.' என தன்னைத் தேடி வந்து வெளிப்படையாக அவளே ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினான் அவன். எண்ணினான் என்பதை விட ஒரு விதமான பிடிவாதத்துடன் கறுவினான் என்றே சொல்லலாம்.
'உணர்ச்சிவசப்படாம அமைதியா சிந்திச்சு... நம்ம அறிவைக் கொண்டு உணர்வை ஜெயிக்க வைக்கணும். அப்படி மட்டும் நடந்தால் பெரிய பெரிய கலவரங்களையே தவிர்க்கலாம்னும்பொழுது இந்தச் சுண்டைக்கா காதல்ங்கற போலி உணர்வையா ஜெயிக்க முடியாது? ஒரு வாரம் பார்க்காமல் பேசாமல் இருந்தால் அதுவே பழகிப் போகும். சீக்கிரமே இந்த நினைவுகளிலிருந்து மீண்டு விடலாம்' என சம்பந்தமே இல்லாமல் அவள் அன்று அன்புவுக்குச் சொன்ன அறிவுரைகள் வேறு அனுகூலமாக அவனது நினைவில் வந்தன.
இதுதான் அவளுடைய இப்போதைய மனநிலையோ என்ற கேள்வி எழ, அதற்குப் பின் அதிகம் யோசிக்கவில்லை அவன்.
இனி காலை கண் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை, நாள் முழுதும், சொல்லப் போனால் உறக்கத்திலும் கூட அவள் தன்னைப் பார்த்துக்கொண்டே, நினைத்துக்கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட்டான் மித்ரன் 'புதையல் வேட்டை சீசன் த்ரீ' என்கிற பெயரில்.
மாளவிகாவுக்கு மட்டுமல்ல அவனுடைய வீட்டிலிருப்பவர்களுக்கே கூட இது ஒரு அதிசயச் செய்திதான்.
யாரிடமும் இதைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. முடிவு செய்த ஒரே நாளில் அதை நடைமுறையும் படுத்திவிட்டான்.
ஒரே இரவுக்குள், அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் அவனுடைய தொலைக்காட்சியிலும் மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருக்க, எங்கே பார்த்தலும் புதையல் வேட்டைதான்! அக்னிமித்ரன்தான்!
துளசி, மாலைகளில் கடையிலிருந்து திரும்ப வந்தார் என்றால், வீட்டு வரவேற்பறையிலிருக்கும் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு பிறகுதான் மற்ற வேலைகளையே பார்க்கத் தொடங்குவார்.