மித்ர-விகா-24
அடுத்த நாள் காலை, உறக்கமோ மயக்கமோ ஏதோ ஒன்றிலிருந்து தெளிந்து கண் விழித்தான் மித்ரன்.
கைகளை ஊன்றி அவன் படுத்திருந்த கட்டிலிலிருந்து அவன் எழுந்திருக்க முயலவும், வலது கையில் சுருக்கென்ற வலி எழ, பார்த்தால் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டு ஐ.வி கதீட்டர் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.
அவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அவர்களுடைய குடும்பத்திற்கான பிரத்தியேக அறையில்தான் இருக்கிறான் என்பது விளங்க நிமிர்ந்து பார்த்தால் அவனை முறைத்தபடி அருகிலிருந்த கௌச்சில் உட்கார்ந்திருந்தான் விக்ரம்.
"டேய் அண்ணா. இதெல்லாம் அந்த ஷண்முகம் பார்த்த வேலைதான? எனக்கு இப்ப என்ன ஆச்சுன்னு இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணி வெச்சிருக்க" என அவன் சீற, "அடங்குடா, இல்லன்னா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன்" எனத் தம்பியின் பலவீனம் அறிந்து அதில் அடித்தவன், "பின்ன கேக்க மாட்ட நீ. ஏதோ பார்ட்டி ட்ரிங்தான பண்றன்னு கொஞ்சம் கண்டுக்காம விட்டா, இப்படி மொடா குடிகாரன் மாதிரி குடிச்சிட்டு விழுந்து கிடக்க. ஷண்முகண்ணா மட்டும் கவனிச்சிட்டு ஃபோன் பண்ணலேன்னா என்ன ஆகியிருக்கும் தெரியுமா?" எனப் பதிலுக்கு எகிறிய விக்ரம், "இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆனந்த் அங்கிள் வருவாரு. மிச்சம் மீதிக்கு அவர்கிட்ட வாங்கி கட்டிக்கோ" என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன், "என்னடா... லவ்வா?" என்று கிண்டலுடன் கேட்க, அதிர்ச்சியும் சிறு வெட்கமும் போட்டிப்போட்டுக்கொண்டு எட்டிப்பார்த்தன மித்ரனின் முகத்தில்.
அதைக் கவனித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்த விக்ரம், "டேய் மிஸ்டர் லயன். யார்டா உன்னோட அந்த லயன்னஸ்?" என்று வேறு விடாமல் கேட்டு வைக்க, "டேய்... வேணாம் விட்டுடு... ஹாஸ்பிடல்னு கூட பார்க்கமாட்டேன்" எனப் போலியாகக் கோபப்பட்டான் மித்ரன்.
அதற்குள் கதவைத் தட்டிவிட்டு, அவர்களுடைய குடும்ப மருத்துவரான ஆனந்த் உள்ளே நுழைய, “குட் மார்னிங் அங்கிள்” என்றான் விக்ரம். கூடவே மித்ரனும் காலை வணக்கத்தைச் சொல்ல, "உன்னுடைய குட் மார்னிங் அக்ஸப்டட்" என விக்ரமை பார்த்து சொன்னவர், "இந்த மார்னிங்க்ல என்ன குட்...டை கண்ட நீ. நேத்து ராத்திரி டாஸ்மாக் குடிகாரனவிட கேவலமா குடிச்சிட்டு மட்டையாகி கிடந்திருக்க. விக்ரம் மட்டும் உன்னை இங்க கொண்டுவந்து போடலன்னா டீஹைரேஷன்ல நாக்குத் தள்ளி செத்திருப்ப. அப்பறம் இது ரொம்ப பேட் மார்னிங்கா இருந்திருக்கும்" என எகத்தாளமாக அவனைக் கடிந்துகொண்டார்.
குற்ற உணர்ச்சியுடன், "அங்கிள்…" எனப் பதில்சொல்லமுடியாமல் அவன் இழுக்க, "இந்த ஒரு தடவ போனாப்போகுது ஒழிஞ்சு போன்னு விடறேன். மறுபடியும் இது போல செஞ்சு வைக்காதே" என உரிமையுடன் அவனைக் கண்டித்தார் அவர்.
அவர் அறியாமல் விக்ரம் வேறு அவனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கவும், அவருக்கு எதிரே அண்ணனை முறைக்கக்கூட இயலாமல், நல்லவன் போல முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதோ ஆக்சிடென்டலா நடந்துபோச்சு. ஃப்ரீயா விடுங்க அங்கிள்" எனச் சலுகையுடன் சொல்ல,
"போடா உன்னால ராத்திரி வீட்டுக்கே போகல. இப்ப போனா பொண்டாட்டி கையால தரும அடி நிச்சயம்" எனப் பரிதாபமாக அவனைப் பார்த்து முறைத்தவர் விக்ரமிடம், "எல்லாம் நல்லா தெளிஞ்சுட்டான், போய் பொழப்ப பார்க்க சொல்லு, கைல இருக்கறதெல்லாம் பிடுங்கிப்போட சொல்லி சிஸ்டர் கிட்ட சொல்லிட்டுப் போறேன்" என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த மூத்த மருத்துவர்.
"இதெல்லாம் அவரா பேசினதா இல்ல நீ அவரை அப்படிப் பேச வெச்சியா" என மித்ரன் விக்ரமிடம் கடுப்புடன் கேட்க, "ஹா ஹா... இதை நான் வேற அவருக்குச் சொல்லி கொடுக்குமா என்ன? உன்னை அப்படி பார்க்கவும் நைட்டே செம்ம கடுப்பாயிட்டார் மனுஷன்.
உன்ன இப்படி தனியா விட்டுவெச்சிருக்கறதே தப்புன்னு என்ன எகிறு எகிறினார் தெரியுமாடா அவர். இந்த நேரத்துக்கு டேட்க்கு தகவல் போயிருந்தாலும் போயிருக்கும்.
என்ன, என்னைத் திட்டி சொன்ன அதே விஷயத்த அவர்கிட்ட கொஞ்சம் ஸாஃப்ட்டா சொல்லியிருப்பார் ஆனந்த் அங்கிள், அவ்வளவுதான்" என அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பரமேஸ்வரனிடமிருந்து விக்ரமுக்கு அழைப்பு வந்தது.
"அவன் கிட்ட பேசி நேரா அவனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வர வழியைப் பாரு. இங்க வந்து பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு ஆஃபிஸ் போகட்டும்" என்று கொஞ்சம் இறங்கிய குரலில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
உடனே 'உங்க அம்மாவுக்கு இந்தக் கூத்தெல்லாம் தெரியாது' என்று ஒரு வாட்ஸாப் குறுந்தகவல் வேறு அவரிடமிருந்து வந்தது.
மித்ரனிடம் அனுமதியும் கேட்கவில்லை தகவலும் சொல்லவில்லை. ஓட்டுநரிடம், வாகனத்தை நேராக அவர்களுடைய வீட்டிற்குச் செலுத்தச் சொன்னான் விக்ரம். அன்னையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மித்ரனும் மறுப்பு சொல்லவில்லை.
இருவரும் மௌனமாக வீட்டிற்குள் நுழைய, அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் விகசித்தது அவனுடைய அம்மா தீபலக்ஷ்மியின் முகம்.
"ஹேய் மித்து. நீ என்னடா இப்படி திடீர்னு இங்க வந்து நிக்கற?” என வியந்தவர், விக்கி... நீ நேத்து நைட் இவன் ஃப்ளாட்லயா தங்கின?" என மூத்தவனைக் கேள்வி கேட்க, சட்டென பொய்யான ஒரு பதிலைச் சொல்லத் தோன்றாமல் உண்மையையும் சொல்ல முடியாமல் அவன் ஸ்தம்பித்து விழிக்கவும், "தீபா பசிக்குது... உன் செல்ல பிள்ளையைச் சீக்கிரம் சாப்பிட வரச்சொல்லு” என்ற பரமேஸ்வரன் மகனின் நிலை உணர்ந்து.
கூடவே, "விக்ரம் நீயும் ரெப்பிரேஷ் பண்ணிட்டு வாப்பா" என்று பொறுமையாகச் சொல்லவும் ஆச்சரியம் தாங்கவில்லை தீபாவுக்கு.
மித்ரன், மாடியில் இருக்கும் அவனுடைய அறை நோக்கிச் செல்ல, 'சிங்க பெண்ணே. சிங்க பெண்ணே' என விக்ரம் அறையிலிருந்து ஆடியோ ஸிஸ்டம் மூலம் சத்தமாக ஒலித்தப் பாடலில், பின்னால் வந்துகொண்டிருந்த அண்ணனை முறைத்தவன், "அதுக்குள்ள லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டியா?” என்று கேட்க, "தர்ஷ், மித்து உன்கிட்ட என்னவோ கேக்கறான் பாரு” என விக்ரம் வசமாக அவனை தன் மனைவியிடம் சிக்க வைக்க, "நல்லா வருவீங்கடா நீங்க" என ராகம் போட்டுச் சொல்லிக்கொண்டே வேகமாகப் போய் தன் அறைக்குள் புகுந்துகொண்டான் மித்ரன்.
அதன்பின் அண்ணன் மக்களுடன் அங்கே அன்றைய காலைப் பொழுதை இனிமையாகக் கழித்துவிட்டு தன் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.
***
அங்கே வேலை செய்பவர்களின் முகமன்களைப் பெற்றுக்கொண்டு மித்ரன் மின்தூக்கிக்குள் நுழைய, 'குட் மார்னிங் அக்னி' என்றவாறே உள்ளே நுழைந்தாள் அவனைப் பின்தொடர்ந்து வந்த மாளவிகா.
பதில் 'குட் மார்னிங்'கை சொல்லிக்கொண்டே பத்தொன்பதாம் எண்ணை அழுத்திவிட்டு அவன் அவளுடைய முகத்தைப் பார்க்க, மிகவும் தெளிவாகதான் தெரிந்தாள். முந்தைய தினம் அவள் சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த காட்சி அவனுடைய நினைவில் வர, அவன் முகம்தான் இறுகியது.
அந்த இறுக்கத்தின் காரணம் புரியாமல் அவளுடைய கண்கள் பெரிதாக விரிய, தன் தவறை உணர்ந்தவன், சட்டென முகத்தை மாற்றிக்கொண்டு, கைப்பேசியில் 'சாண்டி' என்ற பெயரைத் தேடி எடுத்து அழைக்க, "ஹலோ சார் குட் மார்னிங்" என எதிர் முனையில் அந்த அழைப்பு ஏற்கப்படவும், "நான் கேட்ட டீடெயில்ஸ் என்ன ஆச்சு மிஸ்டர் சாண்டி" என்றான் அவன் கறார் குரலில்.
"இப்பதான் சார் ஆஃபிஸ்க்கு வந்தேன். இன்னும் டென் மினிட்ஸ்ல நீங்க கேட்ட டீடெயில்ஸ உங்களுக்கு வாட்ஸப் பண்ணட்டுமா?" என சாண்டி கேட்க, "ப்ளீஸ்" என்று தன் ஆமோதிப்பைத் தெரியப்படுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவர்கள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவுடன் மாளவிகா தன் வழக்கமான வேலைகளைத் தொடங்கவும், அவன் சாண்டியிடம் கேட்ட தகவல்கள் அவனுடைய கைப்பேசியை வந்தடைந்தது.
அதில் வந்திருந்த சரவணனைப் பற்றிய தகவல்களை முதலில் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டவன், பின் அதன் கூடவே வந்த காணொலியைப் பார்க்கத் தொடங்கினான்.
சரவணன் முதுகு காட்டி உட்கார்ந்திருக்க, மாளவிகா பேசுவது தெளிவாகத் தெரியும்படி எடுக்கப்பட்டிருந்தது அந்தக் காணொலி.
காட்சிகள் தெளிவாகத் தெரிந்தாலும் நவீன ரக ஸ்பை கேமராவில் கொஞ்சம் தூரத்திலிருந்து அந்தக் காணொலி எடுக்கப்பட்டிருந்ததால் அவளைக் காண மட்டுமே முடிந்தது, அதில் ஒலியில்லை. அதாவது, அவளுடைய குரல் கொஞ்சம் கூட பதிவாகவேயில்லை.
அவளுடைய முகக் குறிப்பைப் பார்த்து 'என்ன பேசியிருப்பாள்?' என ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை மித்ரனால்.
ஆங்காங்கே அவள் முகத்தில் சிறிதளவு வருத்தம் தெரிந்தாலும் மொத்தத்தில் உணர்ச்சித் துடைத்திருந்தது அவளுடைய முகம்.
அந்தக் காணொலியைப் பார்த்து முடித்ததும், 'எதிர்ல இருக்கறவனுக்கு சான்ஸே கொடுக்காமல, இவ என்ன இப்படி... பேசறா... பேசறா... பேசிட்டே இருக்கா? பாவம் அவன், உண்மைல நொந்தே போயிருப்பான்' என்றுதான் நினைக்கத் தோன்றியது.
சில நொடிகளில் அடுத்துச் செய்ய வேண்டியவற்றை முடிவு செய்துவிட்டவன் அன்று மதியமே விக்ரமுடைய மென்பொருள் நிறுவனத்திலிருந்தான்.
அந்த நிறுவனத்தின், மிக முக்கிய 'போர்ட் ஆஃப் டைரக்ட்டார்ஸ்'க்கான பிரத்தியேக அறையில் அவன் உட்கார்ந்திருக்க அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தான் சரவணன்.
அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஏசியின் குளுமையில் கூட வியர்த்து வழிந்தது அவனுக்கு.
"உன்னை பாஸ் எதுக்கோ மீட் பண்ணனும்னு சொல்றார்" என அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜர் சற்று பதட்டமாகச் சொன்ன பொழுதுகூட அவர் விக்ரமைக் குறிப்பிடுகிறார் என்றுதான் நினைத்து வந்தான்.
பொதுவாக இவனுக்கு விக்ரமுடனான நேரடி தொடர்பு என்பதே இருக்காது. அது அவசியமற்ற ஒன்றும் கூட. அவனது தொடர்பு வரையறை என்பதைப் பார்த்தால் பொதுவாக டீம் லீடர் அல்லது ப்ராஜக்ட் மேனேஜரோடு நின்றுபோகும். விக்ரம் போன்றோரை ஏதாவது பார்ட்டிகளில் பார்ப்பதுடன் சரி.
ஏன் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாமல் உள்ளே நுழைந்தவன் அங்கே அக்னிமித்ரனைப் பார்த்ததும் கொஞ்சம் குழம்பிதான் போனான். இவனிடம்தான் மாளவிகா வேலை செய்கிறாள் என்பது மட்டும் நினைவில் வந்தது அவனுக்கு.
காரணம், அவன் வேலை செய்யும் இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் மித்ரனுடைய பங்களிப்பு வெறும் காகிதத்தோடு சரி. ஏதாவது பிரச்சனை என்று விக்ரம் கூப்பிட்டால் மட்டும் அங்கே வருவான். அதுவும் அவனுடைய பேச்சுவார்த்தைகள் முழுவதும் அந்தக் குழும உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும்.
அவனுக்கு ஊழியர்களுடன் தொடர்பு என்பதே இருந்ததில்லை. எனவே அவனை அங்கே பார்த்த அதிர்ச்சியே விலகாமல் உட்கார்ந்திருந்தவனின் முகத்தை ஒரு நொடி ஏறிட்டவன், தன் கையிலிருந்த கைப்பேசியின் திரையைத் தள்ளிக்கொண்டே, "ஹை மிஸ்டர் சரவணன். நீங்க பாஸ்ட் த்ரீ அண்ட் ஹாஃப் இயர்ஸா நம்ம கம்பெனில இருக்கீங்க இல்ல?" என்று கேட்க, "எஸ் மிஸ்டர் அக்னிமித்ரன்" எனச் சிறு தயக்கத்துடன் புன்னகைதான் சரவணன்.
"மது மீடியா ஏஜன்ஸீஸ்... உங்க பிரதரோட ஆட் ஏஜன்ஸீதான? பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு இப்ப ரீசன்டாதான இந்த கம்பெனியை ஆரம்பிச்சிருக்கார்?" என அவன் அடுத்த கேள்வியைக் கேட்க, வியப்புடன் அதற்கும், "ஆமாம்" என்றான்.
அடுத்ததாக, "நீங்களும் உங்க ப்ரதரும் சேர்ந்து, வீடு கட்ட பேங்க் லோன் எடுத்திருக்கீங்க இல்ல?" என அவன் வெகு தீவிரமாகக் கேட்க, 'இவன் ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் கேட்கிறான்?' என்றுதான் தோன்றியது சரவணனுக்கு.
குழப்பத்தில் சட்டென பதில்சொல்ல முடியாமல், அவனிடம், 'ஏன் இதையெல்லாம் கேக்கற?' எனக் கேட்கவும் முடியாமல் திணறியவன், "ஆமாம்" என்றான் ஒரே வார்த்தையில்.
"எப்படியும் உங்க சேலரில மேஜர் அமௌண்ட்... லோனுக்காகப் போயிடும் இல்ல. அது இல்லாம லோன்ல கார் வேற வாங்கி இருக்கீங்க. அதோட ஈ.எம்.ஐ வேற போய்ட்டு இருக்கும்" எனத் தீவிரமாகக் கேட்க, கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க, அந்த எரிச்சலைக் குரலில் காண்பிக்காமல் இருக்க முயன்றவனாக, "ஐ கான்ட் கெட் யூ" என்றான் சரவணன்.
கொஞ்சம் கோணல் புன்னகையுடன், "இல்ல, இந்த வேலை போச்சுன்னா எப்படி இதையெல்லாம் ஹாண்டில் பண்ணுவீங்கன்னு யோசிச்சேன்" என மித்ரன் சொல்லவும், அதிர்ந்தான் சரவணன். ஆனாலும், "நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரியல?" என்றான் தன்னை சமாளித்துக்கொண்டு.
"நான் நேரடியாவே சொல்றேன். மாளவிகாவை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கற உங்க ஆசையை விட்டுடுங்க. ஷி இஸ் மைன். அவளை யாருக்கும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது” என்றான் அவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
அவன் மாளவிகாவின் பெயரைச் சொல்லவும் தன்னை மறந்து சட்டென எழுந்து நின்றவன், அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமையெல்லாம் காற்றில் பறக்க, "வாட்? நீங்க சொல்ற மாதிரியெல்லம் என்னால கேட்க முடியாது மிஸ்டர் அக்னிமித்ரன். இது எங்க ரெண்டு பேர் குடுமபத்துல இருந்தும் சேர்ந்து எடுத்திருக்கற முடிவு. ஸோ ப்ளீஸ்" என்று படபடத்தான் சரவணன்.
இருக்கையை நோக்கி அவனை உட்காருமாறு கைக் காண்பித்து, "கூல்... மிஸ்டர் சரவணன். இதுக்கு நீங்க சம்மதிக்கலன்னா உடனே உங்க வேலை போயிடும் பரவாயில்லையா?" என வன்மமாகக் கேட்டவன், "இப்ப இருக்கற எக்கனாமிக் க்ரைசிஸ் பத்தி உங்களுக்கே தெரியுமே. இருக்கற ஸ்டாஃப்ஸ்க்கே சரியான ப்ராஜக்ட்ஸ் இல்ல. ஏற்கனவே ஒரு ஒன் வீக்கா நீங்களே பெஞ்ச்ல தான இருக்கீங்க. எல்லா கம்பனிலயும் ஆட்குறைப்பு நடந்துட்டு இருக்கு. இதுல உங்களுக்கு உடனே வேலை கிடைக்கறதெல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல. நானும் உங்களுக்கு வேற வேலை கிடைக்க விடமாட்டேன்னு வெச்சுக்கோங்க" என அவன் சரவணனை நேரடியாக மிரட்ட, பேச்சே வரவில்லை அவனுக்கு.
அதிர்ச்சியிலும் இயலாமையில் கோபத்திலும் கறுத்துப்போயிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே, "நல்ல முடிவா எடுப்பீங்கன்னு நினைக்கறேன். சீக்கிரமா வீட்டுல சொல்லிடுங்க" என்றான் மித்ரன்.
சரவணனுக்கு இவனைப் பற்றி நன்றாகவே தெரியும் அதைவிட அதிகமாக மளவிகாவைப் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பதால், "என்ன மிஸ்டர் அக்னிமித்ரன் விளையாடறீங்களா? மாளவிகா என்ன ரோபாட்டா? நாம நினைக்கற மாதிரி ப்ரோக்ராம் பண்ணி யூஸ் பண்ண? அவங்க ஒரு உணர்வுள்ள பொண்ணு. எதுவா இருந்தாலும் அவங்கதான் டிசைட் பண்ணனும். நீங்களோ நானோ இல்ல. இப்படி என்னை மிரட்றத விட்டுட்டு ஜென்யூனா அவங்க கிட்ட அப்ரோச் பண்ணி உங்களால முடிஞ்சா அவங்களை சம்மதிக்க வைங்க" எனச் சீறினான் சரவணன்.
'அதுக்குதான் எனக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கறீங்களேடா. எங்கிருந்தெல்லாமோ புதுசு புதுசா வில்லனுங்களா கிளமபிறீங்களே?' என நொந்துகொண்டவன், "அவ பொண்ணுங்கறது எனக்கு நல்லாவே தெரியும். அவளை எப்படி ஹாண்டில் பண்ணனும்னும் எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக்கறேன். நீங்க நான் சொல்றத செய்ங்க" என்றான் மித்ரன்.
"சாரி... ஐ காண்ட். இந்த வேலை போனா அதை பத்தி எனக்கு கவலை இல்ல" என்றான் சரவணன் வெகு அலட்சியமாக.
"ஓகே... இருக்கட்டும்" என்ற மித்ரன், "உங்க அண்ணனைப் பத்தி கூட உங்களுக்குக் கவலை இல்லையா சரவணன்" என அசாதாரணமாக மிரட்டவும், பயத்தில் வயிற்றுக்குள் சில்லென்ற உணர்வு உண்டானது சரவணனுக்கு.
"நான் நினைச்சா உங்க அண்ணனோட பிஸ்னஸ ஒரே நாள்ல ஒண்ணுமில்லாம பண்ணமுடியம். நான் மனசுவெச்சா அவரோட பிஸ்னஸ ஒரே நாள்ல வேற லெவலுக்கு போக வைக்கவும் முடியும். இப்ப சொல்லுங்க" என்றான் எதிரிலிருப்பவனின் பயத்தை உணர்ந்து இரசித்துக்கொண்டே.
அக்னிமித்திரனின் உயரம் உண்மையிலேயே கிலியை ஏற்படுத்த, அவனைப் பகைத்துக்கொள்ள இயலாது என்பதை முற்றிலும் உணர்ந்தவனாக, "நீங்க ரொம்ப அவசர படறீங்கன்னு நினைக்கிறேன் மிஸ்டர் அக்னிமித்ரன். மாளவிகா நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு இல்ல. ஷி இஸ் யுனிக்” எனச் சரவணன் தயக்கத்துடன் சொல்ல, "எனக்கு அவளைப் பத்தி நல்லாவே தெரியும் மிஸ்டர் சரவணன். நீங்க சொல்லணும்ங்கற அவசியமே இல்ல” என்று சொல்லிவிட்டு, "எது எப்படி இருந்தாலும் பேட்லி ஐ நீட் ஹர் இன் மை லைஃப். இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. அண்ட் ஒன் மோர் திங்... இந்த விஷயம் நம்ம ரண்டுபேருக்குள்ள மட்டும்தான். குறிப்பா மளவிகாவுக்கு இதைப் பத்தி தெரிய வந்து அவ வேற மாதிரி ரியாக்ட் பண்ணான்னு வெய்ங்க... நான் இவ்வளவு கூலா எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன். அது உங்களுக்கு மட்டுமில்ல மாளவிகாவுக்கும் கூட நல்லதில்ல" என அப்பட்டமாக மிரட்டியவன், "உங்க ஸ்டாண்ட்ல நீங்க சேஃபா இருக்கற வழியை மட்டும் பாருங்க" என முடிந்தது என்பதுபோல் தன் கைப்பேசியைக் குடைய ஆரம்பித்துவிட்டான் மித்ரன்.
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் பேசும் இவனைக் கண்டு, மாளவிகாவை நினைத்துதான் சரவணனின் மனதிற்குள் கலவரம் மூண்டது. முந்தைய தினம் அவளிடம் பேசிய பிறகு அவளை மணக்க வேண்டும் என்கிற அவனுடைய எண்ணம் இன்னும் தீவிரமானது என்றுதான் சொல்லவேண்டும்.
அவள் அந்தக் கால அவகாசத்தை மட்டும் கேட்காமல் இருந்திருந்தால் இந்த நேரத்துக்கு அவர்களுடைய திருமணத்தை உறுதிசெய்திருப்பான். ஒரே நாளில் எல்லாம் மாறிப்போய், அவளை முழுவதுமாக இழக்க வேண்டும் என்கிற எண்ணமே அதீத வலியைக் கொடுக்க, 'அடுத்து என்ன செய்வது?' என்ற மிகப்பெரிய கேள்வியுடனேயே அங்கிருந்து எழுந்து சென்றான் அவன்.
அவனுடைய அந்தத் தளர்த்த நடையையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை மித்ரன். அவனுடைய கவனம் முழுவதும் அவனுடைய கைப்பேசி திரையில்தான் இருந்தது.
அதில் 'ஒரு முறை வந்து பார்த்தாயா... நீஈஈஈ?' என மீண்டும் ஒருமுறை அவனைப் பார்த்து அபிநயித்துக்கொண்டிருந்தாள் மாளவிகா.
அக்னிமித்திரனின் இந்த அராஜக அணுகுமுறைக்கும் மாளவிகாவின் மாறுபட்ட மனநிலைக்கும் கொஞ்சமாவது ஒத்துப்போகுமா?
விடை காலத்தின் கைகளில்.
Adapavi mirattitu irukane naa kuda vera edavathu plan la irupan nu partha ore poda potutane, malavika ku mattum terimjithu avlo dan da neebpakki