top of page

En Manathai Aala Vaa 21

Updated: Oct 17, 2022

மித்ர-விகா-21


மாளவிகா பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த சமயத்தில்தான் அவர்கள் வீட்டிலிருந்து தள்ளி இரண்டாவது வீட்டில் மூன்று மாத குழந்தையான அன்புக்கரசியுடன் குடி வந்தனர் அவளுடைய பெற்றோர்.


அவளுடைய அப்பா மெப்ஸில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியிலிருந்தார். அம்மா வீட்டிலிருந்து குடும்பத்தைக் கவனிக்கும் குடும்பத்தலைவி.


இரு குடும்பங்களுக்குள்ளும் இயல்பான அறிமுகத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிய நட்பாக மலர்ந்தது. வேறுபாடு பார்க்காமல் மதுவுடனும் மாளவிகாவுடனும் அன்புவையும் இணைத்துக் கொண்டார் துளசி.


ஒத்த வயதில் இருக்கவும் ஒன்றாக ஒரே பள்ளியில் மாளவிகா அன்பு இருவரையும் சேர்க்க, அவர்கள் நட்பு இன்னும் ஆழமாக மாறிப்போனது.படிப்பு, விளையாட்டு, உணவு உறக்கம் என எல்லா நேரமும் இருவரும் ஒன்றாவே களித்தனர்.


அதுவும் அவர்களுக்கு ஐந்து வயதாகும்போது சாத்விகா பிறக்க, மாளவிகாவை அன்புவின் அம்மா தன்னுடனேயே வைத்துப் பார்த்துக்கொள்ளவும் அவர்களுடைய பிணைப்பு ஒருவர் இல்லாமல் மற்றவரால் ஒரு நாள் கூட இருக்க இயலாது என்கிற அளவுக்கு இன்னும் இறுகிப்போனது.


விடுமுறை சமயங்களில் அன்புவை அழைத்துக்கொண்டு அவளுடைய அம்மா அவரது பிறந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களிலெல்லாம் இரண்டுபேரும் அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள்.


அவள் சென்றதும் மாளவிகா இயல்பு நிலைக்குத் திரும்ப சில தினங்கள் பிடிக்கும். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் துளசிக்கு.


***


சில வருடங்களாகதான் அந்த பகுதி வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. அவர்கள் வீடு இருக்கும் தெருவில் எல்லாமே தனித்தனி வீடுகளாக மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருந்தன. அதிக கட்டடங்கள் இல்லாமல் புதர் மண்டிய காலி மனைகளும் ஆங்காங்கே இருக்க, புதிதாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான கட்டுமான வேலைகளும் அங்கே நடந்துகொண்டிருந்தது.


மாளவிகாவுடன் சேர்ந்து அவளுடைய வயதை ஒத்த ஏழெட்டு பிள்ளைகள் அந்த தெருவில் இருந்தனர். ஆண் பெண் பாகுபாடில்லாமல் மாலையானால் எல்லோரும் ஒன்றாக வீதியில் விளையாடுவது வழக்கம்.


அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாக இருந்ததால், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பற்றி யாரும் அதிகம் கவனம் எடுப்பதில்லை. அதுவே, ஒரு நாள் ஆபத்தாகிப் போனது.


***


நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, மாளவிகா மற்றும் அன்புவின் நான்காம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியிருந்தது. விடுமுறை களிப்பில் பிள்ளைகள் எல்லோரும் அந்தத் தெருவையே அதகளம் செய்துகொண்டிருந்தனர்.


காலை, மதியம், மாலை என நேரம் காலம் இல்லாமல், வெயில்,வியர்வை, கொசுக்கடி என எதையும் பொருட்படுத்தாமல், பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடி விளையாடிக் களிக்க, அவர்கள் வால்தனத்தினால் பெரியவர்களை மிரண்டுபோக வைத்தனர்.



நன்றாக இருட்டத் தொடங்கிய பின்னர்தான் வீட்டுக்குள்ளேயே செல்வார்கள் அனைவரும்.


சாத்விகா மிகவும் சிறியவளாக இருக்க அவளை தன் கைக்குள்ளேயே வைத்திருப்பார் துளசி. இயல்பாகவே மதுவுக்கு விளையாட்டில் அதிக நாட்டம் இல்லை. எனவே தொலைக்காட்சியை விட்டு நகராமல் வீட்டிற்குள்ளேயே இருந்து விடுவாள்.


ஆனால் மாளவிகா அப்படி இல்லை. ஒருநொடியேனும் ஓய்ந்திருக்க விரும்பாமல் ஓடி விளையாடித் தீர்ப்பவள். அன்புவும் அதே ரகம். அன்புவுடன் சேர்ந்து கொண்டு, சாப்பிடக்கூட வராமல் நாள் முழுவதும் வீதியிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள்.


மாளவிகாவையும் அன்புவையும் கண்டித்து ஓய்ந்தே போவார்கள் அன்னையர் இருவரும். உருட்டி மிரட்டி ஒருவாறாக அவர்களை அடக்கி வைத்தால் கூட சில நிமிடங்கள் வரைக்கும்தான் அது தாக்குபிடிக்கும். பெரியவர்கள் சற்று கண் அயரும் நேரம் பார்த்து சிட்டாகப் பறந்து விடுவார்கள் சிறுமிகள். அடுத்த நிமிடம் அருகே இருக்கும் ஒரு காலி மைதானத்தில் மொத்த வானரங்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்துக்கொண்டிருப்பார்கள் இருவரும்.


அன்று, மொத்த பிள்ளைகளும் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல ஒளிவதற்காக, அந்த தெருவின் ஒரு வீட்டின் மொட்டை மாடியை தேர்ந்தெடுத்து அதை நோக்கி ஓடினாள் மாளவிகா.


அப்பொழுது அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்தான் அவன் - சந்தர். மேல் நடுத்தட்டுப் பெற்றோர்களின் ஒரே மகன் என்ற செல்லத்தால் இருபது வயதுக்குள்ளேயே கெட்டுச் சீரழிந்து போனவன்.