top of page

En Manathai Aala Vaa! 33

Updated: Oct 27, 2022

மித்ர-விகா 33


"சும்மா, அன்புவை டென்க்ஷன் பண்ணதான் அப்படிச் சொன்னேன். உண்மைல ஆக்ரா போகணும்னு ஆசையெல்லாம் எனக்கு இல்லை" என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாளவிகாவை ஆக்ரா கோட்டைக்கு அழைத்து வந்திருந்தான் மித்ரன்.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் வழிகாட்டிகளும், குடும்பமாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் உள்ளூர் வாசிகளுமாக ஆங்காங்கே மக்கள் கண்களில் தென்பட்டாலும், நல்லவேளையாக அன்று அதிக கூட்டம் இல்லை.


முறையான பாதுகாப்பு இல்லாமல் அவன் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருப்பது மட்டும் விக்ரமுக்கோ அவனுடைய அப்பாவுக்கோ தெரிந்தால் வீட்டில் ஒரு பஞ்சாயத்தே நடக்கும்.


அது எதைப் பற்றியும் கவலைப் படாமல், அவள் சொன்னாள் என்கிற ஒரே காரணத்துக்காக, பேரரசர் ஷாஜஹானின் இறுதிக் காலங்களில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்த முசாமன் புர்ஜ் எனும் பகுதிக்கு நேராக அவளை அழைத்து வந்தான்.


அற்புதமான கட்டடக் கலையுடன் கூடிய பல மாளிகைகள் அந்தச் சிவப்பு நிறக் கோட்டையிலிருந்தாலும், முழுக்க முழுக்க வெண் பளிங்கினால் ஆன கலைநயத்துடன் அமைந்திருக்கும் அழகிய மாடத்தைப் பார்த்தவுடன் ஒரு பரவசம் உண்டானது அவளுக்கு.


அவளுக்கு முன்னால் வந்து நின்றவன், "இந்த இடத்துலதான் அவுரங்கசீப் ஷாஜஹானை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி வெச்சிருந்தார். மும்தாஜ் நினைவோடவே கிட்டத்தட்ட எட்டு வருஷம் இங்க இருந்துதான் தாஜ்மஹாலைப் பார்த்துட்டே... அவர் இறந்துபோனாராம் " என்று சொல்லிக்கொண்டே, அவன் நகர, அவளுக்கு எழிலுறக் காட்சி அளித்தது அனைவரும் காதலின் சின்னமாகப் போற்றும் உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால்.


பல நூற்றாண்டுகள் கடந்த, பேரரசரும் அரசிகளும் வாழ்ந்த ஒரு சரித்திர புகழ் மிக்க கோட்டையில் நின்று கொண்டு மற்றொரு சரித்திர அதிசயத்தைப் பார்த்தவளுக்கு உடல் சிலிர்த்தது.


"பிடிச்சிருக்கா" காதுக்கு அருகில் கிசுசுகிசுப்பாக ஒலித்த அவனுடைய குரலில், திடுக்கிட்டு, தன் கைப்பேசியில் அவளைப் படம் பிடித்தவாறே நின்றவனின் மீதே மோதி, தானாகவே சமாளித்து விலகி நின்றவள், "ஹ்ம்... எவ்வளவு பெரிய ஹிஸ்டரிகல் பிளேஸ்ல நின்னுட்டு உலக அதிசயத்துல ஒண்ணைப் பார்த்துட்டு இருக்கோம். பிடிக்காம போகுமா?" எனக் கேட்க, "காதல் சின்னத்தைனு... அதையும் கூட சேர்த்துக்கோ" என்றான் மித்ரன்.


"அதைப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள் தீவிரமாக.


"என்ன... எப்படி ஒருத்தரால தன் மனைவியை இந்த அளவுக்கு லவ் பண்ண முடிஞ்சுதுன்னா?" எனக் கேட்டான் அவன்.


"அவர் கூட வாழ்ந்த பத்தொன்பது வருஷத்துல பதினாலு வருஷம் பிரக்னன்சியும் டெலிவரியுமாவே வாழ்ந்துட்டு இறந்து போனாங்க மும்தாஜ். இதுக்குப் பேர்தான் காதலா?" எனக் கேட்டாள் மாளவிகா.


சில தினங்களுக்கு முன் யாரவது இப்படிக் கேட்டிருந்தால் 'காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.' என அவனும் கூட அதை ஆமோதித்திருப்பான்.


ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையில், "ஹேய்... இப்ப என்ன சொல்ல வர. ஷாஜஹானுக்கு அவங்க மேல காதலே இல்லன்னா” எனக் காதலுக்கு வக்காலத்து வாங்கினான் மித்ரன்.


"இல்ல... மும்தாஜ் உயிரோட இருந்தபோதே ஷாஜஹான் அவங்களை இன்னும் கொஞ்சம் பெட்டரா கேர் எடுத்து பார்த்துட்டு இருந்திருக்கலாம். செத்த பிறகு இப்படி ஒரு நினைவுச் சின்னம் எழுப்பற அளவுக்கு அவங்க மேல அவர் வெச்சிருந்த காதலால அவங்களுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னுதான் கேக்கறேன்" என்ற அவளுடைய பதிலில் வியந்தவன், "அவங்க எவ்வளவு பெரிய பேரரசி. அதுவும் அவங்களை இந்த அளவுக்கு காதலிச்ச ஒரு எம்பரரை கல்யாணம் பண்ணிட்டவங்க. அவங்களுக்கு என்ன குறை இருந்திருக்கும்னு நினைக்கற?" எனக் கேட்டான் மித்திரன்.


"இவங்க இல்லாம ஷாஜஹானுக்கு இன்னும் சில வொய்வ்ஸ் கூட இருந்தாங்க இல்ல. அவங்கள்ல யாருமே தன்னை ஸ்பெஷலா ஃபீல் பண்ணியிருக்க மாட்டாங்கதான?


அதில்லாம மும்தாஜ்ங்கற இந்தப் பேர் கூட அவங்களுக்கு ஷாஜஹான் வெச்சதுதான் தெரியுமா? அவங்க ஒரிஜினல் நேம் வேற. அரசியா வாழறது வேற, ஒரு பேரரசியா தன்னை ஃபீல் பண்றது வேற.