top of page

En Manathai Aala Vaa! 1

Updated: Sep 22, 2022

மித்ர-விகா 1


'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு. கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு.' என உல்லாசமாகப் பாட்டெல்லாம் பாடிக்கொண்டே ஆடுகிறார்களோ இல்லையோ, ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் வேலை செய்பவர்கள் முதல், வேலை இல்லாமல் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் கூட்டம் வரை ஆண் பெண் பேதமின்றி, வாரத்தின் இறுதி நாட்களைக் கொண்டாட, தங்கள் குதூகலத்தைத் தேக்கி வைத்திருக்கும் ஒரு வெள்ளிக்கிழமையில் பொன் மாலைப் பொழுது அது.


ஏதோ ஒரு பாடலைச் சீழ்க்கை அடித்துக்கொண்டே தன் முன் இருந்த மிகப்பெரிய கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கர்வத்துடன் பார்த்தவாறு அடங்காமல் சண்டித்தனம் செய்யும் தன் தலை முடியை 'ஜெல்' தடவி அடக்க முயன்றுகொண்டிருந்தான் மித்ரன்.


அவனது அலுவலகக் கட்டடத்தில் அமைந்திருக்கும், சகல வசதிகளையும் உள்ளடக்கி வைத்திருக்கும் அவனுக்கான பிரத்தியேக பிரிவில் உள்ள ‘நேப் ரூம்’ எனப்படும் அவனது ஓய்வறை அது.


கதவு தட்டப்படும் ஓசைக் கேட்க, எந்தவித தடையுமின்றி யாரால் அங்கே பிரவேசிக்க முடியும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்த காரணத்தால், "கம் இன் கவி” என்று தோரணையாகச் சொல்லிவிட்டு தன் சீழ்க்கையைத் தொடர்ந்தான் அவன்.


அவனுடைய அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தான் அவனால் கவி என்று அழைக்கப்பட்ட கவியரசு.


'லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா. ஆல்வேஸ் பீ ஹாப்பி.' மனதிற்குள்ளேயே அவனது சீழ்க்கையை மொழி பெயர்த்தவாறு மித்திரனுடைய பார்வை தன் மேல் விழுமா என சில நிமிடங்கள் அவன் காத்திருக்க, பொறுமையாக தன் தலையை வாரி அதை ஒருவாறு அடக்கி ஆண்டவன் பின் தன் பிரத்தியேக காரியதரிசியை 'என்ன?' என்பது போல் பார்க்க, "இன்னைக்கு ஈவ்னிங் ஸ்ரீமதி சாந்தம்மாள் காலேஜோட கல்ச்சுரல்ஸ் இருக்கு.



நீங்க சீஃப் கெஸ்ட்டா போக ஒத்துட்டு இருக்கீங்க. அதுவும் பிருந்தா மேடம் கிட்ட. அரௌண்ட் ஃபைவ் தர்டிக்கு அங்க இருக்கணும்" என்றான் அவன் மிகப் பணிவான குரலில்.


"ப்ச்... என்னோட ஒரு ஒண்டெர்ஃபுல் ஃப்ரைடே ஈவினிங்க ஸ்பாயில் பண்றதுல உங்க ரெண்டுபேருக்கும் அப்படி என்ன சந்தோஷமோ? அந்த பிருந்தா மேடம்க்குதான் வேலை இல்ல. உனக்குமா வேற வேலை இல்ல?” என அவன் அலுத்துக்கொண்டிருக்கும்போதே அவனது கைப்பேசி ஒலித்தது.


அவனுடைய தோழி பிருந்தா அழைத்திருந்தாள். தோழி என்றால் அவனுடைய மற்ற பெண் சகிகளைப் போல இல்லை, தோழி என்ற வார்த்தைக்கு அவன் உண்மையான மதிப்பைக் கொடுக்கும் அளவிற்கு ஒரு ஆத்மார்த்தமான தோழி.


தன் சலிப்பையெல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, "ம்ம்... சொல்லுங்க மே...டம்” என்றான் மித்ரன். குரல் சற்று குழைவாகவே ஒலித்தது.


எதிர்முனையில் அந்த பிருந்தா என்ன சொன்னாளோ, "ச்ச.ச. இதை விட முக்கியமான வேலை ஏதாவது இருக்குமா என்ன? அதுவும் நீயே பர்சனலா கூப்பிடும்போது. அங்க வரதுக்குதான் கிளம்பிட்டே இருக்கேன்"


'தன்னிடம் சீறியது என்ன? இப்பொழுது தோழியிடம் இப்படிக் குழைவது என்ன?'


சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் மிகப் பிரயத்தனப்பட்டு அதை அடக்கி முகத்தில் எவ்வித பாவனையையும் வெளிக்காண்பிக்காமல் நிற்பது என்பதும் ஒரு கலைதான். அதில் தேர்ந்தவனாக நின்றிருந்தான் கவி.


"பட்... ஸ்பீச்லாம் கொடுக்கமாட்டேன். ஜஸ்ட் பார்வையாளனா மட்டும் வரேன். ஓகே" முடிந்தது என அழைப்பைத் துண்டித்த மித்ரன், கவி தன்னை கவனிப்பதை உணர்ந்து, "என்ன பாக்கற. ஐ வாண்ட் சம்திங் டிஃபரெண்ட். அங்க மட்டும் ஸ்பெஷலா என்ன வாழ போகுது? கலை நிகழ்ச்சிங்கற பேர்ல சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட போறாங்க. டோட்டலி ஃபோர் டு ஃபைவ் ஹவர்ஸ் வேஸ்ட்” என சிடுசிடுத்துக்கொண்டே, "ஆனா அந்த பிசாசு என்னை விடாது. லெட்ஸ் கோ" என வேகமாக அங்கிருந்து சென்றான் அவன்.


அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் இருக்கும் துறை அப்படி. எவ்வளவு தப்பி ஓடினாலும், சில பொது நிகழ்ச்சிகளை அவனால் தவிர்க்க இயலாது. ஆனால் இந்தக் கல்லூரி நிகழ்ச்சி சற்று வித்தியாசமானதுதான்.


பொதுவாக அவன் கல்லூரி விழாக்களிலெல்லாம் கலந்துகொள்வது கிடையாது. தொழில்முறை விழாக்கள் மட்டுமே. இது பிருந்தாவுக்காக. அவளுடைய குழுமத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரி அது. அதில் அவள் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். பிருந்தா அழைத்த ஒரே காரணத்தினால் அவன் அங்கே செல்கிறான் அவ்வளவே.


அதுவோ வஞ்சிக்கொடிகள் கொஞ்சி விளையாடும் பிருந்தாவனம். இவனோ அவ்வஞ்சியர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு பித்தாக்கும் கண்ணன்-அர்சுனன் வழி வந்தவன்.


இவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்தும் அவள் ஏன் இவனை அங்கே அழைத்தாள் என அதிசயமாக இருந்தது கவியரசுக்கு. யோசனையுடன் சில நொடிகள் உறைந்து நின்ற கவி பின் மித்ரனை நோக்கி ஓடினான்.


***


சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த 'ஸ்ரீமதி சாந்தம்மாள் ட்ரஸ்ட் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்' விழாக்கோலம் பூண்டிருந்தது.


ஆங்காங்கே இளமையும் துள்ளலுமாக இளசுகளின் பட்டாளம் வட்டமிட்டுக்கொண்டிருக்க அந்த வளாகம் முழுதும் வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


கடைசி நிமிட வேலைகளில் மாணவ மாணவியர் பலர் பரபரப்பாக இருந்தனர்.


வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் துடிப்புடன் பலவித ஒப்பனைகளுடன் ஒவ்வொரு குழுவும் தயாராகிக் கொண்டிருக்க, பல இசைக்கருவிகளின் கலவையான ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தது.


இன்னும் சில நிமிடங்களில் அந்த விழா நடக்கவிருக்கக் கூட்டம் சேர தொடங்கி இருந்தது.


அந்தக் கல்லூரியின் மிகப்பெரிய வரவேற்பு கூடத்தில் சில பெண்கள் வண்ணப் பொடிகள் கலந்த கல் உப்பு மற்றும் மலர்கள் கொண்டு கோலம் வரைந்து கொண்டிருக்க அங்கேதான் தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டிருந்தாள் நம் நாயகி மாளவிகா.


"சீக்கிரம் முடிங்க கேள்ஸ். சீஃப் கெஸ்ட் வர டைம் ஆயிடுச்சு” என அவர்களைத் துரிதப்படுத்திய அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பேராசிரியர், கொஞ்சம் நலிந்த உடையில் ஆங்காங்கே வண்ணப் பொடியைப் பூசிக்கொண்டு சாமந்திப்பூவின் மெல்லிய இதழ்கள் அவளுடைய முகம், கழுத்து, கை என ஆங்காங்கே ஒட்டியிருக்க வியர்த்து விறுவிறுத்து நின்றிருத்த மாளவிகாவைப் பார்த்து, "நீ டான்ஸ் பண்ண போற இல்ல. இன்னும் ரெடி ஆகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" எனக் கேட்க, "மேம். என்னோட பெர்பார்மன்ஸ்க்கு ஒன் ஹவர்க்கு மேல ஆகும் மேம். அதுக்குள்ள ரெடி ஆயிடுவேன்” என்று அவள் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாயிற்புறம் பரபரப்படைய, "சீஃப் கெஸ்ட் வந்துட்டாரு. அவரை வெல்கம் பண்ண ரெடி ஆகுங்க” என்ற அந்தப் பேராசிரியர் அங்கிருந்து வெளியில் ஓட, அவர்களுடைய உப்...பூ கோலம் முழுமை அடைந்த திருப்தியில் ஓட்டமும் நடையுமாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்று மறைந்தாள் மாளவிகா அவளுடைய தோழியருடன் - நட்சத்திர கூட்டத்திற்கு நடுவில் ஜொலிக்கும் முழு நிலவு மேகத்திற்குப் பின்னால் போய் மறைந்துகொள்வதைப்போல.


***


கல்லூரி கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கி இருக்க, அருகிலிருக்கும் ஒரு அறைக்குள் சில தோழியர் உதவியுடன் ஒப்பனைகள் செய்தவாறு தயாராகிக்கொண்டிருந்தாள் மாளவிகா.


ஒலிப்பெருக்கியின் உபயத்தில், வரவேற்புரையில் தொடங்கி ஒவ்வொரு நிகழ்ச்சியாக முடிவது அவளுக்குத் தெரிய வர, அவளை நோக்கி ஓடி வந்தாள் அவளுடைய தோழி ரஞ்சனி.


"ரெடி ஆயிட்டயா மால்” எனத் தோழியின் ஒப்பனையை அளந்தவள், அவள் தலையில் சூடி இருந்த மலர்ச் சரத்தைச் சரி செய்ய, "இந்தக் கேள்வியெல்லாம் நல்லா கேளு எரும” என அவள் மீது காய்ந்த மாளவிகா, "ஹெல்ப் பண்ணாம எங்கடி போன?" என முறைக்க, "கூல் மால். சீஃப் கெஸ்ட்ட லைட்டா சைட் அடிச்சுட்டு வந்தேன்" என்றவள் மாளவிகாவிடம் மேலும் ஒரு முறைப்பைப் பெற்றுக்கொண்டு ஆனாலும் அடங்காமல், "என்ன ஹாண்ட்ஸம் தெரியுமா மாலு. செம்ம ஹைட். சாக்லேட் கலர். ப்ச்.. நேர்ல பார்த்துட்டோம்ல" என ரஞ்சனி பெருமையுடன் உரைக்க, அலட்சிய பாவத்தில் தன் உதட்டைச் சுழித்தவள், "அந்த டீ.டீயைப் பார்த்ததால உன் ஜென்மமே சாபல்யம் அடைஞ்சுபோச்சு போ” என்றாள் மாளவிகா கிண்டலாக.


"அது என்ன டீ.டீ?" என ரஞ்சிதா புரியாமல் கேட்க, "தீப்பொறி திருமுகமாம். அதான் டீ.டீ" என அதைத் தெளிவாக விளக்கினாள் அவளுக்கு அருகில் நின்றிருந்த சல்மா.


"ஆன்... ஏன்டீ? ஏன்?" என அவள் புரியாமல் பார்க்க, "அவன் பேர் அக்னிமித்ரன்ல. பேர்லயே தீயை வெச்சிருக்கான்ல அதனாலயாம்" என தெளிவுபடுத்தினாள் மற்றும் ஒருத்தி.


"மால். ஏண்டி உனக்கு இந்தக் கொலை வெறி. இன்னைக்கு ஒரே ஒரு நாள் அவர் நம்ம காலேஜுக்கு வந்திருக்கறது பொறுக்கலையா உனக்கு. மறுபடி ஒருதடவை அவரைப் பார்க்கற சான்ஸ் கூட நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ தெரியல. பிருந்தா மேடம் புண்ணியத்துல இங்க வந்திருக்காரு” என ரஞ்சனி கொஞ்சம் அதிகமாகவே உருக, அவளை முறைத்த மாளவிகா, "அடங்குடி எரும. அவன் ஒரு கேரக்டர்லஸ். ஹை ஃபை பொறுக்கி. அவனைப் பத்தி நமக்கென்ன பேச்சு. இப்படி கிடந்தது ஜொள்ளுவிடற அளவுக்கெல்லாம் அவன் ஒர்த் இல்ல” என்றாள் இயல்பாக.


"அடிப்பாவி. எவ்வளவு பெரிய டெலிவிஷன் நெட்ஒர்க் ஓனர். அவங்க பண்ணாத பிசினெஸ்ஸே இல்ல. அவரை எவ்வளவு அசால்டா பேசற நீ” என ரஞ்சனி விட்டுக்கொடுக்காமல் பேச, "ஓகே ஜீனி. இதோட விடு. அவனைப் பத்தி நமக்கென்ன. நீ சைட் அடி. சைட் அடி. உன் கண்ணு வலிக்கறவரைக்கும் சைட் அடி. நான் கேட்க மாட்டேன். ஆனா என் எதிர்ல வந்து அவனை ப்ரைஸ் பண்ணாத” என்று சொல்லிவிட்டு தன் கைப்பேசியை இயக்கியவள், “அன்பு. நான் ரெடி ஆயிட்டேன். ஸ்டேஜ் கிட்ட போறேன். நீ சீக்கிரம் வா” என்று சொல்லி தன் உடைமைகளை ஒரு கட்டை பையில் அள்ளி போட்டு அதை ரஞ்சனியிடம் கொடுத்து, "அம்மாவும் சாத்விகாவும் தேர்ட் ரோல உட்கார்ந்துட்டு இருக்காங்க. இதையெல்லாம் அவங்க கிட்ட கொடுத்துடு. ஃபோனை நீ வெச்சுக்கோ" என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு மேடை நோக்கிப் போனாள் மாளவிகா.


"ஹேய்... மாலுவுக்கு அந்த அக்னிமித்ரனைப் பிடிக்கவே பிடுக்காதுன்னு உனக்குதான் தெரியும் இல்ல. அப்பறம் ஏன் அவளை இரிடேட் பண்ற மாதிரி அவனைப் பத்தி அவ கிட்ட திரும்ப திரும்ப பேசற?" என சல்மா இயல்பாக ரஞ்சனியைக் கடியவும், "ச்சும்மா ஒரு ப்ஃளோல சொல்றதுதான் விடு" என அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றாள் ரஞ்சனி.


"அடங்கமாட்டா இவ" என அருகிலிருந்தவளிடம் புலம்பிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்து போனாள் சல்மா.


***


"மாளவிகா அண்ட் அன்புத்தமிழன் ஃப்ரம் தேர்ட் இயர் பீ.பீ.ஏ இஸ் கோயிங் டு பெர்ஃபார்ம் அ கிளாசிக்கல் டான்ஸ் அஸ் நெக்ஸ்ட் ஃபார் யூ” என்ற அறிவிப்பு வர, 'மாலு. மாலு. மாலு.' என்ற ஆர்ப்பரிக்கும் சத்தம் அந்த அரங்கத்தையே அதிர வைக்க, "சுராங்கனி. சுராங்கனி. சுராங்கனிக்கா மாலு கெனா வா” எனப் பாடல் வேறு மாணவர்களிடையில் ஒலிக்க, பெருமையாகவும் அதே சமயம் சிறிது பயமாகவும் இருந்தது மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த அவளுடைய அம்மாவுக்கு.


ஆனால் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த மித்ரனுக்கோ, 'யாருடா இந்த மாளவிகா?" என அவளைக் காணும் ஆவல்தான் உண்டாகியிருந்தது.


தன்னையும் மீறி ஒரு முறைப் பின்புறமாகத் திரும்பி ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்தவன், அருகில் உட்கார்ந்திருந்த பிருந்தாவிடம், 'யார் அந்த மாளவிகா.?’என்று கேட்க எத்தனித்து 'அவள் ஏதாவது நினைத்துக்கொண்டாள் என்றால்?' என்ற எண்ணம் தோன்ற அப்படியே விழுங்கினான் அவன்.


‘ஒரு முறை வந்து பார்த்தாயா?


நீஈஈஈஈ..


ஒருமுறை வந்து பார்த்தாயா?’


என்ற கேள்வியுடனேயே பாடல் தொடங்க, மேடையில் தோன்றியவளை பார்த்ததும் அவனது புருவம் மேலே ஏறியது. அவனுடைய கண்கள் அவளைத் தாண்டி வேறெங்கும் செல்ல மறுத்து பிடிவாதம் பிடிக்க, மனதில் எழுந்த உவகையால் இதழுக்குள்ளேயே புன்னகைத்துக்கொண்டான் அக்னிமித்ரன்.


‘என் மனம் நீயறிந்தாயோ?


திருமகள் துன்பம் தீர்த்தாயா?


அன்புடன் கையணைத்தாயோ.


உன் பெயர் நித்தமிங்கு


அன்பே.


அன்பே.


ஓதிய மங்கை என்று.


உனது மனம் உணர்ந்திருந்தும்.


எனது மனம்..


உனை தேட.


ஒரு முறை வந்து பார்த்தாயா?’


சிவப்பு நிற கரையுடன் கூடிய சந்தனநிறப் புடவையில் வடிவமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பரத நாட்டிய உடையில், அதற்கேற்ற அணிகலன்ளுடன் தங்கச்சிலையென மேடையில் தோன்றியவளின் களையான முகமும் அவளது நடன அசைவுகளும், பாடலின் வரிகளைப் பிரதிபலிக்கும் விதமாக பல ஜென்ம பிரிவுத் துயரை அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.


அவளது பாவனைகளில் காதலும் கோபமும் சம விகிதத்தில் கலந்திருக்க, அதில் மதி மயங்கிப்போய் மாளவிகாவிடம் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்துகொண்டிருந்தான் அக்னிமித்ரன்.

2 comments

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Nagajoithi Joithi
Nagajoithi Joithi
Mar 16, 2020

ஆரம்பமே அசத்தல், மித்ரன் மானைய் வேட்டையாடும் சிறுதையா, அந்த மான் மாளவிகாவா, பார்ப்போம் யார் யாரை வேட்டையாடுகின்றர்கள் என்று 👌👌👌👍👍👍🌺🌺🌺

Like

Weekly ethana ud sissy

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page