En Manathai Aala Vaa-31
Updated: Oct 22, 2022
மித்ர-விகா-31
தேவதைகளே தோற்றுப் போகும் வண்ணம், அழகிய மெரூன் வண்ண சாடின் முழு நீள ஃப்ராக்கில் அழகே வடிவாக, தீபலக்ஷ்மி டவர்ஸ்க்குள் நுழைந்தாள் மாளவிகா.
அந்த உடைக்குப் பொருத்தமாக அவள் அணிந்திருந்த தங்க நிற மணிகள் கோர்க்கப்பட்ட டெரகோட்டா ஜிமிக்கி அவளுடைய துள்ளலான நடைக்குத் தகுந்தாற்போல நடனமாட, மின்தூக்கிக்குள் புகுந்தாள்.
அனிச்சையாக அவளுடைய விரல் பதிநான்காவது தளத்திற்கான பொத்தானை அழுத்த, அவளது கண்கள் அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் பதிந்தது.
வழக்கம் போல தன் கூந்தலைச் சரி செய்துகொண்டவள்,
'எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ?
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ?
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே. இதயத்திலே.
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே..
உதிரட்டுமே உடலின் திரை...
அதுதான் இனி நிலாவின் கறை கறை' எனச் சீழ்க்கையில் பாட, மின் தூக்கி நின்றதும் ஓட்டமும் நடையுமாக மித்ரனின் தனிப்பட்ட பகுதிக்குள் நுழைந்தாள்.
அவன் அங்கு இல்லாமல் போகவும், வேகமாக அவனது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவளுக்கு அவனைக் கண்களில் நிரப்பிக் கொள்ளும் ஆவல் மட்டுமே மேலோங்கி இருக்க, அவன் அங்கேயும் இல்லாமல் போகவும் ஏமாற்றமாகிப்போனது.
மேலும் பொறுமையில்லாமல் பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு சென்றவள், அங்கே திரும்பி நின்று சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்னிமித்ரனைப் பார்த்து, ஆசுவாசத்துடன் மூச்சுவாங்க புன்னகைத்தவாறே, தேக்கி வைத்திருந்த ஆவல் மொத்தமும் தெறித்து விழ, "மித்ரன்” என்றழைக்க, சட்டெனத் திரும்பி ஒரு நம்பமுடியாத வியப்புடன் அவளைப் பார்த்தவனின் விழிகளில் காதலும் ஏக்கமும் கலந்து போட்டியிட்டன.
"அஜூபா" என்றவாறு அவளுக்காக தன் கரங்களை அவன் விரிக்கவும், மேலும் நெருங்கி அவனுடைய கைகளுக்குள் அடங்க முடியாத வண்ணம் தயக்கம் வந்து அவளிடம் ஒட்டிக்கொள்ள, அப்படியே தேங்கி நின்றவளின் நினைவில் அந்த மொட்டை மாடியும் அன்புக்கரசியும் ஒரு நொடி மின்னலாய் தோன்றி மறைய, உடல் மொத்தமும் நடுநடுங்கிப் போனது மாளவிகாவுக்கு.
கூடவே அன்பு, ரஞ்சனி, அவளுடைய நிச்சயதார்த்த ஃபோட்டோக்கள் என அனைத்தும் வரிசையாக நினைவில் வர, 'எப்படி எல்லாவற்றையும் மறக்கச்செய்து அவன் தன் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டான்' என்ற குற்ற உணர்ச்சியில் தலை வலி விண்ணென்று தெறிக்க, பதறி எழுந்து உட்கார்ந்தாள் மாளவிகா.
அது வெறும் கனவுதான் என்பது அவளுக்குப் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது.
அறை முழுதும் நிரம்பி வழிந்த 'ஏசி'யின் குளிரைத் தாண்டியும் வியர்வை அரும்புகள் முகத்தில் பூக்க, அதைத் துடைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து தன்னை அவள் சரிசெய்துகொள்ளவே சில நிமிடங்கள் ஆனது.
அதற்குள், அருகிலிருந்த அவளுடைய கைப்பேசி ஒளிர்ந்தவாறு மெல்லிய ஒலியுடன் இசைத்து ஓய்ந்தும் போனது. அது அலார ஒலி என்று எண்ணி, "அக்கா, அலாரம் அடிக்குது பாரு” என்று முனகியவாறு அவளுக்கு அருகில் படுத்திருந்த சாத்விகா தன் உறக்கத்தைத் தொடர, ‘இருள் கூட விலகாத இந்த அதிகாலைப் பொழுதில் யார் கால் செய்திருப்பார்கள். அன்புவாக இருக்குமோ? நாளை காலை வரை செல் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கும்னு சொன்னானே. ஒரு வேளை ரஞ்சனி விஷயம் அவனுக்குத் தெரிந்து போயிருக்குமோ!? பொறுக்க முடியாமல் தன்னை அழைக்கிறானோ' எனப் பலவாறாக எணணியவாறே கைப்பேசியை எடுத்துப்பார்த்தாள் மாளவிகா.