En Manathai Aala Vaa! 2
- Krishnapriya Narayan
- Mar 11, 2020
- 6 min read
Updated: Sep 23, 2022
மித்ர-விகா – 2
கோடைக் காலத்தின் தொடக்கமாதலால் அஸ்தமன நேரம் கடந்த பின்னும் கூட விட்ட குறை தொட்ட குறையாக தன் வெப்பத்தைப் பூமியின் மீது விட்டுவைத்திருந்தான் சூரியன்.
அந்த இளம் சூட்டை அனுபவித்தபடி அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் யோக பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள் மாளவிகா.
அப்பொழுது, காயவைத்திருந்த துணிகளை எடுக்கவென அங்கே வந்தாள் மாலதி. அவர்கள் வீட்டின் முதல்தளத்தில் இருக்கும் ‘போர்ஷன்’னில் சில வருடங்களாகக் குடி இருப்பவள். இவர்களுடைய குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவள்.
மாலதி அவளுடைய கணவர் இருவருமே ‘லேப் டெக்னீஷியன்ஸ்’. இருவருமாக இணைந்து மாளவிகாவுடைய அப்பாவின் கடைக்கு அருகில் இரத்தப் பரிசோதனைக் கூடம் வைத்திருக்கிறார்கள்.
அங்கே இருந்த மாளவிகாவைப் பார்த்து, "என்ன மாலு! பரிட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா என்ன? இவ்ளோ ரிலாக்ஸ்டா யோகா செஞ்சிட்டு இருக்க?" எனக் கொடியிலிருந்த துணிகளை எடுத்துக்கொண்டே இயல்பாக அவளிடம் பேச்சுக் கொடுத்தாள் மாலதி.
ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவள், "இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் மட்டும்தான்கா பாக்கி இருக்கு. ப்ரிப்பேர் பண்ணிட்டேன்” எனப் பதில் கொடுத்தாள் அவள்.
"அப்ப... அடுத்தது கல்யாணம்தான்னு சொல்லு" என மாலதி கிண்டலாகச் சொல்ல, "அக்..கா!" என அவளைப் பார்த்து முறைத்தவள், "சான்ஸே இல்லக்கா.. சான்ஸே இல்ல.. கொஞ்ச நாளைக்கு ஏதாவது வேலைக்குப் போகப்போறேன். கூடவே கரஸ்ல பீ.ஜீ பண்ண போறேன். அப்பறம் எனக்கு கொஞ்சம் ஆம்பிஷன்ஸ் இருக்கு. அதுக்கு செட் ஆனா மட்டும்தான் கல்யாணம்" என அடுக்கிக்கொண்டே போனாள் மாளவிகா.
"ப்ச்... சான்ஸ் இல்லன்னு சொல்ல முடியாது மாலு. எனக்கு என்னவோ உங்க அம்மா உன்னை விட்டு வைப்பாங்கன்னு தோனல" என்ற மாலதி, "ஏன் மாலு உங்க அக்கா மச்சினன் இருக்கார் இல்ல. பேசாம அவரையே உனக்கு பார்த்தால் என்ன? உங்க அக்கா வீட்டுக்காரு மாதிரியே நல்ல குணமா தெரியுது. உங்க அம்மா கிட்ட சொல்லவா" என வெகு தீவிரமாகக் கேட்க, "யாரு சரவணனையா சொல்றீங்க" என வியப்பாகக் கேட்டவள், "யக்கோவ்... அவரைப் பார்த்தால் உங்களுக்கு பாவமா இல்லையா. அந்த மாதிரி அமைதியான அடக்க ஒடுக்கமான பையனுக்கு நானெல்லாம் கொஞ்சம் கூட செட்டே ஆக மாட்டேன். பேசாம போய் புள்ளைகுட்டிங்கள படிக்க வைங்க" எனக் கிண்டலாகவே சொல்லிவிட்டு அடுத்த ஆசனத்திற்குத் தாவினாள் மாளவிகா.
"என்னையே கிண்டல் பண்ற இல்ல... பாரு சரியான அடாவடி பேர்வழியா ஒருத்தன் வந்து உன்னை உண்டு இல்லன்னு பண்ண போறான்" எனச் சொல்லிவிட்டு துணிகளை அள்ளிக்கொண்டு அவள் அங்கிருந்து செல்லவும், "அக்கா... எவனோட அடாவடியும் என்கிட்டே செல்லுப்படி ஆகாது ஞாபகத்துல வெச்சுக்கோங்க" என அவள் உரக்கப் பதில் கொடுக்க, "அதையும் பார்க்கலாம்” எனச் சொல்லிக்கொண்டே கீழே இறங்கிச் சென்றாள் மாலதி.
மேலும் சில யோகாசனங்களைச் செய்துவிட்டு, பின் வீட்டிற்கு வந்தாள் மாளவிகா.
"அக்கா! ஏதோ ரிவைஸ் பண்ணணுமாம். அன்பு உன்னை உடனே அவங்க வீட்டுக்கு வர சொல்லிட்டுப் போனான்" என்றாள் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவளுடைய தங்கை சாத்விகா.
கடுப்புடன் நெற்றியைத் தடவிக்கொண்டவள், "போன ஜென்மத்துல விக்ரமாதித்தனோட வேதாளமா இருந்திருப்பான் இந்த அன்பு. கேள்வி கேட்டே என்னைக் கொல்லப்போறான்" எனப் புலம்பிக்கொண்டே போய் குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு வந்தவள், அவளுடைய அம்மா துளசியிடம் சொல்லிவிட்டு அன்புவின் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள் மாளவிகா.
***
பரந்துவிரிந்த அந்தக் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியிலிருந்த மாமரத்தினடியில் முகம் முழுதும் சோகத்தை அப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தது அந்த இளைஞர் கூட்டம்.
மாளவிகா, ரஞ்சனி, அன்புத்தமிழன், சல்மா மற்றும் சிலரும் அதில் அடக்கம்.
அவர்களுடைய இறுதி ஆண்டின் கடைசி பரீட்சை, அன்றுதான் முடிந்திருந்தது.
அவர்கள் அனைவரையும் பிரிவுத்துயர் வாட்டி எடுக்க, ரஞ்சனி கண்ணீர்விட்டே அழுதுகொண்டிருந்தாள்.
அவளது நிற்காத அழுகை எரிச்சலைக் கொடுக்க, "ப்ச்.. ஏய் இஞ்ஜீ. இப்ப ஏன்டீ இப்படி அழற? அந்த காலத்து சினிமால வர மாதிரி நம்ம கம்யூனிகேஷன் அப்படியே கட் ஆகி, லைஃப் டைம் முழுக்க நாம இனிமேல் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கவே முடியாம போயிடும் இல்ல?" கொஞ்சம் கடுமையாகவே கேட்டாள் மாளவிகா.
அதில் அழுகையைக் கொஞ்சம் நிறுத்தியவள் மளவிகாவையும் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அன்புவையும் கைக்காட்டி, "சொல்ல மாட்ட நீ. உனக்கென்ன. நீங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்ட்ரீட்ல குடி இருக்கீங்க. நான் அப்படியா?" என தோழியிடம் காய்ந்துவிட்டு அழுகையைத் தொடர்ந்தாள் ரஞ்சனி.
ஏற்கனவே அவளுக்கும் அன்புக்கும் ஒத்துவராது. படிப்பின் இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்த பிறகு சில நாட்களாகத்தான் அவர்கள் இருவரும் சண்டை போட்டுப் பார்க்கவில்லை ஒருவரும்.
இதில் அவள் இப்படிப் பேசவும் அன்புவின் முகம் கொஞ்சம் கடுமையாக மாற, "ஏய் இஞ்ஜீ. நீ வேணா எங்க வீட்டுக்கு வந்துடு. ப்ராப்ளம் சால்வ்ட்" என்றாள் மாளவிகா கொஞ்சலாக.
மேற்கொண்டு எந்த வாக்குவாதமும் ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கத்தில், சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்தவளை நோக்கி வந்த அவர்களின் 'ஜூனியர்' மாணவி ஒருத்தி, "சீனியர்! நம்ம அக்கௌன்டன்சி ஹெச்.ஓ.டி உங்களை உடனே வந்து பார்க்க சொன்னாங்க" என்று சொல்லிவிட்டு வந்த வேலை முடிந்தது என்கிற ரீதியில் சென்றுவிட, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், "ஓகே கைஸ். என்னன்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்பறேன். பிளான் படி சண்டே பீ.வீ.ஆர்ல மீட் பண்ணலாம்"
விடைபெறும் விதமாகச் சொல்லிவிட்டு, "அன்பு. வீட்டுக்குப் போகப்போறியா இல்ல வேற பிளான் இருக்கா?" என்றாள் மாளவிகா.
"வீட்டுக்குத்தான். நீ போய் மேம்ம பார். நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்"
அன்பு சொல்லவும் அங்கிருந்து கிளம்பினாள் அவள்.
***
அவளை அழைத்த அந்தப் பேராசிரியர், அவர்களுக்கான ஓய்வறையில் உட்கார்ந்திருந்தார்.
திறந்தே இருந்த அந்த அறையின் கதவைத் தட்டிவிட்டு, "மே ஐ கம் இன் மேம்" எனப் பணிவுடன் மாளவிகா அனுமதி கேட்க, புன்னகையுடன் அவளை உள்ளே அழைத்தார்.
"மேம்... செகண்ட் இயர் மீரா நீங்க கூப்பிட்டிங்கன்னு சொன்னாங்க" என அவள் வந்த காரணத்தைச் சொல்ல, "எஸ் மா. அடுத்து என்ன பண்ண போற. பீஜி பண்ற ஐடியா இருக்கா இல்ல வேலைக்குப் போகப்போறியா?”
அவர் நேரடியாக விஷயத்துக்கு வரவும், "ஏதாவது வேலைப் பார்த்துட்டே கரஸ்ல பீஜி பண்ணலாம்னு இருக்கேன் மேம்” புன்னகையுடனேயே பதில் சொன்னாள்.
அதில் முகம் மலர்ந்தவர், "குட். எனக்கு தெரிஞ்ச ஒரு மேனேஜ்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்ட்டிட்யூட்ல டூ மந்த்ஸ், செகரட்டேரியல் க்ராஷ் கேர்ஸ் ஒண்ணு கண்டக்ட் பண்ண போறாங்க. இன்னும் ஃப்யூ சீட்ஸ் மட்டும்தான் இருக்கு. அதை கேள்விப்பட்டதும் எனக்கு உன் ஞாபகமும் அன்பு ஞாபகமும்தான் வந்தது. அவன்தான் யூ.பி.எஸ்.ஸீக்கு பிரிப்பர் பண்ணிட்டு இருக்கான்ல. அதான் உன்கிட்ட சொன்னேன்"
அவர் சொல்லவும், "தேங்க் யூ மேம்" என்றாள் மாளவிகா.
"இட்ஸ் ஓகே" என்றவர், "அதுல நல்லா பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தா, அவங்களே ஒரு நல்ல கம்பெனில பிளேஸ்மெண்ட்க்கும் ஏற்பாடு பண்ணிடுவாங்க. நீ இன்ட்ரஸ்டட்னா அந்த ட்ரைனிங் கோர்ஸ்க்கு அப்ளை பண்ணு"
அவர் ஆர்வமுடன் சொல்ல, "ஷ்யூர் மேம். அப்பா கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு, ஐ வில் அப்ளை பார் தட் மேம்”
பணிவுடன் சொன்னவள், "அப்ளை பண்ண லாஸ்ட் டேட் எப்ப மேம்” என்று கேட்க, அந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவளது குரலில் வெளிப்படவும், அந்த தேதியைச் சொன்னவர், "அதுக்குள்ள டிசைட் பண்ணிக்கோ. அண்ட் இந்த வெப்சைட் அட்ரஸ் நோட் பண்ணிக்கோ. அது மூலமா அப்ளை பண்ணிடு” எனச் சொல்லிக்கொண்டே தன் கைப்பேசியை அவளிடம் காண்பித்தார் அவர்.
அதிலிருந்த ஒரு இணையதள முகவரியை தன் கைப்பேசியில் பதிவு செய்தவள் அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு வெளியில் வந்தாள் அவள். அன்பு அவளுக்காக அங்கே பைக்குடன் காத்திருக்கவும், அவனுக்குப் பின்னால் உட்கார்ந்தவள், பேராசிரியர் அழைத்த காரணத்தை அவனிடம் சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கிப் பயணப்பட்டாள் மாளவிகா.
***
"ஜாக் ஆஃப் ஆல்; பட் மாஸ்டர் ஆஃப் நன்” இதுதான் மாளவிகா.
எதிரில் ஒரு சர்வாதிகாரியின் தோரணையுடன் உட்கார்ந்திருந்த அக்னி மித்ரனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் கவியரசு. சொல்லும்பொழுதே அவனையும் மீறி வார்த்தைகள் கொஞ்சம் கிண்டலுடன் வந்து விழுந்துவிட, புருவத்தை உயர்த்தி மித்ரன் அவனைக் கூர்மையாகப் பார்க்கவும், "அதில்ல பாஸ்... வந்து" தன் தவறை உணர்ந்து அவன் இழுக்கவும், 'மேல சொல்லு' என்பது போல் மித்ரன் ஒரு பார்வை பார்க்க, தொடர்ந்தான் கவி.
"பரதநாட்டியம்; கிளாசிக்கல் மியூசிக்னு எல்லா க்ளாஸுக்கும் போயிருக்காங்க. பட் எதையும் முழுசா முடிக்கல. காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து அந்தப் போட்டி; இந்தப் போட்டி; கல்ச்சுரல் ஆக்டிவிட்டிஸ்னு ஒண்ணையும் விட்டதில்லை. அவங்க காலேஜ் உமன்ஸ் ஹாக்கி டீம்ல கூட இருக்காங்க"
அவன் சொல்லிக்கொண்டே போக, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காண்பிக்காமல், 'ம்' கூட கொட்டாமல் அதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் மித்ரன்.
"நல்லா படிக்க கூடிய பொண்ணுதான். ஆனா படிக்க மாட்டாங்க. அவ்வளவு அரட்டையாம். அன்புத்தமிழன்னு ஸ்கூல் டேஸ்ல இருந்தே அவங்களோட ஃப்ரெண்ட்” என்றவன் அவனுக்குப் புரிய வைக்கும் விதமாக, "அதான் அன்னைக்கு அவங்க கூட டான்ஸ் பண்ணாரில்ல அவர்தான்' என்று சொல்ல, அதற்கு மித்ரனின் கண்களில் ஒரு நொடி மின்னி மறைந்த உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அப்படியே நிறுத்தவும், "ஏன் நிறுத்திட்ட? கன்டின்யூ" என்றான் மித்ரன்.
“அந்த அன்பு இருக்கார் இல்ல அவர்தான் இவங்களை விடாப்பிடியா தலைல தட்டிப் படிக்க வைப்பாராம். இல்லனா ஒரு சப்ஜெக்ட் விடாம எல்லாத்துலயும் அரியர்தான் வந்திருக்குமாம்" என அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல, அவனையும் மீறிச் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது மித்ரனின் முகத்தில்.
சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைப் பற்றி அவன் அறிந்து கொள்ள இவ்வளவு முனைப்புக் காட்டுவதைப் பார்த்து அதிசயமாக இருந்தது கவியரசுக்கு. மாளவிகாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலை முகத்தில் காண்பிக்காமல் என்னதான் அவன் மறைத்தாலும் அது நன்றாகவே புரிந்தது கவிக்கு.
அவர்கள் அந்தக் கல்லூரி விழாவிற்குச் சென்று வந்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். அடுத்த இரண்டு நாட்கள் அவனைச் சந்திக்கவே இல்லை கவி. கிட்டத்தட்ட மித்ரன் தொடர்பிலேயே இல்லை எனலாம். அவனுடைய கைப்பேசி கூட அணைத்து வைக்கப்பட்டிருக்க, அந்த இரண்டு நாட்களைக் கடப்பதற்குள் இவன் தலையைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம்.
அதற்கடுத்த நாள் அவனைத் தொலைப்பேசியில் அழைத்தவன், "கொஞ்ச நாள் நான் இங்க இருக்க மாட்டேன். மேனேஜ் யுவர் செல்ஃப்" என வெகு இயல்பாகச் சொல்லிவிட்டு வேறெதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டிக்க, நொந்தே போனான் கவி.
அக்னிமித்ரனுக்கு அவனுடைய மடிக்கணினியும் கைப்பேசியும் இருந்தால் போதும். உலகத்தின் எந்த ஒரு மூலையிலிருந்தும் அவனது தொழிலை, அதுவும் சிறு பிசகு கூட இல்லாமல் கவனித்துக்கொள்வான். அவனுடைய நிர்வாகத் திறன் அப்படி. இவனுக்குத்தான் கைப்பேசியிலும் மின்னஞ்சலிலுமே கட்டளைகள் பறந்துகொண்டிருக்கும்.
அவன் சொன்ன அந்தக் 'கொஞ்ச நாள்' ஒரு மாதத்தையும் தாண்டியிருக்க, 'வெகேஷன்' என்ற பெயரில் ஃப்ரான்ஸ் சென்றிருந்தவன் முந்தைய தினம்தான் சென்னைத் திரும்பியிருந்தான். இந்த முறை அவனுடன் சென்றது அவனது கல்லூரி தோழர்கள்தான் என்பது அவன் இங்கே வந்த பிறகுதான் தெரிந்தது கவிக்கு. அதில் ஒரு பெண் கூட இல்லை என்பது அவனுக்கு முதல் அதிர்ச்சி என்றால், வந்ததும் வராததுமாக அக்னிமித்ரன் மாளவிகாவைப் பற்றிய தகவல்களை அறிந்தது சொல்லச்சொன்னது அவனுக்கு இரண்டாவது அதிர்ச்சி.
பொதுவாக உச்சத்திலிருக்கும் யாராவது ஒரு 'மாடல்' அல்லது நடிகை போன்றவர்கள்தான் அவனுடன் 'டேட்டிங்' என்ற பெயரில் தொடர்பில் இருப்பார்கள். அவர்களுடைய அந்த உறவும் கூட, அவனுடைய தொலைக்காட்சியில் வரும் 'ரியாலிட்டி ஷோ'க்களைப் போல 'சீசன் ஒன்' 'சீசன் டூ' என மாறிக்கொண்டே இருக்கும். ஏதாவது பொது நிகழ்ச்சிகளில் அறிமுகம் ஆகி, பின் நட்பாகி, அது அடுத்த நிலைக்குப் போய் ஒரு கட்டத்தில் முறிந்துப்போகும் தற்காலிக 'ரிலேஷன்ஷிப்'தான் எப்பொழுதுமே அவனுக்குப் பொருத்தமாக இருக்கும்.
தான் யார் என்பதை நிரூபிக்கும் பொருட்டு சவாலாக, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிய ஒரு 'ரியாலிட்டி ஷோ'வை அவன் தொகுத்து வழங்கியதன் மூலம் பெண்கள் மத்தியில் அவன் மிக மிகப் பிரபலம்.
அதைப் பார்த்துவிட்டு அவன் மீது வந்து விழுந்த பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனாலும் கூட யாரையும் திரும்பிக் கூட பார்த்ததில்லை அவன். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவன் மனதிற்குப் பிடித்திருந்தால் மட்டுமே அவனிடம் ஒருவரால் நெருங்க முடியும். அதுவும் கூட இதுவரை அவனாகப் போய் யாரையும் நெருங்கியதில்லை அக்னிமித்ரன்.
கவியரசுக்குத் தெரிந்தவரை, மித்ரனாக ஒருத்தியைப் பற்றி விசாரிக்கிறான் என்றால் அது முதன்முறையாக மாளவிகாவைப் பற்றித்தான். ஏதேதோ எண்ண ஓட்டத்துடன் கவி மித்ரனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,
"அவளோட ஃபேமிலி பேக்ரௌண்ட் எப்படி?" அவனைக் கலைப்பதுபோல் கேட்டான் மித்ரன்.
சுயநினைவுக்கு வந்தவனாக, "ஆங்.. அவங்களுக்கு இரும்புலியூர்ல சொந்த வீடு இருக்கு. அதுல ஒரு போர்ஷன்ல வாடகையும் வருது. அவங்க அப்பா அங்கேயே மெயின் ரோட்ல 'மது டெலிகாம்ஸ்'னு ஒரு ஷாப் வெச்சிருக்காரு. ஃபோன் ரீசார்ஜ் பண்றதுல இருந்து, சிம் கார்ட் சேல்ஸ் பண்ற வரைக்கும் அங்க செய்யறாங்க. கூடவே ஸ்டேஷனரிஸ், ஜூஸ், ஐஸ் க்ரீம் எல்லாம் கூட விக்கறாங்க.
சிகெரெட் பாக்கெட், சிப்ஸ், பாட்டில் ஜூஸ் எல்லாம் வித்துட்டு இருந்தாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னால மாளவிகா சொன்னாங்கன்னு சொல்லி அதை ஸ்டாப் பண்ணிட்டாங்க. அந்த இன்கம் அட்ஜஸ்ட் பண்ண இப்ப பால் வியாபாரமும் செய்யறாங்க. அவங்க அம்மா, அவங்க அப்பாவுக்கு உதவியா கடையைப் பார்த்துக்கறாங்க.
”தென் ஒரு அக்கா. பேர் மதுவிகா. பீஈ முடிச்சிருக்காங்க. அவங்கள போன வருஷம்தான் கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்காங்க. ஒரு தங்கை. பேரு சாத்விகா. ப்ளஸ் டூ படிக்குது. அங்க அவங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அன்பு வீடும் இருக்கு. இப்போதைக்கு இவ்வளவு டீடைல்ஸ்தான் கிடைச்சுது” என முடித்தான் கவி.
அப்பொழுது அவனது கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்தவன் அந்த அழைப்பை ஏற்று, "ஜஸ்ட் எ செகண்ட் மிஸ்டர் பரணி” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை, 'ம்யூட்' செய்து, "அந்த ரூபாவை காண்டாக்ட் பண்ணி பேசு. அவ எவ்வளவு அமௌண்ட் கேக்கறாளோ அதை செட்டில் பண்ணிடு. இனிமேல் அவ என்னை காண்டாக்ட் பண்ணவே கூடாது. ஜஸ்ட் ஆஸ்க் ஹர் டு பினிஷ் எவெரிதிங்" என அவன் சர்வசாதாரணமாகச் சொல்ல, அதிர்ந்துபோய் அங்கிருந்து சென்றான் கவி.
"சாரி.. சொல்லுங்க பரணி" என அவன் மறுபடியும் அந்த அழைப்பில் இணைய, "நீங்க சொன்ன அந்த கேண்டிடேட் எங்க கோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க மிஸ்டர் மித்ரன். இப்பதான் அவங்ககிட்ட இருந்து மெயில் வந்துது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றார் அந்த பரணி.
அவன் முகம் பிரகாசிக்க, "ஜஸ்ட். கோ வித் யுவர் ப்ரோட்டாகால். அட் எனி காஸ்; கோர்ஸ் முடிஞ்ச அடுத்த நாள் அவங்க என் கம்பெனில பிளேஸ்மென்ட் ஆகியிருக்கணும். தட்ஸ் இட்" சொல்லிவிட்டு அவன் அழைப்பைத் துண்டிக்க,
அவன் கைப்பேசி மறுபடி ஒலிக்கவும், அதில் ஒளிர்ந்த 'ரூபா' என்ற பெயரைப் பார்த்து, நெற்றி சுருங்க அந்த அழைப்பை ஏற்றவன், "என் பீஏ உன்னை காண்டாக்ட் பண்ணியிருப்பார்னு நினைச்சேன்" என்றான் கொஞ்சம் கடினமான குரலில்.
"அவர் சொன்னது நிஜமா அமித்? பிரேக்கப் பண்ற பிளான்லதான் இருக்கியா? அதனாலதான் நீ இவ்வளவு நாளா என் கால்ஸை அட்டண்ட் பண்ணலயா? ஐ காண்ட் பிலீவ் திஸ் அமித்” அவள் கெஞ்சலாகக் கேட்க, "புரிஞ்சிடிச்சு இல்ல. ஜஸ்ட் ஸ்டே அவே. இனிமேல் என்னைக் காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாத" அவளுடைய மனதைப் பற்றிக் கொஞ்சமும் எண்ணாமல், இரக்கமின்றி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
மலர்களின் ஒரே கடமை வண்டுகள் சுவைக்கத் தேனைக் கொடுப்பது மட்டும்தான் என்பது போல, பெண்களை மலர்களாகவும் ஆண்களை வண்டுகளாகவும் தும்பிகளாகவும் சித்தரித்துப் பல கதைகளும் காவியங்களும் புனையப்பட்டிருக்கின்றன.
சாம, தான, பேத, தண்டம் என அனைத்து உபாயங்களையும் பயன்படுத்தி ஒரு பெண்ணை அடைவது மட்டுமே இன்றளவும் கூட ஆண்களின் குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் ஊனுண்ணி தாவரங்கள் என்று ஒரு வகை தாவரங்கள் இருக்கிறது என்பதை எந்தக் காவியங்களும் சொல்லவில்லை.
'வீனஸ் ஃப்ளை ட்ராப்' தமிழில் வில்பொறி - என்றொரு தாவரம் உண்டு. கண்களைக் கவரும் அதன் வண்ணமிகு அழகில் மயங்கி அதை நாடிச் செல்லும் தும்பிகள் அதற்கு இரையாகி மாண்டுபோகும்.
அந்த வில்பொறி போன்ற பெண்களும் இங்கே உண்டு என்பதை யாரும் நினைப்பதே இல்லை.
மாளவிகாவிற்காக ஒரு பொறியை ஏற்படுத்திக் காத்திருக்கிறான் மித்ரன்.
அந்தப் பொறியில் அவள் சிக்குவாளா? இல்லை அவன் வைத்த பொறியில் அவனே சிக்கிக்கொள்வானா அக்னிமித்ரன்?
விடை காலத்தின் கைகளில்.
Wow awesome
Adapavi mithra onnu vidama ella details um collect pannita avalai um un office la work panra pola pannita ana ava unnai partha work pannuvala da nee vecha valai la nee dan vizha pora da ava unnai oru vazhi pannama vida mata
மித்ரன் எனும் சிறுத்தை மாளவிகா எனும் புள்ளிமான்யென்ற அதற்கு வலையை விரிகிறதா, அந்த வலையில் யார் மாட்ட போகிறார்கள் என்று பார்ப்போம்👌👌👌👍👍👍🌺🌺🌺