மித்ர-விகா-12
வாகனத்தை நிறுத்திவிட்டு, அலுவலகத்திற்குள் நுழைந்தவன், மின்தூக்கியை நெருங்க அதன் கதவு அப்பொழுதுதான் மூட தொடங்கவும் கையை நீட்டி அதைத் திறக்கச்செய்து அதன் உள்ளே சென்றான் மித்ரன்.
அவனுடைய எதிர்பார்ப்பு வீண் போகாமல், உள்ளே மாளவிகா நின்றிருக்க, கருநிலத்தில் தங்க நிறப் பூக்கள் போட்ட ‘ஃபுல் ஃப்ராக்’கில் ஓவியம் போன்று இருந்தவளைப் பார்த்தும் பார்காததுபோல் நின்றான் அவன். அவனைப் பார்த்ததும், 'எப்பவும் ஃபிஃப்த் ஃப்ளோர்லதான ஏறுவான். இன்னைக்கு என்ன இங்க ஏறியிருக்கான்? ப்ச்... கண்ணாடிப் பார்க்க முடியாது. விசில் அடிக்க முடியாது. இவன் கூடவே நைட்டீன் ஃப்ளோர்ஸ் வேற ட்ராவல் பண்ணனும் ச்ச' என மனத்திற்குள்ளேயே கண்டபடி பேசிக்கொண்டவளின் பார்வை தன்னிச்சையாகக் கண்ணாடியில் பதிய, அவள் கரம் கலைந்திருந்த கேசத்தைத் தானாகக் கோதிக்கொள்ள, அவளது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டது போல் சிரித்து வைத்தான் மித்ரன்.
அவள் அதைக் கண்டும் காணாமலும் இருக்க, "ஆமாம்... மெரினா போன சரி, அங்க இருந்து இப்படி மணலைக் கொண்டு வந்து லிஃப்ட்ல கொட்டி வெச்சிருக்கியே ஏன்" என அவன் வெகு தீவிரமாகக் கேட்க, அதில் காலணியில் ஒட்டிக்கொண்டு வந்திருக்குமோ எனத் திடுக்கிட்டுக் கீழே குனிந்து பார்த்தவள், அவன் அவளைக் கிண்டல் செய்கிறான் என்பது புரியவும்,
"அது இந்த ஆஃபிஸ்லதான் நான் குப்பைக் கொட்றேன்னு எல்லாருக்கும் தெரியணும் இல்ல, அதுக்காக" எனப் பதில் கொடுக்க,
"ஆமாம்... உன்னைப் பார்த்தாலும் குப்பம்மா மாதிரித்தான் இருக்க" என சிரித்துக்கொண்டே சொன்னவன், "அப்படின்னா... யூனிவர்சிட்டி போறேன்னு சொல்லி கட் அடிச்சிட்டு, நீயும் உன் ஃப்ரெண்டும் மெரினா போய் சுத்தியிருக்கீங்க" என இலகுவாகவே அவன் கேட்கவும்,
"உண்மையாவே யூனிவெர்சிட்டிதான் போனோம் அமித். முடிச்சிட்டு வெளியில வரும்போது மெரினா பீச்ல அந்த அலையெல்லாம் எங்களைப் பார்த்ததும் வாங்க வாங்கன்னு கூப்பிட்டுதா, அதான் பாவமாச்சேன்னு போயிட்டு வந்தோம்" என்றாள் அவளும் சிரித்தமுகமாக.
அதற்குள் பத்தொன்பதாவது தளம் வந்திருக்க உள்ளே நுழைந்தனர் இருவரும். அதன் பின் அவர்கள் வேலையில் மூழ்கிப்போக, இடையில் அவளை அழைத்தவன், 'என்ன... இன்னைக்கும் ஃபோர் ஓ க்ளோக் போகணும்னு பெர்மிஷன் கேட்டு ஹெச்.ஆர்க்கு மெயில் போட்டிருக்க? என சிடுசிடுத்தான் மித்ரன்.
"அதுதானே நம்ம ப்ரொசீஜர், அதான்" என்றாள் மாளவிகா அதைக் கண்டுகொள்ளாதவள் போல.
"ப்ச்... அதைக் கேக்கல. எப்படி இருந்தாலும் உன்னைப் பொறுத்தவரைக்கும் நான்தான் அதை சாங்ஷன் பண்ணனும் ரைட்" என்றவன், "நேத்து யூனிவர்சிட்டி போகணும்னு சொன்ன, சரின்னு அலவ் பண்ணேன். பட் இன்னைக்குமா?" என அவன் கொஞ்சம் எரிச்சலுடன் கேட்க,
"சாரி அமித். எங்க கிளாஸ்மெட் வெட்டிங் ரிசப்ஷன். கண்டிப்பா போகணும். ப்ளீஸ்" அவள் முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு கேட்கவும்,
"இதுவே கடைசியா இருக்கட்டும். அடிக்கடி இப்படி நடக்கக் கூடாது" என அவளை அனுமதித்தான் அவன்.
சொன்னது போல அவள் சரியாக நான்கு மணிக்குக் கிளம்பவும் தன் கார் சாவியைச் சுழற்றிக்கொண்டே விக்ரமின் நிறுவனத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பி வந்தவன், "நானும் அந்தப் பக்கமாத்தான் போறேன். வா உன்னையும் அப்படியே ட்ராப் பண்ணிட்றேன்" என்றான்.
"இல்ல அமித், இந்த டைம்க்கு கேப் இருக்காதுன்னு என் ஃப்ரெண்ட் அன்புவை வரச்சொல்லி இருக்கேன். அவன் வந்து கீழ வெயிட் பண்ணிட்டு இருக்கான். ஸோ நோ ப்ராப்ளம்" என்று சொல்லிவிட்டு அவள் மின்தூக்கியை நோக்கிப் போக, தானும் அவளுடன் கீழே வந்தான்.
அங்கே அன்பு அவளுக்காகக் காத்திருக்க, அவனுடன் அவள் கிளம்பிச் செல்வதைப் பார்த்தவனுக்கு இனம் புரியாத கோபம்... கோபம்... கோபம் மட்டுமே.
அதுவும் அவர்கள் சென்ற அதே பாதையில் அவனும் பயணிக்க வேண்டி இருக்க, அவர்களைப் பார்த்துக்கொண்டே அவனது பயணமும் தொடர்ந்தது. அது அவனுடைய கோபக் கனலை ஊதிப் பெரிதாக்கியது.
***
விக்ரமின் நிறுவனத்திலிருந்த குழப்பங்களைப் பேசிக் கொஞ்சம் சரி செய்துவிட்டு அவன் வீடு திரும்பவே இரவு பதினொன்று ஆகியிருந்தது. அங்கேயே அவன் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கக் குளித்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தவன் கைப்பேசியைக் குடைய, வாட்ஸ்ஆப்பை பார்க்கும் பொழுது மாளவிகா வைத்திருந்த முகப்பு படம் அவனை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
தன் தோழியின் திருமண வரவேற்பிற்குச் செல்வதற்காகக் கேரளா பாணி பாவாடைத் தாவணியில் முழு அலங்காரத்துடன் தயாராகியிருந்தவள் அப்படியே 'செல்ஃபி' எடுத்து அதை முகப்புப் படமாக வைத்திருந்தாள்.
அவளது அழகில் கொள்ளைப் போனவன், மேலும் ஏதாவது படங்களை வைத்திருக்கிறாளோ என்று அறிய அவளது ஸ்டேட்டஸை பார்க்க, கல்லூரி தோழர்கள் தோழிகளுடன் செல்ஃபி, மேடை மீது மணமக்களுடன் அவர்கள் எல்லோருமாக எடுத்துக்கொண்ட படங்கள் என அந்த வரவேற்பில் எடுக்கப்பட்ட பல படங்கள் அதிலிருந்தன.
பெரும்பாலான படங்களில் அவளுடன் அன்புவும் இருக்க, அவனுக்குக் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது. அவர்கள் மேடைமேல் நின்றிருக்கும் படத்தை அவன் சற்றுப் பெரிதுபடுத்திப் பார்க்க, அன்புவுடன் அவள் கைக் கோர்த்து நிற்க, மற்றொருபுறம் நின்ற ரஞ்சனியைப் பார்த்து, அதுவும் அவள் மாளவிகாவை ஒரு விசித்திர பார்வை பார்த்திருப்பது புரியவும், அவனது பார்வை தீவிரமடைந்தது. அந்த கணம், எல்லா படங்களிலுமே ரஞ்சனி அன்புவுக்குப் பக்கத்தில் நிற்பது வேறு விளங்க, அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டியது போலிருந்தது.
நடுநிசி என்பதைப் பற்றிக் கூட கவலைப் படாமல் கவியை அழைத்தவன், "கவி... நம்ம ரிஸப்ஷன்ல வேலை செய்யறான்னு யாரையோ சொன்ன இல்ல அவளை விட்டு அந்த ரஞ்சனி கிட்ட பேசச் சொல்லு. அவ யாரையாவது லவ் பண்றாளான்னு எனக்குத் தெரிஞ்சாகணும். அஸாப்!" என்றான் கட்டளையாக.
தான் நினைத்ததைச் சாதிக்கும் வெறி மட்டுமே இருந்தது அக்னிமித்ரனின் குரலில்.
***
அது ஒரு சனிக்கிழமையின் பொன் மாலை நேரம். பெண்களுக்காகவே பிரத்தியேகமாக இயங்கும் அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது.
அங்கே வருபவர்கள் சுறுசுறுப்புடன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக அவர்களை உற்சாகமூட்டும் வகையில் வேகமான ஆங்கில இசை மிதமான சப்தத்துடன் அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, தன் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் ரஞ்சனி.
கவி சொன்னதன் பெயரில் இரண்டு நாட்களாக வழக்கமான நேரத்தில் அவளுக்காகக் காத்திருந்தும் ஏனோ அவள் வராமல் போக அன்று அவளை அங்கே பார்க்கவும் 'அப்பாடா' என்ற பெருமூச்சு எழுந்தது ரீமாவுக்கு.
சற்றுத் தூரத்திலேயே நின்றுகொண்டவள் கவியை தன் கைப்பேசியில் அழைத்து, "கவி, அந்த ரஞ்சனி இன்னைக்கு ஜிம்க்கு வந்திருக்காங்க" என்று தகவல் சொல்லவும்,
"ஓகே... கொஞ்சம் கேஷுவலா பேசுங்க ரீமா. என்ன சொல்றாங்கனு பார்க்கலாம்" என்றவன்,
"உங்க செல் ஃபோனை கட் பண்ணாம, ஸ்க்ரீனை மட்டும் லாக் பண்ணி கைலவெச்சட்டுப் பேசுங்க. நீங்க பேசறத நான் கேக்கணும்" என்றான் கட்டளையாக.
"இது எனக்கு சரியா படல கவி, இதெல்லாம் நமக்கு தேவையா?" என அவள் உள்ளே போன குரலில் கேட்க, “நாம வேணா வேற வேலைத் தேடிக்கலாமா?" என அவன் எகத்தாளமாக எதிர் கேள்வி கேட்கவும், எதிர்புறம் நிலவிய மௌனத்தில்,
"ப்ச்... சாரி, ஆனா என்ன பண்ண சொல்றீங்க ரீமா? எனக்கும் இதுல எல்லாம் உடன்பாடு இல்லதான். நமக்கு பின்னால ஒரு குடும்பம், ரெஸ்பான்சிபிலிட்டீஸ் எல்லாம் இருக்கில்ல? நாய் வேஷம் போட்டா குலைச்சுதானே ஆகணும். பாஸ் இப்படி பண்ணச் சொல்லும்போது முடியாதுன்னு சொல்ல முடியாதில்ல" என்றவன், "போய் பேசுங்க” என்று முடித்தான் கவி.
குற்ற உணர்ச்சி மேலோங்க அவன் சொன்னது போல பேசியின் திரையை லாக் செய்தவள் ரஞ்சனியை நோக்கிப் போக, எதிர்முனையில், அவனது கைப்பேசியில் அக்னிமித்ரனை க்ரூப் கால் மூலம் இணைத்தான் கவி.
அவனுடைய பிரத்தியேக காரியதரிசியான கவி, அவன் குழுமங்களில் பணியிலிருக்கும் இன்னும் சில மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் தவிர வேறு யாருடனும் பேச்சே வைத்துக்கொள்ளமாட்டான் மித்ரன். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களிடம். அதனால்தான் கவியின் மூலமாகவே ரீமாவிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தான்.
முகத்தில் வியப்பைத் தேக்கி, "வாவ். ரஞ்சனி. நல்லா வெய்ட் குறைச்சு இருக்கீங்க. நல்ல ஷேப்போட, யு ஆர் லூக்கிங் வெரி பிரெட்டி” என ரீமா சொல்ல, அதில் வெட்கமும் பெருமிதமும் போட்டிப் போட, "தேங்க் யூ வெரி மச்... ஸிஸி!" என்றாள் ரஞ்சனி.
ஸிஸி என்பது மற்றவரை தரக்குறைவாகச் சுட்டிக்காட்ட பயன் படுத்தப்படும் ஒரு வார்த்தை என்பதையே அறியாமல் அவள் அப்படி விளிக்கவும், ஏற்கனவே சரியான எரிச்சலில் இருந்தவள் மேலும் கடுப்பானாள் ரீமா. ஆனாலும் அதைக் காண்பித்துக்கொள்ளாமல், “டூ த்ரீ டேஸ் முன்னால உங்க வாட்சப் ஸ்டேட்டஸ்ல ஒரு ரிசப்ஷன் அட்டென்ட் பண்ண பிக்ச்சர்ஸ் போட்ருந்தீங்கல்ல. அந்த ஃபுல் ஃப்ராக்ல செம்மயா இருந்தீங்க” என அவளைப் புகழ்ந்தவாறு அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.
அவளது முகஸ்துதியில் உச்சிக் குளிர்ந்து போனவளாக, "அப்படியா சொல்றீங்க. நிஜமாவா?" என அவள் குதூகலத்துடன் கேட்க, சற்றுப் பூசினாற்போன்ற தோற்றத்துடன் இருந்தவள் தனது உடல் எடைக் குறைந்திருப்பது உண்மைதான் என்பதால்,
"எஸ்... அதுல உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம்" எனக் கேட்டாள் ரீமா.
"ப்ச்... ஒர்க் அவ்ட், டயட்னு எவ்வளவு கஷ்டப்பட்டு வெய்ட் ரெட்யூஸ் பண்ணியிருக்கேன்னு உங்களுக்குத் தெரியாது ஸிஸி..., ஆனா இதை மத்தவங்க கவனிக்கறாங்களானே புரியல" எனச் சலித்துக்கொண்டாள்.
"யார் ரஞ்சனி உங்க இந்த சேஞ்ச் ஓவரை கவனிக்கா...த அந்த மத்தவங்க" எனக் கிண்டல் போல வெகு இயல்பாகவே கேட்டாள் ரீமா.
"என்னோட சொந்த கதை சோக கதையெல்லாம் இப்ப எதுக்கு? விடுங்க" என்றாள் ரஞ்சனி சலிப்புடன். கூடவே தயக்கமும் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
‘ப்ச்... இவ சரியான பதில் சொல்லலன்னா இந்த கவி நம்மள விட மாட்டாரே" என உள்ளுக்குள்ளே அலுத்துக்கொண்டவள், "ஐயோ, இது என்ன இவ்வளவு சோகமா பேசறீங்க" எனத் தொடங்கி, "ஹேய். நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா! உங்க ஆள்தான் உங்களைக் கண்டுக்கலையா?" என்றாள் ரீமா குரலில் வியப்பைக் கூட்டி.
"ப்ச்... லவ் பண்ணிட்டாலும்" என்றவள், அவளுக்குமே யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என இருக்கவே, ரீமாவின் 'காதலிக்கறீங்களா?' என்ற கேள்வியில் தன் மனதைத் திறந்தாள் ரஞ்சனி.
"என் கூட படிச்ச பையன்தான் ஸிஸி. மாளவிகா இருக்கால்ல அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அன்புவைதான் நான் லவ் பண்றேன். முதல்ல எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட ஒத்தே வராது. எது பண்ணாலும் மாளவிகாவை கம்பேர் பண்ணி ஏதாவது அட்வைஸ் பண்ணி இரிட்டேட் பண்ணுவான். அவன் மாளவிகா மேல எடுக்கற அக்கறையைப் பார்க்கும்போது எனக்குக் கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும். இதே மாதிரி 'நமக்கு இப்படி ஒரு அடிமை சிக்கலையே'ன்னு ஏக்கமாவும் இருக்கும்" என ரஞ்சனி சொல்லிக்கொண்டிருக்க,
"ஓஹ்... அவன் அந்த மாளவிகாவை லவ் பண்றானா? அப்படினா உங்களோடது ஒரு ட்ரையாங்கிள் லவ் ஸ்டோரின்னு சொல்லுங்க” எனத் தீவிரமாகக் கேட்டாள் ரீமா.
"அதெல்லாம் இல்ல. அவங்களுக்குள்ள இருக்கறது எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு புனிதமான ஃப்ரெண்ட்ஷிப், அவ்வளவுதான். அது எங்க செட்ல எல்லாருக்குமே தெரியும்” எனச் சொல்லி ரீமாவின் மூலமாக மித்ரனின் வயிற்றில் பாலை வார்த்தவள், "ஒண்ணு தெரியுமா ஸிஸி... மாளவிகா எங்க எல்லாரையும் விட, அதாவது அன்புவையும் விட ரெண்டு வயசு பெரியவ" என்றாள் ரஞ்சனி சற்று இகழ்ச்சியாக.
"என்ன?" என அதிசயித்த ரீமா, "தென்... அவ எப்படி உங்க செட்ல?" எனக் கேள்வியாக இழுக்க, "அது ஏன்னு எல்லாம் எங்களுக்குத் தெரியாது" என அலட்சியமாகச் சொன்னவள், "இதெல்லாம் தெரிஞ்சதாலதான் போன வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு நான் அன்புகிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். அவன் அதை அக்சப்ட் பண்ண மாட்டான்னுதான் நினைச்சேன். பட் அன் எக்ஸ்பெக்டட்லி பந்தா பண்ணாம உடனே அக்சப்ட் பண்ணிட்டான். ஆனா எங்க விஷயம் இப்போதைக்கு மாலுக்கு தெரிய வேண்டாம்ங்கற கண்டிஷனோட" என்றாள் ரஞ்சனி சுரத்தே இல்லாமல்.
"வாவ். அதான் அக்செப்ட் பண்ணிட்டார் இல்ல? தென் ஏன் இவ்வளவு சோகம்?" ரீமா கேட்கவும்,
"ப்ச்... அப்பறம் அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என இழுத்தவள், "அவனுக்கும் என்னைப் பிடிக்குமாம். ஆனாலும் அவன் என்னை அக்சப்ட் பண்ணதுக்கு காரணம் நான் மாளவிகாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்படிங்கறதாலதானாம். ஏன்னா எதிர்காலத்துல அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப் என்னால கெட்டுப்போகாதாம். என்னாலதான் மாளவிகாவை புரிஞ்சிக்க முடியும்னு அவன் நம்பறானாம். ஷிட்... இப்படியா ஒருத்தனுக்கு என் மேல லவ் வரணும்" சொல்லும்பொழுது அவ்வளவு வன்மம் வழிந்தது ரஞ்சனியின் குரலில்.
"ம்ம்... அவர் சொல்றதும் உண்மைதானே. நீங்க முதல்ல மாளவிகாவோட ஃப்ரெண்ட் அப்பறம்தானே அவரை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?" எனக் கேட்டாள் ரீமா.
"ஆரம்பத்துல... அதாவது அன்பு எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வரதுக்கு முன்னால வரைக்கும் அவ கூட ஒரு நல்ல ஃப்ரெண்ஷிப் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனா இப்ப எங்க ரெண்டு பேர்ல யார் அவனுக்கு முக்கியம்னு வரும்போது அவளை ஏனோ என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியல. அவ பக்கத்துல இருந்தா என்னை யாரோ மாதிரி ஒரு பார்வை பார்த்து வைப்பான். லாஸ்ட் வீக் எங்க ஃப்ரெண்ட்டோட வெட்டிங் ரிஷப்ஷன் போயிருந்தோம் இல்ல? அன்னைக்கு உள்ளே நுழைஞ்சதும் அவன் என்னை ஒரு பார்வை பார்த்ததோட சரி. அதுக்கு பிறகு மத்த ஃப்ரெண்ட்ஸை எப்படி ட்ரீட் பண்ணானோ அப்படித்தான் என்னையும் ட்ரீட் பண்ணான். மாளவிகாவும் அவனை விட்டு எங்கேயும் நகரல. எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? இதெல்லாம் கூட காரணமா இருக்கலாம். இவனே அவளை விட்டா கூட அவ இவனை விடமாட்டா போலிருக்கு"
பொறாமையும் ஆதங்கமும் நன்றாகவே வெளிப்பட்டது அவளது குரலில்.
"இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ரஞ்சனி. கொஞ்ச நாள் பொறுமையா இருங்க. ஏதாவது ச்சேஞ்சஸ் வரும்" என்றாள் ரீமா.
அதற்குள் அடுத்த ‘பேட்ச்’ தொடங்கவும், "பை ரஞ்சனி" என்று விடை பெறுவதுபோல் சொல்லிவிட்டு, "ஃப்ரீயா இருக்கும்போது கூகுளல்ல ஸிஸின்னா என்னனு போட்டு பாருங்க" என்றதுடன் முடித்துக்கொண்டு புன்னகை மாறாமல் அவளிடமிருந்து விடை பெற்று ரீமா உள்ளே செல்ல,
'இது யூசுவலா எல்லாரும் சொல்றதுதான? தென் ஏன் இப்படி சொன்னாங்க?' என்ற கேள்வியுடன் உடனே 'கூகுள்' செய்த ரஞ்சனியின் முகம் அஷ்டகோணலாக மாறியது,
'ஐயோ... இது தெரியாம போச்சே' என்ற சங்கடத்துடன் அனிச்சையாக நெற்றியில் தட்டிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினாள் ரஞ்சனி.
ஒரு பக்கம், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ரீமா பேசிய விதத்தில் சிரிப்பு வந்தாலும், மாளவிகாவை நினைத்துப் பரிதாபமாக இருந்தது, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவிக்கு. அன்று அன்புவையும் அவளையும் ஒன்றாகப் பார்க்கும்பொழுது அவர்களுக்குள்ளிருந்த புரிதல் நன்றாகவே வெளிப்பட்டது.
அதுவும் அவர்களுக்குள் நட்பைத் தாண்டி வேறெதுவும் இல்லை எனும் பொழுது மாளவிகாவை மட்டுமே இலக்காக்கி மித்ரனாகட்டும் அந்த ரஞ்சனியாகட்டும் இப்படிப் பொங்குவது கொஞ்சமும் நியாயமானதாக அவனுக்குப் படவில்லை. மேற்கொண்டு மித்ரனிடம் எதுவும் பேசக்கூட விருப்பமில்லாமல், மனம் முழுதும் பாரம் ஏறிய உணர்வுடன் அந்த அழைப்பைத் துண்டித்தான் கவி.
அனைத்தையும் மற்றொரு முனையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அக்னிமித்ரனுக்குமே, அந்த ரஞ்சனி பேசியது எதுவுமே உவப்பாக இல்லைதான். ஆனாலும் மாளவிகாவுக்கும் அன்புவுக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய இரும்புத்திரையாக ரஞ்சனி மாறுவாள் என்பது கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளங்க, அது அவனுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது.
அந்த ரஞ்சனி சொன்ன அனைத்தையும் மனதிற்குள் மறுபடியும் ஒரு முறை ரிவைண்ட் செய்து பார்த்தவன் ஒரு முடிவுக்கு வர, அதைச் செயற்படுத்த, கவியின் மூலமாக ரீமாவிடமும், ரீமா மூலமாக ரஞ்சனியிடமும் பேசி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்தான். அதன் பிறகுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது அக்னிமித்ரனுக்கு.
பின்பு தன் கைப்பேசியில் வைத்திருந்த மாளவிகாவின் 'பயோ டேட்டா'வை எடுத்துப் பார்த்தவன் அவள் பிறந்த வருடத்தை சரிபார்த்துவிட்டு கணக்குப்போட, ரஞ்சனி சொன்னது போல அவளுடைய வயதிற்கு, இரண்டு வருடங்கள் படிப்பில் அவள் பின்தங்கியிருப்பது புரிந்தது.
அதை இதற்குமுன் அவன் கவனிக்கவில்லை. 'இரண்டு வருட படிப்பை அவள் எப்பொழுது ஏன் தவறவிட்டிருக்கிறாள்' என்ற கேள்வியில் அவன் நெற்றி சுருக்கிய அதே நேரம், 'எத்தனையோ பெண்களோட நீ ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்க? ஆனா அவங்களோட பாஸ்ட் ஆர் ப்ரெசென்ட் பத்தி நீ எப்பவாவது யோசிச்சிருக்கியா? அந்த ரூபா உன் எதிரி கூட ஒட்டிட்டு வந்தப்ப கூட அது உன்னை அஃபக்ட் பண்ணல இல்ல? ஆனா இந்த மாளவிகா விஷயத்துல மட்டும் ஏன் உனக்கு இந்த பொசசிவ்னெஸ், ஆராய்ச்சி எல்லாம்? அன்னைக்கு அந்த ரூபா கேட்ட மாதிரி நீ அவளை லவ் பண்றியா?’ என அவனது மனசாட்சி தாறுமாறாக அவனிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உண்மையான விடைகளைத் தேட முற்படாமல்,
‘பொசசிவ்னெஸ்ங்ற வார்த்தையே தப்பு. இது எதிராளியோட ஓவர் கான்ஃபிடென்ஸை உடைக்கற ஒரு சின்ன டெக்னிக் அவ்வளவுதான். மத்த பொண்ணுங்க மாதிரி என்னைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகாதது போல அவ ஓவர் சீன் போடறால்ல அதுக்குதான் இது. அவளோட இந்த அலட்சியம்தான் என்னோட பிடிவாதத்தை வளர்க்குது. அவளா என்னைத் தேடி வரணும். மத்த யாரை பத்தியும் நினைக்காம என்னைப் பத்தி மட்டுமே நினைக்கணும். அவளோட ப்ரிஃபரன்ஸ் லிஸ்ட்ல நான்தான் முதல் இடத்துல இருக்கணும். அதுக்கு இந்த அன்பு மாதிரி ஆளுங்க அவ கூட இருக்கக்கூடாது. பிசிக்கலி அண்ட் எமோஷனலி ஒன்ஸ் நான் அவளை ஜெயிச்சுட்டேன்னா எனக்கு இப்ப அவ மேல இருக்கற இந்த ஃபோகஸ் மாறிடும். மத்தபடி ஒரே ஒரு கூட்டுக்குள்ள என்னைச் சிறைப்படுத்தக்கூடிய இந்த லவ்... மேரேஜ்... இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகாது' என தன் மனசாட்சிக்குப் பதில் சொல்லி அதை அடக்கிவைத்தான்.
இந்த அலட்சியம்தான் எதிர்காலத்தில் அக்னிமித்ரனை தாறுமாறாகக் குத்திக் கிழிக்குமோ?
விடை காலத்தின் கைகளில்.
Wow awesome
Adapavi ippo enna plan panrano anbu ah doorama anuoa try panran ah
Nanum ka..
2 yrs periyava la...
Antha swamy ji anbu malu...
Something...
Ranju yanna ma nee ippadiya yarune theriyatha vanga kitta solluva...
TT un velaya kamichuta ila..
Iru da ...