En Manathai Aala Vaa! 10
Updated: Oct 6, 2022
மித்ர-விகா 10
மற்ற இருவரையும் கண்டும் காணதது போல் அக்னிமித்ரனும் மோனாவும் அங்கே இருந்த உணவகத்தை நோக்கிச் செல்ல, அருவருப்பு, பயம் என அவளுடைய மனதில் தோன்றிய உணர்வுகளை முகத்தில் காண்பிக்காமல் இருக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டவள், கிட்டத்தட்ட அவளுடைய அதே மனநிலையிலிருந்த கவியுடன் பெயருக்கு ஏதோ பேசிக்கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள் மாளவிகா.
அவர்கள் உள்ளே நுழையவும், பணிவுடன் அவர்களை வரவேற்ற அந்த விடுதியின் பணியாளர் அங்கே அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த, நான்கு பேர் அமர்ந்து உணவு உண்ணும்படியாக அமைந்திருந்த உணவு மேசையை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார்.
நான்கு பேரும் உட்காரவும், "உங்களுக்கு கவியைத் தெரியும் இல்ல" என்றவன், "இவங்க மிஸ் மாளவிகா. என்னோட நியூ செக்ரெட்டரி" என மித்ரன் அவளை மோனாவுக்கு அறிமுகப்படுத்த, "ஹாய்" என்றவாறு மாளவிகா தன் கையை நீட்டவும், அவளுடன் கைக் குலுக்கிய மோனாவின் கண்களில் கேலியா அல்லது இகழ்ச்சியா என வரையறுக்க முடியாத ஒரு பாவம் ஒரு நொடி நேரத்துக்குள் தோன்றி மறைந்தது. அவளுடைய எண்ணப்போக்கு என்னவாக இருக்கும் என்பது புரியவும், உடல் முழுவதும் தகித்தது மாளவிகாவுக்கு.
அவனிடம் நீட்டப்பட்ட 'மெனு கார்ட்'டை பிரித்துப் பார்த்துக்கொண்டே, "என்ன சாப்படறீங்க மோனா?" எனப் பிரத்தியேகமாக அவளை உபசரிக்க, 'ஃபர்ஸ்ட் ஐ லைக் டு ஹேவ் சம் காக்டைல் டு செலெப்ரெட் திஸ் ஹாப்பி மொமென்ட்" என்று அவள் வெகு சகஜமாகச் சொல்ல, அனிச்சையாய் அவன் பார்வை மாளவிகாவிடம் சென்றது.
அவள், 'இதெல்லாம் இங்க சாதாரணமப்பா' என்கிற மனநிலையில் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் உட்கார்ந்திருக்க, "மாள்வி... உனக்கும் காக்டைலே சொல்லட்டுமா" என வெகு இயல்பாகக் கேட்டு அவளை லேசாக கலவரப்படுத்திவிட்டு, சட்டென கவியிடம் திரும்பி, "கவி வாட் அபவ்ட் யூ” என்றான் சகஜ பாவத்தில்.
அவன் வேண்டுமென்றே தன்னைச் சீண்டுகிறான் என்பது நன்றாகவே புரிய, 'இப்படி ஓவர் சீன் போடறதுக்குத்தான் இந்த டீ.டீ நம்மள கூப்பிட்டிருக்குமோ? உடம்பு முழுக்க திமிரு' என அவனை மனதிற்குள்ளேயே வறுத்தெடுத்த மாளவிகா அதை வெளிக்காண்பிக்காமல்,
"நான் எங்க குலதெய்வம் கருப்பண்ண சாமிக்கு ஒரு மண்டல விரதம் இருக்கேன். அவருக்குப் படைச்ச சாராயத்தை, ஐ மீன் லிக்கரை மட்டும்தான் குடிக்க அலவ்ட். அதனால ஏதாவது மாக்டைல் இருந்தா சொல்லிடுங்க" என அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல, "ஓஹ் மை காட். இப்படியெல்லாம் கூட இருக்கா என்ன?" என அதிசயித்தாள் மோனா.
"ஆமாம்... எங்க கருப்பண்ணசாமிக்கு சுருட்டு, அப்பறம் சாராயம் எல்லாம் படையல் போடுவோம்" அவள் தீவிரமாகச் சொன்னாலும் அதில் இழையோடிய கிண்டல் மித்ரனுக்குப் புரியவே செய்தது. கவி வேறு மிக முயன்று சிரிப்பை அடக்குவது புரிய,
"கவி... உனக்கு என்ன? நீ ஏதாவது சாமிக்கு விரதம் இருக்கியா?" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் அக்னிமித்ரன்.
"இல்ல பாஸ்” என்றவாறு தன் கைக் கட்டைப் பார்த்தவன், "மெடிசின்ஸ் எடுத்துட்டு இருக்கேன்ல. அதனால வேண்டாம்" நாசூக்காக அவனும் மறுத்துவிட, அவரவர் தேவைக்கு ஏற்ப கவியே ஆர்டர் செய்துவிட, பின் சில பொதுவான பேச்சுகளுடன் அவர்களுடைய விருந்து தொடங்கியது.
அதற்குள் மாளவிகாவுக்கும் கவிக்கும் வழக்கமாக 'வெல்கம் ட்ரிங்க்' என்ற பெயரில் அங்கே கொடுக்கப்படும் பழச்சாறு பரிமாறப்பட, மித்ரனுக்கும் மோனாவுக்கும் பிரத்தியேக மதுபானம் கொண்டுவரப்பட்டது.
கவி பழரசம் அடங்கிய குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு, "பாஸ். பஃபேல என்ன ஐட்டம்ஸ்லாம் இருக்குன்னு ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட, மதுவை எடுத்து ஒரு மிடறு பருகிய மோனா ஏதோ பேச எண்ணி மாளவிகாவைப் பார்த்துத் தயங்க, "அஸ் பிருந்தா... அஸ் மாளவிகா... நீங்க பேசலாம்”
அவள் தயக்கம் புரிந்து அப்படிச் சொன்னான் மித்ரன். அவள் மாளவிகாவைத் துச்சமாகப் பார்த்து வைத்த அந்தப் பார்வையும் ஒரு காரணம். ஏனோ அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை அக்னிமித்ரனால். தகுந்த நேரம் பார்த்து அவளது முக்கியத்துவம் என்ன என்பதைச் சொல்லிவிட்டான். பிருந்தா யார் என்பதை நன்றாகவே அறிவாள் மோனா. மாளவிகாவை அவளுக்கு நிகராக ஒப்பிடவும் ஆச்சரியத்தில் விழி விரித்தாள் அவள்.
தன் கைப்பேசிக்குள் புகுந்து, அவளது கல்லூரி தோழர்கள் இணைந்திருக்கும் வாட்ஸ்ஆப் க்ரூபில் மூழ்கி அவள் முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்குள் சென்றிருக்க அவை எதையும் கவனிக்கவில்லை மாளவிகா. அதைக் கவனித்துத்தான் மித்ரன் அப்படி பேசியதே.