En Manathai Aala Vaa-28
Updated: Oct 20, 2022
மித்ர-விகா-28
அதுவரை தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவன் சட்டென மித்ரனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து வைத்தான் கதிர். அதன் காரணம் புரியாமல் மித்ரன் நண்பனைப் முறைக்க, "என்னடா மாமா, லவுசா" எனக் கிண்டலாகக் கேட்டு, "அதெல்லாம் உன் டிசைன்லயே கிடையாதே" என்று வேறு இன்னும் அதிக நக்கலாகச் சொல்ல, அவனுடைய முகம் லேசாகச் சிவந்து போய் வெட்கம் வேறு எட்டிப்பார்த்துத் தொலைத்தது மித்ரனுக்கு.
"உன்னை கழுவி ஊத்திட்டு இருக்கேன். நீ வெக்கபடறியா? ச்சீ. கருமம்டா... இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகல" என்றான் கதிர் உண்மையான வியப்புடன்.
"மச்சான் கலாய்க்காத. கடுப்புல போட்டுத் தள்ளிடப்போறேன்" என்றான் உடனே காரமாக. உல்லாசமாக விசில் அடித்து, "அப்ப சீக்கிரமே கல்யாணம்னு சொல்லு" என்று வேறு கதிர் உண்மையான எதிர்பார்ப்புடன் சொல்ல, "நடந்தா நல்லாதான் இருக்கும். ஆனா இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னே சத்தியமா தெரியலடா மச்சான்" எனப் பாவமாக மித்ரன் சொல்லவும், "உன்னால... ஒரு பொண்ண... கரெக்ட் பண்ண முடியல. நான் இதை நம்பனும்" என வாய் பிளந்தான் கதிர்.
"நீ நம்பலன்னாலும் அதுதான் நிஜம்" என்றவனால் அவளைப் பார்த்தபடி பெருமூச்சுதான் விடமுடிந்தது.
நண்பனின் மனநிலையை ஓரளவுக்கு உணர்ந்தவனாக, "வரோம்ன்னு நீ ப்ளுரல்ல சொன்னப்ப யாரோ பிக் அப்... ட்ராப்... எஸ்கேப்பதான் தள்ளிட்டு வரியோன்னு நினைச்சேன். உன் பிஏன்னு சொன்னதும்... கவி எப்ப பொண்ணா மாறினான்னுதான் தோணிச்சு. பட் நீ இவ்வளவு பொங்கறத பார்த்தால் உன் ஆளு சரியான ராணி தேனி பரம்பரை போலிருக்கே" எனத் தீவிரமாகச் சொன்ன கதிர், "சீக்கிரமா கல்யாணம், குடும்பம் பிள்ளைகுட்டின்னு நீ செட்டில் ஆனா சந்தோஷப்படற முதல் ஆள் நான்தான் மாமே" என்றான் மனதிலிருந்து.
அப்பொழுது அங்கே வந்த மோனா மித்ரனைப் பார்த்ததும், அவனை நோக்கி வந்து, அவனுக்கு அருகில் குனிந்து, ஒரு நட்புமுறை அணைப்புடன்,"ஹை அமித், வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்" என உண்மையாகவே வியந்தாள்.
அனிச்சையாக அவன் பார்வை மாளவிகாவிடம் செல்ல, நல்ல வேளையாக அந்தக் காட்சியைப் பார்த்து வைக்காமல் பக்கத்திலிருந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவனுடைய அழகான இராட்சசி.
"ஹேய்... மோனா மேம் செட்டுக்கு வந்தாச்சு. ஷூட்டிங்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன்" என அவளுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் மற்றொருத்திச் சொல்ல, மாளவிகாவின் பார்வை மேடையை நோக்கிச் சென்றது. மித்ரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் மோனா.
அவளுடைய பேக்லஸ் பிளவ்ஸும், அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு விலை உயர்ந்த டிசைனர் புடவையை அவள் கட்டியிருந்த லட்சணமும், அவ்வளவு கடுப்பை ஏற்படுத்தியது மாளவிகாவுக்கு.
புடவையைக் கூட எப்படி கவர்ச்சியாக உடுத்துவது என்பதை இவர்களைப் போன்றோரைப் பார்த்துத்தான் பலர் கற்றுக்கொள்கிறார்களோ என்றுதான் தோன்றியது அவளுக்கு.
அருகிலிருந்த பெண்களின் உடைகளும் கிட்டத்தட்ட இப்படிதான் இருந்தன. புலியைப் பார்த்துச் சூடுபோட்டுக்கொள்ளும் பூனைகள் என்ற எண்ணத்தில், அவர்களைப் பார்த்து பரிதாபம்தான் உண்டானது அவளுக்கு.
பெண்களைக் காட்சிப் பொருளாக சித்தரிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கூட பார்க்கப் பிடிக்காது. நேரில் பார்க்க இன்னும் அதிகமாகவே பிடிக்கவில்லை.
மித்ரனின் பார்வை சென்ற திசையில் பார்த்துச் சிறு வியப்பு முகத்தில் தோன்ற, "ஹை" என்றாள் மோனா மாளவிகாவை நோக்கி.
பதிலுக்கு 'ஹை' என்று புன்னகைத்தவள், எப்பொழுது இங்கிருந்து கிளம்புவான் அவன் என்பது போல மித்ரனைப் பார்த்தாள்.
அவளுடைய பார்வையின் அர்த்தம் புரிந்தோ என்னவோ, அந்த இருக்கையிலிருந்து எழுந்தவன், "கிளம்பறேன் கதிர். நீ கூப்பிட்டன்னு பார்த்துட்டு இருந்த வேலையைப் பாதியிலயே விட்டுட்டு வந்தோம்" என மறுபடியும் அவன் பன்மையில் சொல்ல, கதிர் அவனைக் குறுகுறுவெனப் பார்த்த பார்வையில், அதன் அர்த்தத்தை உள்வாங்கி மோனா வேறு சிரித்து வைக்க, "வேணாம் சொல்லிட்டேன்" என சுட்டு விரல் காட்டி இருவரையும் எச்சரித்தவனின் குரலிலும் முகத்திலும் மென்மையும் வெட்கமும் மட்டுமே.
ஒருவாறாக அவன் அந்த மேடையிலிருந்து இறங்கவும், சரியாக அங்கே வந்து சேர்ந்தார் அந்த நிகழ்ச்சியின் நடன ஒருங்