top of page

En Manathai Aala Vaa-14

Updated: Oct 10, 2022

மித்ர-விகா-14


அக்னிமித்ரனின் அலுவலக அறையில், அக்மி ரீடைல்ஸின் ஜெனரல் மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர் என முக்கிய நிர்வாகிகள் சிலர் அவனுக்கு முன் உட்கார்ந்திருந்தார்கள். அவனுடைய உதவிக்காக மாளவிகாவும்.


சந்தையில் அவர்களுடைய விற்பனையை மேம்படுத்துவது குறித்த வழக்கமான மாதாந்திர சந்திப்புதான் அது. இது அவனுடைய தாத்தா அதாவது தீபலக்ஷ்மியின் அப்பா ஆரம்பித்த தொழில். அதனால் அதை விடாமல் நடத்திக்கொண்டிருக்கிறான். ஆனால் அவனுடைய மொத்த கவனமும் 'வீனஸ் நெட்வொர்க்' மேல்தான்.


புகழுடன் சேர்ந்து பணமும் மொத்தமாகக் கொழிக்கும் தொழிலும் அதுதான் என்பதால் அதுதான் அவனுடைய அடையாளம் பெருமை எல்லாம். மற்ற தொழில்களெல்லாம், 'போன மாட்டைத் தேடுவதில்லை, வந்த மாட்டைக் கட்டுவதில்லை' என்கிற வகையில் தன்போக்கில் நடந்து கொண்டிருக்கின்றன. பல வருடங்களாக வேலை செய்யும் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எல்லா தொழில்களிலும் ஒரு சிறு கவனம் அவன் வைத்திருப்பதால் பிரச்சினையில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது அவ்வளவுதான்.


"என்ன மிஸ்டர் முருகன், போன மாசத்தை விட க்ராஃப் கொஞ்சம் கீழே போனது போல இருக்கு? சேல்ஸ் ஒரு த்ரீ பர்சன்ட் குறைஞ்சிருக்கே?" என அவன் தன் மார்க்கெட்டிங் மேனேஜரைப் பார்த்து கேட்க,


"இல்ல சார். சம்மர் முடிஞ்சிருச்சு இல்ல. அதனால கூல் ட்ரிங்க்ஸ் ஐஸ் க்ரீம் சேல்ஸ் கொஞ்சம் குறைஞ்சிருக்கு" என அதற்கு விளக்கம் கொடுத்தார் அவர்.


அவன் கேட்கும் புள்ளிவிவரங்களின் பிரதிகளைக் கொடுப்பது, அதைப் பற்றிய தகவல் ஏதாவது கேட்டல் அதைச் சொல்வது என தன் பணியை அனிச்சையாகச் செய்வதுபோல் செய்து கொண்டிருந்தாள் மாளவிகா.


பேச்சு அவர்களிடம் இருந்தாலும் அக்னிமித்ரனின் ஒரு பார்வை அவளிடமும் இருந்துகொண்டுதான் இருந்தது.


ஆனாலும் தன் கவனம் சிதறாமல், "சரி... சேல்ஸ் இம்ப்ரூவ் பண்ண வேற என்ன பண்ணலாம்?" என அவன் வெகு தீவிரமாகக் கேட்க, "நம்ம சப்ளையர்ஸ் கிட்ட பேசிட்டு ஐஸ் க்ரீம், கூல் ட்ரிக்ஸ் இதுக்கெல்லாம் ஏதாவது ஆஃப்பர் கொடுக்கலாம் சார். பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ... இந்த மாதிரி" என்றார் அவர்களுடைய ஜெனரல் மேனேஜர்.


அதன் பின் சில கணக்கு வழக்குகளை ஆராய்ந்து அது சம்பந்தமான விவாதங்கள் முடிந்து அவர்கள் சென்றுவிட, அவனுக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள், "சேல்ஸ் ப்ரோமோஷன் பத்தி நான் ஒரு ஐடியா சொல்லலாமா?" என்று வெகு இயல்பாகவே கேட்டாள் மாளவிகா.


அவன் புருவம் மேலே உயர, "ம்ஹும்... இன்னவேடிவ் ஐடியாஸ் ஆர் ஆல்வேஸ் வெல்கம்" என அவன் அதை வரவேற்பதுபோல் சொல்ல, தன் தொண்டையைச் செருமிக்கொண்டவள், "சேல்ஸ் டவுன் ஆனதுக்கு சம்மர் முடிஞ்சது மட்டும் காரணம் இல்ல. நம்ம ஊர்ல வெகேஷன் எல்லாம் முடிஞ்சு ஸ்கூல்ஸ் திறந்ததும் ஒரு காரணம்" என அவள் சொல்ல, "அதுக்கும் ஐஸ்க்ரீம் சேல்ஸ் குறைஞ்சதுக்கும் என்ன சம்பந்தம் ..ம்" அவன் கேட்கவும்,


"சம்மர் லீவ்ல வீட்டுல இருக்கும்போது பசங்க ஐஸ்க்ரீமை வெளுத்து வாங்குவாங்க. அதை பேரண்ட்சும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா ஸ்கூல்ஸ் எல்லாம் திறந்த உடனே, அதுவும் சீஸனும் சேஞ் ஆகறதால கோல்ட் ஃபீவர்னு வந்துருமோன்னு பயந்துட்டு இந்த மாதிரி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ரெஸ்ட்ரிக்ட் பண்ண ஆரம்பிப்பாங்க. நாம ஃப்ரீஆஃபர் கொடுத்தாலும் அது லாபம் கொடுக்காது" என்றவள், "ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பார்த்தேன். ஸ்டேஷனரி பர்ச்சேஸ் அண்ட் ஸ்டாக்ஸ் எல்லாம் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனும். அதைச் சரியாய் கவனிக்காத மாதிரி தோனுது. இனிமேல் அதுதான் நல்லா போகும். தென், கிட்ஸ்க்கு ஹெல்தி ஸ்னாக்ஸ்னு சொல்லி நல்ல ஆர்கானிக் ஃபுட்ஸ் ப்ரொமோட் பண்ணலாம். லைக்... கடலை உருண்டை, எள் உருண்டை, தேன் மிட்டாய் இப்படி” அவள் சொல்லிக்கொண்டிருக்க, "இதெல்லாம் நம்ம ஸ்டோர்ஸ்ல ஏற்கனவே சேல்ஸ்ல இருக்கறது தானே?" என இடைப்புகுந்தான் அவன்.


"இருக்கறதுதான். இருந்தாலும் நாம அதை ப்ரொமோட் பண்ண மாட்டோம் இல்ல. நானும் இருக்கேன்ன்னு அதெல்லாம் ஒரு ஓரத்துல கிடக்கும். சாக்லேட்ஸ் மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் நாம் பளபளன்னு ஷோகேஸ் பண்றோம் இல்ல அப்படி ட்ரை பண்ணி பாக்கலாம். இதனால நிறைய காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் பயனடைவாங்க. கூடவே குழந்தைகளோட ஹெல்த்துக்கு நல்லதுன்னு நிறைய பேர் வாங்க ஆரம்பிப்பாங்க" என்று சொல்லிவிட்டு அவள் அவனது முகத்தைப் பார்க்க, ஒரு மெச்சுதலுடன் அவளைத்தான் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.


கல்லூரியிலிருந்து நேராக வந்திருக்கும் முன் அனுபவமற்ற ஒருத்தியிடமிருந்து இந்தச் சிந்தனைகளை எதிர்பார்க்கவில்லை அவன். இப்படி ஏதோ ஒரு புள்ளியில் தன் தனித்துவத்தை அவனுக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறாள் அவளும்.


யோசனையுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்த பார்வை புரியாமல், அவள் 'என்ன' என்பதுபோல் தலை அசைக்க "ஹ்ம்.. யோசிக்கலாம்" என்றவன், "இதையெல்லாம் நீ அவங்க எல்லாரும் இங்க இருக்கும்போதே சொல்லியிருக்கலாமே" எனக் கேட்டான்.


"அதிகப்பிரசங்கித்தனமா இருக்குமோன்னு ஒரு சின்ன தயக்கம்" என்று சொல்லிவிட்டு அவன் ஏதாவது சொல்வானோ என்று கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றவள் தனக்கெனக் கொடுக்கப்பட்டிருக்கும் கணினிக்குள் புகுந்துகொள்ள, அவளையே தொடர்ந்தன அவனது கண்கள்.


அவள் தெளிவாகத்தான் பேசிவிட்டுப் போனாள். ஆனால் அவள் குரல் காலை முதலே கரகரப்பாகத்தான் இருக்கிறது. அவளது கண்களில் ஒளி இல்லை. காலை மின்தூக்கியில் அவள் நுழையும்போதே அவளைக் கவனித்தான் மித்ரன். அவளது வழக்கமான சீழ்க்கை இசை அவன் செவிகளை நனைக்கவில்லை. அந்த மின்தூக்கியில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியை அவள் கண்கள் ஒரு முறை கூட பார்க்கவில்லை.


அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் அந்த மின்தூக்கிக்குள் வழக்கம்போல நுழைந்தான் அவன். தினமும் அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் துளிர்விடும் ஒரு பாவனை, ஆம்... அவன் மட்டுமே அறிந்த, அவளையும் அறியாமல் அவள் முகத்தில் மலரும் ஒரு வித ரசனை நிறைந்த மென் புன்னகை அன்று சுத்தமாக மலரவில்லை.


காரணம் அன்பு என்பது நன்றாகவே அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது அவனுக்குக் கொஞ்சமும் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. காரணத்தை அறிய முற்பட்டாலும் அது அவனுக்குப் பிடிபடவில்லை.


அவனுடைய அந்தச் சிந்தனையைக் கலைப்பது போல் ஒலித்தது அவளது கைப்பேசி. அன்பு என்பதைப் பார்த்துவிட்டு அவள் அதை ஏற்காமல் அழைப்பைத் துண்டிக்கவும், அது மறுபடி மறுபடி இசைப்பதும் அவள் அதைத் துண்டிப்பதுமாக இருக்க, "ப்ச்... எடுத்து பேசு மாள்வி" என்றான் அவன் கொஞ்சம் சலிப்புடன்.


அலுவலக ரீதியான எல்லா அழைப்புகளும் அந்த எண்ணிற்குத்தான் வரும். எனவே கைப்பேசியை அணைத்து வைக்கவும் இயலாது. வேறு வழி இல்லாமல் அவள் அழைப்பை ஏற்றுப் பேசாமல் இருக்க, "நான் உங்க ஆஃபிஸ் ரிஷப்ஷனலாதான் இருக்கேன். கொஞ்சம் கீழ வா. உன் கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டுப் போயிடறேன்" என்றான் அன்பு படபடப்பாக.


அலட்சியமாக அழைப்பைத் துண்டித்தாள் மாளவிகா. வீடாக இருந்திருந்தால் ஒரு வேளை ஆற்றாமை தீர வெடித்திருப்பாளோ என்னவோ. ஆனால் மித்ரனின் கண்பார்வைக்குள் இருக்கவே தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வெகுவாகப் போராடிக்கொண்டிருந்தாள்.


அவள் இருந்த அதே மனநிலையில்தான் இருந்தான் அன்புத்தமிழனும். முந்தைய தினம் கோபித்துக்கொண்டு போனவள்தான். அதன்பின் அவனுடைய அழைப்புகளை ஏற்கவே இல்லை. நேரில் சென்றாலும் அவனைப் பார்க்க முன்வரவே இல்லை. அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் போக அவளுடைய அம்மா துளசியும் சரி அன்புவுடைய அம்மா மதியும் சரி இதில் தலையிட்டு அவளை சமாதானப்படுத்த இயலவில்லை. அது அன்புவின் காதல் விவகாரம் என்பதால் அவனால் வெளிப்படையாகப் பேசவும் இயலவில்லை. எவ்வளவு கோபம் இருந்தாலும் தன் நண்பனைக் காட்டிக்கொடுக்கவும் இல்லை மாளவிகா.


அவளைப் பார்க்காமல் அவனால் அங்கிருந்து செல்ல இயலாது. காரணம் அன்று மாலையே அவன் தில்லி செல்ல இருக்கிறான். அவள் அவனைச் சந்திக்கக் கீழே இறங்கி வரமாட்டாள் என்பது திட்டவட்டமாக விளங்க வேறு வழி இல்லாமல் அங்கே வரவேற்பு பகுதிக்குச் சென்றவன் அங்கே பணியிலிருந்த ரீமாவை நெருங்கி, "ஹை மேம். ஐ ஆம் அன்புத்தமிழன்" எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, மாளவிகாவைப் பற்றிய தகவல்களைச் சொன்னவன், "நான் அவங்கள போய் பார்க்க முடியுமா" என்று கேட்க, அவனுடைய பெயரைக் கேட்டதுமே அவன் யார் என்பது புரிந்துபோனது ரீமாவுக்கு.


அவனுடைய தெளிவில்லாத முகம் அவளுக்கு உண்மையைச் சொல்லாமல் சொல்ல, மனதில் தலைத் தூக்கிய குற்றக் குறுகுறுப்புடன் அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் கவியை அழைக்க, கவி மூலமாகச் செய்தி மித்ரனை அடைந்தது.


ஏனோ அன்புவைத் திருப்பி அனுப்பவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தனக்கு முன்பாகத்தானே பேசப்போகிறான். அப்படி என்ன பேசுகிறான் என்று பார்க்கலாம் என்ற ஒரு உந்துதலில் அவன் அன்புவை தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பச் சொல்லி அனுமதி அளிக்க, கதவைத் தட்டிவிட்டு மித்ரனின் கேபினுக்குள் நுழைந்தான் அன்பு.


அவனுக்கு நன்றாகவே தெரியும் அது அக்னிமித்ரன் பிரத்தியேக கேபின்தான் என்று. இங்கே வைத்துப் பேசினால் மட்டுமே அந்த இராட்சசி அவன் சொல்ல வருவதைக் கொஞ்சமாவது காது கொடுத்துக் கேட்பாள் என்பதினால்தான் அவன் அங்கே வந்து பேசலாம் என முடிவெடுத்தது.


வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் நேராக மித்ரனை நோக்கி வந்தவன், "குட் மார்னிங் சார்" என்ற முகமனுடன், "சாரி உங்க வொர்கிங் ஹவர்ஸ்ல உங்களை டிஸ்டர்ப் பண்றேன்" என்றான் அன்பு.


'நீ என்னை எந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்றன்னு உனக்கு தெரியாது போடா' என்று உள்ளுக்குளேயே கடுப்பானவன், "இட்ஸ் ஓகே" என்றான் வெளியே வெகு இயல்பாக.


"ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்தான் சார். நான் பேசிட்டுப் போயிடுறேன்" என்று சொல்லிவிட்டு அவன் மாளவிகாவை நோக்கி போக, "கங்கிராஜுலேஷன்ஸ் அன்பு" என்றான் மித்ரன்.


அன்பு அவனை ஆச்சரியத்துடன் நோக்க, "நீங்க ஐஏஎஸ் ப்ரிலிம்ஸ் க்ளியர் பண்ணிடீங்கன்னு மாளவிகா சொன்னாங்க. அதுக்குத்தான்" என அவன் இயல்பாகப் புன்னகைக்க,


அவனுடைய உயரத்திற்கு தன்னிடம் அவன் இவ்வளவு தூரம் பேசுகிறானே என்ற வியப்பு மேலும் அதிகரிக்க, "தேங்க் யூ சார்" என்று சொல்லிவிட்டு மாளவிகாவை நோக்கிப் போனவன் அவளுக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


நிச்சயம் மித்ரனுடன் அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருப்பாள்தான். ஆனால் கொஞ்சமும் அதைக் கவனிக்காதவள் போல, 'இப்படி வந்து பேசினா, உடனே நான் சமாதானம் ஆகிடுவேனா. போடா போ... உன்னோட அந்த ரஞ்சனி கிட்டயே போ’ என மனதிற்குள்ளேயே பொங்கியவாறு கணினியைத் தட்டிக்கொண்டிருந்தாள்.


எப்படியும் அவள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்ற பிடிவாதம் தெரிந்தது அவனிடம்.


கணினிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த அவளது கள்ளப்பார்வை ஒரு மெல்லிய புன்னகையை அவனது முகத்தில் தோற்றுவிக்க, "ஏய் பப்பி, ஓவர் சீன் போடாதடி. நிமிர்ந்து என்னைப் பாரு" என்றான் அவன் மெல்லிய குரலில்.


அவன் பேசியது நேரடியாக மித்ரனின் செவிகளில் விழவில்லைதான். ஆனால் அங்கே மைக்ரோஃபோனுடன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அவனிடம் அதைக் கொண்டு சேர்த்திருக்க, அவனுடைய ‘பப்பி’யிலும் 'டீ'யிலும் கொஞ்சம் அதிர்ந்தான் மித்ரன்.


அதேநேரம் அன்பு எதிர்பார்த்து வந்ததைப் பொய்யாக்காமல், 'யார் நீ?' என்பதுபோல் அவனைப் பார்த்து வைத்தாள் அவள். "ப்ச்... பப்பி. இன்னைக்கு ஈவினிங் டிரைன்ல நான் டெல்லி கிளம்பறேன் தெரியுமில்ல?" என அவன் கேட்க அவளது கண்களில் அப்பட்டமான கலக்கம் தெரிந்தது.


அதை முற்றிலும் உணர்ந்தவனாக, "ப்ச்... மாலு நீ இந்த மனநிலையைக் கொஞ்சம் மாத்திக்கோ. நாம பிஃப்த் படிக்கும்போது முதல் முதலா என் கையை பிடிச்சியா? நீ இப்ப வரைக்கும் அதை விடல. போதும் மாலு இனிமேல் நீ என் கையைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல.


எனக்கும் ஒண்ணும் ஆகாது. உனக்கும் ஒண்ணும் ஆகாது. அப்ப இருந்த குட்டிப் பொண்ணு இல்ல மாலு நீ. போராடி உன்னை ஸ்ட்ராங் ஆக்கி இருக்க. என் விஷயத்துல மட்டும் நீ இப்படி டிபெண்டண்ட்டா இருக்கறது நல்லதில்ல. இப்ப ரெண்டு மாசம் இந்த க்ராஷ் கோர்ஸ். அப்பறம் மெய்ன்ஸ் க்ளியர் பண்ணிட்டேன்னா ட்ரைனிங். அண்ட் தென் எங்க போஸ்டிங் போடுவாங்கனு தெரியாது. இனிமேல் நம்மளால இப்படி கைக் கோர்த்துட்டுச் சுத்த முடியாது. இந்த எதார்த்தத்தை நீ அக்சப்ட் பண்ணிட்டுதான் ஆகணும்.


உனக்குன்னு லட்சியம் இருக்கு. அதை நோக்கி வேகமா போயிட்டே இரு. அதுதான் இப்போதைக்கு உனக்கு நல்லது. அதே மாதிரி ரஞ்சனி விஷயம்"


அவன் இதைச் சொன்னதும் அவளது பார்வை கூர்மை அடைந்தது.


"எஸ்... அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கும் அவளைப் பிடிக்கும்தானே" எனக் கேட்டவன் அவள் இறுகிப்போய் உட்கார்ந்திருக்கவும், "அவதான் வந்து ப்ரொபோஸ் பண்ணா மாலு. எனக்கு வேண்டாம்னு சொல்ல தோனல. உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் இல்லடி. சொன்னா நம்பு. ஆனா இப்ப வேண்டாம்னு நினைச்சேன் அவ்வளவுதான்.


உனக்குன்னு ஒரு லைஃப் செட்டில் ஆன பிறகு, உனக்கு ஒரு சரியான வாழ்க்கைத்துணை கிடைச்ச பிறகு உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். அப்பத்தான் உன்னால பேலன்ஸ் பண்ணமுடியும்னு எனக்கு ஒரு தாட். அது தப்பா சொல்லு" என அவன் வெகு இரங்கிய குரலில் கேட்க, அதில் தணிந்தவள் கண்களில் நீர் கோர்க்க 'இல்லை' என தலை ஆட்டினாள்.


"அப்படின்னா உன்னோட கோபம் மலை ஏறிடுச்சா? கூல் ஆகிட்டியா?"


அவன் அப்படி கேட்கவும் அதற்கும் தலை அசைத்தாள் அவள்.


"அதை இப்படி உம்ன்னு சொன்னா நான் எப்படி நிம்மதியா டெல்லி போக முடியுமாம்? எனக்கு தேவை உன்னோட அக்மார்க் புன்னகை. எங்க கொஞ்சம் ஈன்னு சிரி பார்க்கலாம்" என்று அவன் சொல்ல அதில் அவளது புன்னகைப் பெரிதாக விரிய, 'அன்பு' என்று சிணுங்கினாள் சலுகையாக.


"தட்ஸ் மை பப்பி" என்றவன், "சரிடி... பை. பத்திரமா வீட்டுக்குப் போய்ட்டு எனக்கு கால் பண்ணு" என்றவாறு எழுந்தவன், அவளுடைய கையைப் பற்றி, "அபார்ட் ஃப்ரம் திஸ், நான் இந்த உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் உனக்கு என்னோட சப்போர்ட் தேவைன்னா அடுத்த நிமிஷம் உன் பக்கத்துல இருப்பேன். அதே மாதிரி எனக்கு உன்னோட சப்போர்ட் தேவைனாலும் நீதான் வந்தாகணும். அட் எனி காஸ். அட் எனி காஸ்ட்" என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, "அன்பு ஒரு நிமிஷம்" என அவனைத் தடுத்தவள், தன் கைப்பையிலிருந்து அன்பளிப்பு தாளில் சுற்றப்பட்ட ஒரு உரையை எடுத்து, அதை அவளே பிரித்து அதிலிருந்த ஒரு பேனாவை அவன் சட்டைப் பையில் சொருகியவாறு, "வருங்கால கலெக்டருக்கு என்னோட சின்ன கிஃப்ட்" என்று தழுதழுத்தக் குரலில் சொல்ல, அவனது கலங்கிய கண்களை அவளுக்குக் காண்பிக்காமல் நகர்ந்தவன், மரியாதை நிமித்தம், 'பை சார்' என மித்ரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் அன்பு.


தூரத்திலிருந்தே இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அக்னிமித்திரன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை. இப்படி ஒரு மாசற்ற அன்பையும் ஒரு அளவு கடந்த முதிர்ச்சியையும் இருவரிடமிருந்தும் கொஞ்சம் கூட அவன் எதிர்பார்க்கவில்லை.


மனதளவில் அவர்கள் இருவரையும் பிரிப்பது என்பது நடக்காத காரியம் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு. அப்படிப் பிரித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே தோன்றியது.

2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page