top of page

En Manathai Aala Vaa 29.

Updated: Oct 21, 2022

மித்ர-விகா-29

அக்னிமித்ரன் செய்துவைத்திருந்த செயலுக்கு, அவனைக் கடித்து குதறும் மனநிலையில்தான் இருந்தாள் மாளவிகா.


ஆனால் அவன் தனிமையில் போய் கைப்பேசியில் வந்த அழைப்பைப் பேசிவிட்டுத் திரும்பிய அந்த அரை மணிநேரத்தில் மோனாவுடன் பேசிய பிறகு அவள் கோபம் சற்று மட்டுப்பட்டு அவளுடைய மன இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது.


அவளுடைய கோபம் குறைந்துதான் இருந்ததே தவிர முழுவதுமாக விலகவில்லை அவ்வளவுதான்.


அவன் அந்த அழைப்பைப் பேசி முடித்துவிட்டு வந்தப் பிறகு, ஜோசப் அவனை அணைத்துக்கொண்டு, "பரவாயில்ல. நல்லாவே டேன்ஸ் பண்றீங்க மித்ரன். நான் இந்த அளவுக்கு எக்ஸ்பெக்ட் பண்ணல. பட் உங்க பீ.ஏ கொஞ்சம் சுமாராதான் ஆடறாங்க" என்றார் வெகு தீவிரமாக.


"ஆஹான்... பக்கா டான்ஸ் மாஸ்டர்ன்னு நிரூபிக்கறீங்க மாஸ்டர்ஜீ. தேங்க்ஸ்" என அவன் அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க, , தான் செய்து வைத்திருந்த செயலுக்கு அவனை நெருங்கினால் சேதாரம் நிச்சயம் என்பதை உணர்ந்து வேலையில் மும்மரமாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொண்ட கதிர் மித்ரனை நெருங்கவே இல்லை.


அதற்குமேல் பொறுமையின்றி, "மாஸ்டர்! சார் கூட கொஞ்சம் செல்ஃபீ எடுத்துக்கறோம் மாஸ்டர்! ப்ளீஸ்" எனத் தயக்கத்துடன் எல்லோரும் அவர்களைச் சூழ்ந்து கொள்ள, அதன்பின் 'செல்ஃபீ' 'ஆட்டோக்ராஃப்' என அனைத்திலிருந்தும் அவன் மீண்டுவருவதற்கு மேலும் சில நிமிடங்கள் பிடித்தன.


நடுநடுவே அவளுடைய முகத்தைதான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.


சலனமற்றிருந்த அவள் முகம் அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்க, 'இது புயலுக்குப் பின் வரும் அமைதியா இல்லை புயலுக்கு முன் ஏற்படும் அமைதியா' என ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தவன், ஒருவழியாக எல்லோரிடமிருந்தும் தப்பித்து அவளை நெருங்கி வந்து, அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மோனாவிடம், "பை மோனா! முடிஞ்சா ஃபினாலே செலிப்ரஷன்ஸ் அப்ப மீட் பண்ணலாம்" என்று சொல்லிவிட்டு, அதற்குள் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயிருந்த கதிரிடமும் ஜோசப்பிடமும் தூரத்திலிருந்தே கைக் காண்பித்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் மாளவிகாவுடன்.


காரில் அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், அவனுடன் எதுவும் பேசப் பிடிக்காமல் சாலையை வெறிக்கத் தொடங்கினாள். மோனா பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் அவளுடைய மனதிற்குள்ளே சுழன்றுகொண்டே இருந்தன.


மோனாவுடன் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு அக்னிமித்ரன் அங்கிருந்து சென்றதும், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகமாகச் சலுகை எடுத்துக்கொண்டு அவன் செய்த செயலால் அவனிடம் அளவுகடந்த கோபத்திலிருந்தவளுக்கு, அந்தக் கோபத்தை மோனாவிடம் காண்பித்து விடுவோமோ என்று கொஞ்சம் பயமாகதான் இருந்தது.


வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வரவழைக்கப்பட்ட நிதானத்துடன் மாளவிகா அவளைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தாள்.


பதிலுக்கு, விரிந்த புன்னகையுடன் வெகு இயல்பாக அவளுடைய கையைப் பற்றி, "வாங்க அங்க உட்கார்ந்து பேசுவோம்" என்ற மோனா, அங்கே போடப்பட்டிருந்த இருக்கை நோக்கி அவளை அழைத்துப்போக, இருவருமாக அங்கே போய் உட்கார்ந்து கொண்டார்கள்.


என்ன பேசுவது என்பது புரியாமல் மாளவிகா திணற, தூரத்தில் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த மித்ரனைப் பார்த்துக்கொண்டே, "மிஸ்டர் அக்னிமித்ரன் என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு பர்ஃபக்ட் ஜென்டில் மேன்” என்றாள் மோனா.


'ஜென்டில் மேன்... ம்கும்... யாரது...' என மனதிற்குள் நொடித்துக் கொண்டாலும், 'ம்' என்றாள் மாளவிகா.


"என்னை இந்த இண்டஸ்ட்ரிக்குக் கொண்டு வந்தது கௌதம்தான். அப்ப எனக்கு வெறும் செவன்டீன் இயர்ஸ்தான் தெரியுமா?” என்றாள் மோனா.


மித்ரனின் விருப்பம் இவளிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்ததால், மாளவிகா அவனுடைய சரிபாதி என்கிற உறுதியில்தான் தன் மனதிலிருப்பதை வெளிப்படையாக அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அதை உணராமல், 'இவ ஏன் இதையெல்லாம் இப்ப நம்ம கிட்ட சொல்லிட்டு இருக்கா?' என்ற கேள்விதான் எழுந்தது மாளவிகாவுக்கு.


“ஒரு பேஷன்ல, ஃபேன்டஸில ஏகப்பட்ட ட்ரீம்ஸோட சினிமால நடிக்க வந்தேன். ஆரம்பத்துல மார்க்கெட் பிக் அப் ஆகிட்டு இருந்த சமயம், ஒரு கான்ட்ராக்ட்ல சிக்க வெச்சு, தொடர்ந்து மூணு படம் கமிட் பண்ணி வேற படத்துல நடிக்க விடாம செஞ்சு என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணான்.


என்னோட ஃபேமலில இருக்கிறவங்களுக்கு பணம் மட்டும்தான் முக்கியம். யாருக்கும் என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்ல. இராத்திரி பகல்னு இல்லாம ஷூட்டிங் ட்ராவெலிங்னு ஓடிட்டே இருந்தேன். கூடவே அவனோட பாலியல் ரீதியான தொல்லைகள் வேற. ஒரு ஸ்டேஜ்ல மனசுவிட்டு பேசக்கூட ஆள் இல்லாம டிப்ரஷன் அதிகமாகிப்போய் சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணேன்”


அவள் அதை ஒரு உணர்வற்ற குரலில் வெகு சாதாரணமாகச் சொல்லவும் திக்கென்று ஆனது மாளவிகாவுக்கு. இதுபோன்ற விஷயங்கள் அவளை எப்பொழுதுமே பலகீனப்படுத்திவிடும். "ஐயோ... மை காட்" என அவள் பதறவும், "அட அதுக்காக நீங்க இப்ப ஏன் டென்சன் ஆகறீங்க? அதான் அந்த பீஸ்ட் என்னைக் காப்பாத்திட்டானே” என்று சொல்லிச் சிரித்தாள் மோனா.