En Manathai Aala Vaa-30
Updated: Oct 21, 2022
மித்ர-விகா-30
அந்தக் கோபத்திற்கெல்லாம் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், "ஒரு பெண்ணை... அவளோட விருப்பம் இல்லாம டச் பண்றது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா" என்றவளின் பார்வை, சாலை ஓரத்தில் ஒரு வண்டியில் பழங்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒரு கிழவியிடம் சென்றது.
மனதில் சிறு பொறி தோன்ற, "ஒரு நிமிஷம் என் கூட வாங்க. உங்களுக்கு ஒரு குட்டி டெமோ காமிக்கறேன்” என்றவள், அவனுடைய ஒப்புதலுக்குக் கூட காத்திருக்காமல் காரின் கதவைத் திறந்துகொண்டு சாலையைக் கடந்து அந்தக் கிழவியை நோக்கிப் போனாள்.
'என்ன செய்யப்போறா இவ?' என்ற கேள்வியுடன், அவனும் அவளைத் தொடர்ந்து போக, "பாட்டி, இந்தக் கொய்யா கிலோ என்ன விலை?" என்றவாறு அவள் ஒரு பழத்தைக் கையிலெடுக்க, தலை சாய்த்து ஒரு நொடி அவளைப் பார்த்த அந்தக் கிழவி, புசு புசு என்று எழுந்த பெருமூச்சுடன், "போம்மா அப்பால” என ஆரம்பித்து, "இன்னிக்கி யாவாரம் உருபுட்டாங்காட்டியுந்தான். மொத போனியே இன்னும் ஆவல. அதுங்காட்டி உன்னோட பீச்சாங்கைய்ய எடுத்தாந்து இப்படி பயத்துமேல வெக்கிறியே. உனக்கு அறிவில்ல” என ஆவேசமாகச் சாமியாடத் தொடங்கிவிட்டார்.
"இந்தாம்மா... எதுக்கு இப்ப இந்தப் பேச்சு பேசற. மொத்தப் பழத்துக்கும் எவ்வளவு விலைனு சொல்லு... பணத்தைத் தூக்கிப் போட்டுட்டுப் போறேன்" என ஆத்திரத்துடன் பாய்ந்தான் மித்ரன்.
"போ சார் அப்பால. யாருக்கு வேணும் உம் பணம். கார்ல வந்தா அப்படியே பயந்துருவோம் பாரு" என அதற்கும் அந்தக் கிழவி எகிற, "சாரி பாட்டிம்மா... எனக்கு ஒரு கிலோ பழம் குடுங்க போதும்” என பொங்கி வந்த சிரிப்புடன் மாளவிகா எதுவுமே நடக்காததுபோல சகஜமாகச் சொல்ல, "ச்ச" என்ற மித்ரன் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.
மேற்கொண்டு ஏதோ திட்டிக்கொண்டே அவள் கேட்ட பழங்களை அவர் எடைப்போட்டுக் கொடுக்க, அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு காரை நோக்கிப் போனாள் மாளவிகா.
அருகில் நின்று கொண்டிருந்தவனுக்குதான் அவமானமாக இருந்தது. அவளை முறைத்துக்கொண்டே வந்து வாகனத்தைக் கிளப்பியவன், "என்னவோ எனக்கு டெமோ காமிக்கறேன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போன. என்கிட்டே அந்தப் பேச்சு பேசினியே. அந்தக் கிழவி அப்படி திட்டுது. ஒரு வார்த்தைக் கூட பேசாம திரும்பி வர. உனக்கே கேவலமா இல்ல?" என்றான் எகத்தாளமாக.
"லைட்டா” எனக் கண்களைச் சுருக்கியவள், "உங்க கூட டான்ஸ் பண்ணப்ப இருந்ததைவிட கம்மிதான்" எனக் குத்தலாகச் சொல்லிவிட்டு, "தங்கம்... வைரம்... இதெல்லாம்தான் ப்ரேஷியஸ்னு நினைச்சுட்டு இருக்கீங்க இல்ல. அதையெல்லாம்விட அந்தப் பாட்டியைப் பொறுத்தவரை அவங்க உயர்வா மதிக்கிற ஒரு விஷயம் என்னன்னா அது அவங்க விக்கற பழம்தான்.
அதை டச் பண்ணனும்னா கூட அதுல ஒரு வரைமுறை இருக்கணும்னு நினைக்கறாங்க. அதை மதிக்காம இன்சல்ட் பண்ணும்போது அவங்களுக்கு அப்படி ஒரு கோபம் வருது.
உங்களுக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்க வாய்ப்பில்ல. அதனால புரிஞ்சிக்க முடியாது. எங்க வீட்டுக்கிட்ட கூட ஒரு பூக்காரம்மா இருக்கு, இப்படி போய் அந்தம்மா விக்கற பூவை யாரவது பேட் டச் பண்ணா அவங்க உருப்படியா வீடு போய் சேர முடியாது தெரியுமா?
யாரவது ம்ம்... வேணும்கூடஇல்ல, தெரியாம உங்க கார்ல சின்னதா ஒரு கீறல் போட்டுட்டாங்கன்னு வெச்சுக்கோங்க, போனா போகுதுன்னு அப்படியே சும்மா விட்றுவீங்களா என்ன? உடனே பொங்கிட்டு போய் சட்டையைப் பிடிக்க மாட்டீங்க, குறைஞ்ச பட்சம் அவங்க அம்மா பாட்டி எல்லாரையும் இழுத்துத் தரக்குறைவா திட்டவாவது செய்வீங்க இல்ல?
இதையெல்லாம் விடவா நாங்க பொண்ணுங்க உங்களுக்குக் கேவலமா போயிட்டோம்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு நான்தான் இந்த உலகத்துலயே ரொம்ப ப்ரெஷியஸ். என்னை யாராவது அவங்க இஷ்டத்துக்கு ஆப்பரேட் பண்ணனும்னு நினைச்சா அவங்கதான் என்னோட முதல் எதிரி” என்றவள் "இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்" என்று முடிக்க, அவளது கூற்றை மறுக்க இயலாமல், கண்கள் முழுவதும் அவளை நிறைத்துக்கொண்டவன், "ஐ அக்ரீ. உனக்குமட்டும் இல்ல எனக்கும்கூட நீ ரொம்ப ப்ரெசியஸ்தான்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, 'இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை நான் சொந்தமாக்கிக்கணும்னு நினைக்கறேன். அது தப்பா?' எனக் கேட்டான்... ஆனால் மனதிற்குள் மட்டுமே!
அதற்கும் அவள் அவனை வஞ்சனை இல்லாமல் முறைக்க, அதற்குள் அவனுடைய கைப்பேசி குறுந்தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப, அதைப் பார்த்தவனின் இதழில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
மாளவிகாவுடன் அவன் ஆடிய நடனத்தின் காணொலியை அவனுக்கு அனுப்பியிருந்தான் கதிர்.
தன்னை மறந்து, அந்த நிமிடங்களை மனதிற்குள் அவன் அசைப்போட்டுப் பார்க்க, அவளுடைய உடலின் வெப்பம் இன்னும்கூட அவன்மீது ஒட்டிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது அக்னிமித்ரனுக்கு.
அந்த இனிமையை இன்னும் சில மணித்துளிகள் நீட்டிக்க அவனுக்குக் கொஞ்சம் தனிமை தேவைப்படவும், அதற்குமேல் அவளுடன் வாக்குவாதத்தை வளர்க்காமல், "இன்னைக்கு ஆஃபிஸ் கேப்லயே வீட்டுக்குப் போயிடு, வேலை இருந்தால் நாளைக்குப் பார்த்துக்கலாம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவளை அலுவலகத்தின் வாயிலிலேயே இறக்கிவிட்டுவிட்டு, நேராக அவனுடைய பிளாட்டுக்குச் சென்றுவிட்டான்.
அந்த சில நொடிக்குள் அவன் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றமும் அவனிடம் தெரிந்த தடுமாற்றமும் கண்களில் வழிந்த ஏக்கமும் அவளுக்குள் இனம்புரியாத ஒரு படபடப்பை ஏற்படுத்த, 'நல்லவேள. கூடவே வரல. தப்பிச்சோம்' என்ற எண்ணத்துடன் இறங்கி வேகமாக 'தீபலக்ஷ்மி டவர்ஸ்'க்குள்ளே சென்றாள் மாளவிகா.
***
மாலை, நேரத்துடனே வீட்டிற்கு வந்த மகளைப் பார்த்து அதிசயித்தார் துளசி. தெளிவில்லாத அவளுடைய முகத்தைப் பார்த்து, பழைய நினைவுகள் தலைதூக்கப் பயம் பீடித்துக் கொண்டது அவருக்கு.
'இந்த கல்யாணப் பேச்சை இப்ப எடுத்திருக்கவே வேண்டாமோ' என்று எண்ணியவாறு, "காஃபியா... பூஸ்ட்டா பாப்பா" எனக் கேட்டார் மகளிடம்.
"இப்ப சாவியும் வந்துடுவா இல்ல... ரெண்டு பேருக்கும் பூஸ்டே கலந்துருங்கமா" என்றபடி அவர்களுடைய அறை நோக்கிப் போனாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் ட்ராக்ஸ் மற்றும் டீஷர்ட் அணிந்து திரும்ப அவள் வெளியில் வரவும் சாத்விகா வீட்டிற்குள் நுழையவும் துளசி பூஸ்ட்டுடன் வரவேற்பறைக்கு வரவும் சரியாக இருந்தது.
பொதுவாக ஏதோ பேசிக்கொண்டே இருவரும் அதைப் பருகி முடித்து யோகா மேட்டை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனாள் மாளவிகா.
"ஹேய்... மாலு... ரொம்ப நாளைக்கு அப்பறம் யோகா பண்ண வந்திருக்க போலிருக்கு" என அவளை எதிர் கொண்டாள் அவர்கள் வீட்டு முதல் தள போர்ஷனில் குடியிருக்கும் மாலதி.
"ஆமாங்கா... ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலை ஜாஸ்தி" என்றவாறு அவள் யோகா மேட்டை விரிக்க, "இப்பவே இப்படி இருக்கு... இன்னும் கல்யாணம் ஆகிட்டா சுத்தம்... உருப்படியா ஒண்ணுமே செய்ய முடியாது" என அலுத்துக் கொண்டு, "லேப்புக்கு போயே ஒரு வாரம் ஆச்சு" என்று முடித்தாள் மாலதி.
அவளுடைய மாமியார் ஊரிலிருந்து வந்திருப்பதால் அவளால் அங்கே செல்லமுடியாத ஆதங்கத்தை அவள் இப்படிச் சொல்ல, 'கல்யாணம்' என்கிற வார்த்தையே கசந்தது மாளவிகாவுக்கு.
"உங்க அக்கா மச்சினனுக்கு உன்னைக் கேட்டாங்கன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அப்பறம் அதைப் பத்தின பேச்சையே காணுமே? நிச்சயம் செஞ்சுருவீங்கன்னு பார்த்தேன். ஏன் மாலு என்ன ஆச்சு?" என அவர் ஆர்வமாகக் கேட்க, "தெரியலக்கா" என்றாள் சங்கடமாக.
அதற்குள் அவர்கள் வீட்டுக் குக்கரின் விசில் சத்தத்தில் அவசரமாக அங்கிருந்து ஓடினாள் மாலதி. இனிமேலாவது யோகா செய்யலாம் என அவள் திரும்ப அவளுடைய கைப்பேசி இசைத்தது. ஐயோ என்றிருந்தது அவளுக்கு.
அது அன்பு என்பதைச் சொல்ல, அந்த சலிப்பு மறைந்து, "என்ன கலெக்ட்டர் சார், எப்படி போயிட்டு இருக்கு உங்க எக்ஸாம் பிரிபரேஷன்ஸ் எல்லாம்" என்று கேட்டாள் தன்னை உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு.
"நல்லா போயிட்டு இருக்கு பப்பி” என்றவன், "இருந்தாலும் கொஞ்சம் டென்ஷனாவே இருக்குடி. உன் கிட்ட பேசினா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். அதான் கால் பண்ணேன்” என்றான்.
அவனது குரல் கொஞ்சம் பிசிரடிக்க, "என்ன அன்பு... இது ஜஸ்ட் எக்ஸாம் டென்ஷன்தான்னா... அதுக்கு அவசியமே இல்லடா. உன்னால நல்லா பண்ண முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. வேற ஏதாவது பிரச்சினையான்னு சொல்லு" என்றாள் தன் தோழனை உணர்ந்தவளாக.
"சொன்னா திட்டக் கூடாது" என்று அவன் பீடிகையுடன் சொல்ல, "என்ன ரஞ்சனி மேட்டரா?' எனக் குரலை உயர்த்தினாள் மாளவிகா.
எதிர் முனை மௌனம் காக்கவே, "அப்படினா... அதுதானா?" என்றவள், "பரவாயில்ல... இந்த நேரத்துல மனசுல எதையாவது வெச்சுட்டு கஷ்ட படாத... நான் உன்னை ஒண்ணும் சொல்லல" என்றாள் அவள் தணிந்த குரலில்.
"இங்க இருந்தே எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்ணு... டெல்லிக்கெல்லாம் போகவேண்டாம்னு சொன்னா மாலு அவ. அதை கேக்காம நான் இங்க வந்ததுல இருந்தே அவ என் கிட்ட சரியா பேசறது இல்ல. கால் பண்ணா அட்டென்ட் பண்றதில்ல. வேணும்னே அவ என்னை அவாய்ட் பண்ற மாதிரி தோணுது. முடிஞ்சா அவ கிட்ட பேசி பாரு மாலு... ப்ளீஸ்... எனக்காக" என்றான் கெஞ்சலாக.
மனம் கனத்துப்பேனது அவளுக்கு. நாளை மறுநாள் முக்கிய பரீட்சையை வைத்துக்கொண்டு அவன் சஞ்சலப்படுவது சகிக்காமல், "அவ்ளோதான... அவ எனக்கும் ஃபரெண்ட்தான? உனக்காகப் பேசறேன் அன்பு. நீ ஃபோகஸ்டா படிக்கற வழியைப் பாரு" என்றாள் உண்மையான அக்கறையுடன்.
"ஓகே பப்பி. நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்னு மெசேஜ் பண்ணதாலதான் ஃபோன் பண்ணேன். படிக்க நிறைய இருக்கு. அதனால ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணப்போறேன். நாளைக்கு மார்னிங்தான் ஆன் பண்ணுவேன். அவளை அதுக்கு பிறகு கால் பண்ண சொல்லு" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அன்பு.
அன்று நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தவள், அது முடியாமல், அவள் மனதையும் ஒருநிலைப் படுத்த முடியாமல், 'நாளைக்கு பர்மிஷன் சொல்லிட்டு பேசாம போய் அய்யாவைப் பார்த்து எல்லாத்தையும் சொல்லணும்' என்று எண்ணிக்கொண்டாள் மாளவிகா, அதற்கு அக்னிமித்திரன் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கப்போவதில்லை என்பதை அறியாமல்.
யோகா செய்யவேண்டும் என்ற மனநிலை மாறிப்போய்விட, சற்றுநேரம் அப்படியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள், இருள் கவிழவும் கீழே இறங்கி, வீட்டிற்குள் வந்தாள்.
சற்று நேரத்தில் மூர்த்தியும் வந்துவிட, எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட உட்கார்ந்தனர். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, இடையில் 'ஆடி வா தமிழா'வின் விளம்பரம் வந்தது.
அன்று காலை அவள் பார்த்த அந்த செட்டில், அன்றுதான் அதைப் படம் பிடித்திருக்கிறார்கள் என்பது புரிய, மனதிற்குள் விபரீதமான ஒரு சந்தேகம் துளிர்த்தது அவளுக்கு.
அதில் விதிர் விதிர்த்துப் போனவள், அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்து, கைப்பேசியுடன் மொட்டை மாடி நோக்கி ஓடினாள்.
"என்ன லயன்னஸ்... அதிசயமா இந்த நேரத்துல உனக்கு என் ஞாபகம் வந்திருக்கு?" என அந்த நேரத்தில் அவளிடமிருந்து ஒரு அழைப்பை எதிர்பார்க்காததால், வியப்புடன் அதை ஏற்றான் அக்னிமித்ரன்.
"மித்ரன்... நம்ம டேன்ஸ் பண்ணோம் இல்ல... அதை யாரவது வீடியோ எடுத்திருப்பாங்களா" எனப் பதட்டத்துடன் அவள் கேட்க, "ஹேய்... இப்ப என்ன உனக்கு இப்படி ஒரு டவ்ட்" எனக் கேட்டான் அவன் சற்றுக் கலவரத்துடன்.
"இல்ல யாராவது வீடியோ எடுத்து சோஷியல் மீடியா எதுலயாவது அப்லோட் பண்ணிட்டாங்கன்னா ரொம்ப பிரச்சனை ஆகிடும் மித்ரன். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க" என அவள் படபடக்க, 'உப்' என ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், "அப்படியெல்லாம் பண்ண முடியாது அஜூபா. ஏன்னா எந்தவிதமான காட்ஜெட்ஸ்சும் செட் குள்ள அலவ் பண்ண மாட்டாங்க. ஈவன் செலிபிரிடீஸ் கூட ஃபோன் எடுத்துட்டு வரமாட்டாங்க. நாங்க மட்டும் அலவ் பண்ணோம்னு வை... அந்த ஷோவை சேனல்ல டெலிகாஸ்ட் செய்யறதுக்கு முன்னால சோஷியல் மீடியால ரிலீஸ் பணணிருவங்க புரிஞ்சிக்கோ" என்றான் சிரித்துக்கொண்டே.
அவனுக்குக் கதிர் அனுப்பியிருந்த காணொலி கூட அவர்களுடைய தொழில் முறை கேமராவில் பதிவுசெய்யப்பட்டதுதான். அவன் அப்படிச் சொல்லவும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டவள், "ரொம்ப பயந்துட்டேன்... சாரி... அதனாலதான் இந்த நேரத்துல கால் பண்ணேன். குட் நைட். பை" என அவன் பதில் சொல்வதற்குக் கூட காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
அன்று காலை மிக அருகில் அவனது கண்களுக்கு மட்டுமே விருந்தான அவளுடைய தேன் தெறிக்கும் அதரங்கள் அவன் நினைவில் தோன்ற, 'லவ் யூ அஜூபா' என்றவாறு தன் கைப்பேசியில் இதழ் பதித்தான் மித்ரன்.
அதில் ஒளிர்ந்த அவளுடைய டிஜிட்டல் உருவம் அவனைப் பார்த்து புன்னகைத்தது.
***
மாளவிகா ஒருவிதமாகப் பயந்துகொண்டிருக்க, நடந்தது வேறாக இருந்தது. அன்பு சொன்னதால் அவள் ரஞ்சனியைக் கைப்பேசியில் அழைக்க, அந்த அழைப்பை அவள் ஏற்கவே இல்லை.
அவனுக்காக அவள் இரண்டு மூன்று முறை முயன்று பார்த்தும், பயனில்லாமல் போனது. அப்பொழுதும்கூட அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அன்று இரவு அவளுடைய கல்லூரி தோழர்கள் குழுமி இருக்கும் வாட்சப் குழுவில் தகவல்களாக வந்தவண்ணமிருக்க, அதன் நோட்டிஃபிகேஷன் ஒலி அவள் உறக்கத்தைக் கெடுக்கவும் , சலிப்புடன் அவள் அதை எடுத்துப்பார்க்க, மொத்தமாக அவளது உறக்கம் பறிபோனது அன்புவை எண்ணி.
அதில் அன்று நடந்த, ரஞ்சனியுடைய திருமண நிச்சயதார்த்த விழாவில் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணமகனுடன் சேர்த்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சில காணொலிகளையும் பெருமையுடன் பதிவேற்றம் செய்திருந்தாள் ரஞ்சனி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல்.
உடனே ஓடிப்போய் அன்புவின் காரத்தைப் பற்றிக்கொண்டு, 'கவலைப்படாதடா அன்பு! நான் உன் கூடவே இருக்கேன். நீ எக்ஸாமை நல்லபடியா எழுதி முடி. இப்போதைக்கு அதுதான் ரொம்ப முக்கியம்' என அவனிடம் சொல்லவேண்டும் என்கிற உந்துதல் உண்டானது அவளுக்கு.
இந்த நேரத்தில் அதெல்லாம் கொஞ்சமேனும் சாத்தியப்படுமா என்ன?