En Manathai Aala Vaa-19
Updated: Oct 14, 2022
மித்ர-விகா-19
சில நாட்களாக மாளவிகாவின் சீழ்க்கை இசையை அதிகம் 'மிஸ்' செய்கிறான் அக்னிமித்ரன். காரணம், மிகவும் நல்ல பிள்ளை போல் பதவிசாக மின்தூக்கியில் பயணிக்கிறாள் அவள்.
ஆனால் அவளது கண்கள் மட்டும், ஆராய்ச்சியுடன்அந்த இடத்தை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றி வரும். அதில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது என அவள் உறுதியாக நம்புவதால் இருக்கலாம். ஆனாலும் இன்று வரை அவளால் அதை கண்டுபிடிக்க இயலவில்லை.
தினமும் அதைப் பார்த்துச் சிரித்துக்கொள்வான் மித்ரன். சிறு சிறு சொதப்பல்கள் இருந்தாலும் அலுவலக பணிகளில் எந்த வித குறையும் சொல்வதற்கில்லை. மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கிறாள். விடுப்புகள் எடுப்பதே இல்லை.
ஒரு விதத்தில் பார்த்தால் அது அவனுக்குச் சாதகமானதாகவே இருக்கிறது. காரணம் இப்பொழுதெல்லாம் அவளுடைய அந்த அருகாமையே அவனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
அவர்கள் அலுவலகம் சனிக்கிழமை கூட இயங்குவதால், அவளில்லாமல் ஞாயிறு ஒரு நாளை கடப்பதே பெரும்பாடாக இருக்கிறது அவனுக்கு.
அவளை 'டுவெண்டிஃபோர் பை செவென்' தன்னுடனேயே இருத்திக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான். அது திருமணமே என்றாலும் கூட!
அதைச் சொன்னால் முதலில் அவள் நம்புவாளா என்பதே ஒரு கேள்வி என்றால், கட்டாயம் அதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பது அவன் நன்றாகவே உணர்ந்த அந்தக் கேள்விக்கான விடை.
அவள் மனதில் 'இவன் இல்லாமல் தன்னால் வாழ இயலாது' என்று அவள் உணர்ந்தால் மட்டுமே, ஒரு வேளை அதை உணர்ந்தாலும் கூட அதை வெளிப்படையாக அவள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அவனுடைய இந்த எண்ணம் ஈடேறும்.
அவள் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதும் திண்ணம். காரணம் யாரைப் பற்றியும் கவலை படாமல் வெளிப்படையாக அவன் தன்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம்.
பெண்கள் விஷயத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் கனகச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளும் போது இருந்த திமிர், ஒரு கேவலமான பெருமிதம் இப்பொழுது தவிடுபொடி ஆகியிருந்தது. இப்படி ஒரு சூழல் ஏற்படும் என முன்பே தெரிந்திருந்தால் இப்படி ஒரு மோசமான பாதையில் சென்றிருக்க மாட்டானோ என்னவோ?
'அமித்' என்று கூப்பிடாதே என அதற்கான காரணத்துடன் அவன் சொன்ன பிறகு 'அக்னி' என அழைக்கத் தொடங்கிவிட்டாளே ஒழிய 'மித்ரன்' என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து வரவே இல்லை. நண்பன் என்ற நிலையில் கூட அவனை வைத்துப் பார்க்க அவள் தயாராக இல்லை என்பதன் வெளிப்பாடுதான் அது.
'அக்னி' என அழைப்பதன் காரணத்தைக் கேட்டால், 'நெருப்புகிட்ட இருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றதுதான் ரொம்ப நல்லதுன்னு எப்பவும் என் ஞாபகத்துல இருக்கணும் இல்ல? அதுக்குதான் அப்படிக் கூப்பிடறேன்' என வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள்.
'உன்னை மட்டும் இந்த நெருப்பு ஒரு நாளும் சுடாது. உண்மையில் உன் அருகாமையில் இந்த நெருப்பு பனித்துளியாக மாறிப்போகிறது!' என்று அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது விளங்காமல் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருக்கிறான் அவன்.
அவளைக் கண்களால் பார்த்து முழுதாக இருபத்து நான்கு மணிநேரங்கள் முடிந்து சில மணித்துளிகளும் கடந்திருந்தன. ஒரு நண்பனின் குழந்தையின் முதல் பிறந்தநாள் பார்ட்டிக்குப் போய்விட்டு இப்பொழுதுதான் திரும்பியிருந்தான்.
இவனுடன் கல்லூரியில் படித்தவன் அவன். கணவன் மனைவி குழந்தை என அவனை ஒரு குடும்பமாகப் பார்த்தபொழுது தன்னையும் மாளவிகாவையும் இவர்கள் இருவரின் பிரதிபலிப்பாக ஒரு மகவையும் அந்த இடத்தில் பொருத்தி அழகுப் பார்த்தது மனம். அந்தக் கற்பனையே அவ்வளவு தித்தித்தது அவனுக்கு.
அவனது சிந்தனை முழுதும் மாளவிகவே நிறைந்திருக்க, கட்டிலில் படுத்தவண்ணம் வீனஸ் தமிழில் வரும் ஒரு 'ரியாலிட்டி ஷோ'வை பார்த்துக்கொண்டிருந்தான். அதில் மோனா நடுநாயகமாய் நடுவர் இருக்கையில் உட்கார்ந்திருக்க நிகழ்ச்சி ஆட்டமும் பாட்டமுமாக களைக்கட்டியிருந்தது.
சட்டென ஏதோ நினைவு வந்தவனாகக் கவியை அழைத்தவன், "கவி... இந்த ப்ரோக்ராம்ல மோனா பார்ட்டிசிபேட் பண்ண ஆரம்பிச்ச பிறகு டி.ஆர்.பி குறையல இல்ல?" என சந்தேகமாகக் கேட்டான். "இல்ல பாஸ்” என்று அவன் பதில் சொன்ன விதமே 'திடீர்னு இவன் ஏன் இதை கேட்கிறான்!' என்பது போல் தொனித்தது.
"இதுதானே மூணாவது எபிசொட், ஒரு சின்ன டௌட்" என அதற்கு விளக்கம் சொன்னவன், "சாரி... உன்னை இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்" என்று வேறு சொல்லி, 'இது இவனோட டிசைன்லயே இல்லையே!' என அவனைத் தெளிவாகக் குழப்பி, "அப்படிலாம் இல்ல பாஸ்" என்ற அவனுடைய தயக்கமான பதிலைப் பெற்றுக்கொண்டு அழைப்பைத் துண்டித்தான் மித்ரன்.
அடுத்த நொடியே அவனை மறுபடியும் தனிமை சூழ்ந்து கொள்ள 'அஜூபாவ பார்க்கத்தான் முடியல, அவளோட குரலையாவது கேட்போம்' என்கிற உந்துதலில் அவளுக்கு அழைத்தான். 'கால் வெயிட்டிங்'கில் போனது.
'ப்ச்' என்று அலுத்துக்கொண்டு இணைப்பைத் துண்டித்தவன் பொறுமையைக் கைவிடாமல் சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் அழைக்க, பதிவு செய்யப்பட்ட குரல், 'நீங்கள் டயல் செய்த எண் இப்பொழுது பிஸியாக உள்ளது' என்று ராகம் போட்டுச் சொல்லக் கடுப்பானவன் கையிலிருந்த ஃபோனை வீசி எறிந்தான். ஒரு தலையணையில் போய் விழவும் நல்லவேளையாக உயிர் தப்பியது அந்தக் கைப்பேசி.
இந்த இரவு வேளையில் அதுவும் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்றால் அது அன்புவுடன்தான் இருக்கும் என்பதில் அவனுக்குக் கொஞ்சம் கூட சந்தேகமேயில்லை. ஆனாலும் அது கூட ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
அவன் அழைக்கும் நேரத்தில் அந்த அழைப்பை அவளால் ஏற்க இயலவில்லையே என்ற எரிச்சல்தான் மேலோங்கி இருந்தது. மற்றொரு அழைப்பு வருவது கூட தெரியாமல் அப்படி என்ன பேச்சு என்றுதான் தோன்றியது.
ஏமாற்றத்துடன் சில நிமிடங்கள் தலையணையில் முகம் புதைத்து அவன் படுத்திருக்க, 'காற்றுவெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்' என வீணையிசைத்தது அவனுடைய கைப்பேசி. அவளுக்கென்று பிரத்தியேகமாக வைத்திருக்கும் 'ரிங் டோன்' அது.
துள்ளலுடன் கை பாட்டிற்கு அனிச்சையாக அதை எடுத்து பச்சை வண்ணத்தை இழுத்துவிட, அவனது இதழ்கள் அழுத்தமாக மூடிக்கொண்டு பேசாமல் பிடிவாதம் சாதித்தது.
"ஹலோ"
"…"
"ஹலோ அக்னி"
அவனது மவுனம் நீடிக்கவும், "இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கீங்களே, ஏதாவது முக்கியமான விஷயமான்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன். இட்ஸ் ஓக்கே... நான் கட் பண்றேன்" என மெல்லிய குரலில் எகிறினாள் அவள்.
அவளது அந்தச் சூடான குரல் சில்லென்று அவனது இதயத்தை ஊடுறுவ, தொண்டையைச் செறுமிக்கொண்டவன், "நேத்து ஒரு ஸ்டாட்டிஸ்டிகல் ரிப்போர்ட் ரெடி பண்ண இல்ல. அதை எந்த ஃபோல்டர்ல சேவ் பண்ணியிருக்க?" அழைத்ததற்கு ஏதாவது காரணம் வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றைக் கேட்டு வைத்தான்.
அதைப் பற்றிய தகவலைச் சொன்னவள், "அவ்வளவுதான, நான் காலை கட் பண்ணட்டுமா?" என்று அவசரம் காட்ட, விடிய விடியப் பேசிக்கொண்டே இரு என்றா அவளிடம் சொல்லமுடியும்? "ம்... குட் நைட்… பை" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் மித்ரன்.
உறக்கம்தான் அவனது விழிகளைத் தழுவ மறுத்தது.
***
அடுத்த நாள் வழக்கம்போல மின்தூக்கிக்குள் நுழைத்தவள், எப்பொழுதும் செய்வதைப் போலக் கண்ணாடியைப் பார்த்து தன்னை சரி செய்துகொண்டு,
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்...
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்' எனச் சீழ்க்கை அடிக்கத் தொடங்கினாள்.
வழக்கம் போல தன் கைப்பேசியில் இதையெல்லாம் ரசித்துக்கொண்டுதான் இருந்தான் மித்ரன்.
அவளது உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது அது அவனையும் தொற்றிக்கொள்ள, கண்காணிப்பு கேமராவைப் பற்றிய சிந்தனையெல்லாம் அவளுக்குத் தூர விலகிப்போய்விட்டது என்றே தோன்றியது.
ஐந்தாவது தளத்தில் அவளுடன் இணைந்துகொண்டவன், அவளுடைய, 'குட் மார்னிங்'கை பெற்றுக்கொண்டு பதிலுக்குப் புன்னைகைத்துவிட்டு, "என்ன மேடம், உன் ஃபேஸ் இன்னைக்கு தொளசண்ட் வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி பிரைட்டா இருக்கு? ரொம்ப ஹாப்பியா இருக்க போலிருக்கு. என்ன ஸ்பெஷல்?" என்று கேட்டான், அவளுக்கு எந்த சந்தேகமும் வந்துவிட கூடாது என்ற எச்சரிக்கையுடன்.
அப்பொழுதுதான் அவளுடைய அக்காவிடம் பேசிவிட்டு வந்திருந்தாள். அவள் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருப்பதாகவும். சற்று நேரத்தில் ஸ்கேன் செய்யப்போவதாகவும் சொல்ல, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது மாளவிகாவுக்கு.
இந்த மகிழ்ச்சியை அவனுடன் பகிர்ந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற சிறிய குழப்பம் வர, சொல்வதால் தவறு ஒன்றும் இல்லை என்று தோன்றவும், “நான் சித்தி ஆகப்போறேன்” என்றவள் அவன் ஒரு விளங்காத பார்வை பார்க்கவும், "என்னோட அக்காவுக்கு பாப்பா வரப்போகுது" என்றாள் பெருமிதத்துடன்.
அவனுக்கும் அவன் அண்ணன் பிள்ளைகளை மிகவும் பிடிக்கும் என்பதால், அவளது மனநிலை புரிந்தது. கூடவே முந்தைய இரவு அந்த பார்ட்டியின் நினைவு வேறு வரவும், கிறக்கத்துடன் 'கங்கிராட்ஸ்' என்றவனின் குரலிலும் பார்வையிலும் இருந்த பேதம் அவளுக்கு நன்றாகவே விளங்கியது.
அதற்குள் அவர்கள் அலுவலக தளம் வந்துவிட, கடுப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்றாள் மாளவிகா.
'நீ கொஞ்சம் கவனமா இருக்கணும் மித்ரா... எதுக்கும் உன் குரல்வளை பத்திரம்! அன்னைக்கு என்னவோ போனா போகுதுனு உன்னை விட்டுட்டா. மறுபடியும் எக்குத்தப்பா மாட்டின அவ்வளவுதான்' என அவனது மனசாட்சி அவனை எச்சரிக்க அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றவன் அன்று முழுவதும் நல்ல பிள்ளை வேடம் போடவேண்டியதாக ஆகிப்போனது.
அந்த வாரம் முழுவதும் ஒரு மென்மையான லயத்துடன் சீராகச் சென்றது.
வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவளை, அங்கே குடிகொண்டிருந்த அசாத்திய அமைதியும், ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த துளசியும் லேசாகக் கலவர படுத்த, எதையோ எழுதிக்கொண்டிருந்த தங்கையைப் பார்த்து என்ன என்று ஜாடை செய்தாள் மாளவிகா.
'தெரியல' என்பதுபோல உதட்டைச் சுழித்து அவள் தோளைக் குலுக்கவும், அவர்கள் அறைக்குள் புகுந்தவள் குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறி வந்தாள். அன்று நேரத்துடன் கடையைப் பூட்டிவிட்டு மூர்த்தி வேறு வந்துவிட அதிசயமாக இருந்தது அவளுக்கு.
அனைவரும் ஒன்றாக இரவு உணவு உண்ண உட்காரவும், மூர்த்தியும் துளசியும் ஏதோ ஜாடையிலேயே பேசிக்கொள்வது புரிய, "என்னம்மா? என்ன விஷயம்?" என்று கேட்டாள் மாளவிகா.
"அது ஒண்ணும் இல்ல கண்ணு நம்ம மதுவோட மாமனார் கால் பண்ணியிருந்தாரு" என்று நிதானமாகத் தொடங்கினார் மூர்த்தி.
"ஓஹ்... ஊர்ல இருந்து வந்துட்டாங்களாப்பா" என அவள் கேட்க, "ஹ்ம்ம்... செவ்வாய் கிழமையே வந்துட்டாங்க" என்றவர் சிறு தயக்கத்துக்குப் பிறகு,
"நம்ம சரவணனுக்கு கல்யாணத்துக்கு பார்க்கறாங்க போல இருக்கு. அவன் என்னவோ உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டானாம். உனக்குத்தான் மாப்பிளையோட அப்பாவைப் பத்தி தெரியுமே. பந்தா இல்லாத மனுஷன். அதான் நேரடியாவே பொண்ணு கேட்டுட்டாரு" என அவர் சொல்லவும் பேச்சே வரவில்லை மாளவிகாவுக்கு.
"நீங்க என்னப்பா சொன்னீங்க?" என்று அவள் உள்ளே போன குரலில் கேட்க, "பேசிட்டு இந்த வீக் எண்ட் சொல்றேன்னு சொல்லி இருக்கேண்டா" என்றார்.
"அப்பா… திடீர்னு இப்ப என்னப்பா இந்தப் பேச்சு…" என அவள் இழுக்க, "இப்ப பேசாம நீ கிழவி ஆனா பிறகா பேசுவாங்க" என்ற துளசி,
"நீ மேல படிக்கவோ இல்ல வேலைக்குப் போகவோ அவங்க எந்தத் தடங்கலும் சொல்லப்போறதில்ல. தேடி அலைஞ்சாலும் இப்படி ஒரு இடம் கிடைக்காது. நம்ம அக்கா கூட ஒரே வீட்டுல வாக்கபட கசக்குதா உனக்கு" என்றார் ஒரு அழுத்தமான குரலில். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது அவளுக்குப் புரிந்துபோனது.
கலவரத்துடன் அவள் தந்தையை ஒரு பார்வை பார்க்க, "கண்ணு அக்காவைக் கட்டிக் கொடுத்திருக்கிற இடம்டா. அவங்களா வந்து கேட்கறாங்க. நாம வேண்டாம்னு பந்தா காமிச்சா அவ வாழ்க்கையைப் பாதிக்கும். இப்ப அவ மாசமா வேற இருக்காம்மா. அவ மனசைப் பாதிக்காத மாதிரி ஒரு நல்ல முடிவா சொல்லு கண்ணு" எனக் கிட்டத்தட்டக் கெஞ்சலாகச் சொன்னார் மூர்த்தி. ஆமோதிப்பாக மௌனம் சாதித்தார் துளசி.
'பெரியவர்கள் பேச்சில் தலையிடக்கூடாது' என்பதுபோல் அங்கே நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாகத் தலை குனிந்தவாறு சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள் சாத்விகா முகத்தில் தீவிர சிந்தனை ரேகை படர. மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக்கொண்டாள்.
ஒருமுறை சரவணனிடம் நேரில் பேசினால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்ற எண்ணம் தோன்ற, அன்புவுக்கு அனைத்தையும் குறுந்தகவலாக அனுப்பிவிட்டு அமைதியாக உறங்கிப்போனாள் மாளவிகா.
***
காலை வழக்கம்போல அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் மாளவிகா. மகள் ஏதாவது முடிவைச் சொல்வாளா என்ற ஆவலில் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் துளசி.
"தொணதொணன்னு எதையும் கேட்டு இப்போதைக்கு அவளைத் தொல்லை பண்ணாத. ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம்" என்று மூர்த்தி சொல்லிவிட்டு கடைக்குச் சென்றிருக்கவே அவர் எந்தக் கேள்வியும் மகளைக் கேட்கவில்லை அவ்வளவுதான்.
எந்த உணர்ச்சியையும் வெளிக்காண்பிக்காமல் அமைதியாக வீட்டிலிருந்து கிளம்பியவள் 'கேப்'பில் பயணம் செய்யும் நேரத்தில் பேசிவிடலாம் எனத் தமக்கையை அழைக்க, பல முறை அழைத்தும் அவளுடைய அழைப்பு ஏற்கப்படவே இல்லை.
கொஞ்சம் கடுப்புடன் அலுவல வளாகத்திற்குள் நுழைந்தவள், மின்தூக்கியை நோக்கிப் போக, அது பத்தொன்பதாவது தளத்திலிருப்பதாகச் சொல்லவும், அதற்கான விசையை அழுத்திவிட்டு காத்திருக்க சில நிமிடங்கள் அது அங்கே வரவும் அவள் கைப்பேசியில் மதுவிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
உள்ளே நுழைந்தவாறு அவள் அந்த அழைப்பை ஏற்கவும், "சொல்லு மாலு கால் பண்ணியிருத்தியா" என்றாள் மது அவசரமாக.
"ஏன் கா ஏன்... உன் மச்சினனுக்கு வேற ஆளே கிடைக்கலையா?" என அவள் படபடக்க,
"ஏய்... அவருக்கு என்னடி குறைச்சல். எவ்வளவு டீசண்டா நடந்துட்டு இருக்காரு" என்றவள் மாளவிகாவை விரும்புவதைப் பற்றி அவன் சில மாதங்களுக்கு முன் சொன்னதையும், தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவன் பொறுமையாகக் காத்திருப்பதையும் சொல்லிவிட்டு,
"ஏன் மாலு! உனக்கு சரவணனைப் பிடிக்கலையா?" என்று சற்று இறங்கிய குரலில் கேட்க,
"அக்கா! அவரைப் பிடிக்காதுன்னு எல்லாம் இல்ல! இப்படி கல்யாணம்ங்கற இடத்துல அவரை வெச்சு பார்த்ததில்லை" என்றாள் மாளவிகா தன் மனதை மறைக்காமல்.
"அப்படினா உனக்கு ஓகேன்னு எடுத்துக்கலாமா?" என மது கேட்க,
"அவசர படாதக்கா. எனக்கு சரவணக்கிட்ட பேசணும். அப்பறம் என் முடிவை சொல்றேன்" என்று சொல்ல,
"நான் அவர் கிட்ட சொல்றேன் மாலு. ஆனா எடுத்தேன் கவுத்தேன்னு எதையாவது பேசி வைக்காத. அவர் ரொம்ப நல்லவர்டி" என மச்சினனுக்கு அவள் பரிந்துப்பேச,
"அக்கா... நான் உன் தங்கைங்கறதே உனக்கு மறந்துபோச்சு போலிருக்கு. நீ இப்ப மாப்பிளை வீட்டுக்காரி மாதிரி பேசற" என மாளவிகா சண்டைக்குக் கிளம்பவும்,
"அப்படியெல்லாம் இல்லடி மாலு, உன்னோட பாஸ்ட்டால? நாளைக்கு எந்தப் பிரச்னையும் வராதுடீ. அதனாலதான் நான் இவ்வளவு மெனக்கெடறேன்" என்றாள் மது ஒரு பெருமூச்சுடன்.
ஒருநொடி அவளுடைய முகம் இருண்டு போக, "சரிக்கா... சரவணன் கிட்ட நான் பேசணும்னு சொன்னேன்னு சொல்லு... எனக்கு டைம் ஆச்சு. பை!" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மாளவிகா.
அவளுடைய அலுவலகம் இருக்கும் தளம் வரவும் இறங்கி உள்ளே சென்றாள். எப்பொழுதும் அந்த மின்தூக்கி ஐந்தாவது தளத்தைக் கடக்கும்போது, அவளுடைய கண்கள் சிறு ஆவலுடன் மித்ரனைத் தேடும். இன்று பேச்சு சுவாரஸ்யத்தில் அவனை முற்றிலுமாக மறந்திருந்தாள். அவளிடம், தன்னையே மறக்கச்செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் வளரவிடமாட்டான் இந்த மித்ரன் என்பதை அவள் அறியவில்லையோ?
அந்தக் கட்டிடத்தின் இருபதாவது தளத்தில் இருக்கும் மொட்டை மாடியில் நின்றுகொண்டு சாலையில் எறும்புபோல் ஊர்ந்து செல்லும் வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்த அக்னிமித்ரனின் விழிகள் உண்மையிலேயே கனலைத்தான் உமிழ்ந்தது.