En Manathai aala Vaa! 37
Updated: Oct 30, 2022
மித்ர-விகா-37
அக்னிமித்ரனை நேரில் பார்த்து, அவனுடன் பேசி, ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது. ஆரம்பத்தில் கட்டுப்பாடில்லாமல் சண்டித்தனம் செய்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக சமநிலைப் பட்டுக்கொண்டிருந்தது. இனி அவனைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படாது என்கிற நிலையே மாளவிகாவுக்கு ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது எனலாம்.
இந்த வேலைதான் என்று இல்லாமல் கிடைத்த வேலைக்குச் செல்லலாம் என முடிவெடுத்தவள் துரிதமாக ஒரு வேலையும் தேடிக்கொண்டாள். அப்படி அவள் ஒரு 'கால் சென்டர்'ரில் வேலைக்குச் சேர்ந்து சில தினங்கள் ஆகியிருந்தன.
சம்பளத்துடன் கூடிய ஒரு மாதப் பயிற்சி. பின் வேலை என இப்பொழுது பயிற்சியிலிருந்தாள் அவள். பயிற்சி முடிந்த பிறகுதான் அலுவலக 'கேப்' வசதியெல்லாம் அனுபவிக்க இயலும். சில நாட்களுக்கு அரசு பேருந்து மட்டுமே.
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவள், அவள் செல்ல வேண்டிய பேருந்து வரவும், வேகமாக ஓடிப்போய் ஏறினாள். சாலையை வேடிக்கைப் பார்ப்பது என்பது அவளுக்கு எப்பொழுதுமே பிடித்தமான விஷயம்தான்.
உட்கார இடம் கிடைக்கவில்லை என்றாலும் பின்புற கடைசி இருக்கையின் அருகில் நின்றதால் போக்குவரத்தால் நிறைந்த சாலை, முழுவதுமாக அவளுடைய கண்களுக்குக் காட்சிக் கொடுத்தது.
ஆனால் அவள் கண்ட காட்சிகள்தான் அவ்வளவு உவப்பானதாக இல்லை. காரணம் சாலையின் எந்தப் பக்கம் திருப்பினாலும் அக்னிமித்ரன்தான் காட்சியளித்தான் அவளுக்கு. 'ஹோர்டிங்'காக... 'டிஜிட்டல் பேனர்'களாகவென.
அவனுடைய கம்பீரத்தைப் பக்காவாக எடுத்துக்காட்டும், வித விதமான உடைகளில், குறிப்பாக அவளுக்கு மிகவும் பிடித்த, அவன் அடிக்கடி அணியும், 'ஸ்டோன் வாஷ்' முழுக்கைச் சட்டை அணிந்து...
கன்னக்குழி விழ விரிந்த சிரிப்புடன் நின்று கொண்டு...
சிம்மாசனம் போன்ற இருக்கையில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்துகொண்டு...
காஃபி குவளையைக் கையில் ஏந்தியபடி ஸ்டைலாகச் சுவரில் சாய்ந்து நின்று...
அவள், அப்படியே போய் சிறைப்படத் துடிக்கும் வண்ணம் கைகளைப் பெரிதாக விரித்தவாறு...
இன்ன பிற விளம்பர வாசகங்களோடு 'புதையல் வேட்டை சீசன் த்ரீ' என்ற எழுத்துகள் கீழே ஒளிர, நீக்கமற எங்கும் நிறைந்திருந்தான் அவன்.
‘இத்தனை கோடி ஜனத்தொகையில் ஒருத்தியே ஒருத்திக்காக, அவளது எண்ணங்களை அடிமை செய்வதற்காக இப்படி கூடச் செய்வானா ஒருத்தன்? அடப்பாவி!’ என்றுதான் இருந்தது அவளுக்கு.
அந்தக் காணொலியைப் பார்த்த பிறகு, சரவணன் திருமணத்தை மறுத்ததற்கு குடும்பத்தில் எல்லோருமே அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க, அதற்கு மித்ரன்தான் காரணம் என்று தெரியும்போது அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப வைத்து தன்னை அவன் ஏமாற்றிவிட்டதாகதான் அவளால் எண்ண முடிந்தது
அன்று அவ்வளவு கோபமாக அவன் முன் நின்று படபடத்தவளைப் பார்த்த மாத்திரத்தில், "என்ன சொல்ற புரியல.?" எனக் கேட்டான் மித்ரன் புன்னகையுடனேயே.
அந்தச் சிரிப்பு அவளுடைய மனதில் அமிலத்தை ஊற்ற, "இனிமேல் ஒரு செகண்ட் கூட நீ இருக்கற இடத்துல என்னால இருக்க முடியாது. நான் என்னோட தோல்விய ஒப்புக்கறேன். ஜஸ்ட் ரிலீவ் மீ ஃப்ரம் திஸ் ஜாப்" என்றாள் எங்கேயோ பார்த்துக்கொண்டு.
சற்று நேரத்துக்கு முன் அத்தனை இலகுவாக அவளைப் பார்த்திருந்தானே! எனவே விபரீதமாக எதுவும் நினைக்கத் தோன்றவில்லை அவனுக்கு. அது ஒரு சிறுபிள்ளைத்தனமான கோபமாகவே பட்டது.
சாம்பவியோ அக்ஷையோ இப்படி எதற்காகவாவது கோபத்துடன் முறுக்கிக் கொண்டால் அவன் வழக்கமாக செய்வதுபோல், திமிரத் திமிர அப்படியே சேர்த்தணைத்து அவளை சமாதானம் செய்யதான் தோன்றியது அவனுக்கு.
தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
காரணம் என்னவென்று புரியாவிட்டாலும், அவளுடைய இந்த திடீர் கோபத்தைக் கூட ரசித்துக்கொண்டே, "நீயாவது தோத்து போறதாவது. என்னைக்கோ என்னை நீ ஜெயிச்சுட்ட லயன்னஸ்” என்றான் அவன் மனதிலிருந்து.
அவனுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அவன் மனநிலையைக் கொஞ்சமாவது உணர முடிந்திருக்கும் அவளால். அது பிடிக்காமல், சிவந்து நீர் கோர்த்த அவளது கண்கள் இலக்கில்லாமல் எங்கெங்கோ அலைபாய்ந்தது.
"இப்படி போலியா நடிச்சு இனிமேலும் உன் டயத்தை வேஸ்ட் பண்ணாத. நான் இதையெல்லாம் நம்பற அளவுக்கு வீக் இல்ல” என்றாளவள் கோபத்துடன்