En Manathai Aala Vaa - 25
Updated: Oct 19, 2022
மித்ர-விகா-25
அதிரடியாகவோ அல்லது அமைதியாகவோ சமயத்திற்குத் தகுந்தவாறு புத்தி சாதுரியத்துடன் பிரச்சனைகளைக் கையாளும் திறன் அக்னிமித்ரனிடம் கொஞ்சம் அபரிமிதமாகவே இருப்பதால், தம்பியுடைய தயவு விக்ரமுக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படும்.
தவறே செய்தாலும் அவனைத் தட்டிக்கேட்கும் துணிவு மூத்தவனுக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை.
ஆனாலும் எல்லை மீறும் இவனுடைய அராஜகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க இயலாமல், "அவன் நம்ம கம்பெனில ஒர்க் பண்ற ஆயிரம் பேர்ல ஒருத்தன், அவ்வளவுதான். இந்த அளவுக்கு நேரடியா இறங்கி வந்து அவன் கிட்ட பிரச்சனை பண்ணனுமா நீ?" என மித்ரனிடம் கேட்டேவிட்டான்.
மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு வந்திருந்தனர் அண்ணனும் தம்பியும்.
சூடான சூப்பை ஊதிச் சுவைத்தவன், "விடுண்ணா... இப்ப என்ன அதைப் பத்தி” என அந்தப் பேச்சிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் சொன்னான் மித்ரன்.
அவன் சொன்ன தொனியிலேயே அவனுக்கு இந்தப் பேச்சில் உடன்பாடில்லை என்பது புரிந்தாலும் மனதிலிருப்பதைச் சொல்லிவிடவேண்டும் என்ற உந்துதலில், "இது பிசினஸ் மேட்டர்னா நானே கவலைப்பட்டிருக்க மாட்டேன். பொண்ணு விஷயமோன்னு...” என அவன் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வர, அடக்கப்பட்ட கோபத்துடன் இளையவன் பார்த்த பார்வையில் அப்படியே அடங்கிப்போனான் விக்ரம்.
அதன் பின் மௌனமாக இருவரும் சாப்பிட்டு முடிக்க, அண்ணனை அவனது அலுவலகத்தில் இறக்கிவிட்டவன் மனம் கேட்காமல், "அண்ணா! நான் யோசிக்காம ஒரு விஷயம் செய்யமாட்டேன் அப்படிங்கற நம்பிக்கை உனக்கு இருக்கில்ல" என்று கேட்க, ஆமோதிப்பாகத் தலை அசைத்தவன், "ஆனாலும்" என்று இழுக்க, அதிலேயே அவனுடைய சஞ்சலம் வெளிப்பட, "கவலைப்படாதண்ணா... எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன். இதனால நமக்குள்ள எந்த கான்ட்ரவர்சியும் வேணாம்" என்று சமாதானமாகச் சொல்லிவிட்டு, "ஓக்கேடா டேக் கேர்" என்றவாறு உள்ளே சென்ற அண்ணனின் முகம் சற்றுத் தெளிவடைந்திருக்கவும் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான் மித்ரன்.
***
அக்னிமித்ரன் அவனுடைய ஃப்ளாட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க அவனது கைப்பேசி இசைத்தது. அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் ஒரு புன்முறுவலுடன்' "சொல்லு டாலி” என்றவாறு அவன் அழைப்பை ஏற்கவும், "சித்து. நீ இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வா. நாம ஒண்ணா டின்னர் சாப்பிடலாம்" என்றாள் சாம்பவி, விக்ரமின் மகள்.
"இல்ல டாலி... சித்துக்கு முக்கியமான வேலை இருக்கு" என அவன் மென்மையாக மறுக்க, "சித்தூஊஊஊ" எனப் பிடிவாதமாக அழைத்தவள், "அதெல்லாம் முடியாது. உன் வேலையெல்லாம் எனக்காக கேன்சல் பண்ணு. நாளைக்கு எங்களுக்கு ஹாலிடே. ப்ரொஜெக்டர்ல கனெக்ட் பண்ணி... நம்ம வீனஸ் சேனல் ஆப்ல ஏதாவது மூவி பார்க்கலாம். தென் இன்னைக்கு நைட் நீ என் கூடவும் அண்ணா கூடவும்தான் படுத்துக்கணும்" என முடிக்க, மகளின் கட்டளையை மறுக்க இயலாமல், "ஓகே... என் டாலி சொன்னா சரிதான்" என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது அவனால்.
காலை, அனைவருமாக ஒன்றாக உட்கார்ந்து வழக்கமான கெஞ்சல்களும் கொஞ்சல்களுமாகக் காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும், இதையேதான் அவனுடைய அப்பா பரமேஸ்வரனும் கூட சொன்னார்.
"ஈவினிங் அவனை இங்கேயே வந்துட சொல்லு தீபா. யாருமே இல்லாத மாதிரி எதுக்கு எங்கேயோ போய் தனியா இருக்கணும்" என அவனுடைய அம்மாவை அவர் தூதுவிட, தீபாவும் இயலாமையுடன் மகனைப் பார்த்து வைக்க, அவருடைய, தம்பியை முறைத்தபடி அமர்ந்திருந்த அவனுடைய அத்தையை ஒரு பார்வை பார்த்தபடி, வேறெந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
சில வருடங்களாக மித்ரனும் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்க, பரமேஸ்வரனும் இளைய மகனுடைய விஷயங்களில் தலையிடுவதே இல்லை. ஏதாவது விஷயத்தில் இவன் அத்துமீறிப் போனால் கூட அன்னை மூலமாக அவரது அதிருப்தி இவனுக்குத் தெரியவரும்.
அதை அலட்சியப்படுத்தமாட்டான் என்றாலும் அவருக்காக இறங்கி வந்தது போல காட்டிக்கொள்ளவும் மாட்டான். அதே வீம்பில்தான் இன்றும் அங்கே போக வேண்டாம் என அவன் முடிவு செய்திருக்க, அதை உடைத்துவிட்டாள் அவனுடைய குட்டி தேவதை. புன்னகையுடன் தன் பாதையை மாற்றிக்கொண்டான் மித்ரன்.
அந்த மாளிகைக்குள் அவனுடைய கார் நுழைந்ததுமே உள்ளே இருந்து ஓடிவந்தாள் சாம்பவி. அவன் வாகனத்தை நிறுத்திவிட்டு வரவும் 'சித்து' என்ற அழைப்புடன் துள்ளலாக வந்து அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டவள், "நான் கூப்பிட்டதாலதான வந்த" என்று கேட்க, "ஆமாம்டா குட்டி" என அவளுடைய உச்சியில் இதழ் பதித்தான்.