top of page

En Manathai Aala Vaa-26

Updated: Oct 19, 2022

மித்ர-விகா-26


மாளவிகா சிந்திய சிறு புன்னகையே போதுமானதாக இருந்தது மித்ரனுக்கு, அவளுடைய மாற்றத்தை உணர்ந்துகொள்ள. இதை விட்டு விடாமல் அப்படியே தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்கிற சிறு பதட்டம் அவனுக்கு.உண்டானது


அவனையும் அறியாமல் ஒரு வித புதிய உணர்வு அவனை ஆட்கொள்ள,அந்த நான்கு சுவர்களுக்குள் மூச்சு முட்டுவது போல் தோன்றவும், "மாள்வி. ஃபுட் வர ஃபியூ மினிட்ஸ் ஆகும். அதுவரைக்கும் வெளியில வேடிக்கை பார்க்கலாம் வா” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்த அவனுடைய அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.


அவள் தயங்கியபடி அப்படியே நிற்கவும், மறுபடியும் வெளியில் வந்தவன், "இந்த ரூம் குள்ள வந்ததே இல்லையா நீ?" என்றவன், "அந்த சம்பவத்தை நீ மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். எனக்கு என் குரல்வளை ரொம்ப முக்கியம். அதனால தைரியமா வா" என்று சொல்லிச் சிரித்தவன், உள்ளே செல்லவும், "வேடிக்கை பார்க்கணும்னா வெளியில போகணும். இப்படி ரூம் குள்ள போனா என்னன்னு நினைப்பாங்க" எனக் கேட்டுக்கொண்டே, அடக்கப்பட்ட சிரிப்புடன் மாளவிகா அவனைப் பின்தொடர்ந்து வர, "வந்து பார்த்தால்தான தெரியும்?" என்றவன் அவனுடைய அறையின் மற்றொரு கதவைத் திறந்தான்.


மெத்து மெத்தென கால்கள் அமிழும் அளவுக்கு நேர்த்தியுடன் பராமரித்து வைத்திருக்கும் புல் தரையும், வரிசையாக அணிவகுத்திருக்கும், பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தொட்டிகளும், மெல்லிய சங்கீதமாக சலசலத்துக்கொண்டிருக்கும் சிறிய செயற்கை நீரூற்று ஒன்றுமாக அங்கே இருந்த அகன்ற பால்கனியைப் பார்த்து, "வாவ்" என்றவாறு விழி விரித்தாள் அவள்.


அவளுடைய செவிக்கு அருகில் குனிந்து, "பிடிச்சிருக்கா?" என ஐஸ்க்ரீம் தடவிய குரலில் அவன் மிக மென்மையாகக் கேட்கவும், திடுக்கிட்டவள் அவன் மீதே மோதி தடுமாற, அவளுடைய கையை மட்டுமே பிடித்து அவளை நேராக நிற்க வைத்தவன், பயந்தவன் போல தன் கைகளைத் தூக்கியபடி, "உன்ன வேணும்னே டச் பண்ணல... ஸோ வன்முறை தாக்குதலிலெல்லாம் ஈடுபடக்கூடாது” என்றான் கொஞ்சம் கிண்டலாக.அவனது பாவனையைக் கண்டு கலகலவெனச் சிரித்தவள், "இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு அக்னி. இவ்வளவு ரசனையா இதை மெயின்டைன் பண்றதுக்காக உங்களைப் போனாப்போகுதுன்னு விடறேன்" என்று சொல்லிவிட்டு, அந்த பால்கனியின் கைப்பிடிச் சுவரின் அருகில் செல்ல, "ஏய் மால்ஸ். அவ்வளவு கிட்ட போகாத. நாம இருக்கறது ஃபிப்டீன்த் ப்ளோர் ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று பதறியவாறு அவளுக்கு அருகில் வந்து நின்றான் மித்ரன். அவன் சொன்ன எதையும் காதில் வாங்காமல், "ஆஸம்" என்றாள் அவள்.


அங்கிருந்து பார்க்கத் தமிழ்நாட்டின் தலைநகரத்தின் ஒரு முக்கிய பகுதி விழிகள் முழுவதும் நிறைந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்பொழுதுமே அருகிலிருந்து பார்க்கும், சாலையில் ஊர்ந்துபோகும் வாகனங்கள் வெகு தூரத்தில் குட்டிக் குட்டியாகவும், தூரத்து வானத்தில் சிறிதாகவே பார்த்துப் பழக்கப்பட்ட ஏரோபிளேன் ஒன்று அப்பொழுதுதான் டேக் ஆஃப் ஆகி மேலே எழும்பிக்கொண்டிருக்கவும், அதை மிக அருகில் ஒரு புதிய பரிமாணத்தில் அதன் 'ஹோ'வென்ற இரைச்சலிலிருந்து தப்பிக்க தன் காதுகளை இரு கைகளாலும் பொத்தியவாறு பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவ்வளவு குதூகலமாக இருந்தது.


தினம் தினம் பார்த்தாலும் கூட இந்தக் காட்சிகள் அவனுக்கும் சலிப்புத்தட்டுவதில்லை. ஆனால் அன்று அதை இரசிக்கத்தோன்றாமல், இரசிக்கும் அவளை இரசிக்கத் தொடங்கினான் மித்ரன்.


அவனைப் பொறுத்தவரை அவளைச் சுனாமியாய் சுருட்டி தன் கைகளுக்குள் கொண்டு வரும் தாபமும் அவளுடைய செம்பவள இதழ்களைச் சுவைக்கத் துடிக்கும் மோகமும் போட்டிப்போட்டுக் கொண்டிருந்த பொழுதிலும், அவளை இந்த ஆயுள் முழுவதும் தன்னுடன் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எச்சரிக்கையில் இதையெல்லாம் செய்யத் தடை விதித்துக் கொண்டிருந்தது அவளுக்கான அவனுடைய காதல்.


இதைச் சொன்னால் அவள் நம்பக்கூட மாட்டாள் என்கிற எண்ணம் வேறு ஒரு பக்கம் அவனைப் பாடாய்ப் படுத்த கலவையான உணர்வுகளுடன் கண்களை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.


அவனுடய பார்வை தன்னையே தொடருவதை உணர்ந்தவள், திரும்பி அவன் கண்களைச் சந்திக்க, அந்தப் பார்வையின் தாக்கத்தில் முகம் சிவந்துபோய், அதில் குடிகொண்டிருப்பது காதலா தாபமா என்பதை உணர முடியாமல், தன் பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.


அதில் மேலும் குதூகலித்தவன் தன் பார்வையை அகற்றிக்கொள்ளாமல் மேலும் மேலும் அவள் விழிகளில் மூழ்கத்துடிக்க, சூழ்நிலை உணர்ந்தவள், தன் தயக்கத்தை உதறித் தள்ளியவளாக, நேர்கொண்ட பார்வையுடன், "உங்களோட இந்த டெம்பரரி ரிலேஷன்ஷிப்லாம் எனக்கு செட் ஆகாது அக்னி. என்னோட வாழ்க்கை முறைக்குத் தகுந்த மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டு மனசுல கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம, இயல்பான ஒரு வாழ்க்கை வாழணும்னு நினைக்கறேன். கல்யாண வாழ்க்கையைப் பத்தி பெருசா எனக்கு வேற எந்த கனவும் இல்ல. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்று சொல்லிவிட்டு ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள் மாளவிகா.


அவளுடைய அந்த பேச்சில் அவனுடைய தன்மானம் அடிபட்டு குற்றவுணர்ச்சி மேலோங்க மோகம் மொத்தம் வடிந்துபோய், இந்த நிலையைச் சபித்தபடி சில நிமிடங்கள் அப்படியே நின்றவன் தலைக்கு மேல் பறந்த ஏரோப்ளேனின் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தான்.


அவன் உள்ளே வந்த பொழுது அவர்களுக்காக வந்திருக்கும் உணவை மேசையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் அவள். இப்பொழுது எதைச் சொன்னாலும் அவள் நம்பப்போவதில்லை என்ற உறுதியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏதோ யோசனையுடன் அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவனுடைய முக மாறுதல்களை உணர்ந்தவள், "அக்னி ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கணும்” என்றவளை ‘சொல்லு...' என்பது போல பார்த்தான் அவன்.


“இந்த பெட்டை நான் எப்பவுமே சீரியஸா எடுத்துட்டது கிடையாது”


'பெட்டவாது ஒண்ணாவது. உன்னை டைவர்ட் பண்ணி என் கூடவே இருக்க வைக்க நான் சும்மா இப்படி இழுத்துவிட்டேன் அவ்வளவுதான்.'