top of page

En Manathai Aala Vaa! 36

Updated: Oct 29, 2022

மித்ர-விகா 36


மாளவிகா இருவரையும் அதிர்வுடன் பார்க்க, "அவசரக் குடுக்கை" என மனைவியை முறைத்தவர், "அவ கிடக்கறா... நீ சொல்லு பாப்பா. என்ன பிரச்சனை?" எனக் கேட்டார் அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.


மித்ரன் அவளிடம் எல்லை மீற முயன்று அவள் அவனைத் தாக்கியதையும், அன்று அவனுடன் இணைந்து அவள் நடனமாடிய நிகழ்வுகளையும் தவிர்த்து ஆரம்பம் முதல், முந்தைய தினம் வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவரிடம் ஒப்புவித்தாள் மாளவிகா இடையிடையே கண்ணம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.


'நான் சொன்னது சரியா?' என்பது போல் கண்ணம்மா அய்யாவைப் பார்க்க, மாளவிகா பல விஷயங்களை முன்னமே அவரிடம் சொல்லியிருந்தாலும் அந்த சவால் பற்றி எல்லாம் மூச்சு கூடவிடவில்லை அவள்.


உண்மையிலேயே அவருக்குச் சற்று வேதனையாகத்தான் இருந்தது அவளுடைய இந்தப் புதிய நடவடிக்கை.


அவளை ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவர், "நீ ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட பாப்பா" என்றார் வருத்தத்துடன்.


தன் தவறை மறுக்காமல் அவள் தலை குனிந்து மௌனம் சாதிக்க, "சரி விடு” என்றவர், "சொல்லு... அவனுக்கு என்ன பதில் சொல்லப் போற" எனக் கேட்டார் தீவிரமாக.


"எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு அய்யா. அவரைப் பிரியணும்னு நினைச்சாலே ரொம்ப பெயின் ஃபுல்லா இருக்கு. இந்த ஃபீலிங்குக்கு பேர்தான் லவ்வா அய்யா?" தலை நிமிராமலேயே அவள் கேட்க, "லவ்வா?" என்று கேட்டு சத்தமாகச் சிரித்தவர்,


"இதை நீ கேக்கறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்று சொல்லிவிட்டு, "பாப்பா. 'பெண் ஏன் அடிமையானாள்' படிச்சிருக்க இல்ல. அதுல பெரியார் காதலைப் பத்தி என்ன சொல்லியிருக்கார்னு உனக்கு மறந்து போச்சா? நாம அதைப் பத்தியெல்லாம் நிறைய விவாதம் பண்ணியிருக்கோம்… ஞாபகம் இருக்கா" என அவர் கேட்க, சட்டென்று தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் மாளவிகா.

"அன்னைக்கு இங்க வந்திருந்த அப்பவே அக்னிமித்ரனை நான் கவனிச்சேன். உனக்கான விருப்பம் அவர் பார்வையிலேயே தெரிஞ்சுது. அதே மாதிரி உன்கிட்டயும் சின்ன பதட்டம் தெரிஞ்சுது. நீயே இதைப் பத்தி சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்” என ஆதங்கப்பட்டவர், "ஆனா அவர் கிட்ட போலித்தனம் தெரியல பாப்பா. நீ அந்த தம்பிகிட்ட கம்ஃபர்டபுலா ஃபீல் பண்ணா... அவரைத் தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு என்னைக்கும் யாராலயும் எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்க முடியாது.


நம்பிக்கைங்கற ஒரு நூலைப் பிடிச்சிட்டுதான் நாமெல்லாம் தொங்கிட்டு இருக்கோம் பாப்பா. நல்லதோ கெட்டதோ எந்த ஒரு சூழ்நிலையையும் உன்னால ஹேண்டில் பண்ண முடியும்ங்கற நம்பிக்கை உனக்கு இருக்கில்ல” என அவர் கேட்க, "ம்..” எனத் தலை ஆட்டினாள் மாளவிகா.


"அப்படின்னா... இந்தக் குழப்பம்... பயம்... இதெல்லாத்தையும் ஒதுக்கி வெச்சிட்டு... தெளிவான ஒரு முடிவை நீதான் எடுக்கணும். எந்த முடிவா இருந்தாலும் நான் உன் பக்கம்தான் பாப்பா. அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ" என அவர் சொல்லி முடிக்க,


"அப்படினா அந்தப் பையனோட வாழ்க்கை முறை சரியா? அதை நம்ம மாலுவால ஏத்துக்க முடியுமா? வாழ்நாள் முழுமைக்கும்... இவன் நமக்கு உண்மையா இருப்பானான்னு சந்தேகத்தோடவே வாழ முடியுமா அய்யா?" என தன் மனதில் எழுந்த கேள்வியைக் கேட்டார் கண்ணம்மா.


"நானும் அவர் வாழ்க்கை முறை சரின்னு சொல்ல மாட்டேன். அதே சமயம் தப்புன்னும் சொல்ல மாட்டேன். ஏன்னா இது இன்னைக்கு இருக்கற எதார்த்தம். கார்ப்பரேட் கல்ச்சர்னு இந்த வாழ்க்கை முறை இப்ப சர்வசாதாரணமா மாறிட்டு வருது.


வெளி உலகத்துக்கு நல்லவன் வேஷம் போட்டுட்டு உள்ளுக்குள்ள அயோக்கியத்தனம் செய்யறவங்க எத்தனை பேரைப் பார்த்திருக்கோம். ஆனா தப்பு செஞ்சாலும் நான் இப்படித்தான்னு வெளிப்படையா நடந்துக்கறவங்க கிட்ட ஒரு நேர்மை இருக்கும்.


அந்த தம்பியும் எதையும் மறைக்கவும் இல்ல... 'நான் செய்ததெல்லாம் சரி'ன்னு தன்னை நியாயப்படுத்திக்க முயற்சியும் செய்யல. எதிர்காலத்துக்கு உத்தரவாதம் கொடுக்கறார். அதனால நம்பலாம்னுதான் தோணுது" என்றார் அய்யா, மாளவிகா சொன்னவற்றை மனதில் வைத்து.


அவர் வார்த்தைகளில் பரவிய நிம்மதியில் அவளுடைய முகம் மலரவும், "முடிவெடுத்துட்ட போலிருக்கு" என அதிர்ந்து சிரித்தவாறே அய்யா கேட்க, "முடிவை ஏற்கனவே எடுத்துட்டா உங்கப் பொண்ணு. அது சரிதானான்னு உங்க கிட்ட வந்து போட்டு வாங்கிட்டு இருக்கா அவ, தெரிஞ்சிக்கோங்க. நீங்க மட்டும் வேண்டாம்னு சொல்லியிருக்கணும். நீங்க சொன்ன பாயிண்டையெல்லாம் அவ உங்களுக்கு சொல்லியிருப்பா" என்றார் கண்ணம்மா கிண்டலாக.


"கண்ணம்மா” என அவள் சலுகையாகக் கோபப்பட, "ஏய்... எனக்கு தெரியாது உன்னைப் பத்தி" என்று கிண்டலாகவே சொல்லிவிட்டு, "ஆனா ஒண்ணு மாளவிகா. இது காதல் கல்யாணமா இருக்கக் கூடாது. பெரியவங்க பேசி நிச்சயம் பண்ண கல்யாணமா இருக்கணும். அவங்கள முறைப்படி வந்து உங்க வீட்டுல பேச சொல்லு” என்றார் அவர் கண்டிப்புடன்.


"நிச்சயமா கண்ணம்மா” என்றவள், "அய்யா... நீங்கதான் அப்பா கிட்ட இதைப் பத்தி பேசணும்" என்றாள் அவள் கெஞ்சலாக. "நிச்சயமா பாப்பா. நான் சொன்னா உங்கப்பா மறுக்க மாட்டார். ஆனா அதுக்கு முன்னால அவங்க வீட்டுல பேசி முடிவு பண்ண சொல்லு" என்று முடித்துக்கொண்டார் அவர்.


கடையை விரிவுபடுத்துவது பற்றி மூர்த்தி சொன்னதை அவள் சொல்லவும், "அதை இப்போதைக்குத் தள்ளிப் போட்டுக்கலாம் பாப்பா. உன் கல்யாண விஷயத்தைத் தள்ளிபோடறதுதான் சரியில்ல" என்று அவர் சொல்ல, "அய்யா என் ட்ரீட்மெண்ட் பத்தி அவர் கிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்" என்றாள் அவள்.


"சொல்லிடு. ஆனா எந்த ஒரு முடிவுக்கும் மனசைத் தயாரா வெச்சுக்கோ. நம்ம வாழ்க்கை எந்த ஒரு இடத்துலயும் யாருக்காகவும் தேங்கிப் போயிட கூடாது" என அவள் இழந்த இரண்டு வருடங்களைக் குறிப்பிட்டு எச்சரிக்கும் விதமாகச் சொன்னவர், ‘உண்மையாவே அவனுக்கு உன்மேல அன்புன்னு ஒண்ணு இருந்தா அவன் இதைப் பெருசா எடுத்துக்க மாட்டான்' என்று எண்ணிக்கொண்டார் மனதிற்குள்.


அவன் நிச்சயம் அவளுடைய கடந்தகாலத்தைப் பெரிதாக எண்ணமாட்டான் என்ற ஆழமான நம்பிக்கை மனதில் தோன்ற, மனம் அப்படியே லேசாகிப்போனது மாளவிகாவுக்கு.


அதன் பின் அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து அவருடைய கழனிக்குச் சென்றவளுக்கு வழக்கமான உற்சாகம் திரும்பியிருந்தது. அவரை அருகில் உட்கார வைத்துத் தானே அவரது ட்ராக்ட்டரைச் செலுத்திக்கொண்டு எதையோ வளவளத்துக்கொண்டே வந்தவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சாமிக்கண்ணு அய்யா.


பிள்ளைகளில்லாத அந்த தம்பதிக்கு மகளாகிப் போனவளின் வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் போதும் என்றுதான் தோன்றியது அவருக்கு. மாலை அங்கிருந்து கிளம்பியவள் நேராக அவர்களுடைய கடைக்குப் போக, விற்பனைக்காக வைத்திருந்த டெரகோட்டா ஜிமிக்கிகள் அவள் கண்களில் பட்டன.


அதில் அவன் வாங்கி கொடுத்த உடைக்குப் பொருத்தமாக ஒன்றை எடுத்துக்கொண்டவள் துளசியை உடன் அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.


வீடு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் சாத்விகாவும் வந்துவிட, அதன்பின் வழக்கமான வேலைகளுடன் அன்றைய நாளை ஒரு வழியாய் கடந்தவள், அடுத்த நாள், அவளுடைய வயதிற்கே உரிய இயல்பான ஆசைகளுடனும் கனவுகளுடனும் அலுவலகத்துக்குக் கிளம்பி வந்திருந்தாள்.


அழகிய மெரூன் வண்ண முழு நீள ஃப்ராக்கில் தேவதையாக தீபலக்ஷ்மி டவர்ஸ்க்குள் நுழைந்தாள் மாளவிகா.


அவள் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததுமே, தன் கைப்பேசியில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் விழிகள் அப்படியே அவளை மொத்தமாகத் தழுவிக்கொண்டன.


செவிகளில் ஜிமிக்கி நடனமாட, அவளுக்காக அவன் வாங்கியிருந்த உடையில், வழக்கத்தை விட இன்னும் எழிலோவியமாக ஜொலித்தவள் அவனுக்குச் சம்மதித்துவிட்டது அவள் சொல்லாமலேயே அவனுக்கு விளங்க, 'லவ் யூ அஜூபா” என்றவாறு கைப்பேசியில் தோன்றிய அவளுடைய பிம்பத்தில் இதழ் பதித்தவன், உடனே அவளுக்கு அழைப்பு விடுக்க, மின்தூக்கியில் நுழைந்தவாறு அனிச்சையாக அந்த அழைப்பை ஏற்றவளுக்குப் பேச்சே வராமல் போக, தன் முழு காதலையும் தேக்கி "அஜூபா” என அழைத்தவன், "பால்கனில வெயிட் பண்றேன். வா...” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டான் அவன்.


அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற தயக்கத்துடன் அவனுடைய 'அஜூபா' தந்த சிலிர்ப்பில் முகம் சிவந்துபோய், கண்ணாடியில் அதைப் பார்த்தவளுக்கு மேலும் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, ரகசியமாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனோ தன் வசம் இழந்துகொண்டிருந்தான்.


நீண்ட நாட்களாகக் காத்திருந்த புதையல் கைசேரும் வெற்றிக்களிப்பில் உடம்பில் சிறு நடுக்கமே உண்டாகியிருந்தது அவனுக்கு.


அவனுக்கு இருக்கும் மகிழ்ச்சியில், அவளுடைய வெட்கம் வேறு போதையை ஏற்ற, அவள் தனக்கானவள் என்ற அதிகப்படியான ஒரு உரிமை உணர்வும் காரணமாகிப்போக, அப்படியே அவளை அள்ளிப் பருகும் பேராவல் உண்டானது அவனுக்கு.


'அதற்கான நேரம் இன்னும் நெருங்கவில்லை என்பது புரிந்தே இருக்கவும், 'அக்னிமித்ரா அடக்கி வாசி. அவ ஒரு ஜகன்மோகினி. உன்னோட குரல்வளையைப் பத்திரமா பார்த்துக்கோ. அவசரப்பட்டு எதையாவது செஞ்சு அவளோட கோபத்தைக் கிளறி விட்டுடாத' எனத் தனக்கு தானே எச்சரிக்கை செய்துகொண்டு, கைப்பேசியை அணைத்து தன் சட்டைப்பைக்குள் போட்டவன், அந்த பால்கனியின் கைப்பிடிச்சுவரைப் பிடித்தவாறு வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான் தன்னை சமன் செய்யும் பொருட்டு.


அதற்குள் மாளவிகாவின் கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப எதார்த்தமாக அவள் அதை எடுத்துப் பார்க்கவும், அது ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து வந்திருக்கும், சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வாட்ஸ்ஆப் காணொளியாக இருக்கவும், அவள் அதைத் திறந்து பார்க்க, அதில் அக்னிமித்ரன் சரவணனை மிரட்டுவதும் அவன் மித்ரனிடம் கெஞ்சுவதுமாக இருந்த காட்சிகள் அவளுடைய தலையில் இடியை இறக்க, அவளுடைய உற்சாகம் மொத்தம் வடிந்துபோனது.


வெட்கமும் நாணமும் போன இடம் தெரியாமல், மனம் முழுவதும் ஏமாற்றமும்... அதனால் உண்டான கோபமுமாக மாறிப்போனது. அதற்குள் அவனுடைய பிரத்தியேக தளம் வந்துவிட, புயலென அவனை நோக்கிப் போனாள் மாளவிகா.


ஒவ்வொரு நொடியையும் பிடித்துத் தள்ளியபடி அவளுடைய வருகைக்காகக் காத்திருந்தவன், அவளுடைய பாதச் சுவட்டின் ஒலியில், "அஜூபா” என்றவாறு திருப்ப அவனுடைய விழிகளில் காதல் தளும்பி நிற்க, முகம் சிவந்துபோய் கோபத்தில் உடல் நடுங்க அவனுக்கு முன்னால் உக்கிர காளி போல நின்றுகொண்டிருந்த மாளவிகாவின் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன.


"நான் தோத்துட்டேன்... உங்க கிட்ட மொத்தமா தோத்துப் போயிட்டேன்" எனப் படபடத்தவளின் கோபத்தின் காரணம் புரியாமல் தடுமாறிப்போனான் அக்னிமித்ரன்.


அவன் முன் விதைத்த வினைதான் வளர்ந்து நிதர்சனமாக அவனுடைய கண்ணெதிரே அவளுருவில் நிற்கிறது என்பதை இப்பொழுதாவது உணருவானா அக்னிமித்ரன்?


© KPN NOVELS COPY PROTECT
bottom of page