மித்ர-விகா-3
அன்றைய காலை வெகு பரபரப்பாகக் காட்சியளித்தது மாளவிகாவின் இல்லத்தில்.
அவளுடைய பேராசிரியர் சொன்னபடி அந்தப் பயிற்சிக்கு விண்ணப்பித்து, அதில் சேர்ந்தாள் மாளவிகா. அந்த இரண்டு மாதப் பயிற்சி இரு தினங்களுக்கு முன்புதான் முடிந்திருந்தது.
அதில் அவளுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கவே அவர்களே அவளை ஒரு நிறுவனத்திற்குப் பரிந்துரைத்திருப்பதாகச் சொல்லி அதற்கான கடிதத்தையும் அவளுக்குக் கொடுத்தனர்.
நேரடியாக அவர்கள் மூலம் நியமிக்கப்படவே நேர்முகத் தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. அந்த வேலையில் இணைவதற்கான நியமன ஆணையைப் பெறுவதற்காக அன்று அவளை அந்த நிறுவனத்திற்கு வரச்சொல்லியிருக்க, சுறுசுறுப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் மாளவிகா.
சாத்விகாவிற்கும் அன்றுதான் கல்லூரியின் முதல் நாள் என்பதினால், அக்கா தங்கை இருவருமாகச் சேர்ந்து வீட்டையே அதகளம் செய்து கொண்டிருந்தார்கள்.
"ஏய், ஏண்டி என் ஹேர் கிளிப்பை எடுத்த? என் ட்ரெஸ்க்கு மேட்சா பார்த்து கடைல இருந்து எடுத்துட்டு வந்தேன்” மாளவிகா படபடக்க,
"கா ப்ளீஸ். பர்ஸ்ட் டே காலேஜுக்கு போறேன். எனக்காக விட்டு குடுக்க மாட்டியா?" சாத்விகா கெஞ்சலில் இறங்க,
"ப்ச்.. கிளிப் போடாம தலை வாரணும். தலை முடி முகத்துலயே வந்து விழும்"
அலுத்துக்கொண்டாலும் தங்கையிடம் மல்லுக்கு நிற்காமல் அவள் அடுத்த வேலையைப் பார்க்க, "கடைல சேல்ஸ்க்காக வாங்கி வெக்கற கிளிப் பேண்ட் எல்லாத்தையும் நீங்களே எடுத்துட்டு வந்துடறீங்க. அப்படியிருந்தும் சண்டை மட்டும் ஓயல" என குறை பட்டுக்கொண்ட துளசி, "வாங்கடி. டைம் ஆச்சு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க” என மகள்களைத் துரிதப்படுத்தினார்.
வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு சாத்விகாவுக்காக அம்மா தயாராக எடுத்து வைத்திருத்த மதிய உணவுப் பையைத் தூக்கிக் கொண்டு அவரவர் தோள் பைகளை மாட்டிக்கொண்டனர் சகோதரிகள் இருவரும்.
அன்னையின் கன்னத்தைக் கிள்ளி, "மா. போய்ட்டு வரோம். ஹாவ் அ நைஸ் டே” என முத்தமிட்டவள், "உங்க வீட்டுக்காரோட சண்டை போடாம சமத்தா இருங்க" என அன்னையைக் கலாய்த்தவாறு மாளவிகா கிளம்ப, "அவங்க சண்டையெல்லாம் நம்மக்கிட்டதான். அவங்க வீட்டுக்கார் கிட்ட சண்டையெல்லாம் போட மாட்டாங்க. இவங்க ஒரு பார்வை பார்த்தா போதும் அவர் பேச்சு மூச்சில்லாம அட்டென்ஷன்ல நின்னுடுவாரு. அப்பறம் ஏன் சண்டை" எனச் சின்னவள் அவள் பங்கிற்குக் கிண்டலில் இறங்க,
"அடியேய் மொத நாள் ஆஃபீசுக்கும் காலேஜுக்கும் கிளம்பறீங்களேன்னு பாக்கறேன். இல்லன்னா நடக்கிறதே வேற” மிரட்டலாகச் சொல்ல முயன்றாலும் சிரிப்புடனே வந்தன துளசியின் வார்த்தைகள்.
ஒரே போன்று அடர் 'பிங்க்' நிறத்தில் சின்னவள் சல்வாரிலும் மூத்தவள் புடவையிலும் கிளம்பியிருக்க, மகள்களைக் கண்களில் நிரப்பியவாறு அவர்களுக்கு விடை கொடுத்தார் துளசி.
அந்தப் பகுதியின் முக்கிய சாலையில் இருக்கும் அவர்களுடைய கடைக்கு வந்தவர்கள், "அப்பா, நாங்க கிளம்பறோம். சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்" என சாத்விகா சொல்ல, "பத்திரமா போயிட்டு வாங்க கண்ணுகளா. ஆல் த பெஸ்ட்" என்ற மூர்த்தி பெரிய சாக்லேட் 'பார்'களை ஆளுக்கு ஒன்றாக நீட்ட, "வாஆஆஆஆவ்" என்றவாறு அவற்றை வாங்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர் இருவரும்.
சாத்விகாவின் கல்லூரி பேருந்து வருவது தெரியவும், "தேங்க்ஸ் கா. நீ வேலைக்குப் போகணும்னு டிசைட் பண்ணதாலதான் என்னால என்ஜினீயரிங் சேர முடிஞ்சுது. லவ் யூ கா” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு அந்த வாகனத்தை நோக்கிப் போனாள் அவள்.
சில நிமிடங்களில் மாளவிகா ஏற வேண்டிய அரசுப் பேருந்து வரவும், அதில் போய் தொற்றிக்கொண்டாள். இவளது வாழ்க்கை ஒரு மாறுபட்ட பரிமாணத்தை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.
***
சாதாரணமாக அவர்கள் வீட்டிலிருந்து அரை மணிநேரத்தில் அடையக் கூடிய தூரம்தான். ஆனால், அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தை அடைய சென்னை மாநகரத்திற்கே உரித்தான போக்குவரத்து நெரிசலால் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆயிற்று. அதுவரையிலும் கூட உட்கார இடம் கிடைக்கவில்லை அவளுக்கு. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கப் பேருந்திலிருந்து இறங்கியவள், அவள் வேலை செய்யப்போகும் அலுவலகத்தை நோக்கிப் போனாள் மாளவிகா.
நுழைவில், சுவரோடு பதிக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கிரானைட் பலகையில் 'தீபலக்ஷ்மி டவர்ஸ்' எனப் பளபளக்கும் பொன் எழுத்துகள் மின்ன, அதைக் கடந்து சென்றவள் சற்று தூரத்திலிருந்து அந்த அலுவலக கட்டடத்தைப் பார்த்து, 'ப்பா எவ்வளவு பெரிய பில்டிங்' என மனதிற்குள் வியந்தவாறு அதன் தளங்களை எண்ணிக்கொண்டே அந்த வளாகத்திற்குள் நுழைந்தாள்.
அதன் முகப்பில் 'வீனஸ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிட்டட்' என்ற பெயர்ப் பலகை நடு நாயகமாய் இருக்க, இன்னும் சில குழுமங்களின் பெயர்களைத் தாங்கிய சில பலகைகளும் அருகருகே நின்றிருந்தன.
அனைத்தையும் பார்த்துக்கொண்டே தான் வேலை செய்யப்போகும் நிறுவனத்தின் பதாகையை ஆராய்ந்தவள் பின் அந்தக் கட்டடத்திற்குள் சென்றாள்.
கண்ணைப் பறிக்கும் அலங்காரங்களுடன் அதன் வரவேற்பு கூடம் அவ்வளவு ஆடம்பரத்துடன் இருக்க, அதில் மலைத்தவளாக அதன் அலுவலகப் பகுதியை நோக்கிப் போனவள் தன் கைப்பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அங்கே பணியிலிருந்த பெண்ணிடம் நீட்ட, அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, "ப்ளீஸ்.. கோ டு த நயந்த் ஃப்ளோர். ஒன் மிஸ்டர் கவியரசு வில் பீ தேர். ஜஸ்ட் மீட் ஹிம்"
அந்தப் பெண் புன்னகையுடன் தேன் தடவிய குரலில் சொல்ல, அவளுக்கு நன்றியை நவின்றுவிட்டு மின்தூக்கியை நோக்கிப் போனாள் மாளவிகா.
அது பதினோராம் தளத்திலிருப்பதாகக் காண்பிக்கவும், அதைக் கீழே அழைக்கும் பொத்தானை அழுத்திவிட்டு அவள் காத்திருக்க, சில நிமிடங்களில் அவளுக்கு முன் வந்து நின்று தன் கதவைத் திறந்து அவளை உள்ளே வருமாறு அழைத்தது அந்த மின்தூக்கி.
அதன் உள்ளே சென்று எண் ஒன்பதை அழுத்தியவள், அதிலிருந்த ஆள் உயரக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்க, 'ப்பா.. நல்லவேள நாம பார்க்க அப்படி ஒண்ணும் மோசமா இல்ல. பஸ்ல கசங்கி வந்தாலும் கொஞ்சம் பிரெஷ்ஷாதான் இருக்கோம். என்ன இந்த சாவி சதி பண்ணதால தலைதான் கொஞ்சம் கலைஞ்சிருக்கு’ என்று தன்னை தேற்றிக்கொண்டு, முன்னால் வந்து விழுந்த முடிக்கற்றையைக் கோதி சரி செய்துகொண்டவள், ‘பரவாயில்ல நம்மளும் கொஞ்சம் அழகாதான் இருக்கோம்!” என்று எண்ணியவாறு அருகில் யாரும் இல்லாத காரணத்தால், மெல்லியதாகச் சீழ்க்கை அடிக்கத் தொடங்கினாள் மாளவிகா.
‘பெண்பால் கொண்ட சிறு தீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே.
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே.
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே.
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே”
கடைசி வரியை முடிப்பதற்குள் அந்த மின்தூக்கி நிற்கவும், விசிலை அப்படியே நிறுத்தினாள் அவள். அதன் கதவு திறக்கவும், உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் அவள் மூச்சே ஒரு நொடி நின்றுபோனதுபோல் ஆனது.
அவள் இதழ்கள் தன்னை மறந்து 'டீ.டீ' என்று முணுமுணுத்துவிட, அவன் அவள் முகத்தைக் கூர்மையாகப் பார்க்கவும், தன் கைப்பேசியைக் குடைவதுபோல் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் இருந்த பரபரப்பில் அன்று கல்லூரி கலைவிழாவில் கூட அவனைச் சரியாகப் பார்க்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவனை பல முறை பார்த்திருக்கிறாள், ரசித்திருக்கிறாள், ரசித்ததை ஒரு கட்டத்தில் வெறுத்தும் இருக்கிறாள். நேரில், அதுவும் இவ்வளவு சிறிய இடத்திற்குள் அவ்வளவு அருகில் அவனைப் பார்த்ததும் அவளுக்குள் எழுந்த இந்த உணர்வுதான் புதியது.
நல்ல அசரடிக்கும் உயரம். ஜெல் கொண்டு படியவைத்திருத்த அடர் கேசம். வசீகர முகம். யானையினுடையதைப் போன்ற சிறிய கண்கள். கூர்மையான மூக்கு. கச்சிதமாகத் திருத்தப்பட்ட மீசை. அழுத்தமான முகவாய். உடற்பயிற்சி தேகம். அதை எடுப்பாகக் காட்டும் உடை. அந்த மின்தூக்கி முழுதும் பரவியிருந்த அவனுடைய மணம். அவளது கருத்தை மொத்தமாகக் களவாடிக்கொண்டிருந்தது.
அவள் தன்னை சமன்படுத்திக்கொள்வதற்குள் அவள் இறங்க வேண்டிய தளம் வர, மின்தூக்கியின் கதவு திறந்துகொள்ளவும் அவள் வேகமாக வெளியேற,
'அசையும் வளைவுகள் அதிசயமே.'
சீழ்க்கை ஒலி அவளது செவியைத் தீண்டவும், அவள் திடுக்கிட்டுத் திரும்ப அதற்குள் அந்த மின்தூக்கியின் கதவு மூடிக்கொண்டது.
பக்கென்று ஆனது அவளுக்கு.
'அவன் உள்ள நுழைஞ்சத கூட கவனிக்காம நாம விசில் அடிச்சுட்டோமா. இல்ல இது எதேச்சையா நடந்ததா?'
மாளவிகாவுக்கு மண்டைக்குள்ளே கேள்விகள் குடைந்தன.
‘கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்.’
அவள் முகம் காண்பித்த அதிர்ச்சியில், அவளுடைய கண்கள் காண்பித்த வியப்பில் தன்னை மறந்தவன் அவள் விட்ட இடத்திலிருந்து தன் சீழ்க்கையைத் தொடர்ந்தவன், 'காதல்ங்கற ஒரு விஷயம் நம்மைப் பொறுத்தவரைக்கும் ஒரு அதிசயம்தான். அது இந்த ஜென்மத்தில் நமக்கு வராது' என்ற எண்ணம் தோன்ற அவனது அலுவலகம் நோக்கிப் போனான் அக்னிமித்ரன்.
அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வலிக்க வலிக்க அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப்போகிறாள் மாளவிகா என்ற அந்தப் பெண் என்பதை அப்பொழுது உணரவில்லை அவன்.
***
கவியரசுவின் பிரத்தியேக 'கேபின்'னில் அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தாள் மாளவிகா.
தன் மடிக்கணினியில், அவளுடைய சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
வெறும் இளநிலை பட்டம் மட்டும் பெற்ற, முன் அனுபவம் கூட இல்லாத ஒருத்தியை தனக்கு இணையான பதவியில் உட்கார வைத்திருப்பது அவனுக்குக் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தது.
அவன் 'பிசினெஸ் அனலிடிக்ஸ்' மற்றும் 'மீடியா அண்ட் என்டர்டைன்மெண்ட்' என இரண்டு பிரிவில் 'எம்.பீ.ஏ' பட்டம் பெற்றிருக்கிறான். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இந்தக் குழுமத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
அக்னிமித்ரன் பொறுப்பேற்ற பிறகு ஆறு வருடங்களாக அவனுக்குப் பிரத்தியேக காரியதரிசியாக இருக்கிறான். இப்படிப் படிப்பு அனுபவம் ஏதும் இன்றி அவளை இந்தப் பொறுப்பில் மித்ரன் அமர்த்தியது அவனுக்குக் கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றியது.
வேறு வழி இல்லை. அவன் சொல்வதைச் செய்துதான் ஆகவேண்டும். அன்று இவளைப் பற்றி விசாரித்துச் சொன்னதற்குப் பிறகு அதைப் பற்றி வேறு பேச்சே எழவில்லை அவர்களுக்குள்.
ஆனால் இரண்டு நாட்களுக்குப் முன்பு அவனை அழைத்தவன், "அஸ் யூஷுவல் மத்த எல்லா வேலையையும் நீயே பார்த்துக்கோ. 'அக்மி மார்க்கெட்டிங்' வேலையை மட்டும் வேற ஒருத்தங்களுக்குப் பிரிச்சு கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பரணி மேனேஜ்மேண்ட் இன்ஸ்டிடியூட்ல இருந்து செலக்ட் ஆகியிருக்காங்க. நாளைக்கு ஜாயின் பண்ணுவாங்க. பக்காவா காண்ட்ராக்ட் பண்ணிட்டு அவங்களுக்கு வேலையைக் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி குடு" எனக் கட்டளையாகச் சொல்லியிருந்தான் மித்ரன். ஆனால் இவளை இங்கே பார்த்ததில் கொஞ்சம் அதிர்ச்சிதான் கவிக்கு.
"இந்த கான்ராக்ட்ட நல்லா படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணிடுங்க" என்றவாறு அவளுக்கு முன் அவள் கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தப் பத்திரத்தை அவன் வைக்க, அதில் அவளது பதவி, 'பி.ஏ டு சேர்மேன்' என்று இருந்தது.
அவளுடைய மாத சம்பளம் மற்றும் இன்ன பிற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க, அவள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி விளக்கப்பட்டிருந்தது.
மேலும் வேலையை விட வேண்டும் என்றால் மூன்று மாத 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். தவறினால் மூன்று மாத சம்பள தொகையை அபராதமாக கட்டிவிட்டுத்தான் வேலையிலிருந்து நீங்க முடியும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க, அது கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், அது ஒரு எதார்த்த நடைமுறை என எடுத்துக்கொண்டு அதில் கையெழுத்துப் போட்டாள் மாளவிகா, அவள் அக்னிமித்ரனுக்குதான் 'பி.ஏ'வாக நியமிக்க படுகிறாள் என்பதை அறியாமலேயே.
அடுத்த நாள் காலை வழக்கமான அலுவலக நேரத்திற்கு அவளை வந்து பணியில் இணையச் சொல்லிவிட்டு அதற்கான ஆணையைக் கொடுத்தான் கவி.
அவள் அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட, ஏனோ அவனையும் அறியாமல் அவளிடம் சிறு கசப்புணர்வு அவனுக்கு உண்டாகியிருந்தது.
***
அடுத்த நாள் சரியான நேரத்திற்கு அந்த அலுவலகத்திற்குள் வந்தவள் மின்தூக்கியை நோக்கிப் போக, அங்கே சிறு கூட்டமே இருந்தது. 'நம்ம மாநகர பேருந்தே தேவலாம் போலிருக்கு. செகண்ட் இல்லனா தேர்ட் ஃப்ளோரா இருந்தா நடந்தே போகலாம்" என்ற எண்ண ஓட்டத்தில் அவள் இருக்க தூரத்திலிருந்தே அவளைப் பார்த்துவிட்ட கவி அவளைக் கைக் காட்டி அழைக்க, அவனை நோக்கிப் போனாள் மாளவிகா.
அங்கே இருந்த மின்தூக்கி திறந்தே இருக்க, அதன் உள்ளே சென்றவன், "இனிமேல் இந்த லிஃப்டை யூஸ் பண்ணிக்கோங்க மிஸ் மாளவிகா" என்று சொல்லிவிட்டு தன் கைப்பேசியை ஆராயத் தொடங்கிவிட்டான் அவன்.
மின் தூக்கி ஐந்தாவது தளத்தை அடைய, 'இன்னைக்கும் அந்த அக்னி டீ.எம்.டீ கம்பி இங்க வருமோ' என்ற எதிர்பார்ப்புடன் அவள் அந்த மின்தூக்கியின் கதவைப் பார்க்க, அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர்கள் அலுவலகம் இருக்கும் தளமும் வந்துவிட இருவரும் உள்ளே சென்றனர்.
அவளுக்கான பிரத்தியேக அலுவலக அறைக்குள் அவளை அழைத்துச்சென்று அதை அவளுக்குக் காண்பித்த கவி, "ஒரு டென் மினிட்ஸ்ல கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டுச் செல்ல, சில நிமிடங்கள் கழித்து அங்கே சென்றாள் அவள்.
அவர்கள் அலுவலக ஊழியர்கள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அங்கே குழுமி இருக்க அவளைப் பற்றிய அறிமுக படலம் முடிந்தது.
அதன் பின் அவள் அவளுடைய அறைக்கு வர, அங்கே இருந்த 'இண்டர்காம்' மூலம் அவளை அழைத்த கவி, "கொஞ்சம் வெளிய வாங்க மிஸ் மாளவிகா. நம்ம பாஸ் கிட்ட உங்களை ஃபார்மலா இண்ட்ரொட்யூஸ் செஞ்சு வெச்சுடறேன். இனிமேல் அதிகமா நீங்க அவர் கூடத்தான் இன்டராக்ட் பண்ண வேண்டி இருக்கும்" என்று அவன் சொல்ல, வெளியில் வந்தவள் அவனுடன் பத்தொன்பதாவது தளத்திற்குச் சென்றாள்.
அங்கே இருந்த அறையின் கதவைத் தட்டிவிட்டு, "யா... கம் இன் கவி” என்ற ஆளுமையான குரலைத் தொடர்ந்து உள்ளே சென்ற கவியைப் பின்தொடர்ந்து சென்ற மாளவிகா அங்கே இருந்த அக்னிமித்ரனை பார்த்து அதிர்ந்தே போனாள்.
"பாஸ், மிஸ் மாளவிகா. பரணி இன்ஸ்டிடியூட் மூலமா அப்பாயிண்ட் ஆகியிருக்கற ஸ்டாஃப்”
அவளை அங்கே வேலைக்கு நியமித்திருப்பதே அவன் திருவிளையாடல்தான் என்பது தெரிந்தே இருந்தும், கடமையே என்று கவி அவளை முறையாக அறிமுகப்படுத்த, சத்தியமாக அவள் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
அவளைப் பார்த்துக்கொண்டே, "வெல்கம் மிஸ் மாளவிகா!” என்றவாறு அவன் தன் கரத்தை நீட்டவும், மரியாதை நிமித்தம் தன் கையை நீட்டினாள் மாளவிகா. அதை அழுத்தப் பற்றி குலுக்க, அவளது உள்ளங்கையின் மென்மையில் களவு போய் அதை விட மனமில்லாமல் அவள் விரல்களைப் பார்த்துக்கொண்டே மெள்ள விட்டவனுக்கு, 'நங்கை கொண்ட விரல்களும், அவற்றின் நகமென்ற கிரீடமும் மனதைப் பறிக்க, அவனுடைய பார்வை அவளது தேன் தெறிக்கும் கன்னங்களில் பட்டுச் சிதறி அவன் உயிர் குடிக்கும் அதரங்களில் நிலைத்தது.
அவளுக்கு இருந்த அதிர்ச்சியில் அவனது பார்வைத் தீண்டல்கள் அவள் கவனத்தில் பதியாமல் போக, 'இவன் பேர்லயே நெருப்பை வெச்சிருக்கறவன். இவனையெல்லாம் தள்ளி நின்னு பாக்கறதுதான் நல்லது. அப்பா தீப்பொறி திருமுகம்.. எனக்கு நீயும் வேணாம்.. உன் வேலையும் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்' அவள் மனது எச்சரிக்கை மணியைச் சத்தமாக ஒலிக்க விட, அவள் கையையே விட மனமில்லாமல் உட்கார்ந்திருப்பவன், உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்கின் நிலையிலிருப்பவன், சுலபமாக விட்டுவிடுவானா அவளை?
விடை காலத்தின் கைகளில்.
Wow awesome
Agni onnume teriada madiri ennama nadikira rasa, unnai parthadum velai vendam nu ninaikirale anda nilamaia irukura da nee nice update dear thanks
மித்திரன் வேலை எனும் வலையை விரித்து விட்டான், மாளவிகா அதில் வந்து மாட்டிக்கொண்டால், இனி மீள்வளா, இல்லைய் மித்திரன்னை வீழ்துவாளா? பார்ப்போம் 👌👌👌👍👍👍😍😍😍
super ud sis