top of page

En Manathai Aala Vaa-20

Updated: Oct 14, 2022

மித்ர-விகா-20


அவள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் அக்னிமித்ரன். மாளவிகாவை கண்களால் காண்பதற்காகவே நீண்ட நேரமாகத் தவித்துக்கொண்டிருத்த நிலை மாறி அவள் அங்கே வந்த பிறகும் அவளைப் பார்க்க எத்தனிக்கவில்லை அவன்.


மனம் முழுதும் வெம்மையில் புழுங்க சில நிமிடங்கள் அந்த மொட்டை மாடியிலேயே நின்றிருந்தவனின் உடலையும் சுரீர் என்ற வெயில் தாக்க நேராக கீழே வந்தவன் தன் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.


பொதுவாக அலுவலகத்திற்கு தினமுமெல்லாம் வருபவன் இல்லை அக்னிமித்ரன். 'வீனஸ் டெலிவிஷன் நெட்வொர்க்' தவிர அந்த 'தீபலக்ஷ்மி டவர்'சில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற நிறுவனங்கள் எல்லாம் அவனுடைய தாய் வழி தாத்தாவினுடையது. மொத்தமும் அவருடைய சொந்த சம்பாத்தியம். தீபலக்ஷ்மி மட்டுமே அவருக்கு ஒற்றைப் பெண்பிள்ளையாய் போய்விட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அக்னிமித்ரன் அவரது ஏகபோக வாரிசாக ஆகிப்போனான், விக்ரம் மூத்தப் பேரனாக இருந்தபோதும்.


மாதத்தின் முதல் வாரம் முழுவதும் அவர்களது குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுடைய முக்கிய மேலாளர்களுடனான சந்திப்புகள் இருக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள் அனைத்தையும் முடித்துக்கொள்பவன், மற்ற நாட்களை 'வீனஸ்’ தொலைக்காட்சியின் ஸ்டுடியோக்களில் செலவிடுவான்.


மற்றபடி வார இறுதி நாட்கள் என்பது அவனுக்குக் கேளிக்கைகளுக்கான நாட்கள் மட்டுமே. எனவே மறந்தும் அலுவலகத்தின் பக்கம் அவன் தலை வைத்து கூட படுப்பதில்லை.


இடையிடையே மனநிலைக்குத் தகுந்த மாதிரி உலகத்தின், உல்லாச கேளிக்கைகளுக்கென பெயர்போன ஏதாவது ஒரு நகரத்தில், அவனது தற்காலிக இணைவிகளுடன் தன் விடுமுறையை அனுபவிப்பான். ஆனால் அவன் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அவனது அனைத்து தொழில்களையும் தன் சுட்டுவிரலின் நுனியால் தங்குதடையின்றி நிர்வகித்திருப்பான்.


சிலநாட்களாகதான் அதுவும் மாளவிகாவால் மட்டுமே அவன் தினமும் அலுவலகம் வருவது. பெரும்பாலும் அவள் அலுவலகம் வரும் நேரம் அவனும் வந்துவிடுவான்.


ஓரிருமுறை விக்ரமுடைய நிறுவனத்திற்குச் செல்ல நேர்ந்ததால் தாமதமாக வந்திருக்கிறான். ஆனாலும் வராமல் இருந்ததில்லை. உள்ளே நுழைந்ததுதுமே மாளவிகாவின் கண்கள் மித்ரனைதான் தேடியது. அவன் அங்கே இல்லாமல் போகவும் தாமதமாக வருவான் என்றே எண்ணிக்கொண்டாள்.


தினசரி நடைமுறைப்படி செய்யவேண்டிய வேலைகள் வரிசைக்கட்டி நிற்க, அவளது கவனம் மொத்தமும் அவற்றை நோக்கித் திரும்பியது. என்னதான் கவனம் வேலையிலிருந்தாலும் அங்கே சூழ்ந்திருந்த தனிமை அவளுக்கு ஒருவித அலுப்பைக் கொடுத்தது.


அந்த கேபினுக்கு வெளியில் பலர் வேலை செய்துகொண்டிருந்தாலும் உள்ளே அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் கிடையாது. அவனது பார்வை வட்டத்திற்குள் அவளும், அவளது பார்வை வட்டத்திற்குள் அவனும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.


மற்ற பணியாளர்களுடன் இவளுக்கு நேரடி தொடர்பு கிடையாது. அனைத்து வேலைகளும் மித்ரனைச் சார்ந்ததாகவே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் இருவருக்குள்ளான பேச்சுக்கள் அவர்கள் அலுவலக வேலை தொடர்பானதாகவே இருக்கும்.


ஏதாவது ஒன்றிற்காக அவளை அழைத்துக்கொண்டேதான் இருப்பான். இல்லாமல் போனாலும் கூட அவன் அங்கே இருந்தால் மாற்றி மாற்றி அவனுக்குக் கைப்பேசியில் ஏதாவது அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். பேசிக்கொண்டே இருப்பான். அவன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.


மதிய உணவு இடைவேளை கடந்தும் அவன் வராமல் போக உண்மையிலேயே அவன் இல்லாமல் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. அவளையும் அறியாமல் அவளது பார்வை அடிக்கடி காலியாக இருக்கும் அவனது இருக்கையைத் தொட்டு மீண்டுகொண்டிருந்தது.


அதுவரை திரையில் கூட அவளைப் பார்க்கப் பிடிக்காமல் இருந்தவனின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளது முகம் காண ஏங்கி, தன் கைப்பேசியில் அவளது இருக்கையை 'ஃபோக்கஸ்' செய்யும் ‘கேமரா’ மூலமாக அவளைத் தன்னருகில் அவன் கொண்டுவர, அவளது அந்த பார்வையின் தேடலை உணர்ந்து கொஞ்சம் உருகிதான் போனான் மித்ரன்.


அதற்குப்பின் இருக்கும் அவளது மனநிலையைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் ஆழ்ந்து யோசிக்க முற்படவில்லை. சில நிமிடங்களில் அவனுடைய கேபினில் இருந்தான். அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் விரித்த அவளுடைய கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.