top of page

En Manathai Aala Vaa-11

Updated: Oct 7, 2022

மித்ர-விகா-11

அலுவலகத்திற்குக் கூடப் போகப் பிடிக்காமல், அந்த நட்சத்திர விடுதியிலிருந்து நேராக நகரின் முக்கியப்பகுதியில் அமைந்திருக்கும் அவனுடைய சொகுசு அபார்ட்மென்டுக்கு வந்தவன் அங்கிருந்தே அவனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.


வேறு எந்த நினைவுகளுக்கும் ஆட்படக்கூடாது என்கிற பிடிவாதத்தால் முன் இரவு வரை அதில் மூழ்கியிருந்தவனை, "உங்களுக்குப் பிடிச்ச சாபுதானா கிச்சடியும் ஆனியன் சட்னியும் செஞ்சிருக்கேன், சாப்பிட வாங்க தம்பி" என அங்கே சமையல் வேலை செய்யும் சண்முகத்தின் குரல் கலைத்தது.


என்ன வேண்டும் எனக் கேட்டுச் செய்யலாம் என்றால் பெரும்பாலும் அவனிடம் பதிலிருக்காது. 'இதெல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க சண்முகம். எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும்ல' என்றுதான் சொல்லுவான்.


அவனுடைய உணவு பழக்கவழக்கங்கள் அவருக்கு அத்துப்படி என்பதால் அவன் அங்கே இருக்கும்பட்சத்தில் அவரே செய்துவிடுவார். "இங்கேயே எடுத்துட்டு வந்துடுங்க சண்முகம். வேலையிருக்கு" அவன் சொல்லவும் அவர் உணவை அங்கயே கொண்டு வந்து பரிமாறச் சாப்பிட்டுக்கொண்டே வேலைகளைச் செய்தான் மித்ரன்.


பின் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு, "தம்பி நான் முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பறேன்" என அவனிடம் தகவல் சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.


ஒரு கட்டத்தில் சலித்துப்போய் மடிக்கணினிக்கு ஓய்வு கொடுத்தவன், உறங்க முற்பட, மூடிய இமைகளுக்குள்ளே மாளவிகாவின் முகம் வந்து அவனை உறங்கவிடாமல் இம்சை செய்யவே இரவு முழுவதும் ஒரு நொடி கூட கண் மூடவில்லை அக்னிமித்ரன்.


உறங்கினால்தான் கனவு வரும். அவனுக்கோ அவன் உறங்க முற்பட்டாலே கனவு வருகிறது. அதிகாலை வரை அந்தத் துன்பத்தைப் பொறுத்தவன், விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் அவனுடைய அன்னையை அழைத்தான்.


"மாம் எங்க இருக்கீங்க? எனக்கு உங்கள உடனே பார்க்கணும்"


அவன் சொல்லவும், "ஏன் மித்து... உடம்பு ஏதாவது சரியில்லையா?" எனக் கரிசனத்துடன் ஒலித்தது அவனுடைய அம்மா தீபலக்ஷ்மியின் குரல்.


"நத்திங் மாம். ஜஸ்ட் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணிச்சு, அதான்" என்றவன் சென்னைலதான இருக்கீங்க?" என்று கேட்டான்.


"ம்... நம்ம வீட்டுலதான் இருக்கேன். இப்பவே கிளம்பி வா. எல்லாரோடவும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்"


அன்னை சொல்லவும், 'மாம் அங்க இருந்தா டேட்டும் அங்கதான் இருக்காங்கன்னு அர்த்தம். ம்...' என்ற எண்ணத்தில் ஒரு பெருமூச்சு எழக் குளியலறை நோக்கிப் போனான்.


***


காலை எட்டு மணி...


கிழக்கு கடற்கரைச் சாலையில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்ட மாளிகை பரபரப்பாகக் காட்சி அளித்தது. அதன் மிகப்பெரிய இரும்பு கேட்டை ஒட்டி அமைந்திருந்த 'செக்யூரிட்டி பூத்' உள்ளே இருந்த இரண்டு காவலாளிகளில் தொடங்கித் தோட்டக்காரர்கள், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களைத் துடைத்து அவற்றைத் தயார் செய்துகொண்டிருந்த வாகன ஓட்டிகள், வீட்டிற்குள்ளே வேலை செய்யும் சீருடையை அணிந்த 'ஹவுஸ் கீப்பிங்' பணியாளர்கள் என அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.


அந்த மாளிகையில் அமைந்திருக்கும் உணவு கூடத்தில் போடப்பட்டிருந்த மிகப் பெரிய உணவு மேசையின் அருகில் நடு நாயகமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன்.


அவரது பக்கவாட்டில் அமைந்த இருக்கையில் அமர்ந்திருந்த தீபலக்ஷ்மியின் பார்வை ஆவலுடன் அந்தக் கூடத்தின் நுழைவாயிலிலேயே இருக்க, மனைவியைக் கேள்வியாய் பார்த்த பரமேஸ்வரன், "என்ன தீபா! யாரையோ எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கிற மாதிரி தெரியுது? உன்னோட சின்ன பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கானா?" விடையை அறிந்துகொண்டே கேள்வியைக் கேட்டார் அவர்.


மூத்த மகன், மருமகள், பதின்ம வயதிலிருக்கும் அவர்களுடைய இரு பிள்ளைகள் என அனைவரின் முன்னிலையிலும் அதுவும் அவருடைய நாத்தனாரை வைத்துக்கொண்டே கணவரது அந்தக் குத்தலான கேள்வியில் கோபமும் இயலாமையுமாக தீபாவின் கண்கள் கலங்கியது.