top of page

En Manathai Aala Vaa! 34

Updated: Oct 27, 2022

மித்ர-விகா-34


சில வருடங்களுக்கு முன் 'வீனஸ் தமிழ்' தொலைக்காட்சி சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த 'புதையல் வேட்டை' எனும் கேம் ஷோ மிக மிகப் பிரபலம்.


அதன் முதல் சீசனை ஒரு பிரபல திரைப்பட கதாநாயகன் தொகுத்து வழங்கி அந்த நிகழ்ச்சி டீஆர்பியில் உச்சத்தைத் தொட்டிருக்க, அதன் இரண்டாவது சீசனில் அக்னிமித்ரன் தோன்றியிருந்தான்.


அவன் அணியும் உடையில் தொடங்கி, அவனுடைய கம்பீர நடை... நிமிர்ந்து அவன் உட்காரும் தோரணை... புன்னகை மாறாமல் அவன் பேசும் பாங்கு... தமிழானாலும் ஆங்கிலமானாலும் திருத்தமாக வார்த்தைகளை அவன் உச்சரிக்கும் நளினம்... என அனைத்து வகையிலும் காந்தமாக ஈர்த்தவன், ஒரு சில எபிசோட்களிலேயே, 'புதிதாக யார் இவன்?' என்ற கண்ணோட்டத்துடன் பார்த்த மக்களை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.


அவனுக்காகவே அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தவர்கள் பலரென்றால் மாளவிகாவும் அதில் ஒருத்தி.


பொது அறிவு சார்ந்த நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்தினால் அதன் முதல் சீசனின் முதல் எபிசோடிலிருந்தே அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் அக்னிமித்ரனுக்காகவே அதைப் பார்க்கும் அளவுக்கு மாறிப்போயிருந்தாள்.


அது 'ஹீரோ ஒர்ஷிப்' அல்லது ஒரு பதின்ம வயதின் பாதிப்பு என்பதையெல்லாம் தாண்டி, புத்தகத்திற்குள் பொத்தி வைத்திருக்கும் ஒரு மயிலிறகைப் போல, கடைசி சொட்டு வரை சுவைக்க வைக்கும் ஐஸ்க்ரீமைப் போல, சில்லென்று முகத்தில் தெறிக்கும் அடைமழையின் சாரல் போல, மணமே இல்லை என்றாலும் மரத்தின் இலைகளே தெரியாவண்ணம் மலர்ந்து குலுங்கும் குல்மோஹர் மலர்களைப் போல, பறிக்க இயலா உயரத்தில் மலர்ந்து மணம் பரப்பி ஏங்க வைக்கும் நித்திய மல்லியின் வாசம் போல அவளுடைய ரசனைகளின் பட்டியலில் அவனும் சேர்ந்திருந்தான்.


"ஹேய் மாலு, உன் ஆளு டிவில வந்துட்டான் பாரு, வா வா…" என மதுவும் சாத்விகாவும் அவர்களையும் அறியாமல் சொல்லும் அளவுக்கு...


"ஏய் இது என்னடி இது... தட்டுல சாப்பாடு அப்படியே இருக்கு. நீ இப்ப சாப்பிடப்போறியா இல்ல டீவியை ஆஃப் பண்ணவா?" எனத் துளசியே கடுப்பாகும் அளவுக்கு...


"நாளைக்கு ரிவிஷன் எக்ஸாம் இருக்கு மாலு. அதை விட இப்ப இந்த ப்ரோக்ராம் முக்கியமா போச்சா?" என அன்பு எரிச்சல்படும் அளவுக்கு...


அவனுடைய படம் போட்ட போஸ்டர்களைத் தேடிப் பிடித்து அவளுடைய பிறந்தநாளுக்குத் தோழிகள் பரிசளிக்கும் அளவுக்கு... அக்னிமித்ரன் மெய்நிகராக மாளவிகாவின் அன்றாட வாழ்க்கையில் சங்கமித்திருந்தான் என்றால் அது மிகையில்லை.


கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர, அதன் பின் அதன் அடுத்தப் பகுதியை ஒளிபரப்பாமல் அவர்கள் அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட, அவள் மனதில் ஒரு வெற்றிடமே உருவாகிவிட்டிருந்தது என்றால் அதுவும் மிகையில்லை.


தொடர்ந்து வந்த நாட்களில் அவளுடைய அப்பா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மதுவுக்குப் புதிதாக நவீன ரக கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுக்கும் வரை...


அவள் மூலம் சமூக வலைத்தளங்கள் இவளுக்கு அறிமுகமாகும் வரை...


அவற்றில் அக்னிமித்ரனின் வேறொரு முகத்தை அவள் காண நேரும் வரை...


இந்த நிலை நீடித்தது.


வாராவாரம் புதுமையைக் காண்பிப்பதற்காக அவன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் அரங்கத்தை மாற்றுவதுபோல் அவன் பெண்களை மாற்றிக் கொண்டிருக்க, ஏனோ காரணம் சொல்லத் தெரியாத அளவுக்கு அவள் மனம் கசந்துதான் போனது.


அர்த்தமே இல்லாமல், அவன் மீது அவள் உருவாக்கி வைத்திருந்த மாய பிம்பம் உடைந்து தூள் தூளாகிப் போயிருக்க, 'இவன் கூடவா இப்படி? போயும் போயும் இவனையா விழுந்து விழுந்து ரசித்தோம்?' என்று தன் மீதே கூட கோபம் வந்தது அவளுக்கு.


அவர்களுடைய அறை முழுவதும் ஒட்டி வைத்திருந்த அவனுடைய போஸ்டர்களைக் கிழித்து எறிந்தவள், அவனைப் பற்றிய எண்ணங்களையும் அதிகம் தூக்கிச் சுமக்காமல் அவனை வெட்டென மறந்தும் போனாள்.


அதாவது அவன் மேல் இருந்த அதிகமான விருப்பத்தை, 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்கிற ரீதியில் அதிக வெறுப்பாக மாற்றி மனதைச் சமநிலைப் படுத்திக்கொண்டாள் எனலாம்.


இதைதான் மனோதத்துவத்தில் 'எதிர்வினை உருவாக்கம்' அதாவது 'ரியாக்ஷன் ஃபார்மேஷன்' என்கிறார்கள்.


இது, ஒருவருடைய ஆழ்மனமானது தந்திரமாக, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடைய மனநிலையைப் பக்குவப்படுத்தும் 'உளவியல் பாதுகாப்பு பொறிமுறை' அதாவது 'ஈகோ டிஃபென்ஸ் மெக்கானிசம்' ஆகும்.