top of page

En Manathai Aala Vaa-13

Updated: Oct 10, 2022

மித்ர-விகா 13


ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று அலுவலகம் வந்திருந்தாள் மாளவிகா. வழக்கம்போல மின்தூக்கியில் அவள் நுழைய, யாருமில்லாத தனிமை கொடுத்த உற்சாகத்தில்,


'காற்றை போல் எனக்கும் கூட சிறகொன்றும் கிடையாது.


தரைமேலே செல்லும் போது சிறை செய்ய முடியாது.


இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்.


இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்.


இருபத்தி ஒண்ணு வயதுக்கு மேலே


காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹொய்'


பாடல் வரிகள் மனதில் தோன்ற அதைச் சீழ்க்கை அடித்தவாறு கண்ணாடியைப் பார்த்து தன்னைச் சரி செய்துகொண்டவள், அந்த மின்தூக்கி ஐந்தாவது தளத்தை எட்டவும் சீழ்க்கையை நிறுத்திவிட்டு அக்னிமித்ரனின் வரவை எதிர்பார்த்திருக்க, அங்கே அது நிற்காமல் அவர்கள் அலுவலகம் இருக்கும் தளத்தை நோக்கிச் சென்றது.


இவை அனைத்தையும் அந்த மின்தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருக்க, அவனது பிரத்தியேக தளத்திலிருந்த அவனது ஓய்வறையில் ஓய்வாகப் படுத்திருந்தவாறு வழக்கம் போல தன் கைப்பேசியில் அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.


அதுவும் அவனை எதிர்பார்த்து அவள் விசிலை நிறுத்தியது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அப்பொழுது அவளது கைப்பேசி ஒலிக்க, "என்ன அன்பு இப்ப கால் பண்ணியிருக்க?” என்று மாளவிகா கேட்க, அவனது நெற்றிச் சுருங்கியது.


எதிர் முனையில் அன்பு எதோ சொல்லவும், "வாவ். கிரேட்...டா அன்பு! ஐயம் ஸோ ஹாப்பி அபௌட் யூ!” என ஆர்பரித்தவள், "நீ சொன்ன விஷயத்தைக் கேட்ட அப்பறம் இப்படியே லீவ் போட்டுட்டு உன்னை நேரில் வந்து பார்த்து இந்த சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா இந்தத் தீப்பொறி திருமுகம் கொஞ்சம் ஓவரா சீன போடும் டா. அதனால் ஈவினிங் நேரா உங்க வீட்டுக்கு வரேன். குப்தா பவன்ல இருந்து எனக்குப் பிடிச்ச ரசமலாயோட வெயிட் பண்ணு. ஓகே வா" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், அதற்குள் அவர்கள் அலுவலகம் இருக்கும் தளத்திற்கு வந்திருக்க, மின்தூக்கியிலிருந்து வெளியேறினாள்.


ஏற்கனவே அவள் அன்புவுடன் பேசிக்கொண்டிருந்த விதத்தில் கொஞ்சம் கடுப்பானவன், அவள் தன்னைத் 'தீப்பொறி திருமுகம்' என அழைப்பதை எண்ணி நொந்தே போனான் அக்னிமித்ரன். ஆனாலும் அவன் எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டதையும் மனதில் குறித்துக்கொண்டான்.


***


முந்தைய இரவு முழுவதும் நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் களித்துவிட்டு விடியற்காலையில்தான் அங்கே வந்திருந்தான் மித்ரன்.


பார்ட்டி நாகரிகம் கருதி பெயருக்கெனக் கொஞ்சமாக மது அருந்துவானே தவிர அதில் தீவிர நாட்டமெல்லாம் அவனுக்கில்லை. போதை இல்லை என்றாலும் அதிகம் களைப்பாக இருக்க அப்படியே படுத்துவிட்டான்.


களைப்பு உடலிலா இல்லை மனதிலா என்பது அவனுக்கே புரியாமல் போக, மாளவிகாவைப் பார்த்ததும் அவனது மனம் கொஞ்சம் புத்துணர்வு அடைவதுபோல் உணர்ந்தான்.


அதையும் அன்புவிடமிருந்து வந்த அழைப்பு கெடுத்துவைக்க, அவன் எழுந்து குளித்து ஏதோ உணவை வரவழைத்துப் பெயருக்கு அதைக் கொறித்து மதியம்தான் அலுவலகத்திற்கே வந்தான். அதுவும் கூட மாளவிகா அங்கு இருப்பதால்தானோ என்னவோ?


அவன் உள்ளே நுழையவும், "ஹை அமித்” என்றவாறு கையசைத்தாள் அவள். ஆனால் அன்புவிடம் பேசும்போது அவளுக்கிருந்த உற்சாகமெல்லாம் வடிந்து களையிழந்திருந்தது அவளது முகம். காரணத்தைக் கேட்டால் எப்படியும் அவள் சொல்ல மாட்டாள் என்பது தெரிந்தே இருக்க அதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டானவன்.