top of page

En Manathai Aala Vaa-23

Updated: Oct 17, 2022

மித்ர-விகா-23

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மாளவிகாவை மருத்துவர் அகிலாவிடம் அழைத்துச்செல்ல, அவளிடம் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாற்றத்தைப் பார்த்து வியந்துதான் போனார் அவர்.


சில மருந்துகளை மாற்றிக் கொடுத்தவர், அவளுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு செயலில் அவளை அதிக நேரம் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பவே, உடனே இசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகளில் அவளைச் சேர்த்துவிட்டார் துளசி.


முதலில் கொஞ்சம் சுணங்கினாலும், கொஞ்சம் கொஞ்சமாக விருப்பத்துடனேயே அந்த வகுப்புகளுக்குச் செல்ல தொடங்கினாள் மாளவிகா.


இப்படியே சில மாதங்கள் செல்ல, ஒரு நாள் மதியின் அக்காவும் அவருடைய கணவரும் அன்புவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.


அன்புவுக்கு அவனுடைய பெரியம்மா கண்ணம்மாவை நிரம்பவே பிடிக்கும் என்றால் அவனைப் பொறுத்தவரை சாமிக்கண்ணு ஐயா பெரியப்பாதான் அவனுடைய ஆதர்ச நாயகன் எனலாம். அவருடைய ஒவ்வொரு அசைவையும் அப்படி ரசிப்பான்.


அந்தச் சமயத்தில் அவர் சண்டைப் பயிற்சியாளராக வேலை செய்த ஒரு திரைப்படம் வேறு வெளியாகியிருக்க அந்தப் பெருமை வேறு அவனிடம் நிரம்பி வழிந்தது.


அவரைப் பார்த்ததும் உற்சாகத்துடன், “ஐ...பெரியப்பா” எனத் தாவி வந்து சாமிக்கண்ணுவை அணைத்துக்கொண்டான் அன்பு.


அவனுடைய மனநிலைக்கு மாறாக, கொஞ்சம் கரடுமுரடான தோற்றத்துடனிருந்த அவரைப் பார்த்ததும் கொஞ்சம் அதிகமாகவே மிரண்டுபோனாள் அங்கே அன்புவுடன் விளையாடிக்கொண்டிருந்த மாளவிகா.


அடுத்த நொடி, கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, அங்கிருந்து பதறியடித்து அவள் ஓடிப் போக, "மாலு. நில்லு. ஏன் அழற?" எனக் கேட்டுக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்து ஓடினான் அன்பு.


'ஒரு குழந்தை கூட தன்னைப் பார்த்து மிரண்டு போகும்படியான தோற்றத்துடன் இருக்கிறோமே' என வருத்தமாகிப்போனது சாசமிக்கண்ணுவுக்கு. அதை அவர் அப்படியே சொல்லி வெளிப்படையாக வருந்தவும், கண்ணம்மாவுக்குமே ஒரு மாதிரி ஆகிப்போனது.


அவரை சமாதானப்படுத்தும் விதமாக, "அப்படியெல்லாம் இல்ல மாமா. பொதுவாவே மாலுவுக்கு ஆம்பளைங்கன்னா ரொம்ப பயம். அன்பு அப்பா கிட்ட கூட பேச மாட்டான்னா பாருங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க மாமா" என்ற மதி அவளைப் பற்றி முழுவதும் சொல்லவும், கண்ணம்மா சாமிக்கண்ணு இருவருமே அதிர்ந்துதான் போனார்கள்.


அவனுடைய அன்புக்கு உரியப் பெரியப்பாவைப் பார்த்து பயந்துபோய்தான் அவள் அங்கிருந்து ஓடிவந்தாள் என்பதை அறிந்துகொண்ட அன்பு, வழக்கம் போல அவளை உருட்டி மிரட்டி, அவனுடைய அய்யா பெரியப்பா மிகவும் நல்லவர் என்பதை அவளை வற்புறுத்தி நம்பவைத்து மறுபடி மாளவிகாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


மகளுடைய செய்கையை அறிந்து அவர்களுடன் வந்த துளசி, "ரொம்ப சாரிங்க” என அவர்களிடம் மன்னிப்பு வேண்ட, அதை பார்த்து தன் தவறை கொஞ்சம் உணர்ந்தாள் மாளவிகா.


"பரவாயில்லை விடுங்க. குழந்தைங்க அப்படி இப்படிதான் இருப்பாங்க" எனத் தன்மையுடன் சாமிக்கண்ணு பதில் சொல்லவும், கோபம் கொள்ளாமல் முகம் சுளிக்காமல் நிதானமாகப் பேசும் அவரிடம் சிறிய நம்பிக்கை உருவானது மாளவிகாவுக்கு.


பின் மென்மையான புன்னகையுடன் மாளவிகாவை தன்னிடம் வருமாறு கை நீட்டி அவர் அழைக்கவும், அன்புவின் மிரட்டல் பார்வைக்குப் பணித்து தயக்கத்துடன் அவரிடம் சென்றாள்.


"உனக்கு என்னைப் பார்த்தால் பிடிக்கலையா" என அவர் ஏக்கமாகக் கேட்க, ஏனோ அன்புவின் பெரியப்பாவைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இயலவில்லை அவளால்.


'இல்லை' என்று அவள் தலை அசைக்க, "அப்படினா ஏன் என்னைப் பார்த்து அழுதுட்டு ஓடின?" என அவர் அடுத்த கேள்வியைக் கேட்கவும், அன்புவைப் பார்த்துக்கொண்டே "பயந்துட்டேன்" என ஒரே வார்த்தையில் அவருக்குப் பதில் சொன்னாள்.


"நானும் அன்பு மாதிரி உனக்கு ஒரு ஃப்ரெண்ட்தான். இனிமேல் என்னைப் பார்த்துப் பயப்படாத என்ன” என அவர் அவளுக்குத் தகுந்தபடி இறங்கி வந்து சொல்லவும், லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவளுடைய முகத்தில்.


"இப்படி கொஞ்சமா சிரிக்கக்கூடாது. நல்லா பெருசா சிரிக்கணும்" என்று அவர் சொல்ல, அவள் முகம் மலர்ந்து சிரிக்கவும், அவரும் பெரிதாகப் புன்னகைத்தவாறு, " சொல்லு... இப்ப மட்டும் ஏன் சிரிச்ச?" எனக் கேட்க, தன் கையைத் தூக்கிக் காண்பித்தவாறு, "இவ்வளவு பெரியவங்க எங்கயாவது எனக்கு ஃப்ரெண்டா இருக்க முடியுமா?" என கேட்க, அங்கே இருந்த அனைவருமே இருவரையும் வியப்புடன் பார்த்தனர்.


"முடியுமே. உன்னை மாதிரியே இந்தக் குட்டி அன்புவும் என்னோட ஃப்ரெண்டுதான். நீ வேணா அவனைக் கேட்டுப்பாரு" என அவர் அன்புவையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள, 'அப்படியா?' என்ற கேள்வியுடன் அன்புவைப் பார்த்தாள் மாளவிகா.


அதற்கு, "ஆமாம் மாலு. அய்யா பெரியப்பா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்" என அவன் வாக்குமூலம் கொடுக்க, "இனிமே நீயி... நானு... அன்பு மூணுபேரும் ஃப்ரெண்ட்ஸ்" என்றவாறு அவளுக்கு நேராக தன் கையை நீட்டினார் சாமிக்கண்ணு.


அவளும் அவரது கரத்தைப் பற்றிக் குலுக்க, "சரி நாம இப்ப ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்தான? இப்ப சொல்லு உனக்கு என்ன பயம், எதனால பயம்னு" என அவர் கேட்க, "இங்க நிறைய கெட்டவங்க இருக்காங்க இல்ல? அவங்க என் அன்புவை செஞ்ச மாதிரி வேற யாருக்காவது கெட்டது செஞ்சா என்னால அவங்களை ஒண்ணுமே செய்ய முடியாதில்ல, அதுதான் எனக்குப் பயம்" என அவளுடைய உண்மையான பயத்தைச் சொல்லவும், அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை, அவளுடைய இந்த மனநிலையைக் கொஞ்சம் கூட நம்ப இயலாமல் ஆடித்தான் போனார்கள் பெரியவர்கள் அனைவரும்.


"பூ... இவ்வளவுதானா? எங்கப் பெரியப்பா யார் தெரியுமா? ஸ்டன்ட் மாஸ்டர். ம்கும். அன்னைக்கு ஒரு படத்துக்குப் போனோம் இல்ல? அந்தப் படத்துல நடிச்ச ஹீரோக்கு எங்கப் பெரியப்பாதான் சண்டை சொல்லிக்கொடுத்தாங்கன்னு நான் கூடச் சொன்னேனே ஞாபகம் இருக்கா?” என அன்பு கேட்க, 'ம்' எனத் தலை அசைத்தாள் அவள்.


“அது இவங்கதான் தெரியுமா?" என தன் பெரியப்பாவின் வீரத்தைப் பற்றி அவனுக்குத் தெரிந்த வகையில் பெருமையாகச் சொன்னவன், அவள் வியந்த பார்வை பார்க்கவும், "ஆமாம்" என்று சொல்லிவிட்டு, "என் பெரியப்பா கிட்ட சொல்லி கெட்டவங்க கூட ஃபைட் பண்ண உனக்கும் சொல்லி தர சொல்றேன் என்ன?" என்றான் அன்பு.


மகனை வாரி அணைத்துக்கொண்டவர், "ஆமாம் பாப்பா. உனக்கு நான் சண்டைச் சொல்லித்தரேன். இனிமேல் ஒருத்தன் உன்கிட்ட வாலாட்ட முடியாது" என்றவர், “உனக்குச் சண்டைக் கத்துக்க இஷ்டம்தான?" என்று கேட்க, சம்மதமாகத் தயக்கமே இல்லாமல், "ரொம்ப இஷ்டம். எனக்கு மட்டும் அப்படி சண்டைப் போட தெரிஞ்சிருந்தா எங்க அன்புக்கரசியைக் காப்பாத்தியிருப்பேன்" என்றாள் மாளவிகா ஒரு வைராக்கியத்துடன்.


அப்படி அவள் சொல்லும்பொழுது அவளுடைய மனதிற்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பின் பொறி அவள் கண்களில் சுடர்விட்டு எரிந்ததைப் பார்த்து ஒரு நொடி திகைத்துதான் போனார் சாமிக்கண்ணு.


இப்படித்தான் தொடங்கியது அவர்களுடைய அன்புக் கூட்டணி. அதன்பின் அவளுக்கு அந்தப் போர்க் கலைகளில் ஏற்பட்ட நாட்டம் படிப்பு உட்பட மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளியது.


அவரிடம் பயிற்சி எடுக்கும் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு படி அவள் சிறந்து விளங்கவும் அவளை தன் வாரிசாகவே கருதத்தொடங்கிவிட்டார் சாமிக்கண்ணு.


அந்தப் போர்க் கலை அவளுடைய குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே அமிழ்த்தி, அவளிடம் ஒரு அபரிமிதமான தன்னம்பிக்கையை வளர்த்தது என்றால் அது மிகையில்லை.


அது கொடுத்த தன்னம்பிக்கைதான் அவளுக்கு ஒரு புதிய பிறவியைக் கொடுத்தது என்றால் அதுவும் மிகையில்லை.


***


“அன்புன்னு ஒருத்தன் என் வாழ்க்கைல வராமல் போயிருந்திருந்தா இன்னைக்கு நான் எப்படி இருந்திருப்பேனோ. அன்புக்கரசிக்கு நடந்த கொடுமையால இயக்கத்தை நிறுத்தியிருந்த என் உலகத்தை மறுபடியும் இயங்க வெச்சது அன்புத்தமிழன்தான்.


எப்பவுமே படிப்புல எனக்கு பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்ல. ஆனா அவன் ஒரு சரியான படிப்ஸ். ஸ்ட்ரிக்ட் ஆஃபீசரா மாறி மிரட்டி மிரட்டியே அவன் என்னைப் படிக்க வெச்சான். யாரை ஏமாத்தினாலும் அவனை மட்டும் என்னால ஏமாத்த முடியாது.


எல்லாத்துக்கும் மேல அவனாலதான் எனக்கு சாமிக்கண்ணு அய்யா கிடைச்சார். அவர் ரொம்பவும் பண்பட்ட மனிதர்... சரவணன்! எதிர்ல நிக்கறவனோட கண்களைப் பார்த்தே அவனோட மனசைப் படிக்கத் தெரிஞ்சவர்.


போர் பயிற்சி எடுக்கறவனுக்கு அந்த குவாலிட்டி ரொம்ப முக்கியம்னு அடிக்கடிச் சொல்லுவார். அவர் எனக்குப் போர்க்கலைகள் மட்டும் கத்துக்கொடுக்கல. அறிவு சரியான பாதைல பயணப் பட எனக்கு ஏகப்பட்ட புக்ஸ் வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார். அதெல்லாம் சேர்ந்துதான் என்னை முழுமையா மீட்டெடுத்தது” எனச் சொல்லிக்கொண்டே போனாள் மாளவிகா.


"கிரேட் மாளவிகா நீ” என்றான் அவள் சொன்ன அனைத்தையும் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த சரவணன்.


"இதுல கிரேட்னு சொல்ல என்ன இருக்கு சரவணன்?" என்றவள், "நான் அந்த நிலைமையில இருந்து மீண்டு வந்ததுக்குப் பின்னால என்னோட அன்பான குடும்பம் இருந்துது. பாவம், அந்த ரெண்டு மூணு வருஷத்துல இதனால அதிகம் பாதிக்கப்பட்டது மது அக்காவும் சாத்விகாவும்தான்.


எத்தனை ட்ரீட்மெண்ட், எவ்வளவு கௌன்சிலிங்ஸ், எவ்வளவு மருந்து மாத்திரை... ச்ச" சொல்லும்போதே ஒரு பெருமூச்செழுந்தது மாளவிகாவுக்கு. "அலுத்துக்காம அப்பா எவ்வளவு செலவு செஞ்சிருக்கார் தெரியுமா?" என்றவள் தொடர்ந்தாள்.


"அதுக்கு பிறகும் என்னை ஸ்ட்ராங் பண்ண எவ்வளவு மனபயிற்சித் தேவைப்பட்டது தெரியுமா? என்னை மீட்டெடுக்க எனக்கு சந்தர்ப்பங்கள் அமைஞ்சு எல்லா விதத்துலயும் உதவியும் கிடைச்சுது.


ஆனா தினமும் உலகத்தோட ஒவ்வொரு மூலைலயும் யாரோ ஒருத்தர் இப்படிப் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டுதான் இருகாங்க. அன்பு மாதிரி பலர் உயிரை விடறாங்க. என்னை மாதிரி பலர் உடலாலயும் மனதாலயும் பாதிக்கப்படறாங்க.


இந்த மாதிரி வன்கொடுமைல இருந்து மீண்டு வரதுக்கு எத்தனைப் பேருக்கு உதவி கிடைக்குது?” அதுவரை எந்த உணர்வையும் வெளிக்காண்பிக்காமல் பேசிக்கொண்டிருந்தவளின் முகம் அப்பட்டமாக வேதனையைப் பிரதிபலித்தது.


அதைச் சகிக்க முடியாமல், "இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னே எனக்கு தெரியல மாலு. ஏதாவது பெரிய லெவல்ல புரட்சி நடந்தாதான் உண்டு" என்றான் சரவணன்.


அதற்கு விரக்தியுடன் சிரித்தவள், "அதுக்கு எனக்கு கிடைச்ச மாதிரி எல்லாருக்கும் அன்பு கிடைக்கணும் சரவணன்... என் ஃப்ரெண்ட் அன்புவைப் பத்தி சொல்லல... அன்பு கருணை இத்தையெல்லாம்தான் சொன்னேன்.


ஆணோ பெண்ணோ சக மனுஷங்களை மனித நேயத்தோட மதிக்க கத்துக்கிட்டாலே போதும். பெரிய புரட்சியெல்லாம் தேவையில்ல" என்றவள், "அது அவ்வளவு ஈஸி இல்ல" என்று சொல்லிவிட்டு, "இதெல்லாத்தையும் விட முக்கியமா நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா" என அவள் அவனுடைய முகத்தை ஆழமாகப் பார்க்க, அவள் சொல்வதைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் அவன்.


"எனக்கு வரபோற வாழ்க்கைத் துணையை அவங்களோட குறை நிறையோட அப்படியே என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியும்.


ஆனா...


என்னதான் நான் மொத்தமா மாறிட்டேன்னு சொன்னாலும் கூட இன்னைக்கு வரைக்கும் ஆண்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு சின்ன அவநம்பிக்கை... ஒருவித இன்செக்யூரிட்டி என்கிட்ட இருந்துட்டுதான் இருக்கு.


ஒரு சிலரைத் தவிர யாரையும் என்னால முழுமையா நம்ப முடியல. சக மனுஷங்களைக் குறிப்பா பெண்களை மதிக்கறவங்கங்கற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டா மட்டும்தான் ஒருத்தரை ஃப்ரெண்டா கூட என்னால முழுமையா ஏத்துக்க முடியும்.


அதுக்கு ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிள் என்னோட அப்பாதான். அவர் என்னைக்குமே தனக்கு மூணு பெண் குழந்தைகள் பிறந்துடுச்சேன்னு வருத்தப்பட்டதே இல்ல தெரியுமா.


எப்பவுமே அவரைப் பொறுத்தவரை எங்க அம்மாதான் மகாராணி. நாங்க மூணுபேரும் லிட்டில் பிரின்சஸ்தான். அப்படி ஒரு நம்பிக்கையைதான் நான் எதிர்பார்க்கறேன்.


இல்லன்னா அப்படிப்பட்டவங்க என்னைப் பொறுத்தவரைக்கும் செகண்டரிதான். அவங்களையெல்லாம் என்னால தூரத்துல இருந்துதான் பார்க்க முடியும்.


கல்யாணம்னு நெருங்கினா... நிச்சயம் அது ரொம்ப நாள் நீடிக்காது. ஏன் இதை சொல்றேன்னா, என்னோட இந்த மனநிலையால என் குடும்ப வாழ்க்கைல நாளைக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது.


எல்லாரையும் மாதிரி திருமண வாழ்க்கையைப் பத்தின எல்லா ஆசையும் எதிர்பார்ப்பும் எனக்கும் இருக்கு. அதுல தோத்துப்போனா என்கிட்ட நானே தோத்துப்போன மாதிரி ஆயிடும்.


இதுன்னு இல்ல, வேற ஏதாவது ஒரு சூழ்நிலைல மறுபடியும் ஒரு தடவ என் கிட்ட நானே தோத்துப்போகற நிலைமை வந்தா அதை என்னால கடந்து வர முடியுமான்னே எனக்கு தெரியல” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "என்னால உனக்கு எந்தப் பிரச்னையும் வராது" என இடைப் புகுந்தான் சரவணன்.


"இல்ல... அவசரப்படவேண்டாம் சரவணன். ஒரு வாரம் இல்லன்னா பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க. உங்களால என்னோட மனநிலையைப் புரிஞ்சுக்க முடியும்னு அப்பவும் தோணிச்சுன்னா நாம ப்ரொசீட் பண்ணவோம்" என்று அவள் சொல்லவும், "என் முடிவு எப்பவும் மாறாது" என்றான் அக்னிமித்ரனால் அவனுக்கு ஏற்படப்போகும் நெருக்கடிப் பற்றி அறியாமல்.


அதற்கு ஆமோதிப்பாகப் புன்னகைத்தவள், "எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. ஜஸ்ட் டென் டேஸ்தான. மறுபடியும் பேசி முடிவு செய்வோம்ப்பா" என்று கெஞ்சலாகச் சொல்ல, அவள் தன் முடிவை உடனே சொல்லமாட்டாள் என்பது புரிய, சிறு சலிப்புடன், "சரி வா... கிளம்பலாம்" என்றவன், முன்னால் செல்ல, அவனைப் பின்தொடர்ந்து வந்தவள், "பை” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க, "ஆஃபிஸ்தான் போறேன். நைட் ஷிப்ட். எப்படியும் உங்க கடையை க்ராஸ் பண்ணிதான் போகணும். வா அப்படியே உன்னையும் ட்ராப் பண்ணிட்டு... மாமாவைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் போறேன்" என அவன் சொல்ல கொஞ்சம் அதிகமாகவே பிகு செய்வதுபோல இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுடன் கிளம்பினாள் மாளவிகா.


***


இரவு சமையல் செய்வதற்காக, வழக்கமாக வரும் நேரத்திற்கு அக்னிமித்ரனின் ஃப்ளாட்டுக்கு வந்த ஷண்முகம், கதவு திறந்தே கிடப்பதைப் பார்த்து அவன் வந்துவிட்டதை மனதில் குறித்துக்கொண்டு தன் வேலையைத் தொடங்கினார்.


அவர் சமையல் செய்து முடிக்கும் வரையில் கூட அவன் வெளியில் வராமல் இருக்கவும், அவனை உணவு உண்ண அழைப்பதற்காக அவனுடைய அறையின் கதவைத் தட்ட, அதுவும் தாளிடப்படாமல் இருக்கவும் தானாகத் திறந்துகொண்டது.


கட்டிலில் அவன் தாறுமாறாகச் சரிந்துகிடப்பதைப் பார்த்துப் பதறியவர் கொஞ்சமும் தயங்காமல் உள்ளே சென்று அவனைச் சரி செய்து நேராகப் படுக்க வைத்தார்.


அவன் மது அருந்தியிருப்பது தெரிந்தாலும், அவன் இப்படி தன்னிலை மறக்கும் அளவுக்குப் போகமாட்டான் என்பதால், வேறு ஏதோ சரியில்லை என்பது மனதில் நெருட, இதை அவனுடைய குடும்பத்துக்குத் தெரியப்படுத்த வில்லையென்றால் அது தவறாகிப்போகும் என்கிற பயத்தில் தன் கைப்பேசியிலிருந்து விக்ரமை அழைத்தார் ஷண்முகம்.


"என்ன ஷண்முகண்ணா இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா" என விக்ரம் சரியாகப் புரிந்துகொண்டு கேட்கவும், "தப்பா நினைக்காதீங்க தம்பி. சின்ன தம்பியோட நிலைமை கொஞ்சம் சரியல்ல. உங்க கிட்ட சொல்லிடலாம்னு ஃபோன் பண்ணேன்" என்ற பீடிகையுடன் தயங்கித் தயங்கி மித்ரன் இருக்கும் நிலையை அவனிடம் சொல்லிவிட்டார் ஷண்முகம்.


"சரிண்ணா. நான் உடனே அங்க வரேன். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று அவசரமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு சில நிமிடங்களுக்கெல்லாம் அங்கே வந்துவிட்டான் விக்ரம். அதுவரையிலும் கூட அதே நிலையிலேயேதான் இருந்தான் மித்ரன்.


அதற்கு மேல் தாமதிக்காமல் அவனை அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவனை நோக்கிக் கிளம்பினான் விக்ரம்.


ஓட்டுநர் காரை ஓட்டிவர பின் இருக்கையில் தம்பியை உட்கார வைத்து அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்தவனை அந்தச் சூழ்நிலையிலும் கூட புன்னகைக்க வைத்தது அக்னிமித்ரனிடமிருந்து வந்த 'லயன்னஸ்' என்ற முனகல்.

2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page