En Manathai Aala Vaa! 32
Updated: Oct 26, 2022
மித்ர-விகா-32
அன்புவை அங்கே பார்க்கவும் அவளுடைய கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.
'இந்த நேரத்தில் இவன் எப்படி இங்கே வந்தான்?' என்ற கேள்வியுடன் மாளவிகாவின் பார்வை அனிச்சையாக அக்னிமித்ரனிடம் செல்ல, ஒரு கள்ளப் புன்னகை படர்ந்தது அவனுடைய முகத்தில்.
இருவரும் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அவள் உடையில் சூப் சிந்திவிட அவள் அதைச் சுத்தப்படுத்தச் சென்ற சமயம் மேசை மேல் அவள் விட்டுச்சென்றிருந்த அவளுடைய கைப்பேசி ஒலிக்கவும், அது அன்பு என்பதை அவனுடைய படத்துடன் மித்ரனின் கண்களுக்குக் காட்சிப் படுத்த, சற்றும் யோசிக்காமல் அந்தக் கைப்பேசியை எடுத்து அவளுடைய வாசத்தை ரசித்தவாறே அந்த அழைப்பை ஏற்றவன், அன்புவுடன் பேசித் துரிதமாக இந்த சந்திப்பைத் திட்டமிட்டுவிட்டான்.
விமானத்தில் அவள் சொன்ன விஷயங்கள் லேசாக அவனுடைய குற்ற உணர்ச்சியைக் கிளறி விட்டிருந்தது. அங்கே வந்த பிறகு வேலை மும்முரத்தில் அவள் அந்த விஷயத்தைச் சற்று மறந்திருந்தாளே ஒழிய, முற்றிலுமாக அதிலிருந்து அவள் வெளிவரவில்லை, அன்புவுடன் பேசி ஒரு தெளிவுக்கு வராமல் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதெல்லாம் ஒரு புறம் என்றால், ஒரு இளைஞனின் வளர்ச்சி எக்காரணம் கொண்டும் தடைப்படக்கூடாது என்பது மற்றொரு புறம் அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்தது.
ரஞ்சனியின் இந்த திடீர் திருமணத்திற்கும் அவனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றாலும் முன்பு யோசிக்காமல் அவன் செய்து வைத்திருந்த குளறுபடிகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக இருவருக்கும் பொதுவாக ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு அந்த அழைப்பு சிறு வாய்ப்பாக அமைந்துபோனது அவ்வளவுதான்.
மாளவிகாவைப் பொறுத்தமட்டில் நேரம் அமைந்தால் மித்ரனிடம் கேட்டுக்கொண்டு அன்புவைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதைக் கேட்பதற்கு முன்னதாகவே அவன் அதை நிறைவேற்றியிருக்க உண்மையிலேயே அவள் மனதிற்குள் இனம்புரியாத ஒரு பெருமிதம் வந்து ஒட்டிக்கொண்டது.
அந்த மனநிலையுடன் அவனை நன்றியுடன் அவள் ஒரு பார்வை பார்க்க, அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்தான் அன்பு. முன்பைவிட கொஞ்சம் மெலிந்துபோய் களைப்பாகத் தெரிந்தான்.
தன் உயிரை உருக்கிக்கொண்டு தன் இலட்சியத்தை நோக்கி இப்படி அவன் ஓடிக் கொண்டிருக்கும்பொழுது அந்த ரஞ்சனி அவன் பாதையில் இப்படி முள்ளாக மாறி அவன் பயணத்தைச் சிக்கலாக்குகிறாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு.
அணைத்து வைத்திருந்த கைப்பேசியை அவன் உயிர்ப்பித்த உடன் ரஞ்சனி விஷயம் அவனுக்குத் தெரிந்துபோயிருக்கும் என்பது உறுதி. அதில் மற்ற அனைத்தும் பின்னுக்குப் போய்விட, "ஆர் யூ ஆல்ரைட் அன்பு?" எனக் கேட்டாள் அவள் கண்களில் கண்ணீர் திரையிட.
"ஓ மை காட்... பப்பி” என்றவன், "எனக்கு என்ன நான் நல்லாதான் இருக்கேன்” என்றவாறே அவளது கண்களைத் துடைத்துவிட்டான் அன்பு.
மித்ரனின் மனது நெகிழ்ந்து போயிருந்ததாலோ இல்லை மாளவிகாவிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உரிமை உணர்வினாலோ அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. இருவரையும் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
"ரஞ்சனி” என அவள் ஏதோ சொல்ல எத்தனிக்க, அவளுடைய கண்களைச் சந்திக்கும் துணிவில்லாமல், "ஷி இஸ் எ பாசிங் கிளௌட்” என்றான் அவன் எங்கேயோ பார்த்துக்கொண்டு.
'பெண்கள் எல்லோரையுமே ஒரு தவறான கண்ணோட்டத்துடன் ஆண்கள் பார்ப்பதற்கு இவளைப் போன்றவர்கள்தான் காரணம்' என்ற எண்ணம் ஒரு கசப்பை ஏற்படுத்த, அவன் முகவாயைப் பிடித்து தன் முகத்தைக் காண வைத்தவள், "அந்த அளவுக்குத் தெளிவா ஆகிட்டியா அன்பு. அதுவும் இந்த ஷார்ட் டைம்-க்குள்ள" எனக் கேட்டாள் அவள் அவனுடைய மனதை உணர்ந்தவளாக.
"என்ன செய்யறது மாலு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெளிஞ்சுதான் ஆகணும். என்ன, எக்ஸாம்ஸ நினைச்சாதான், இந்த மனநிலைல நல்ல படியா பண்ண முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்கு.” என்றவன், "அவளை ரொம்ப நம்பினேன் பப்பி. எனக்கு பொயடிக்கா இந்த லவ்வைக் கொண்டு போக தெரியல. அதனாலதானோ?" எனப் பிதற்றினான் உடைந்த குரலில்.
"அவளைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அன்பு. மெச்யூரிட்டி இல்லாத அரை வேக்காடு அவ. ஆனா இவ்வளவு செல்ஃபிஷ்ஷா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. பட் நீ இன்னும் கூட இந்த லவ்ல சீரியசாதான் இருக்கற மாதிரி தெரியுது?" என அவள் கடுமையாகக் கேட்க, மௌனம் சாதிதான் அவன்.