En Manathai Aala Vaa! 35
Updated: Oct 28, 2022
மித்ர-விகா 35
நாள் முழுதும் அலைந்து திரிந்த களைப்பில் உறக்கம் எளிதாய் மாளவிகாவை தழுவிக்கொண்டாலும், மனதின் குழப்பம் அந்த உறக்கத்தைச் சுகமாய் தொடர விடவில்லை.
அதிகாலையிலேயே கண் விழித்தவள், வேறு வழி இல்லாமல் கண் மூடி சிறிது நேரம் படுத்திருந்தாள்.
ஒருபுறம் மனது அவனுடைய அருகாமைக்காக ஏங்கிக்கொண்டிருக்க, மற்றொருபுறம், 'இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படுமா?' என அவளுடைய அறிவு கேள்வி கேட்டது.
சத்தியமாக 'காதல்' 'திருமணம்' இதுபோன்ற வார்த்தைகளை அக்னிமித்ரனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.
அவனை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் இயலவில்லை என்ற இரண்டுங்கெட்டான் நிலைதான் அவளுக்கு.
திருமண உறவுக்கு அஸ்திவாரமே நம்பிக்கையும் புரிதலும்தான்.
அவனுடைய கடந்த காலப் பிழைகளை மறந்து அவனிடம் முழுமையான நம்பிக்கையைத் தன்னால் வைக்க முடியுமா என்ற கேள்விதான் அவளுக்குப் பெரிதாக இருந்தது.
நேரம் விடியற்காலை நான்கு மணியை நெருங்கவும் எழுந்து வெளியில் வந்தாள் மாளவிகா.
மூர்த்தி கடைக்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க அடுக்களையில் அவருக்கு காஃபி தயாரித்துக் கொண்டிருந்தார் துளசி.
அன்னையுடன் சேர்ந்து மூவருக்கும் காஃபி கலந்து எடுத்துக்கொண்டு வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்திருந்த மூர்த்திக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.
ஒரு குவளையைக் கையிலெடுத்துக்கொண்டவர், "என்ன பாப்பா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?" எனக் கேட்டார் மூர்த்தி அக்கறையுடன்.
"இல்லப்பா... ஏனோ தூக்கம் வரல" என்றவள், "சாரி பா, உங்க கூட உட்கார்ந்து பேசக்கூட முடியல" என்றாள் வருத்தம் மேலிட.
"என்ன பாப்பா செய்யறது. எனக்கும் கடையிலயே சரியா இருக்கு” என்றவர், "இந்த வேலையை விட்டுட்டு வேற வேலை தேடிக்கோ பாப்பா. இப்படி நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வரது, டெல்லி போறேன் பாம்பே போறேங்கறதெல்லாம் சரியா படல. நம்ம வாழ்க்கைக்கு இதெல்லாம் ஒத்து வராது" என அவர் தன்மையாகவே சொல்ல, என்ன பதில் செய்வதென்றே புரியவில்லை அவளுக்கு. தானே ஒரு முடிவுக்கு வராமல் மித்ரனைப் பற்றியும் சொல்ல இயலவில்லை.
மகள் மௌனமாக அமர்ந்திருக்கவும், "இன்னும் அந்த காண்ட்ராக்ட் முடிய எவ்வளவு நாள் இருக்கு” எனக் கேட்டார் அவர் ஏதோ ஒரு முடிவுடன். அந்தக் கேள்வியில் உள்ளுக்குள்ளே ஒரு அதிர்வு தோன்றி மறைய, "இன்னும் நாலு நாள்தான் பா இருக்கு" என்றாள்.
"அப்படினா இந்த வேலையை விட்டுடு பாப்பா” என்றவர், "நம்ம பக்கத்து கடை காலியாகப் போகுது” என்று சொல்லிவிட்டு, "நீ ஆசைப் பட்ட மாதிரி நம்ம கடையை சூப்பர் மார்க்கெட்டா மாத்திரலாம்னு இருக்கேன். நம்ம மாப்பிளை கிட்ட கூட பேசிட்டேன். பேங்க் லோன் வாங்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார். கடை ஓனர் கிட்டயும் பேசிட்டேன். இப்போதைக்கு ரெண்டு கடையையும் ஜாயின் பண்ணி ஆரம்பிப்போம். அப்பறம் மாடில கட்டித் தரச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா பெருசாக்கிக்கலாம்” என அவர் சொல்லிக்கொண்டே போக, அவளுடைய இலட்சியத்திற்கு அவளுடைய தந்தை அடித்தளம் அமைக்கிறார் என்பது உறைத்தது அவளுக்கு.
நீண்ட நாட்களாகவே இதைதான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அதைச் செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை மூர்த்திக்கு.
ஆரம்பத்தில் மாளவிகாவின் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இடையில் வீட்டை விரிவுபடுத்திக் கட்டினார். தொடர்ந்து மதுவைப் பொறியியல் படிக்க வைத்திருந்தார்.
உடனே அவளுடைய திருமணம், அடுத்தடுத்து மாளவிகா சாத்விகா இருவரின் மேற்படிப்பு என அவருக்குக் கடமைகளும் செலவுகளும் இருந்து கொண்டேதான் இருந்தன.
இவ்வளவு நாட்கள் இல்லாமல் அவள் ஒரு மாறுபட்ட மனநிலையில் இருக்கும்பொழுது அவர் அதைச் செய்யவும் குற்ற உணர்ச்சியில் மனம் பதைபதைத்தது அவளுக்கு.
பேச்சற்று அவள் உட்கார்ந்திருக்க, “அப்பா எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லி இருக்காங்க. ஏண்டி இப்படி குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க. உனக்காகதான இதையெல்லாம் செய்யறாங்க? ஏற்கனவே இருக்கற கடனையே இன்னும் அடைச்சபாடில்ல. உன்னால இப்ப அகல கால் வெக்க போறாங்க?" எனத் துளசி ஆதங்கிக்க, "ப்ச்... துளசி இப்ப எதுக்கு இந்தத் தேவை இல்லாதப் பேச்சு" என மனைவியை அடக்கியவர், "என்னைக்கா இருந்தாலும் இதை நாம செஞ்சுதான் ஆகணும். அதை இப்பவே செய்யறோம் அவ்வளவுதான். மாலு விருப்பப்படி அவ கல்யாணத்தை இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சுப் பார்த்துக்கலாம்.
கடன் எல்லாம் கொஞ்சம் அடையற வரைக்கும் அவ ஏதாவது வேலைக்குப் போகட்டும். கொஞ்சம் செட்டில் ஆனப் பிறகு பொறுப்பை இவ கிட்டயே கொடுத்துடலாம்னு இருக்கேன்" என்று மகளைப் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த காலி டம்ப்ளரை மனைவியின் கையில் திணித்துவிட்டுக் கிளம்பிச்சென்றார் அவர்.
“மத்தவங்க ரெண்டு பேரையும் விட உன்னைப் பத்தின கவலைதான் மாலு எங்களுக்கு அதிகம். உன் மனசைப் பாதிக்கற எதையும் உன் மேல திணிக்க மாட்டோம். நீயும் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோ" என இதமாகவே சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போனார் துளசி.
சரவணன் திருமணத்தை மறுத்ததற்கு அவளுடைய கடந்த காலம்தான் காரணம் என்கிற தவிப்பின் வெளிப்பாடுதான் இது என்பது புரிய மனம் வலித்தது மாளவிகாவுக்கு.
மனநிலைப் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை இந்த சமுதாயம் இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
எனவே அவளுடைய எதிர்காலத்தைக் குறித்த அச்சம் நீறு பூத்த நெருப்பாக அவர்களுடைய மனதிற்குள் நீண்ட நாட்களாகவே கனன்று கொண்டுதான் இருக்கிறது.
மதுவின் திருமணத்திற்குப் பிறகு அது இன்னும் கூடிப் போயிருக்க, அந்த ஆதங்கத்தில்தான் சில நாட்களாக அவர்கள் அவளிடம் கடின முகம் காண்பிப்பதே என்பதும் புரிந்தது.
இவை எல்லாவற்றையும் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்தவளுக்கு கடந்த காலத்தைப் பற்றி தெரிய வந்தால் அக்னிமித்திரன் அதை எப்படி எடுத்துக்கொள்வான் என்ற கேள்வி எழ, அது ஒரு படபடப்பை வேறு கொடுக்க, அந்தப் படபடப்பின் காரணத்தை அறிய முற்பட்டவளுக்குக் கிடைத்த விடையோ அவளுக்குக் கலக்கத்தை மிகைப்படுத்துவதாக இருந்தது.
அவள் அன்று அலுவலகம் செல்லவில்லை என்றாலும் அவர்கள் வீட்டின் காலை நேரப் பரபரப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வழக்கமான ஓட்டத்துடன் சாத்விகா கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றுவிட, வீட்டிற்குத் திரும்ப வந்த மூர்த்தி காலை உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் கடைக்குச் செல்லும்பொழுது துளசியும் அவருடன் கிளம்பிட, அந்தத் தனிமை ஒருவித வெறுமையைக் கொடுத்தது மாளவிகாவுக்கு.
அக்னிமித்ரனின் முகம் காண... அவனது குரலைக் கேட்க... அவனுடனான கார் பயணத்திற்காகவென அவளுடைய உள்ளம் ஏங்கவே ஆரம்பித்திருந்தது. பேசாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிடலாமா என்ற எண்ணம் கூட தோன்றிவிட்டது.
அங்கு போன பிறகு அவனுக்குப் பதில் சொல்ல வேண்டி வரலாம். என்ன சொல்வது? முகநூலும் சரி... அவள் விரும்பி வாசிக்கும் புத்தகங்களும் சரி... பல்கலைக்கழக பாடப் புத்தகங்களும் சரி... தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் அவளைக் கைவிட்டுவிட, மதியம் வரை கூட நேரத்தை நெட்டி தள்ள இயலவில்லை அவளால்.
வீட்டைப் பூட்டி சாவியை மாலதியிடம் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டியை கிளப்பி அவர்களுடைய கடை நோக்கிப் போனாள் மாளவிகா.
கடையில் கொஞ்சம் கூட்டம் இருக்கவும் காலை ஊன்றி அவள் அப்படியே நிற்க, அந்த நேரத்தில் மகளை அங்கே எதிர்பார்க்காத துளசி, 'இவ இப்ப எங்க கிளம்பிட்டா?' என்ற கேள்வியுடன் அவளை நோக்கி வர, "அம்மா அய்யாவைப் போய் பார்த்துட்டு சாயங்காலம் வந்துடறேன்” என அவள் சொல்ல, "அதிசயமா லீவு கிடைச்சிருக்கு, நேத்து பொழுதுக்கும் ஊரைச் சுத்திட்டு வந்த. வீட்டுல ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?" என அவர் மகளைக் கடிந்துகொள்ள, "இல்லம்மா ரொம்ப போரா இருக்கு. அங்க போய் ரெஸ்ட் எடுக்கறேன் ப்ளீஸ்" என்ற அவளுடைய கெஞ்சலில், "சரி பத்திரமா போய்ட்டு வா" என்று விட்டுக்கொடுத்தார் துளசி.
சில நிமிடங்களில் சாமிக்கண்ணு அய்யாவின் வீட்டிலிருந்தாள் மாளவிகா. "கண்ணம்மா” எனக் குரல் கொடுத்துக்கொண்டே அய்யாவின் வீட்டிற்குள் அவள் நுழைய, அவளுடைய குரலைக் கேட்டு "மாலு கண்ணு... வா... வா. என்னடா அதிசயமா இந்த நேரத்துல வந்திருக்க?" என்றவாறு உள்ளே இருந்து ஓடி வந்தார் கண்ணம்மா.
"அங்கேயே வெச்சு எல்லா கேள்வியையும் கேட்டு முடிக்கணுமா. அவளை உள்ள கூட்டிட்டு வா கண்ணம்மா" என உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் சாமிக்கண்ணு.
"என்ன மிரட்டல் பாரு” என நொடித்துக்கொண்டே அவளுடைய கையைப் பிடித்து கண்ணம்மா அவளைக் கூடத்திற்கு அழைத்து வர, ஊஞ்சலில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ பழைய படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் சாமிக்கண்ணு.
"வா பாப்பா. இப்பதான் எங்க ஞாபகம் வந்ததா. அன்னைக்கு வந்துட்டு போனதோட சரி. ஆளையும் காணும் ஃபோனையும் காணும். இந்த அன்பு பையன் வேற எங்கயோ போய் உக்காந்துட்டு இருக்கான்" என அவர் அவளைப் பிலுபிலுவென பிடித்துக்கொள்ள, அவர் வார்த்தைகளிலிருந்த உண்மை சுட, மாளவிகாவின் முகம் சுருங்கிப்போனது.
அதை உணர்ந்தவராக, ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, "டீவியை சத்தமா வெச்சுட்டு... நீங்களும் சத்தமா பேசுங்க” எனக் கணவரைக் கடிந்துகொண்டவர், "அய்யா இப்ப ஏன் பஞ்சாயத்தைக் கூட்டறீங்க? பாருங்க புள்ள முகம் வாடி போச்சு" என அவளுக்குப் பரிந்து வந்தார் கண்ணம்மா.
"நான் நியாயம்னு பட்டதைப் பட்டுனு சொல்லிடுவேன். அது என் பொண்ணுக்கும் தெரியும். நீ குறுக்க வராத" என்றவர், "அப்படிதானே பாப்பா” என அவளையே தன்னுடன் சேர்த்துக்கொள்ள, அவருக்கு அருகில் போய் உட்கார்ந்தவள், அவள் மீசையை முறுக்கி விட்டு, "எங்க அய்யா சொன்னா சரியாதான் இருக்கும்" என்று சொல்லிவிட்டு, "மன்னிச்சிடுங்க அய்யா, தப்பு என்னோடதுதான்" என்றாள் உணர்ந்து.
"சரி விடு" என்றவர், "பாப்பா... நம்ம சிந்தாமணி கண்ணு போட்டிருக்கு தெரியுமா. வா கொட்டாயில போய் பார்த்துட்டு வரலாம்" என அவர் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொல்ல, "ஐ... சொல்லவே இல்ல. பாயா... கேளா... அய்யா?" எனக் கேட்டு, "ஆங்... வி ஆர் ப்ளெஸ்ட் வித் எ பேபி கௌ" என அவருடைய கிண்டலான பதிலில், "அய்யா” எனச் சிணுங்கியவாறு அவருடன் சென்று அந்தப் பசுவையும் கன்றையும் பார்த்து, அவர்களுடைய கழுத்தைத் தடவிக் கொஞ்சிவிட்டு மறுபடியும் வீட்டிற்குள் வந்தனர் இருவரும்.
மூவருக்குமாக நன்கு கிளறி உருட்டி வைத்த கேழ்வரகு களி காரக்குழம்பு பச்சைமிளகாய் மற்றும் கெட்டியான தயிர் என அனைத்தையும் எடுத்து தயாராக வைத்திருந்தார் கண்ணம்மா.
"சூப்பர் லன்ச் கண்ணம்மா” என்றவாறே வந்து அய்யாவுடன் அவருக்கு அருகில் உட்கார்ந்தவள், ருசித்து சாப்பிட்டுக்கொண்டே, "அய்யா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று தயக்கத்துடன் இழுக்க, "சொல்லு பாப்பா. எதுக்கு இந்த இழுவை" எனக் கேட்டார் அவர் சாப்பிட்டுக்கொண்டே.
"அது... வந்து" என அவள் இழுக்க, "என்ன பாப்பா. ஏதாவது லவ்வு மேட்டரா” என அவளது நாடியைப் பிடித்தாற்போன்று கண்ணம்மா நேரடியாக விஷயத்துக்கு வர திக்கென்று ஆனது மாளவிகாவுக்கு.
**********
'என் மனதை ஆள வா' மற்றும் 'வலசை போகும் பறவைகளாய்' நாவல்களை புத்தகமாக வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்...
KPN PUBLICATIONS,
94447 0002
Priya Nilayam,
94444 62284