top of page

En Manathai Aala Vaa-15

Updated: Oct 10, 2022

மித்ர-விகா-15

அன்பு அவர்களுடைய அலுவலகத்திற்கு வந்துவிட்டுப் போய் அதாவது அவன் தில்லி சென்று இரண்டு தினங்கள் கடந்திருந்தன. மாளவிகாவிடம் உற்சாகம் மீண்டது போலவே தெரியவில்லை. அவளது முகத்தில் கொஞ்சம் கூட தெளிவில்லை. அலுவலக வேலைகளை எல்லாம் ஒரு இயந்திர பாவையைப் போல செய்துகொண்டிருந்தாள். ஏனோ அவளை இப்படிப் பார்க்கக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அக்னிமித்ரனுக்கு.


இருவருக்குள்ளும் அவன் உண்டாக்கி வைத்திருந்த பிணக்கு தீர்ந்துபோனதை அவன் கண்கூடாகவே பார்த்துவிட்டான். அப்படி இருந்தும் அவனது தற்காலிக பிரிவு கூட இவளை இவ்வளவு தூரம் பாதிக்கிறது எனும்பொழுது ஏனோ அவனுக்குக் கோபம்தான் வந்தது.


அதைப் பற்றி அவளிடம் பேச நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான் மித்ரன்.


தினமும் மதிய உணவை அவர்களுக்காக இருக்கும் ஓய்வு அறையில் கவி மற்றும் அலுவலக பணியாளர்கள் சிலருடன் இணைந்து சாப்பிடுவது மாளவிகாவின் வழக்கம்.


உணவு இடைவேளை நெருங்கவும் அவள் தன் மதிய உணவு பையை எடுத்துக்கொண்டு அங்கே கிளம்ப, "மாள்வி, இன்னைக்கு என் கூட சாப்பிடு" என அவளைத் தடுத்தான் மித்ரன்.


"இல்ல" என்று அவள் ஏதோ சொல்லவரவும், "ப்ச்... ஆர்க்யூ பண்ணாம வா" என்று சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல எரிச்சல்தான் மூண்டது அவளுக்கு. இருந்தாலும் மறுத்து எதுவும் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.


மாளவிகாவுடன் மித்ரன் அவனுடைய பிரத்தியேக ஓய்விடத்திற்குள் நுழைய, கொண்டு வந்திருந்த உணவை மேசையில் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ஷண்முகம், மித்ரனின் வீட்டில் சமையல் வேலை செய்பவர்.


அவர்கள் இருவரும் வந்து மேசையின் முன் அமர, ஷண்முகம் ஒரு கீழ் பார்வையாக மாளவிகாவைப் பார்த்துக்கொண்டே, "ப்ரவுன் பாசுமதி சாதம் தம்பி. பச்சைச் சுண்டைக்காய் போட்டு ஆனியன் சாம்பார், க்ரீன் சாலட், பாலக் பனீர், அப்பறம் பிரெஷ் கர்ட். நீங்க வேணாம்னு சொன்னதால நான்வெஜ் செய்யல” என அவர் ஒரே மூச்சில் சொல்ல, "சரி ஓகே. நாங்க சாப்பிட்டு முடிக்க கொஞ்சம் டைம் எடுக்கும். நீங்க கிளம்புங்க" என்று அவன் சொல்ல, ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து வைத்தவர், "வினிகர் சில்லி தம்பி, அம்மா கொடுத்து விட்டாங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.


அந்த பாட்டிலைத் திறந்து அதில் வினிகரில் மிதந்து கொண்டிருந்த மிளகாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டு அவன் அதைச் சுவைத்துவிட்டு "உனக்கு காரம் சாப்பிட பிடிக்குமா மாள்வி?" என கேட்டான் அவன்.


"பிடிக்கும்... ஆனா" என அவள் ஏதோ சொல்ல வர, அதற்குள், "அப்படினா இதை ட்ரை பண்ணி பாரேன். என்னோட ஃபேவரைட்" என அவன் ரசனையுடன் சொல்ல, நாகரிகம் கருதி ஒன்றை வாயில் போட்டுக்கொண்டவள், அதன் காரம் தாங்காமல் தண்ணீரை அருந்திவிட்டு, தான் கொண்டுவந்திருந்த சிறிய 'ஹாட் பேக் கேரியர்'ரை திறந்தாள் மாளவிகா.


அதில் சாதம் தயிர் மற்றும் கூட்டு மட்டும் இருக்க, "என்ன இப்படி ஒரு லன்ச் கொண்டு வந்திருக்க" என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.


அவள் இருந்த மனநிலையில் பேசவே மாளவிகாவுக்கு பிடிக்கவில்லை. இந்த வேலையில் தலையைக் கொடுத்துவிட்டதால் வேறு வழி இன்றி வந்திருந்தாள். இல்லையென்றால் வீட்டில் அவளது அறைக்குள் புகுந்துகொண்டு முடங்கியிருப்பாள்.


மனம் துவண்டு போகும் போதெல்லாம் அதிக உறக்கம் வரும் அவளுக்கு. தூங்கி விழித்தால் கொஞ்சம் இலகுவாக இருக்கும். அதற்கும் வழி இல்லாமல் வந்து இவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறதே என்றுதான் தோன்றியது.


"ப்ச்... விடுங்க அமித். ஒண்ணுமில்ல. எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு" என அவள் அதைச் சாப்பிட எத்தனிக்க, "அதை மூடி வை மாள்வி. ஷண்முகம் கிட்ட உனக்கும் சேர்த்துதான் ஃபுட் கொண்டு வர சொன்னேன்” என்றவன் அத்துடன் நிறுத்தாமல் தட்டில் பரிமாறவும், "ப்ச்... டூ டேஸா அசிடிட்டி கொஞ்சம் அதிகமா இருக்கு. அதான் கொஞ்சம்கூட காரம் இல்லாம சாப்பிட்டுட்டு இருக்கேன்" என்றாள் சலிப்புடன்.


"சாரி... அது தெரியாம உன்னைச் சில்லியைச் சாப்பிட வெச்சுட்டேன்" என்றவன், "இந்த பாலக் பனீர் சாப்பிடு. காரம் இருக்காது" என்றவாறு அதை அவளை நோக்கித் தள்ள, மறுக்காமல் அவள் அதைப் போட்டுச் சாப்பிட்டாள். ஆனாலும் ஒவ்வொரு வாய் உணவையும் அவள் வேண்டா வெறுப்பாக விழுங்குவது புரிந்தது அவனுக்கு.


ஒரு கட்டத்தில் சாப்பிட முடியாமல் அவள் மிகவும் மெதுவாகச் சாப்பிட, அவளையே கவனித்துக்கொண்டிருந்தவன் தன கைப்பேசியை இயக்கி, "கவி... கிளினிக்ல டாக்டர் இருக்காறா செக் பண்ணு. இருந்தா இங்க அனுப்பி வை" என்று சொல்ல, "ஏன் பாஸ் உடம்பு ஏதும் சரி இல்லையா?" எனக் கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான் கவி.


"ஐம் ஃபைன் கவி. டாக்டரை அனுப்புங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் மித்ரன். தனக்காகத்தான் மருத்துவரை அழைக்கிறான் என்பது புரிய, "எனக்கு ஒண்ணும் இல்ல. இதுமாதிரி எப்பவாவது ஆகும். ஏதாவது ஆண்டாசிட் எடுத்துட்டா சரியாப்போயிடும். டாக்டர்லாம் வேண்டாம். மிஸ்டர் கவி கிட்ட சொல்லிடுங்க" என்றாளவள் மறுப்பாக.


"நீ சாப்பிடற லட்சணத்தைப் பார்த்தாலே தெரியுதே உன் ஹெல்த் இருக்கற அழகு. உனக்காக மட்டும் இல்ல, நம்ம ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாருக்காகவும்தான் இங்க பக்கவா கிளினிக் ரெடி பண்ணி, டாக்டர் நர்ஸ் எல்லாரையும் அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். அவர் வந்து பார்த்து சொல்லட்டும்" என்றான் விடாப்பிடியாக.


'கடவுளே' என முணுமுணுத்தவாறு தலையில் கை வைத்துக்கொண்டாள் அவள்.


அதற்குள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த மருத்துவர் அவனிடம், "ஹை சார். எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தார். "ஐம் ஃபைன் டாக்டர். இவங்களுக்குதான் அசிடிட்டின்னு சொல்றாங்க. என்னனு கொஞ்சம் பாருங்க" என அவன் சகஜமாக சொல்லவும், மருத்துவ பரிசோதனை செய்ய அவர் மாளவிகாவை நோக்கிப் போனார்.


அந்த மருத்துவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறு அவள் எழுந்து நிற்க, "இந்த சோஃபாலயே உட்காருங்க. அப்படியே செக் பண்ணிடறேன்" என்றவர், “வயித்துல எரிச்சல் இருக்கா? வேற என்ன கம்பளைண்ட்ஸ்?" எனக் கேட்டார் அந்த மருத்துவர்.


நாகரிகம் கருதி சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டு ஒரு கையை தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தவாறு மற்றொரு கையில் வைத்திருந்த கைப்பேசியைப் பார்க்கத் தொடங்கினான் மித்ரன். அவன் கண் அந்த கைப்பேசிக்குள் இருந்தாலும் அவனுடைய கருத்து அவர்களிடம்தான் இருந்தது.


அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மெல்லிய குரலில், "நத்திங் டாக்டர். ஸ்ட்ரெஸ்னால வரக்கூடிய அசிடிட்டிதான். எனக்கு எப்பவாவது இப்படி ஆகும். எங்க டாக்டர் சஜஸ்ட் பண்ண மெடிசின் எடுத்துப்பேன். பட் இந்த தடவ எடுத்துக்கல" என்றாள் அவள்.


"எந்த டாக்டர் பார்க்கறீங்க?” என அவர் இயல்பாகக் கேட்க, "டாக்டர் அகிலா ஸ்ரீதரன்" என்றவள், "கேர் பார் லைஃப் ஹாஸ்பிடல்ல பார்க்கறாங்க" என்றாள் எதார்த்தமாக.


"அவங்க கிட்டயா?" என அவர் திகைப்புடன் கேட்க, "ஆமாம் டாக்டர்" என்றவளை, "வேற ரெகுலர் மெடிசின் ஏதாவது எடுக்கறீங்களா?" என அவர் கேட்க, "இல்ல டாக்டர்" என்றாள்.


அதற்கு மேற்கொண்டு கேள்வி கேட்டு அவளைக் குடையாமல், ஸ்டெதஸ்க்கோப் வைத்துப் பரிசோதித்துவிட்டு, "க்ளினிக்ல சிஸ்டர் இருப்பாங்க. அங்க வந்து ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க. தென் மெடிசின்ஸ் ப்ரிஸ்கிரைப் பண்றேன்" என்று சொல்லிவிட்டு, மித்ரனிடம் தலை அசைத்து விடைபெற்று அங்கிருந்து சென்றார் அவர்.


அவள் சொன்ன அந்த மருத்துவரின் பெயரைக் கூர்ந்து கவனிக்கவில்லை அவன். அவள் 'ஸ்ட்ரெஸ்' என்று சொன்னதை மட்டும் மனதில் கொண்டவன் அதன் காரணம் என்ன என்று தெரிந்திருந்ததால் உண்டான எரிச்சலில், "இந்த ஏஜ்கே உனக்கு என்ன ஸ்ட்ரெஸ்?" எனக் கேட்டான் சற்றுக் கிண்டல் தொனிக்க.


"ஸ்ட்ரெஸ்க்கு ஏஜ் இருக்கா என்ன? இப்பலாம் சின்ன சின்ன குழந்தைகளுக்கு கூட ஸ்ட்ரெஸ் இருக்கு" என்றாள் இகழ்ச்சியாக.


"சரி... சரி... நீ க்ளினிக் போய் ஊசிப் போட்டுட்டு வந்துடு" என அவன் சொல்ல அங்கிருந்து சென்றாள் அவள். அதற்குள் கைப்பேசியில் அவனுடைய அண்ணன் விக்ரமின் எண் ஒளிரவும் அதை ஏற்றான் அவன்.


"நீ ஃப்ரீயா இருந்தா நம்ம ஆஃபிஸ்க்கு கொஞ்சம் வரியா?" என அவன் கேட்க, ஏதோ யோசித்தவன் "சரி" என்று சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தான்.


ஊசிப் போட்ட பிறகு அங்கே இருந்த செவிலியர் அவளுடன் கூடவே அலுவலகம் இருந்த தளம் வரை வந்து அவளை விட்டுவிட்டுப் போனார். அவள் வேண்டாம் என மறுத்தும் நிற்கவில்லை. அதுவும் மித்ரனின் வேலைதான் என்பது அவளுக்குப் புரிந்தது.


அவள் அவர்களது கேபினுக்குள் நுழையவும், கையில் கார் சாவியுடன் கிளம்பிக்கொண்டிருந்தவன், "வேலை செஞ்சது போதும். கிளம்பு... போற வழில உன்னை ட்ராப் பண்ணிட்டுப் போறேன்" என்றான் கட்டளையாக.


ஏற்கனவே, வேலையில் சேர்ந்த இந்த சில நாட்களுக்குள்ளேயே நிறைய விடுப்பு எடுத்திருப்பது நினைவில் வரவும், "ஏன்... ஒரு ஸ்டேட்மென்ட் ரெடி பண்ணனும். நான் முடிச்சிட்டு அஸ் யூசுவல் ஈவினிங் போறேன்" என்று அவள் சொல்ல, "அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ கிளம்பி வா" என்று சொல்லிவிட்டு அவளுக்குப் பேச வாய்ப்பே கொடுக்காமல் அவன் அங்கிருந்து செல்ல, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு மின்தூக்கி நோக்கிப் போனாள் அவள். அங்கேயே அவளுக்காகக் காத்திருந்தான் அவன். ஏனோ கோபம்தான் வந்தது அவளுக்கு.


அவள் மௌனமாக நின்றிருக்க, எப்படியும் அவள் எதுவும் பேச மாட்டாள் என்பதை உணர்ந்தவன், அவள் செய்வதைப் போலவே அதிலிருந்த கண்ணடியில் தன் முகத்தைப் பார்த்து, தலையைக் கோதி சரி செய்துகொண்டே ஏதோ ஒரு பழைய பாடலை அதுவும் நடுவிலிருந்து வரிகளைச் சீழ்க்கை அடிக்க, அது என்ன பாடல் என அவள் அதை தன் நினைவு பெட்டகத்தில் தேடி அதன் முதல் வரியை அவள் கண்டுபிடிக்கவும் மின்தூக்கி தரைதளத்தை நோக்கிப் போகவும் சரியாக இருந்தது.


அப்பொழுதுதான் அவளைப் போன்றே அவன் செய்த செய்கை அவளுக்கு உரைக்க, 'திக்' என்ற உணர்வுடன், 'அப்படியே நம்மள இமிடேட் பன்றானே! ஒருவேள இந்த லிஃப்ட்ல சீசீ டீவி கேமரா வெச்சு டெய்லி நம்மள நோட் பண்ணிட்டே இருக்கானோ' என்று தோன்றவும், ஆராய்ச்சியுடன் அந்த மின்தூக்கியைச் சுற்றி தன் பார்வையைச் சுழலவிட்டாள் மாளவிகா. ஆனால் அப்படி ஒரு பொருளை அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை.


அவளது பார்வையின் பொருளை உணர்ந்தவன், தனது செய்கையை அவள் கண்டுகொண்டாள் என்பது புரிய, கேமராவை அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்றால் அவனுடைய பிடித்தமான தினசரி பொழுதுபோக்கு நின்றுபோகுமே என்ற அவசரத்துடன், "என்ன பாக்கற? லிஃப்ட்ல சர்வைலென்ஸ் கேமரா இருக்கான்னா?" என்றவன், "இது நானும் கவியும் மட்டும் யூஸ் பண்ற லிஃப்ட். அதனால இதுல மட்டும் சீசீ டீவி கேமரா செட் பண்ணல" என்று முடித்தான்.


அவள் ஒரு பெரு மூச்சை வெளியேற்றி விட்டு அவனுடன் வந்து காரில் ஏறி உட்கார, அவளுக்கு அந்தப் பாடல் வரிகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் மேலோங்கியது. அவன் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு போக, அவள் தன் கைப்பேசியில் அந்தப் பாடல் வரிகளை ஆராய,


‘ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க,


எனை வந்து தழுவு ஏனிந்தப்பிரிவு மானே வா உனை யார் தடுக்க.


பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்.


மாது உன் மீது இப்போது என்மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே’


என, அதுவோ கொஞ்சம் அதிகமாகவே அவள் கோபத்தைக் கிளற அவனைப் பார்த்து முறைத்தாள் மாளவிகா.


'இவ என்ன இந்த லுக்கு விடறா? பாவம் உடம்பு சரியில்லையே இவளை டென்ஷன் பண்ண வேண்டாம்னு நினைச்சாலும் விட மாட்டா போலிருக்கே' என்று எண்ணியவனுக்கு அவளைச் சீண்டிப்பார்க்கும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ஆனால் அந்த நேரத்தில் அப்படிச் செய்வது புத்திசாலித்தனமில்லை எனத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.


உண்மையில் இவள் விஷயத்தில் அவன் செய்வதெல்லாம் தோல்வியில்தான் முடிகிறது. எது எப்படியோ அன்புவின் பிரிவு இவளுக்குள் சிறு வெற்றிடத்தை உருவாகியிருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்ததால், அவளை இப்படிச் சீண்டிவிட்டுப் பார்ப்பதை விடக் கொஞ்சம் அக்கறையாகப் பேசினால் அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியலாம் என்ற எண்ணம் தோன்ற, "கூல். ஹெல்த்தைப் பாதிக்கற அளவுக்கு அப்படி என்ன ஸ்ட்ரெஸ் லயன்னஸ் உனக்கு? அன்புவை மிஸ் பண்றியா?" என அவன் கரிசனத்துடன் கேட்க,


ஏற்கனவே கோபத்தில் இருந்தவள், "அன்புவை நான் மிஸ் பண்ணா என்ன? இல்ல பண்ணாம போனா உங்களுக்கு என்ன? என் ஸ்ட்ரெஸ் பத்தி நான் ஏன் உங்க கிட்ட ஷேர் பண்ணனும் மிஸ்டர் அக்னிமித்ரன். காலைல இருந்து உங்க ஆக்டிவிடீஸை கவனிச்சிட்டுதான் இருக்கேன். நான் உங்க பெட்டை மறந்துட்டேன்னு நினைச்சிட்டிங்களா என்ன? இதுதான் சான்ஸுன்னு அட்வான்டேஜ் எடுக்கப் பாக்காதீங்க?" என்றவள்,


"என்னைப் பொறுத்தவரைக்கும் அன்புவோட இடத்தை எந்த அக்னிமித்ரனாலயும் ரீப்ளேஸ் பண்ணா முடியாது. அன்புவோட இடத்தை அன்புவால மட்டும்தான் நிரப்ப முடியும்" என்று சொல்லிவிட்டு,


"ஹெலன் கெல்லர் தெரியும் இல்ல, அவங்களுக்கு ஆன் சல்லிவன் எப்படியோ எனக்கு அன்பு அப்படி" என்றாளவள் தெளிவுடன்.


அவள் அப்படி எடுத்தெறிந்து பேசியதில் கோபத்தில் முகம் கன்றிப் போனது மித்ரனுக்கு. அவனது கோபத்தின் விளைவால் அவனது வாகனம்தான் படாதபாடு பட்டது. ஆனாலும் அவளது அந்தத் தெளிவைப் பார்த்து அசந்துதான் போனான் அக்னிமித்ரன்.


'அப்படி என்ன அந்த அன்பு இவளுக்காகச் செய்திருப்பான்?' என்ற கேள்வி மட்டும்தான் பெரிதாக இருந்தது அவனுக்கு. அதற்கான விடை தெரியவரும் நாளில் எப்படி உணருவான் அக்னிமித்ரன்?


விடையை காலம்தான் அவனுக்குச் சொல்ல வேண்டும்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page