top of page

En Manathai Aala 50 (Final)

Updated: Nov 9, 2022

மித்ர-விகா-50

(இறுதி அத்தியாயம்)


அவளுக்காக விட்டுக் கொடுத்துப் போகிறான் என்கிற ஒரே காரணத்துக்காக அவள் இஷ்டப்படி தன்னை ஆட்டிப் படைக்கிறாள் என்றே தோன்றியது அவனுக்கு.


அவ்வளவு சுலபமாக இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்ட சொல்கிறாள் என்றால் எவ்வளவு திண்ணக்கம் இருக்க வேண்டும் அவளுக்கு. கர்பிணியான அவளை அருகில் வைத்துக்கொண்டு தன் கோபத்தை வாகனத்தில் கூட காண்பிக்க இயலவில்லை அவனால். தன் இயலாமையை எண்ணி மேலும் கோபம்தான் வந்தது.


அந்த நேரம் பார்த்துக் கவி வேறு ஏதோ கேட்பதற்காக அவனை அழைக்க, தன் கோபம் மொத்தத்தையும் அவனிடம் காண்பித்து தன் கைப்பேசியைத் தூக்கி ‘டேஷ்போர்ட்’ மீது அவன் வீசி எறியவும்தான், தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவள் தலை நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்தாள். அவள் சொல்வது போலத் தீப்பொறி திருமுகனாகவே காட்சி அளித்தான் அவளுடைய கணவன்.

அப்பொழுதுதான் அவனைப் பற்றிய நினைவே வந்தது அவளுக்கு. அங்கே சென்று ரூபாவை பார்க்கும் வரையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை ஆனால் மனதில் தோன்றியதும் உடனே செயல்படுத்தத் துணிந்து விட்டாள். அவள் சொன்னதும் மறுக்காமல் அவனும் உடனே செய்துவிட்டான்.


அவன் கோபப்படுவான் என்பதும் அவள் எதிர்பார்த்ததே. ஆனால் முதல் வேலையாக அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்ததை சுத்தமாக மறந்துவிட்டாள்.


கோபத்தில் சிவந்து தகித்த அவன் முகத்தைப் பார்த்து மிரண்டவள், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, "மித்தூஊஊஊ" எனக் கொஞ்சலாக அழைக்க, "போடி" என்றான் அவன் காட்டமாக.


அவன் அவளைத் திரும்பிப் பார்க்க மாட்டான் என்பது புரிய, "ஆஹ்" என அவள் வயிற்றைப் பிடித்துக் கொள்ள, "சீனப் போடாத... என்னப் பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி இருக்கா?" எனக் கடுப்படித்தவன், “டெலிவரிக்கு நீ உங்க அம்மா வீட்டுக்கே போ. அதுதான் நீ பண்ண வேலைக்கு... உன்னால நான் பண்ண வேலைக்கு… நம்ம ரெண்டு பேருக்குமே பனிஷ்மெண்ட்" என அவன் தீவிரமாகச் சொல்ல, அப்படி ஒரு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.


"ஏது... இது... பனிஷ்மெண்ட்... அதுவும் எனக்கு" என்று சொல்லி மறுபடி சிரித்தவள், "வளைகாப்பு முடிஞ்ச அடுத்த நாளே அங்க இருந்து விடாப்பிடியா கூட்டிட்டு வந்தது யாராம்?" என்று கேட்க, "தெரியாம செஞ்சுட்டேன் தாயே... மன்னிச்சுடு" என்றவன் வேறெதுவும் பேசவில்லை.


வேண்டுமென்றே அவளைக் கொண்டுபோய் அவளுடைய அம்மா வீட்டின் வாயிலேயே இறக்கிவிட்டுவிட்டு வெருட்டென்று சென்றுவிட்டான் மித்ரன். அவனை நன்கு உணர்ந்தவளாதலால் புன்னகைதான் அரும்பியது மாளவிகாவுக்கு.


அடுத்த இரண்டாவது நாள் ரூபாவுடைய மரணம்தான் ஊடகங்கங்களின் முக்கிய செய்தியாக இருந்தது. அதுவும் மூளைக் காய்ச்சல் என்றே வெளியில் சொல்லப்பட்டது. காரணம் மாளவிகாவோ அக்னிமித்ரனோ இல்லை. அவள் அணியும் உடை முதல் அவள் உண்ணும் உணவு உட்பட, அவள் கலந்துகொள்ளவேண்டிய பொது நிகழ்ச்சிகள் வரை அவளுக்கான அனைத்தையும் தீர்மானிக்கும், அவளை ஒப்பந்தம் செய்திருந்த உலகளாவிய விளம்பர தயாரிப்பு நிறுவனம் மட்டுமே அவளுடைய மரணத்திற்கான காரணத்தையும் முடிவு செய்திருந்தது. அவளுடைய இறுதிக்கட்டம் எனத்ஹ் தெரிந்தே இருந்ததால் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டாள் மாளவிகா.

ஆனால், அவள் அழைத்தால் அந்த அழைப்பை ஏற்றாலும், பதில் பேசாமல் அவளுடைய குரலை மட்டும் கேட்பது, அவளுடைய குறுந்தகவல்களைப் படித்தாலும் பதில் போடாமல் இருப்பது, அவள் அங்கே செல்லும் காரணத்தால் அவர்களுடைய அலுவலகத்தின் பக்கமே தலை வைத்துகூட படுக்காமல் இருப்பது, கண்காணிப்பு கேமரா வழியாக அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்து பெருமூச்சு விடுவது என அவளுடைய தித்திக்கும் தீயனவன் மட்டும் அவளிடம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தான் அவனுடைய கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை அவளுக்கு உணர்த்த.


***


ரூபா இறந்து மேலும் இரண்டு தினங்கள் ஆகியிருந்தது.


அலுவலகம் மாளவிகா, அவர்களுடைய ஓய்வு பகுதியில் இருக்கும் பால்கனியில் கையில் காஃபி குவளையை ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தாள். பார்வை சாலையையே வெறித்திருந்தது. கணவனை எண்ணி அவளது கண்களில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு!


அதை கொஞ்சமும் பொய்யாக்காமல் கதவைத் திறந்துகொண்டு அங்கே வந்தான் அக்னிமித்ரன். அவனை உணர்ந்தவள், உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் திருப்பி, அமைதியாக அங்கே இருந்த மற்றுமொரு காஃபி குவளையை எடுத்து அவனிடம் நீட்ட, "அப்படினா... நான் வருவேன்னு அவ்வளவு நம்பிக்கை இல்ல... ம்ம்" எனக் கோபமாகவே கேட்டான் அவன்.


அன்று கொஞ்சம் சீக்கிரமே அலுவலகத்திற்கு வந்துவிட்டாள் அவள். நேராக அலுவலகம் செல்லாமல் அவர்களுக்கான பிரத்தியேக தளத்தில் அவள் இறங்கிக்கொள்ள, அதுவும் மின்தூக்கியிலிருந்து வெளியேறும்போது அவள் கால் வேறு சற்று இடற ஒரு நொடி தடுமாறி பின் தன்னை சரி செய்துகொண்டாள்.


அங்கே உள்ளே சென்று நீண்டநேரம் ஆகியும் அங்கிருந்து அவள் வெளியில் வராமல் போக, அங்கே கண்காணிப்பு கேமராக்கள் வேறு கிடையாது என்பதால் பதறிப்போய் அங்கே வந்தான் அவன்.


அப்படி இருக்க, இதுபோல் சாவகாசமாக அவள் காஃபியை நீட்டினாள் என்றால்? அதனால் வந்த கோபம்தான் அது.