மித்ர-விகா-27
வேறெதையும் சிந்திக்க விடாமல் நாள் முழுவதும் அவளைத் தன்னுடனேயே வைத்திருப்பதே மித்ரனுக்கு அவ்வளவு இனிமையைக் கொடுத்தது. அதுவும் உண்மையிலேயே நட்பு முகமாக அவள் பழகுவதே போதுமானதாக இருந்தது.
அவளுடைய இயல்பான பேச்சும், சின்ன சின்ன புன்னகைகளும், கைக்கெட்டும் அவளுடைய அருகாமையும் அவனை இன்னும் இன்னும் பித்தாக்கிக் கொண்டிருந்தது.
கட்டாயம் இதற்கு அடுத்த நிலை காதல்தான் என்பது புரிய, ஒரே ஒரு நொடியேனும் அவளுடைய கண்கள் அந்தக் காதலை காட்டிக்கொடுத்துவிடாதா என ஏக்கத்துடன் காத்திருந்தான்.
அப்படி மட்டும் நடந்துவிட்டால் தன் மனதை அவளிடம் சுலபமாகப் புரிய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு மலையளவு இருந்தது. அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அதே போல் அவளுக்கும் அவனைப் பிடித்தே ஆக வேண்டும்.
அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறானே ஒழிய அவளுடைய மனநிலையைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அவனுடைய பார்வையிலிருந்து மட்டுமே அவளைப் பார்ப்பவன் அவளுடைய இடத்திலிருந்தும் கொஞ்சம் அவளை எண்ணிப் பார்த்திருக்கலாம்.
முன்பு உண்டான காயத்தின் ஒரு துளி இன்னும் கூட ஆறாமல் அவளுடைய மனதில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதை அவளே அறியாதபொழுது, அவளுடைய அடிப்படையே அறியாத அக்னிமித்ரனால் எங்கே அதைப் புரிந்துகொள்ள முடியும்?
அந்தக் காயத்தை இவனே கிளறிவிடப் போகிறான் என்பதை அறியாமல் அவள் மட்டும் அவனுடைய காதலை அங்கீகரித்துவிட்டாள் என்றால் இந்த ஆயுள் முழுவதும் அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவன் கொண்டிருப்பதால் ஒரு நன்மையையும் அவளுக்கு விளையப்போவதில்லை.
காலை அலுவலகம் செல்ல தயாராகிக் காத்திருந்த மாளவிகா, வாகன ஒலிப்பானின் சத்தத்தில். "அம்மா பை" என்று சொல்லிவிட்டு வெளியில் வர, வழக்கமாக வரும் அலுவலக வாகனம் இல்லாமல் மித்ரனின் வாகனம் அவளுக்காகக் காத்திருந்தது.
'திக்' என்று ஆனது அவளுக்கு.
இரவு வீடு திரும்பும்பொழுது அவர்களுடைய கடைக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு மூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துவிடுவாள். அலுவலக வாகனம் என்றால் 'பிக்-அப்' அவளுடைய வீட்டிலிருந்தே இருக்கும்.
இதுவரை அவளை 'பிக்-அப்' செய்யவென்று அவன் வந்ததில்லை என்பதால், இப்படி வீடு வரைக்கும் அவன் வருவது என்பது இதுவே முதன்முறை. அனிச்சையாக வீட்டிற்குள் எட்டிப்பார்க்க, கல்லூரிக்குக் கிளம்ப சாத்விகா செய்துகொண்டிருந்த அலப்பறையில் துளசி அவளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். நல்லவேளையாக இவளைக் கவனிக்கவில்லை.
ஒரு பெருமூச்சுடன் வேகமாக வந்து காரில் ஏறியவளுக்கு 'ஏற்கனவே இருப்பதெல்லாம் போதாதா, இது வேறா?' என்றுதான் இருந்தது.
அந்த எண்ணத்தைப் பிரதிபலிக்குமாறு சற்று அலுப்பான குரலில், "என்ன மித்ரன் இது. என்னை பிக் அப் பண்ண நீங்க இங்க வரணுமா? ஆஃபீஸ் கேப்லயே வந்திருப்பேனே” என 'வீடு வரைக்குமெல்லம் ஏன் வந்தாய்?' என்பதை அவள் சுற்றி வளைத்துக் கேட்க, "உன்னை பிக் அப் பண்றதுல எனக்கு என்ன கஷ்டம். நீ என்னை இன்னும் ஃப்ரெண்டா கன்சிடர் பண்ணல இல்ல மாள்வி. அன்புவா இருந்தா இப்படி கேட்பியா?" எனக் கேட்டு, "என்ன மித்ரன் இப்படி சொல்றீங்க” எனக் குற்ற உணர்ச்சியுடன் அவளைக் கொஞ்சம் வருந்த வைத்தவன், "லீவ் இட்” என்று சொல்லிவிட்டு, "நம்ம வேர் ஹாவ்ஸ்ல ஸ்டாக் வெரிஃபிகேஷன்காக இன்டர்னல் ஆடிட்டர்ஸ் வராங்க. ஒரு ஹாப் அன் அவர் அங்க போய் எட்டிப்பார்த்தது வந்துடலாம். நீயும் அங்க வந்தது இல்ல...ல" என்றான்.
அவளுக்கும் அவர்களுடைய முக்கிய கிடங்கைப் பார்க்கும் ஆவல் இருக்க அதை ஆமோதிப்பது போல் மௌனமாகிப்போனாள் மாளவிகா.
காலை 'பீக் அவர்' என்பதினால் வாகனத்தை மெதுவாக நிறுத்தி நிறுத்தி ஓட்டவேண்டியதாக இருக்க, அதில் கடுப்பானவன், அந்த எரிச்சலைத் தணிக்க, 'ஆடியோ சிஸ்ட'த்தின் ஒலியைக் கூட்டவும் ஆங்கில பாடல் ஒன்று நடுவிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது.
அவனுடைய மனதை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக அந்தப் பாடல் வரிகள் அமைத்திருக்க, அந்தப் பாடலுடன் கூடவே சீழ்க்கை அடிக்கத் தொடங்கினான் அவன்.
அவளுடைய இயல்பான ஒரு பழக்கத்தை அவன் தனதுமாக்கி வைத்திருப்பதால் ஒரு நொடி திரும்பி அவனை இரசனையுடன் பார்த்துவிட்டு அடுத்த நொடியே சாலையில் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் மாளவிகா.
'பஸ்ல போனா இன்னும் நல்லா வேடிக்கைப் பார்க்க முடியும். என்ன இந்த டைம்ல ஜன்னலோர சீட் கிடைக்காது...ம்' இப்படிப்பட்ட எண்ணம்தான் அவளுடைய மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அவளுடைய மனநிலை இப்படி இருக்க, சுந்தர தமிழ்ப்பாடலாக இருந்திருந்தால் கூட அதன் வரிகளை ஆராய்ந்திருக்க மாட்டாள். இதில் இந்தப் பாடலை எங்கிருந்து?
உண்மையில் கடுப்பாகிப்போனான் மித்ரன்.
ஒரு வழியாக அவர்களுடைய கிடங்குக்கு வந்து சேர்ந்து இருவருமே வேலையில் மூழ்கிப்போக, அரை மணிநேரம் என்பது ஒரு மணிநேரத்தையும் கடந்து போய்க் கொண்டிருந்தது.
அப்பொழுது அவனுடைய கைப்பேசி இசைக்க அவனுடைய நெருங்கிய நண்பனும் அவர்களுடைய தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியின் இயக்குநருமான கதிர் அழைத்திருந்தான்.
அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை மித்ரன் வாங்கியது முதலே அவன் கூடவே இருப்பவன். அவனுடைய திருமணத்திற்கு முன்பு வரை மித்ரனுடைய ஃபிளாட்டில் அவனுடன் தங்கியிருந்தவன். அவனுடைய நலம் விரும்பி, எல்லாம்.
சில பல திட்டுகளை எதிர்பார்த்தே உல்லாசமாக அவன் அந்த அழைப்பை ஏற்க, அவனுடைய எண்ணத்தைப் பொய் ஆக்காமல், "அறிவிருக்காடா உனக்கு" என்றுதான் தொடங்கினான் கதிர்.
"அடங்குடா” என அதட்டி, "சொல்ல வந்ததைச் சொல்லு" என சிரிக்க, மேலும் சில அர்ச்சனைகளுக்குப் பிறகு, "ஆடி வா தமிழா, இந்த சீசன் ஆரம்பிச்சு ஒரு நாளைக்காவது நம்ம செட்டுக்கு வந்தியா நீ" எனக் காய்ந்தான் அவன்.
"ப்ச்... கதிர், உன் ஷோதான் அஸ் யூஷுவல் டீஆர்பில பட்டையைக் கிளப்புதே. அது போறாதா. அதை நான் வந்து பார்த்துதான் தெரிஞ்சிக்கணுமா?" என அலுத்துக்கொண்டவன், "நம்ம சேனல்ல எவ்வளவு ஷோஸ் டெலிகாஸ்ட் ஆகுது? எல்லா செட்ஸ்க்கும் நான் போய் நிக்க முடியுமாடா?' என்றான் மித்ரன்.
"அது எப்படிடா முடியும். ஆனா என் செட்டுக்கு வா. ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு செலிபிரிட்டியைக் கொண்டு வந்து சென்சேஷன் கிரியேட் பண்றோம். அப்படி இருந்தும் நம்ம இந்தப் புது செட் ஆஃப் பார்ட்டிசிபன்ட்ஸ்க்கு உன்னை பார்க்கணுமாம். அக்னிமித்ரன் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்தான, நீங்க இன்வைட் பண்ண கூடாதான்னு இங்க எக்கச்சக்க நேயர் விருப்பம். இன்னைக்கு முடிஞ்சா வாயேன்" என்றான் கதிர் சலுகையாக.
'மாளவிகாவையும் அங்கே அழைத்துச்சென்றால் என்ன?' என்ற எண்ணம் தோன்ற, அந்த இடத்திற்கு ஏற்றாற்போல அவளுடைய ஒப்பனைகள் இருக்கிறதா என்கிற ரீதியில் ஒரு நொடி அவனுடைய பார்வை அவளிடம் சென்றது.
அங்கே அடுக்கிச்வைக்கப்பட்டிருந்தப் பொருட்களைப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அவர்கள் நிறுவனத்தின் அக-தணிக்கை ஊழியர்களுடன், கையில் வைத்திருந்த கோப்பைக் காண்பித்து இயல்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தவள் எப்பொழுதும் போல அவன் கண்களுக்கு பேரழகியாகதான் தெரிந்தாள்.
தேன் நிறத்தில், அன்னம் போன்று எம்பாஸ் டிசைன் செய்யப்பட்ட இட்டாலியன் கிரேப் புடவையும் அதற்குப் பொருத்தமான கருப்பில் தேன் நிறம் கலந்த பூக்கள் போட்ட கலம்காரி பிளவுசும் அணிதிருத்தாள்.
மெல்லிய தங்கச் சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த பெண்டண்ட்டும் அதே டிசைனில் தோடும், கைகளில் ஒற்றைக் கண்ணாடி வளையல்களும் புடவைக்குப் பொருத்தமான நிறத்தில் அணிந்திருந்தாள்.
திருத்தமாகப் பின்னலிட்ட அடர்ந்த கூந்தல் அவளது இடை வரை நீண்டிருந்தது.
அனைத்தையும் தாண்டிய அவளுடைய கம்பீரம் எந்தச் சூழலுக்கும் அவள் பொருந்துவாள் என்று சொல்ல, அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் அவனைப் பார்த்து 'என்ன' என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
வேலெனப் பாய்ந்த அவளது மையிட்ட விழிகளுக்குள் கலந்து காணாமல் போனவன், 'ஒன்றுமில்லை' எனக் கண்களால் பதில் சொல்லியவாறே, "சரிடா கொஞ்ச நேரத்துல வரோம்" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
உடனே அவர்களுக்கு அருகில் சென்றவன், "முடிஞ்சிருச்சா மாளவிகா? நாம கிளம்பலாமா?" என்றான் மித்ரன். அவன் சொன்ன விதம் உடனே கிளம்ப வேண்டும் என்பதைச் சொல்ல, "இல்ல சில கொய்ரீஸ்க்கு இன்னும் பதில் சொல்லணும்" என்றாள் தயக்கத்துடன்.
"பரவாயில்ல, அதை நம்ம மேனேஜர் பார்த்துப்பார். நீங்க கிளம்புங்க" என்றவன், அந்த கிடங்கின் பொறுப்பாளரை அழைத்து அந்த வேலையை அவரிடம் ஒப்படைத்து விட, கிளம்பினர் இருவரும்.
***
சென்னை புறநகர் பகுதியில்அதிக பரப்பளவைக் கொண்டு அமைந்திருந்தது 'வீனஸ் ஸ்டுடியோஸ்'.
வீனஸ் தொலைக்காட்சி தயாரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் அங்கேதான் நடந்தன.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தளங்கள் என அரங்கங்கள் அமைக்கப்பட்டு பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது அவனது அந்த ஸ்டூடியோ.
அதன் வாகன நிறுத்தமே, அங்கே வரும் பிரபலங்களின் நிலைமைக்கு ஏற்றாற்போல அவ்வளவு படாடோபமாக இருந்தது. முதன்முதலாக அங்கே வருபவள் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து போனாள் மாளவிகா.
அங்கே இருந்த ஒவ்வொரு அரங்கத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டே 'ஆடி வா தமிழா' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடக்கும் அரங்கத்திற்கு அவளை அழைத்து வந்தாந்தான் மித்ரன். அந்த அரங்கம் முழுவதும் இளமையின் துள்ளலுடன் காட்சி அளித்தது.
விடியற்காலைத் தொடங்கிய அன்றைய முதல்கட்டப் படிப்பிப்பு அப்பொழுதுதான் முடிந்து இடைவேளை விடப்பட்டிருந்ததால் எல்லாருமே சிறு ஓய்விலிருந்தனர்.
ஜோடி ஜோடியாக அந்த நடன நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் எல்லோரும் விதவிதமான ஒப்பனைகளில் கண்களில் கனவுகளைச் சுமந்துகொண்டு களைத்துப்போய் அவர்களுக்கான பகுதியில் உட்கார்ந்திருந்தனர்.
நடன இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கேமரா மேன்கள் என அனைவரும் அவனுக்கு முகமன்களைத் தெரிவிக்க, பார்வையாளர்களாக வந்திருந்தவர்களுக்கு எதையோ விளக்கிக்கொண்டிருந்த கதிர் அக்னிமித்ரனை பார்த்ததும், "ஹை மித்ரன்" என்றவாறு அவனை நோக்கி ஓடி வந்தான்.
அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களில் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, அந்த அரங்கத்திலிருந்த அனைவரின் கண்களும் மித்ரனிடமே இருந்தது. அவனுடன் இணைந்து வந்ததால் மாளவிகாவும் அவர்களுடைய பார்வை வட்டத்திற்குள்தான் இருந்தாள். அது சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவளுக்கு.
"ஹைடா” எனக் கதிரை நோக்கிச் சொன்னவன் அந்த அரங்கத்தைக் கண்களால் அளந்தவாறே, "இது என்ன அடுத்த எபிசொட்காக போட்டிருக்கிற செட்டா? லூக்கிங் குட்" என்றான் மித்ரன்.
"எல்லாம் நம்ம கலை அலங்காரத்தோட கைவண்ணம்தான்" என்ற கதிரின் பார்வை ஆராய்ச்சியுடன் மாளவிகாவை நோக்கி போக, 'என்னோட பியான்சி!' என்று சொல்ல ஆசைதான் மித்ரனுக்கும். அதற்கான நேரம்தான் இன்னும் வரவில்லையே! அதனால், "இவங்க மாளவிகா. என்னோட பீஏ" என அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் வேறு வழி இல்லாமல்.
"ஹை” என்றவாறே கதிர் மித்ரனின் கையைப் பற்றி லேசான அழுத்தம் கொடுக்க, அதில் 'கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்' என்ற செய்தியும் இருக்க, அங்கே மேடைமேல் போடப்பட்டிருந்த நடுவர்களுக்கான இருக்கையைச் சுட்டிக் காண்பித்து, "மால்ஸ், கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு நண்பனுடன் சென்றான் மித்ரன்.
, மிகப்பெரிய லேசர் திரையுடன் கூடிய அந்த அரங்கம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் பங்குபெறும் ஜோடி அவர்கள் குழுவுடன் ஆட தகுந்தபடி சற்றுப் பெரிய மேடை அமைக்கப்பட்டிருக்க, அதன் ஒரு ஓரத்தில் நடுவர்களுக்கான நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
அதன் நேர் எதிர் முனையில் சிறப்பு விருந்தினருக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் பார்வையாளர்களுக்கான இருக்கைகளும் மற்றொரு புறம் போட்டியாளர்களுக்கான இருக்கைகளும் சற்றுத் தாழ்வாக போடப்பட்டிருந்தன.
அவன் சொன்னதைக் கவனிக்காமல் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சிலபேர் அமர்ந்திருக்க, அவர்களுடன் போய் உட்கார்ந்துகொண்டாள் மாளவிகா.
அதைப் பார்த்தவனின் முகம் சட்டென இறுகவும் நண்பனைக் கேள்வியாகப் பார்த்தான் கதிர். உடனே தன் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு, "இந்த சோஃபா நல்லா இருக்கு கதிர். ஸ்பெஷல் கெஸ்டுக்காக டிசைன் பண்ணதா? இந்த எபிசொட்கு யார் வராங்க?" என்றவாறு மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டான் மித்ரன்.
ஒரு பிரபல நடிகையின் பெயரைக் சொல்லியவாறு அருகிலே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் கதிர். அதன் பிறகு அவர்கள் பேச்சு அவர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி முற்றிலும் தொழில் சம்பந்தமாக இருக்க அக்னிமித்ரனின் கண்கள் அடிக்கடி மாளவிகாவிடமே சென்று மீண்டது.
கிட்டத்தட்ட சிம்மாசனம் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த அந்த இருக்கையில் தோரணையாக கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருவனின் தோற்றத்தில் ஒரு நொடி மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது மாளவிகாவுக்கு.
அவளுடைய பதின்ம வயதில், அவன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை அவனுக்காகவே காத்திருந்து அவள் பார்த்து பார்த்து இரசித்த தோற்றம். இந்த சில வருடங்களில் இன்னும் கம்பீரம் கூடிப்போய் அவள் தனக்குத் தானே போட்டுக்கொண்டிருக்கும் தடைகளையெல்லாம் தகர்க்கும் தோற்றம்.
'அவனைப் பார்க்காதே?' என அவளுடைய அறிவு அவளுக்கு விடுக்கும் எச்சரிக்கைகளையெல்லாம் அவளுடைய உணர்வு கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவளைப் பழிவாங்கிக்கொண்டிருக்க, நண்பனின் பார்வை போகும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்த கதிரின் ஆராய்ச்சிப் பார்வை அவளையும் விட்டு வைக்கவில்லை.
Comments