En Manathai Aala Vaa-17
Updated: Oct 11, 2022
மித்ர-விகா-17
கண்ணம்மாவுக்கு அக்னிமித்ரனைத் தெரியாமல் போனாலும் அங்கே இருந்தவர்களுக்கு அவனை அடையாளம் தெரிந்து விடச் அங்கே சிறு சலசலப்பு உண்டானது. உடனே சாமிக்கண்ணு அனைவரையும் ஒரு பார்வை பார்க்க, அதற்குக் கட்டுப்பட்டு அமைதியானார்கள் அவருடைய மாணவர்கள்.
அதற்குள், "குமாரு, வீட்டுக்குள்ள பானைல நன்னாரி கலக்கி வெச்சிருக்கேன். அதை எடுத்துட்டு வா. கூடவே கிளாஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வா என்ன" என அங்கே வேலை செய்பவனை அனுப்பிய கண்ணம்மா, அவன் சென்றதும், "ஐயோ மறந்துட்டேன் பாரு... இரு வரேன்" என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஓடினார். "மறதியால ஒரு வேலைக்கு ரெண்டுவேலையா செய்யறதே இவளுக்கு வழக்கம்" என்று சிரித்தார் சாமிக்கண்ணு,
"இவங்கதான் எங்க சாமிக்கண்ணு அய்யா. எங்களோட ஆசான்... குரு" என அவள் அவரை மித்ரனுக்கு அறிமுகம் செய்ய, நாகரிகம் கருதி கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து நின்றவர், "வணக்கம் தம்பி” என்று சொல்லிவிட்டு, "அடேய்; யாரவது அந்த சேர எடுத்துட்டு வா" என்று சொல்ல, ஒரு மாணவன் நெகிழியால் ஆன நாற்காலி ஒன்றை எடுத்து வந்து போட்டான்.
"உட்காருங்க தம்பி" என்றவரை வியப்பாகப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்தான் அவன்.
அவருக்கு ஐம்பத்தெட்டு வயதாகிறது என யாராவது சொன்னால் கூட நம்ப முடியாத படி, ஐம்பது வயது தோற்றத்துடன் மிடுக்காக இருந்தார். வழுக்கை விழுந்த தலையில் 'சால்ட் அண்ட் பெப்பர்' போல் வெள்ளையும் கருப்புமாக எட்டிப்பார்க்கும் முடியுடன் பரந்த நெற்றியும், கூரான மூக்கும், கறுத்த அடர்ந்த மீசையுடன் கம்பீரம் நிறைந்ததாக இருந்தது அவர் முகம்.
உயரம் சற்று குறைவாக இருந்தாலும், முகத்தில் தெரிந்த அதே கம்பீரம் முறுக்கேறிய அவரது உடற்கட்டிலும் தெரிந்தது.
கலைக் கூடம் என்ற பெயரைப் பார்த்ததும் அவன் ஆடல் பாடல் கலைகளுடன் அதைத் தொடர்புப் படுத்திப் பார்த்திருக்க, இங்கே இவர் பயிற்றுவிப்பதோ தற்காப்புக் கலைகள். நம்பவே முடியவில்லை அவனால்.
"உங்க கலைக்கூடம் ரொம்ப அருமையா இருக்கு. இங்க தற்காப்பு கலைகள் சொல்லிக் கொடுக்கறீங்களா?" என அவன் இயல்பாகப் பேச்சைத் தொடங்க,
"தற்காப்புக் கலையா?" என்று கேட்டு 'ஹா.. ஹா...’என அதிர்ந்து சிரித்தவரின் பார்வையில் ஒரு எள்ளலும், வார்த்தையில் ஒரு துள்ளலுமாக, "நாங்க இங்க கத்துக்கொடுக்கறது போர் கலைகள் தம்பி. இப்பல்லாம் அதை தற்காப்புக்கலைன்னு சொல்லிக்கறாங்க. சிலம்பம், களரி, வர்மக்கலை, இதோட நம்ம பசங்க அப்பப்ப வந்து குங்ஃபூ, ஜூடோ இதெல்லாமும் சொல்லிக் கொடுக்கறாங்க" என்றார் தன் மீசையை நீவி விட்டபடி.
அதற்குள் அந்த குமார் பானையுடன் வர, பின்னாலேயே கண்ணம்மாவும் வந்தார். "இத்தா பாப்பா வாங்கிக்க. உனக்கு அசிடிட்டின்னு அன்பு ஃபோன் பண்ணும்போது சொல்லிச்சு. அதான் உனக்கு மட்டும் பாதாம் பிசின் போட்டு நன்னாரி சர்பத்" என ஒரு மண் குவளையை அவளிடம் நீட்டினார் அவர்.
'எப்படி' என்பது போல் ஒரு பெருமையான பார்வையை அவள் மித்ரன் மீது வீச, அந்தப் பார்வையில் கரைந்தே போனான் அவன். பின், பானையிலிருந்த நன்னாரி சர்பத்தை ஒரு குவளையில் ஊற்றி மித்ரனிடம் நீட்டிய கண்ணம்மா, 'சாப்பிடுங்க தம்பி. நல்லா இருக்கும்" என்று சொல்ல, அவனுக்குச் சுற்றுப்புறம் உரைக்கவும் தயக்கத்துடனே அதை வாங்கிப் பருகினான்.
"இவங்கதான் எங்க குருவம்மா... கண்ணம்மா. அவங்க பேர்லயே அம்மா இருக்கறதால நாங்க எல்லாரும் இவங்களை கண்ணம்மான்னுதான் கூப்பிடுவோம்" என அவரைப் பற்றிச் சொன்னாள் மாளவிகா.
அவன் "வணக்கம் மா" என்று சொல்ல பதிலுக்குப் புன்னகைத்தவர், "போ பாப்பா, குருவம்மா அது இதுன்னு" என முகம் சிவந்து, “நீ பேசாம சாப்பிடு" என முடித்தார்.
அதற்குள் அங்கே இருந்த எல்லோருமே அதைப் பருக தொடங்க சில நிமிடங்கள் அதிலே சென்றது.
அவருக்கு அருகில் அவள் உரிமையுடன் உட்கார்ந்திருப்பதையும், 'பாப்பா… பாப்பா' என அவர்கள் அன்பைப் பொழிவதையும் பார்க்கும் பொழுது, அதுவும் அவள் இந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ளவும், ஆதரவு தேடி இவள் யாரையும் நாட மாட்டாள், குறிப்பாகத் தன்னை என்பது அவனுக்கு நன்றாகவே விளங்கியது.
அவள் அந்தப் பானத்தைப் பருகி முடித்ததைக் கவனித்தவர், "பாப்பா இப்ப எப்படி இருக்கு?" எனக் கேட்க, "பிரெஷ் ஆகிட்டேன் அய்யா" என்றாள் உற்சாகத்துடன். உடனே அவருக்கு அருகிலிருந்த சிலம்பத்தை எடுத்து அவளிடம் நீட்டியவாறு, "நம்ம பசங்களுக்கு கள்ள பத்து... முதல் குரு வணக்கம் செஞ்சு காமி" என்றார் சாமிக்கண்ணு.
'அய்யா சட்டுன்னு இப்படியெல்லாம் சொல்லமாட்டங்களே!' என அவரை வியப்பான பார்வை பார்த்துக்கொண்டே எழுந்தவள், தன் கூந்தலை அள்ளி முடிந்துக்கொண்டு, புடவையைத் தூக்கிச் சொருகி, முந்தானையை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அந்தச் சிலம்பத்தை அவருடைய கையிலிருந்து வாங்கியவள், சற்றுத் தள்ளிப்போய் நிற்கவும், மற்ற மாணவர்கள் எல்லோரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
மித்ரனை நோக்கி 'அவளைப் பார்' என்பது போல் ஒரு பார்வை பார்த்தார் சாமிக்கண்ணு.
இரு கரங்களுக்கு நடுவிலும் சிலம்பத்தைப் பிடித்தவாறு கரம் குவித்து பின் அவர் சொன்ன அந்த குரு வணக்கத்தைச் செய்யத் தொடங்கினாள் மாளவிகா.
லாவகமாக அவள் சிலம்பத்தைப் பிடித்திருந்த தோரணையும், அவள் அந்தச் சிலம்பத்தைச் சுழற்றிய வேகமும், அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவளது கைகளும் கால்களும் போட்டிப்போட்டுச் சுழன்ற விதமும், இடையில் அந்தச் சிலம்பத்தைப் பிடித்து, 'சல்யூட்' செய்வதுபோல் அவள் வைத்த வணக்கமும், முடிவில் அந்தச் சிலம்பத்தைப் பிடித்துக்கொண்டு கால் மடக்கி அவள் ஒரு நொடி நின்ற நிலையையும், விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
"பாப்பா, அந்த நிலைலேயே ஒரு செகண்ட் இரு" என்றவர், "ஸ்ட்ரைட்டா நின்னு பாருங்க தம்பி. அப்பதான் உங்க கண்ணுக்கு ஒரு சிங்கக் குட்டித் தெரியும்" என்றார் சாமிக்கண்ணு பெருமை பொங்க. அவர் மறைமுகமாக எதையோ அவனுக்கு உணர்த்த முயல்வது புரிந்தது.
உண்மையில் நன்கு சிலம்பம் பயின்றவர், தன் கையில் சிலம்பம் ஏந்தி கால் மடித்து அந்த நிலையில் நின்றார் என்றால் ஒரு சிங்கத்தின் கம்பீரம் கண்களுக்குப் புலப்படும். உணர்ந்து, அதைப் பார்த்தால்தான் தெரியும்.
அவளுடைய மற்றொரு பரிமாணத்தை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் மாளவிகா.
முன்பு கல்லூரி விழாவில் அவள் யார் என்றே தெரியாமல், நடன பாவங்கள் எடுத்துக் காட்டிய அவளது அங்க லாவண்யங்களில் தன்னைத் தொலைத்து அவன் அவளைப் பார்த்த பார்வைக்கும் இப்பொழுது உணர்ந்து அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசம் இருந்தது. உண்மையில் ஒரு புதிய உணர்வில் அவளிடம் தன்னைத் தொலைத்துதான் நின்றான் அக்னிமித்ரன்.
அதற்குள் மற்ற மாணவர்களெல்லாம் அவளைச் சூழ்ந்துகொண்டு ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்க, அதற்கு மேல் தன்னால் அங்கே இருக்க முடியும் என்றே தோன்றவில்லை மித்ரனுக்கு.
அவனுக்குக் கொஞ்சம் தனிமை தேவைப்படவும், "நான் அவங்க ஃபோனை கொடுக்கலாம்னுதான் வந்தேன். உங்களை எல்லாம் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். தேங்க்ஸ் ஃபார் யுவர் லவ்லி ஹாஸ்பிடலிட்டி. நான் கிளம்பறேன். மாளவிகா கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப எத்தனிக்க, "சந்தோஷம் தம்பி. எங்க பாப்பா உங்க ஆஃபிஸ்ல வேலை செய்யுது. அது இப்படி சண்டையெல்லாம் போடுதுனு நினைக்காதீங்க. அதோட மனசு கண்ணாடி மாதிரி தம்பி. அங்க இருக்கற வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க" என்றார் கண்ணம்மா எதார்த்தமாக.
சட்டென "கண்ணம்மா" எனக் கொஞ்சம் கடுமையுடன் ஐயாவின் குரல் ஒலிக்க, கண்ணம்மா அதிர்வுடன் அவரை ஏறிடவும், “அவ என் பொண்ணு! அவளைப் பார்த்துக்க அவளுக்குத் தெரியும்!” என்று கர்வமாக சொன்னவர், “யார் கிட்ட என்ன சொல்லணும்னு இல்ல" என்றார் அதட்டலாக.
பின் மித்ரனை நோக்கி, “இவ இப்படித்தான் தம்பி... மனசுல பட்டத அப்படியே பேசிடுவா. நீங்க தப்பா நினைக்காதீங்க" என்று சொல்லிவிட்டு, "நீங்க இங்க வந்ததுல எங்களுக்கும் சந்தோஷம் தம்பி. உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நான் பாப்பா கிட்ட சொல்லிக்கறேன். நீங்க கிளம்புங்க" என்று சாமிக்கண்ணு இயல்பாகப் புன்னகைத்தார்.
அவர் அவனை மரியாதைக் குறைவாக நடத்தவில்லைதான், மற்றபடி அவருடைய ஒவ்வொரு செயலிலும் மாளவிகாவிடமிருந்து அவனைத் தள்ளி நிறுத்தும் அவருடைய நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனாலும் கூட அது அவனுக்கு வியப்பை மட்டுமே கொடுக்க, ஒரு மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினான் மித்ரன்.
மாளவிகாவை பற்றிய எண்ணங்களுடன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் கண்களில், அங்கே இருந்த ஏரியும் அதைச் சுற்றியிருந்த ரம்மியமான சூழலும் விழ, வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீரைப் பார்த்தபடி அப்படியே நின்றான்.
எவ்வளவு நிமிடங்கள் கடந்ததோ, இருள் கவிழத் தொடங்கியிருந்தது. அப்பொழுது அங்கே நிலவிய அமைதியைக் கிழித்துக்கொண்டு, படபடவென்ற சத்தத்துடன் மிதமான வேகத்தில் அவனை ஒரு 'புல்லட்' கடக்க, அதில் சாமிக்கண்ணு அய்யாவுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தாள் மாளவிகா.
அவரிடம் ஏதோ பேசிக்கொண்டே சென்றவள் அவனைக் கவனிக்கவில்லை. அவனுடன் காரில் வரும் பொழுது அவளுக்கு இருந்த பதட்டமோ சங்கடமோ இப்பொழுது சிறிதும் இல்லை. சொல்லப்போனால் இரண்டு நாட்களாக அவள் தொலைத்திருந்த உற்சாகம் அவளிடம் மீண்டிருந்தது எனலாம். அதை மீட்டெடுக்கத்தான் அவள் இங்கே வந்ததே என்பது அவனுக்குப் புரிந்தது.
அன்பு, சாமிக்கண்ணு அய்யா என அவளுடைய வட்டத்திற்குள் அவள் அனுமதித்திருக்கும் ஒவ்வொரு ஆணும் ஏன் கவி உட்பட தூய்மையான நடத்தை உள்ளவர்கள் என்பது ஆணித்தரமாக விளங்க, உலகறிந்த தன் இழிவான நடத்தைத்தான் அவளை தன்னிடமிருந்து வெகுதூரம் தள்ளி நிறுத்துகிறது என்பதை முற்றிலும் உணர்ந்தான் அவன்.
ஒருவேளை அவளுடைய வட்டத்திற்குள் தன்னால் நுழைய முடியாமலேயே போய்விட்டால், அல்லது தன் வட்டத்துக்குள் அவளைக் கொண்டுவர இயலாமலேயே போய்விட்டால், அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை இனி தன்னால் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி எழ, ஈர்ப்பு மட்டுமே என்ற எண்ணத்தில், நிலையான உறவுக்குத் தயாராக இல்லாத பொழுதே அவளை விட்டுவிடத் துணியாதவன், இப்படி மேலும் மேலும் பித்தாகி நிற்கும்பொழுது அவ்வளவு சுலபமாக அவளை விட்டுவிடுவானா என்ன?
'இல்லை... இனி அவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள். அவ்வளவு சுலபமாக என்னைத் தாண்டிப்போக அவளை விட மாட்டேன்' என்ற எண்ணம் மேலும் அதிகமாக வலுப் பெற, அவனது கண்கள் அவள் சென்ற திசையையே பார்த்திருக்க, அவனது பார்வையில் நிரம்பி வழிந்ததென்ன? காதலா!?
கண்ணம்மா சொன்னதுபோல கண்ணாடி போன்றிருக்கும் அவளது இதயத்தை உடைக்காமல் மாளவிகாவின் மனதை ஆளுவானா அக்னிமித்ரன்?!
விடை காலத்தின் கைகளில்.