top of page

En Manathai Aala Vaa-22

Updated: Oct 17, 2022

மித்ர-விகா-22


காலை கதிரவனின் சுள்ளென்ற கிரணங்களால் முகத்தில் பரவிய உஷ்ணத்தில் விழிப்புத் தட்ட, இமைகளைப் பிரிக்க இயலாமல் போராடி கண்களைத் திறந்தாள் மாளவிகா.


தான் இருக்கும் இடமும் சூழ்நிலையும் பிடிபட அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முந்தைய நாள் விபரீதம் நினைவில் வர, அச்சம் சூழ்ந்துகொண்டது அவளை.


அன்புவைத் தூக்கி வீசிய திசையைப் பார்க்கவே துணிவில்லாமல் அவள் உடல் நடுங்கியது. அங்கிருந்து உடனே தப்பித்து ஓட வேண்டும் என்று தோன்றினாலும், கீழே இறங்கிப் போனால் அந்தப் பாவியின் கண்களில் சிக்கிக்கொள்வோமோ என்ற சொல்லொணா பயம் நெஞ்சை அடைக்க, மெதுவாக எழுந்துபோய் வீதியை எட்டிப்பார்த்தாள்.


அங்கே வசிப்பவர்கள் ஆங்காங்கே நின்று பரபரப்புடன் பேசிக்கொண்டிருக்க, தெரு முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது. அதைப் பார்த்ததும் அனிச்சை செயலாக அவள் கீழே இறங்கி வீதியை நோக்கி ஓடினாள்.


அவளைப் பார்த்துவிட்டு, 'மாலு. மாலு' என்ற கூச்சலுடன், "மது அம்மா, மாலு வந்துடுச்சு பாருங்க" என ஒரு பெண்மணி குரல் கொடுக்க, கண்ணீருடன் பதறித் துடித்து அவளை நோக்கி ஓடி வந்தார் துளசி.


முதலில், "பாவி... பாவி... பொழுது போய் தெருவுல விளையாடாதன்னு சொன்னா கேக்கறியா? ராத்திரி பூரா எங்கடி போய் தொலைஞ்ச?" என துளசி அவளைக் கைகளிலும் முதுகிலும் சரமாரியாக அடிக்க, அவள் எதிர்வினை ஆற்றாமல் அசைவற்று அப்படியே நிற்கவும் மனம் தாளாமல், அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தவர், அவள் உடல் அனல் போல் தகிக்கவும் ஸ்தம்பித்துப் போனார்.


"என்ன மதும்மா இப்படி செய்யறீங்க. புள்ள பயப்பட போகுது" என அருகிலிருந்த பெண்மணி அவரைக் கடிந்துகொள்ளவும் சுயநினைவுக்கு வந்தார் துளசி. அதற்குள் அவர்கள் இருவரையும் சுற்றிச் சிறு கூட்டம் சூழ்ந்துகொண்டது.


காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கிளம்பிக்கொண்டிருந்த மூர்த்தியும் அன்புவின் அப்பாவும் மாளவிகா வந்துவிட்டதை அறிந்து அங்கே வர, அன்புவின் அம்மாவும் கூடவே ஓடி வந்தார்.


மாளவிகா வந்துவிட்டாள் என்றால் அன்புவும் வந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவர் முகத்தில் சிறு நிம்மதி படர, "அன்பு எங்க மாலு?" என அவர் எதார்த்தமாகக் கேட்க, முகம் கன்றினாள் அவள்.


அன்புவின் பெயரைக் கேட்டதும் அச்சம் பிடித்துக்கொள்ள அன்னையை அணைத்துக்கொண்டவள், அவள் வீசி எறியப்பட்ட புதர் மண்டிய காலி மனையை நோக்கிக் கைக் காண்பிக்க, அதிர்ந்தனர் அனைவரும்.


"என்ன மாலு அந்தப் பக்கம் கைக் காமிக்கற. அன்பு எங்க இருக்கா சொல்லு" என ராஜன் பதட்டத்துடன் கேட்க, அன்னையின் தோளில் சாய்ந்துகொண்டு விசும்பினாள் அவள்.


"மாலு, ப்ளீஸ் அன்பு எங்க இருக்கானு சொல்லு?" என அன்புவின் அம்மா கெஞ்சலாகக் கேட்க, அவளுடைய கை மறுபடியும் அதே திசையில் நீளவும், "அங்கயா இருக்கா?" எனக் கேட்டார் மூர்த்தி.


"மாலு சொல்லு” என துளசி வேறு அழுத்தமாகச் சொல்லவும், 'ஆமாம்' என்பது போல் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது அந்த இளங்குருத்தால்.


விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறது என்பது அங்கே கூடி இருந்த அனைவருக்குமே புரிந்து போனது. அன்புவின் அப்பா அப்படியே ஸ்தம்பித்துப்போய் நிற்க, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இரும்பில் கேட் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும் அந்த மனைக்குள் எப்படி நுழைவது என யோசித்தவர், பின் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றார் மூர்த்தி.


அப்பொழுது சரியாகக் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு அங்கே வந்தான் அந்த சந்தர். மாளவிகாவைப் பார்த்ததும் அவன் முகம் பேய் அறைந்தது போல ஆனது.



முந்தைய பின் மாலை வேளையில் சிறுமிகள் இருவரையும் காணாமல் துளசியும் அன்புவின் அம்மாவும் அந்த தெருவில் ஒவ்வொரு வீடாகத் தேடி அலைய, சில நிமிடங்களில் அவர்கள் காணாமல் போன செய்தி அந்தப் பகுதி முழுவதும் பரவிப்போனது.


வீட்டுக்கு ஒருவர் இரு குழந்தைகளையும் தேடி அலையத்தொடங்க, மாளவிகாவுடன் சேர்த்து அன்புவையும் காணவில்லை என்பது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் எதுவுமே நடக்காததுபோல் அவர்களைத் தேடுவதாக பாசாங்கு செய்துகொண்டிருந்தான் சந்தர்.


நேரம் செல்ல செல்ல, உடனே போய் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்ற பேச்சு எழ, மற்றவர் அயரும் நேரம் பார்த்து தடயங்களை அழித்துவிடலாம் என்ற எண்ணத்திலிருந்தவன் பதறியடித்துக்கொண்டு, 'பணம் அதிகம் செலவாகும். கேஸ் அது இதுன்னு தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும்' என்று ஏதேதோ சொல்லி அனைவரையும் குழப்பிவிட்டான். அதன் தொடர்ச்சியாக அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லத் தந்தையர் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.


அப்படி இப்படி எனப் பொழுது விடியவும், அவனைப் பொறுத்தவரை இறந்துபோனதாக நினைத்துக்கொண்டிருந்த மாளவிகா முழுதாக வந்து அங்கே நிற்கவும் மிரண்டுபோனான். கூட்டம் வேறு கூடி விட்டதால் அவனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.


அவனைப் பார்த்த நொடி வெலவெலத்துப்போனாள் குழந்தை. அதற்குள், மேற்கொண்டு எதையும் சித்திக்க விடாமல் உள்ளே சென்றிருந்த மூர்த்தி தன் தோளில் போட்டிருந்த துண்டால் சுற்றி அன்புவை தன் கைகளில் ஏந்திவர, அந்த காட்சியைப் பார்த்து அப்படியே மூர்ச்சையாகிப்போனாள் அவளுடைய அம்மா.


மகளை வாங்கி தன் மடியில் கிடத்தியபடி அவளுடைய அப்பா அந்த வீதியிலேயே தொய்ந்துபோய் உட்கார்ந்துவிட, மூர்த்தியும் கீழே சரிந்தார்.


அப்படி ஒரு கோலத்தில் அன்புவைப் பார்த்த மாளவிகாவால் அவளுடைய இந்த நிலையை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அதுவரை அவள் ஒரு இயலாமையுடன் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் முழுவதும் அருகில் நின்று கொண்டிருந்த சந்தரை நோக்கித் திரும்ப, தன்னை மறந்த நிலையில் தன் பலம் கொண்ட மட்டும் அவனை இழுத்துக் கீழே தள்ளியவள் ஆக்ரோஷத்துடன் அவன் முகம் முழுதும் தன் நகத்தால் கீறினாள்.


உச்சபட்ச மன உளைச்சலில் அவளுடைய மூக்கிலிருந்து ரத்தம் வழிய கண்கள் சொருகி மறுபடி மூர்ச்சையானாள் மாளவிகா. அவளுடைய அந்தச் செயலே என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை அனைவருக்கும் பறைசாற்றிவிட்டது.


அதன்பின் நேரம் கடத்தாமல் மாளவிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலவிதமான பரிசோதனைகளுக்குப் பிறகு, 'போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ் ஆர்டர்' என்றார்கள்.


மிகப்பெரிய விபத்திலோ அல்லது இது போன்ற வன்கொடுமைகளிலோ சிக்குவதாலோ அல்லது அவர்களுக்கு உணர்வு ரீதியாக நெருங்கியவர்கள் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்குவதைப் பார்க்க நேரிடுவதாலோ ஏற்படக்கூடிய ஒருவித மன அழுத்தம் என்றார்கள்.


அவளுடைய அந்த நிலைக்கு மருத்துவ மொழியில் ‘பேனிக் அட்டாக்' என்று பெயர் சொன்னார்கள். மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு உயிர் பிழைத்தாள் அவள்.


அதற்குள் காவல்துறை சார்ந்த சட்ட நடவடிக்கைகள் முடிந்து அன்புவை அடக்கம் செய்துவிட்டு அவளைப் பெற்றவர்கள் அந்த வீட்டையே காலிசெய்துகொண்டு அவர்களுடைய சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர்.


மாளவிகா வீட்டிற்குத் திரும்பிய பின் அன்பு இருந்ததன் அடையாளமே அங்கே இல்லாமல் போயிருந்தது. அதன் பின் வந்த நாட்களில் அன்பு இல்லாமல் அவள் அவளாகவே இல்லை. தன் வேலைகளைக்கூட தானே செய்துகொள்ள இயலாமல் ஒரு ஜடப்பொருளைப் போல மாறியிருந்தாள். காலை விழிப்பது முதல் இரவு உறங்குவது வரை அவளுக்கு அனைத்தையும் துளசிதான் செய்ய வேண்டியதாக இருந்தது.


அன்புவின் நினைவு வரும்போதெல்லாம் அவளுக்கு ஏற்பட்ட துயர சம்பவம் மாளவிகாவின் மனக்கண்ணில் தோன்ற பயத்தில் மயக்க நிலைக்குச் சென்றுவிடுவாள்.


பின் மனநல மருத்துவர் அகிலா ஸ்ரீதரனிடம் அவளைச் சிகிச்சைக்கு அழைத்துப் போகக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், எவ்வளவு போராடியும் அவளைப் பழையபடி மாற்ற இயலவில்லை அவர்களால். இனம் புரியாத அச்சமும் கோபமும் அழுகையும் பிடிவாதமும் மட்டுமே அவளிடம் மொத்தமாக மேலோங்கி இருக்க பள்ளிப்படிப்பு அப்படியே நின்றுபோயிருந்தது. அப்படியே இரண்டு வருடங்கள் கடந்துபோனது.


மறுபடியும் அதே போன்ற ஒரு விடுமுறை சமயம், மாலை வேளையில் பிள்ளைகள் எல்லோரும் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுள் சாத்விகாவும் அடக்கம்.


அந்த வயதிற்கே உரியத் துறுதுறுப்புடன் இருக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்த விரும்பாமல், ஏற்கனவே ஒரு முறை பட்ட மிகப்பெரிய சூடு காரணமாக முன்னம் செய்த அதே தவறையும் செய்யத் துணியாமல், மகளின் பாதுகாப்பிற்காக நெகிழியினால் ஆன ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு வீட்டின் வாயிலிலேயே அமர்ந்திருந்தார் துளசி.


சாத்விகாவுக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கிய பிறகு இதை அவர்களுடைய புதிய வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மற்ற பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்தலாவது மாளவிகாவிடம் ஏதும் மாற்றம் ஏற்பட்டுவிடாதா என்கிற ஆதங்கத்தில் அவளையும் தன் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டிருந்தார்.


அப்பொழுதுதான், அன்பு குடியிருந்த வீட்டின் வாயிலில் 'டெம்போ' ஒன்று நின்றுகொண்டிருக்க, அதிலிருந்து பொருட்களைச் சிலர் இறக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தார் துளசி.


அன்புவின் குடும்பம் அந்த வீட்டை காலி செய்துகொண்டு போன பிறகு இரண்டு மூன்று குடும்பங்கள் அங்கே மாறிவிட்டன. ஆனால் அவர்களுடன் பழகிய அளவுக்கு யாருடனும் நெருங்கிப் பழக முற்படவில்லை துளசி.


அந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு மாளவிகா மட்டும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாள் என்று சொல்வதை விட, யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற முடிவுக்கு வர இயலாமல் யாரோடும் ஒன்ற இயலாமல் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையில் அவர்களுடைய மொத்த குடும்பமுமே தள்ளப்பட்டிருந்தது என்பதே உண்மை.


அன்புவின் நினைவும் தொடர்பு விட்டுப்போயிருந்த அவளுடைய அம்மா அப்பாவின் நினைவும் ஒரு நொடி மின்னி மறைந்தது துளசியின் மனதில்.


அந்த வீட்டையே வெறித்தபடி, அந்த தாக்கத்திலிருந்து அவர் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்க, அந்த வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தான் ஒரு சிறுவன்.


"அன்பு ஓடாத. மெதுவா போ" என்ற அவனுடைய அம்மாவின் குரல் அவனைத் துரத்திக்கொண்டு வர, அதற்குள் கால் தடுக்கிக் கீழே விழுந்திருந்தான் அவன்.


அன்பு என்ற குரலிலேயே மின்சாரம் தாக்கிய உணர்விலிருந்தவள் அவன் கீழே விழவும் பதறிப்போனாள் மாளவிகா. அடுத்த நொடி அவனை நோக்கி ஓடியவள், அவனைத் தூக்கி நிறுத்தி அவனை முழுவதுமாக ஆராய்ந்தபடி, "அடி பட்டுடுச்சா அன்பு. வலிக்குதா அன்பு" என்று அக்கறையாகக் கேட்டுக்கொண்டே அவன் உடையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட, அவள் கண்களில் நீர் கோர்த்தது.


அன்புத்தமிழனின் அம்மா மதி அவளை விசித்திரமாக ஒரு பார்வை பார்க்க, அதற்குள் துளசியும் அங்கே வந்திருந்தார். மகளுடைய இந்தச் செய்கையில் அவருமே வியந்துதான் போயிருந்தார்.


கீழே விழுந்ததில், அன்புவின் கால் முட்டியில் சிராய்த்து லேசாக இரத்தம் கசிய, வலியால் அவனால் நடக்க இயலாமல் காலைத் தாங்கிப் பிடிக்கவும் அதைக் கவனித்து அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், "கொஞ்சம் என் கூட வா" என்றவாறு அவனை அழைத்துவந்து அவள் வீட்டின் வாயிலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அவனை உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.


கையில் 'டெட்டால்' மற்றும் பஞ்சுடன் சில நிமிடங்களில் திரும்ப வந்தவள், அவன் 'ஸ்..ஸ்' எனும்போதெல்லாம் 'சாரி அன்பு... சாரி சாரி' என்று சொல்லிக்கொண்டே அவனுடைய காயத்தைச் சுத்தம் செய்ய, அவள் முகத்தில் தெரிந்த சிநேக பாவத்தில் அவள் அதுவரை அவள் இழுத்த இழுப்பிற்கு வந்துகொண்டிருந்தவன், "உனக்கு என்னைத் தெரியுமா?" எனக் கேட்டான் வியந்த குரலில்.


'தெரியாது' என்பது போல் அவள் உதட்டைப் பிதுக்கவும், "அப்பறம் எப்படி இந்த மாதிரி எனக்கு ஹெல்ப் பண்ற. எங்க அம்மாதான் இப்படியெல்லாம் பண்ணுவாங்க" என்றான் வியப்பு மாறாமல்.


"எனக்கு அன்... அன்பு...வை ரொம்ப பிடிக்கும். அவ பேரை வெச்...சிருக்க இல்...ல? அதனால உன்... உன்னை எனக்குப் பிடிக்குது" என மனதில் தோன்றிய உணர்வை கொஞ்சம் திக்கித் திணறிக் கோர்வையாக அவள் சொல்ல, துளசிக்குக் கண்ணீரே வந்துவிட்டது.


அவள் சொல்வது எதுவுமே அவனுக்குப் புரியவில்லை என்றாலும், "அப்ப நீ எனக்கு ஃப்ரெண்டா இருப்பியா" என உற்சாகமாகக் கேட்க, அதில் முகம் பிரகாசிக்க, 'சரி' என்பதுபோல் தலை அசைத்தாள் மாளவிகா.


அந்த அன்பு என்ற பெயரைக் கேட்டதுமே அவள் தொலைத்த நட்பு அவளை நாடி திரும்ப வந்துவிட்டது என்ற சிறு நம்பிக்கை அவள் மனதில் துளிர்விட அவனை நோக்கி வந்திருந்தாள்.


அன்புவின் அப்பா சிவகுருவின் பணியிட மாற்றம் காரணமாக வேலூரிலிருந்து அங்கே குடி பெயர்ந்திருந்தனர்.


கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அவனுடன் பழகிய நட்பு வட்டாரத்தை விட்டு, அந்தப் பிரிவின் தாக்கத்துடனேயே அங்கே வந்திருந்த அன்புவும் அவள் நீட்டிய நட்புக்கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.


மகனைப் பின்தொடர்ந்து வந்த மதி, மாளவிகாவின் செய்கையில் கவரப்பட்டு, "உன் பேர் என்ன செல்லம்" என இயல்பாகக் கேட்க, மௌனத்தையே பதிலாகக் கொடுத்தாள் அவள்.


அந்த வயதுக்குரிய வளர்ச்சி இன்றி உடல் மெலிந்துபோய், உடலுக்குப் பொருந்தாமல் தலை கொஞ்சம் பெரியதாக, ஒட்டிப்போன கன்னமுமாக குண்டுக் குண்டான கண்களில் உயிரைத் தேக்கிவைத்துக்கொண்டு, நோயாளி போன்ற தோற்றத்திலிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து பரிதாபம் உண்டாகி மனம் கனத்துப்போனது அன்புவின் அம்மா மதிக்கு.


"மாலு. கேக்கறாங்க இல்ல. பதில்சொல்லு" எனத் துளசி அவளைக் கடிவதுபோல் சொல்ல, அவரது கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, "மாளவிகா" என எங்கேயோ பார்த்துக்கொண்டே அவள் சொல்ல, அவளது அந்த நடவடிக்கையில் உள்ள வித்தியாசம் புரிந்தது அவருக்கு. துளசியின் முகத்தில் அப்பியிருந்த சோகமும் தப்பாமல் மனதில் தைத்தது.


அன்று வீட்டைத் தயார் செய்ய வேண்டிய வேலை இருந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ள நேரம் இல்லாமல் போகவே, அவளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தாலும், எதையும் கேட்டுக்கொள்ளாமல், மாளவிகாவின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தவர், 'குட் கேர்ள்' என்று அவளைப் புகழ்ந்து, துளசிக்கு நன்றிசொல்லிவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


அதன் பின் மாலை வேளைகளில் பிள்ளைகள் விளையாடும்பொழுது அன்புவும் அவர்களுடன் இணைந்துகொள்வான். மாளவிகாவை அவன் வற்புறுத்தி தங்களுடன் விளையாட அழைக்க, மறுக்கவும் தோன்றாமல் முழுமையாக ஒன்றவும் முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு நிற்பாள். இப்படியே சில நாட்கள் செல்ல, அன்னையர்களுக்குள்ளும் நல்ல அறிமுகமும் சிறு நெருக்கமும் ஏற்பட்டிருந்தது.


ஒரு நாள் பேச்சுவாக்கில், "மதுவும், சாவியும் நார்மலாதான இருக்காங்க. மாலு மட்டும் ஏன் இப்படி இருக்கா?" எனத் துளசியிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார் மதி.


அவர் குரலில் தொனித்த அக்கறையிலும் ஆதங்கத்திலும், அவர் வம்பு பேசும் நோக்கத்தில் கேட்கவில்லை என்பது புரியக் கண்களில் நீர் திரையிட்டது துளசிக்கு.


"குழந்தைகளை, அதுவும் பெண் குழந்தைகளைச் சுதந்திரமா விளையாடக்கூட விட முடியாத அளவுக்கு பாதுகாப்பில்லாம இருக்கு நம்ம சமூகம். எப்பவுமே அவங்களை நம்ம கண் பார்வைக்குள்ளயே வெச்சு பத்திரமா பார்த்துக்கணும்னு ரொம்ப பெரிய விலைக் கொடுத்து பாடம் கத்துக்கிட்டோம் அன்பு அம்மா" என்றவர், நடந்த அனைத்தையும் கண்ணீருடன் சொல்லி முடித்தார்.


அந்த பாதிப்பினால் மாளவிகா இரண்டு வருடங்கள் பள்ளிக்கே செல்லவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது மதிக்கு. சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, "இந்த வருஷம் அவ கண்டிப்பா ஸ்கூலுக்கு போவா பாருங்க" என அழுத்தமான நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.


தற்பொழுது மதுவும் சாத்விகாவும் படித்துக்கொண்டிருக்கின்ற பள்ளியில், ஒருவாறு பேசி அவள் விட்ட இடத்திலிருந்து கல்வியைத் தொடர ஏதுவாக ஐந்தாம் வகுப்பில் சேர்த்திருந்தார் மூர்த்தி. அன்புவையும் அதே பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பில் சேர்த்திருந்தனர்.


அன்று பள்ளியின் முதல் தினம்.


நீண்ட விடுமுறை முடிந்திருக்கவே மது, சாத்விகா இருவரும் கூட சற்று சுணக்கத்துடன்தான் கிளம்பிக்கொண்டிருந்தனர். அவர்களே இப்படி இருக்க, முழுதாக இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்து பழகிவிட்ட மாளவிகாவை சுலபத்தில் கிளப்ப முடியவில்லை துளசியால்.


'எல்.கே.ஜி' செல்லும் சிறு குழந்தையைப் போல் பிடிவாதம் பிடித்து சீருடை அணிவதில் தொடங்கி ஒவ்வொன்றிற்கும் அவரைப் படுத்தியெடுத்துவிட்டாள் அவள்.


ஒருவராக அவளைத் தயார் செய்து, அவளைப் பள்ளியில் விடுவதற்காகத் துளசியும் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் வர, 'பள்ளிக்கு வரமாட்டேன்' என விழுந்து புரண்டு அழத் தொடங்கினாள் மாளவிகா.


அதைப் பார்த்துக்கொண்டே அவளை நோக்கி வந்த அன்பு ஒரு பெரிய மனித தோரணையுடன், "மாலு நீ இப்ப ஸ்கூலுக்கு வரலன்னா நான் உன் கூட க்கா... போ. மறுபடியும் வேலூருக்கே போயிடுவேன் இல்லன்னா என்னோட அய்யா பெரியப்பா கூட அவங்க வீட்டுக்குப் போயிடுவேன்" என அவளை மிரட்டத் தொடங்க கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.


"அன்பு அப்படியெல்லாம் சொல்லாதடா" என அவள் தழுதழுக்க, "அப்படினா நீயும் என் கூட ஸ்கூலுக்கு வா" என்றான் அவன் விடாப்பிடியாக.


அதற்கு அவளுடைய அன்னையை நோக்கி, "என்னையும் அன்புவோட கிளாஸ்ல சேர்த்துவிடறீங்களாம்மா, நான் சமத்தா ஸ்கூலுக்கு போறேன்" என அவள் இறங்கி வர, அதற்குள் அங்கே வந்த மதி, "நான் உங்க ப்ரின்ஸிபல் மேடம் கிட்ட பேசறேன். நீ இப்ப கிளம்பு" என்று மாளவிகாவிடம் சொல்லிவிட்டு, "அன்பு. நீ வா. ஸ்கூலுக்கு லேட் ஆகுது பாரு" என அதிகாரமாக அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்லவும், ஓடி வந்து அவனுடைய மற்றொருகையைப் பிடித்தவள், "இருங்க நானும் வரேன்" என்றாள் எங்கேயோ பார்த்துக்கொண்டு.


"என் கண்ணைப் பார்த்து பேசு. அப்பத்தான் நான் உன்னை அழைச்சிட்டுப் போவேன்" என மதி அழுத்தம் கொடுத்துச் சொல்லவும், அவளுடைய வழிகள் அங்கேயும் இங்கேயும் சுற்றி அலைபாய்ந்து வேறு வழி இல்லாமல் அவருடைய கண்களைச் சந்தித்தன.


துளசியை ஒரு அர்த்தம் ததும்பும் பார்வை பார்த்தவர், "மாலு அம்மா, பசங்க எல்லாரையும் நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறேன். நீங்க வீட்டுல வேலை இருந்தால் பாருங்க" என்று சொல்லிவிட்டு அன்புவின் கையை விட்டுவிட்டு அவர் முன்னால் நடக்க, அன்னையைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சிறு தயக்கத்துடன் அன்புவின் கையை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் மாளவிகா பள்ளிப்பையுடன்.


பள்ளி முதல்வரிடம் பேசி மாளவிகாவையும் அன்புவையும் வகுப்பின் ஒரே பிரிவில் போடச் சொல்லி மதி கேட்டுக்கொள்ளவும் அதற்கு ஒப்புக்கொண்டார் அவர். எனவே ஒரே வகுப்புக்குள் ஒன்றாக நுழைந்தனர் இருவரும்.


சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தில் அங்கே சென்று பார்த்தாள் என்றால், எல்லாமே புதிய முகங்கள். மிகவும் மிரட்சியாக இருந்தது அவளுக்கு. அது முன்பு படித்த பள்ளி இல்லை என்பதினால் பழைய தோழர்களை எதிர்கொள்ளும் பிரச்சினை இல்லை என்றாலும் சற்றுக் கடினமாகவே இருந்தது அவளுக்கு.


விடாமல் அன்புவின் கையைப் பிடித்துக்கொண்டே இருந்தாள் மாளவிகா. அவனும் எந்த ஒரு நிலையிலும் அவளுடைய கையை உதறவே இல்லை.


"அன்பு கண்ணா, நீதான் மாலுவுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணனும். அவளை நீதான் பத்திரமா பார்த்துக்கணும்" என அவனைப் பெரிய மனிதனாக்கி, பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கும் விதமாக மதி சொல்லியிருந்த வார்த்தைகள் அவனை அவளுடன் நன்கு பிணைத்து வைத்திருந்தது. அடுத்து வந்த நாட்களிலும் அதுவே தொடரவும் செய்தது.


அவளை எழுத வைக்க, படிக்க வைக்க, விளையாட வைக்கச் சாப்பிட வைக்க என, 'நீ செய்யலன்னா நான் என்னோட பெரியப்பா கூட போயிடுவேன்' என அவளை மிரட்டி மிரட்டியே அனைத்தையும் செய்ய வைத்தான் அன்பு.


கிட்டத்தட்டக் குழிக்குள் விழுந்து தவிக்கும் முரட்டுக் காட்டு யானையை கும்கி யானையை வைத்து மீட்டு மேலே கொண்டுவருவதைப் போல அவனைக் கொண்டு மாளவிகாவைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டிருந்தார் மதி.


மாளவிகாவுக்கு ஒரு மிகப்பெரிய பிடிமானமாக மாறிப்போய், அவளுடைய அன்னையாலோ தந்தையாலோ இல்லை ஒரு மருத்துவராலோ கூடச் செய்ய முடியாத ஒரு சாதனையை அனாயாசமாக அவளுக்குச் செய்துகொண்டிருந்தான் அன்பு.


சரியாகச் சொல்வதென்றால் ஒரு பண்பட்ட தாய் வளர்க்கும் ஆண்மகனாகப் பொறுப்புடன் நடந்துகொண்டான் அன்புத்தமிழன். கொஞ்சம் கொஞ்சமாக தன் மனக் கூட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்துகொண்டிருந்தாள் மாளவிகா.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page