En Manatahai Aala Vaa-16
Updated: Oct 10, 2022
மித்ர-விகா-16
ஹெலன் கெல்லர்... மித்ரனுக்கு அவரைப் பற்றித் தெரியும்தான்.
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். அவரது இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு ஒரே நேரத்தில் தனது பார்வையையும், கேட்கும் திறனையும் இழந்தவர்.
அவரது எட்டாவது வயது வரை அவரது உலகம் ஒலியும் ஒளியும் அற்றதாக சூனியமாகத்தான் இருந்தது. பிடிவாதமும் கோபமுமாகவே அவரது நாட்கள் கடந்தன.
கண் மற்றும் காது இவை இரண்டும்தான் அறிவின் வாயில்கள் எனப்படும் ஐம்பொறிகளின் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அந்தக் குறையையே வெற்றிக் கொள்ளச்செய்து இருண்டிருந்த அவரது வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்தான் ஆன் சல்லிவன்.
ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்றுக்கொடுக்க அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் மூலம் அவர் வாழ்க்கைக்குள் நுழைந்த பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆசிரியை அவர்.
வெறும் தொடு உணர்ச்சி மூலமே கல்வியை ஹெலன் கெல்லருக்குப் பயிற்றுவித்து தன் இறுதி நாட்கள் வரை அவருக்குத் துணையாக இருந்து அவரை உலக மேடையில் தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர்.
அவரை அன்புவுக்கு உவமையாகச் சொல்கிறாள் என்றால், அதுவும் அவளை விட இரண்டு வயது சிறியவனை, அவனால் அதன் காரணத்தை உணர முடியவில்லை.
சிந்தனை வயப்பட்டவனின் கோபம் சொல்லாமல் கொள்ளாமல் மலையேறியிருந்தது. சற்று முன் நடந்ததைத் தவிர்த்து காலை முதல் அவளிடம் அவன் காண்பித்த கரிசனம் ஒன்றும் பொய்யில்லையே.
ஆனால் அவள் அதையும் கூட அவளை வீழ்த்த அவன் எடுத்திருக்கும் ஆயுதம் என்றல்லவா கருதுகிறாள்! இவளிடம் மட்டும் இந்தக் கரிசனம் ஏன் வந்து ஒட்டிக்கொள்கிறது?
வேறு யாரிடமும் இவன் இந்த அளவுக்கு இறங்கிப் போனதே இல்லையே! இவளிடம் மட்டும் ஏன் இப்படி?
பல கேள்விகள் மண்டையைத் துளைத்துக்கொண்டிருக்க, அவனது சிந்தனையை, "ஹலோ அப்பா?" என்ற அவளது குரல் கலைத்தது.
"இல்ல… நான் ஆஃபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன். மிஸ்டர் அக்னிமித்ரன் என்னை ட்ராப் பன்றேன்னு சொன்னதால அவர் கூடத்தான் வந்துட்டு இருக்கேன்பா” என அவள் சொல்லவும் அதற்கு அவர் எதோ கேட்க, "இல்லப்பா, நான் வேணாம்னுதான் பார்த்தேன். அவர் கம்பல் பண்ணதாலதான்' என உள்ளே போன குரலில் இழுத்தாள் அவள்.
அவளது அந்த வெளிப்படையான பேச்சைக் கேட்டு அவனது புருவம் மேலே உயர்ந்தது. அதற்கு அவர் ஏதோ சொல்ல, "சரிப்பா" என்றவள், “எனக்கு சாமிக்கண்ணு அய்யாவைப் பார்கணும் போல இருக்கு. தாம்பரத்துல இறங்கி பஸ் பிடிச்சுப் போயிட்டு வரட்டுமா?" என அவள் அனுமதி கேட்க, எதிர் முனையில் அவர் சொன்ன பதிலுக்கு, "அவ்ளோதானப்பா... ஒரு செவன்... செவன் தர்டிக்கு வீட்டுக்கு வந்துடறேன் ஓகேவா. அம்மா கிட்ட கொஞ்சம் சொல்லிடுங்க என்ன" என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அவன் புறமாகத் திரும்பி, "இனிமேல் என்னை உங்க கூட கார்ல வர சொல்லி கம்பல் பண்ணாதீங்க. அப்பா சங்கடப்படறாங்க" என்று சொல்லிவிட்டு, அவன் ஏதாவது சொல்வான் என அவனுடைய முகத்தைப் பார்க்க, அவன் ஒரு அலட்சிய பாவனையைக் காண்பிக்க, 'கோவிச்சுகிட்டியா, கோவிச்சிக்கோ… கோவிச்சிக்கோ' என மனதிற்குள்ளேயே நக்கல் செய்தவள்,"என்னை தாம்பரத்துல ட்ராப் பண்ணிடுங்க போதும்" என்று தன் கைப்பேசியில் ஏதோ 'டைப்' செய்யத் தொடங்கிவிட்டாள்.
‘வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்’ என்ற அவ்வையின் மொழிக்கேற்ப ஏனோ அவள் மேல் அவனால் கோபம் கொள்ளவே இயலவில்லை. மாறாகக் கோபத்தை எதிர்நோக்கி அவள் பார்த்த பார்வையில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு.
ஏதாவது பதில் பேசினால் சிரித்துவிடுவோமோ என்ற எண்ணத்தில்தான் வாய் மூடி மௌனித்திருந்தான்.
இருந்தாலும் 'இவ்ளோ தெனாவெட்டாடி உனக்கு' என்ற எண்ணம் எழ, தன் கைப்பேசியை கார் ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து, அதிலிருந்த சிறிய திரையை உயிர்ப்பிக்க அதில், 'ஒரு முறை வந்து பார்த்தாயா?' என அவளது பிம்பம் விழி விரிக்க, இங்கே அவளது விழியே தெறித்துவிடும் போல் அவனை முறைத்தாள் மாளவிகா.
"ஹேய். யூட்யூப் வீடியோம்மா. என் பிளே லிஸ்ட்ல இருக்கு. அதான் போட்ட உடனே வந்துடுச்சு" என்றான் அவன் கிண்டல் தொனிக்க.
“இதைத் தவிர உங்களுக்கு உருப்படியா வேற வேலையே இல்லையா" என அவள் கடுகடுக்க, "அஃப்கோர்ஸ், என்னோட முதல் வேலையே இதுதான். ஐ மீன் உன்னை கரெக்ட் பண்றது" என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
"உங்க கூட பேசறது கிரிமினல் வேஸ்ட்" என்ற மாளவிகா வெளிப்புறமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
"எதுக்குமே கேப் கொடுக்காம... அசறாம திருப்பி அடிக்கற பாரு நீ. உன்னை மாதிரி கேடி இதைச் சொல்லக் கூடாது" என அவன் கிண்டலுடன் மொழிய வேடிக்கை பார்ப்பதை சாக்காய் வைத்து புன்னகைத்துக்கொண்டாள். அதை அந்த கார் ஜன்னலின் கண்ணாடி நன்றாகவே காட்டிக்கொடுத்துவிட, அவளது புன்னகை அவனையும் தொற்றிக்கொண்டது.
அது நண்பகல் வேளை என்பதினால் மிதமான போக்குவரத்தே இருக்க, சீக்கிரமே அவர்கள் தாம்பரத்தை நெருங்கவும், "நீ இப்ப எங்க போகணும் சொல்லு. நான் அங்கேயே உன்னை ட்ராப் பண்றேன்" என்றானவன், தப்பிக்க அவளுக்குக் கொஞ்சம் கூட வாய்ப்பே கொடுக்காமல்.
"ஐயோ... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இதெல்லாம் தேவையில்லாத வேல" என அவள் பதற, " என்னை என்ன, உடம்பு சரியில்லாத பொண்ணைக் கூட்டிட்டு வந்து இப்படி நடு ரோட்டுல விட்டுட்டு போறவன்னு நினைச்சியா? வேண்டாம்னா சொல்லு, உங்க கடைக்கு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றேன். நீ வீட்டுக்குப் போ" எனப் பிடிவாதமாகச் சொன்னான் அவன்.
அங்கிருந்துகூட அவள் போகலாம்தான். ஆனால் அவள் அங்கே போய் இறங்கி, அவளுடைய அப்பாவின் கண்களில் சிக்கிவிட்டாள் என்றால் மனம் மாறி அவளை வீட்டிற்குப் போய் ஓய்வெடுக்கச் சொன்னாலும் சொல்லிவிடுவார். வந்தது வந்தாகிவிட்டது. அலட்டிக்கொள்ளாமல் இவனுடன் காரிலேயே போய் இறங்கிக்கொள்வதே மேல் என்று தோன்றிவிட்டது அவளுக்கு.
எப்படியும் அவன் அவளை வாயிலிலேயே இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுவான் என்றே எண்ணினாள். இருந்தாலும், "உங்களுக்கு ஏன் தேவையில்லாத அலைச்சல்" என அவள் இழுக்க, "உன் கூட ஸ்பென்ட் பண்ற டைம் ஒண்ணும் எனக்கு தேவையில்லாதது இல்ல லயன்னஸ்! இன்னும் சொல்லப்போனா ரியலி ஐ என்ஜாய் திஸ். எங்க போகணும்னு மட்டும் சொல்லு" என்றான் கிறக்கமாக.
அதில் கடுப்பாகி, "ப்ச்" எனச் சலித்துக்கொண்டவளைக் கொஞ்சம் கூட இடைவிடாமல் ரசித்து வைத்தவன், "சரி ஓகே... சொல்லு" என்று சொல்லவும், "மணிமங்கலம் போகணும்" என்றாள் மாளவிகா.
தாம்பரத்திலிருந்து திரும்பி கொஞ்சம் தொலைவு சென்றதுமே நகரத்தின் சூழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்னும் கூட மிச்சம் மீதம் இருக்கும் பசுமை சூழ் கிராமப்புறத்தின் வனப்பை அனுபவித்தபடி அவர்கள் வாகனம் சென்றது.
அந்தச் சூழலின் உள்ளுக்குள்ளே செல்ல செல்ல அங்கே குடிகொண்டிருந்த இருக்கமெல்லாம் தளர்ந்து மென்மையைத் தத்தெடுத்திருந்தது மாளவிகாவின் முகம். அவளது அந்தத் தெளிவடைந்த முகத்தைப் பார்த்ததும் அவனுக்குமே மனதிற்குள் ஏதோ ஒரு அமைதி வந்து ஒட்டிக்கொண்டதுபோல் தோன்றியது.
சென்னையின் மிக முக்கிய ஏரிகளுள் ஒன்றான மணிமங்கலம் ஏரியை வாகனம் கடக்கவும் அந்த ஊருக்குள் அவள் செல்ல வேண்டிய இடத்தின் வழியைச் சொன்னாள் மாளவிகா. தொழில் வளர்ச்சியின் அறிகுறிகளை தனக்குள் வலிய புகுத்திக்கொண்டிருந்தாலும் கிராமத்தின் மணம் மாறாமல் ரம்மியமாகத்தான் இருந்தது அந்த ஊர்.
"லெஃப்ட்ல திரும்பினா 'கண்ணம்மா கலைக் கூடம்'னு சின்ன போர்ட் இருக்கும். அங்க நிறுத்துங்க" என்று மாளவிகா சொல்ல, அவள் சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்தினான் அவன்.
பழைய கிராமத்து வீடு ஒன்றின் முகப்பில், கவனமாகப் பார்த்தால் மட்டுமே கண்களில் படும்படி 'கண்ணம்மா கலைக் கூடம்' என்ற பெயர் பொறித்த அந்த சிறிய பலகைப் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த வீட்டின் பக்கவாட்டில் கம்பியால் ஆன வேலி அமைக்கப்பட்டிருக்க, உள்ளே ஒரு வைக்கோல் போர் இருக்க அதன் அருகில் ஒரு ட்ராக்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மர ரீப்பர்களை இணைத்து செய்யப்பட்ட கேட் ஒன்று அந்த வேலியில் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் பின்கட்டிற்குச் செல்ல ஏதுவாக சாணம் தெளிக்கப்பட்டுத் தூய்மையாக ஒரு பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அந்தச் சூழல் மனதிற்குப் பிடிபடாமல், "இங்க டான்ஸ் ம்யூசிக் ஏதாவது கத்துக்கறியா?" என அவன் கேட்க, 'இல்லை' என்பதுபோல் தலை அசைத்துவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து இறங்கியவள், "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அந்த வீட்டிற்குள் போக, அவளைப் பிரியவே மனம் இல்லாதவன் போல தன் வாகனத்தைத் திருப்பினான் மித்ரன்.
விவசாயியின் வீட்டிற்கென்றே ஒரு பிரத்தியேக மணம் இருக்கும். அந்தப் புழுக்கிய நெல்மணிகளின் வாசம் மூக்கைத் துளைக்க, அந்த வீட்டிற்குள் நுழைத்தவள், "கண்ணம்மா... எங்க இருக்கீங்க?" என குரல் கொடுக்க, "ஏய்... மாலு கண்ணு... வா வா.. நீ என்ன இந்த நேரத்துல?" என ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டார் ஐம்பது-ஐம்பத்தைந்து வயதிருக்கும் ஒரு பெண்மணி.
"ஏன் கண்ணம்மா... மெசேஜ் பண்ணியிருதேனே. அய்யா உங்க கிட்ட சொல்லலியா?" எனக் கேட்டாள் அவள்.
"இல்லியே, நானு ரைஸ் மில்லுக்குப் போயிட்டு இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். அதனால இருக்கும்" என்றவர், "அய்யா பின்னாலதான் இருக்காரு. நீ போ. நான் இந்தா வந்துடறேன்" என்று சொல்லி அவளை அனுப்ப, புழக்கடை கதவைத் திறந்து கொண்டு பதியம் போட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டிருக்கும் மல்லியும் ரோஜாவுமாக இருந்த செடிகளைக் கொண்ட சிறிய தோட்டத்தைக் கடந்து, அங்கிருந்த மைதானத்தின் மூலையில் அமைந்திருந்த தகர கொட்டகையை நோக்கிப் போனாள் அவள்.
சிலம்பம் போன்ற போர்க் கலைகளைப் பயிற்றுவிக்கும் கூடம் அது. வயது பேதமின்றி சிறுவர் முதல் இளைஞர் வரை கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது பேர் அங்கே வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தர வயதிலிருந்த சிலர் அவர்களுக்குப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டே நிதானமாக நடந்து வந்தவள், அங்கே கயிற்றுக் கட்டிலில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த சாமிக்கண்ணு அய்யாவைப் பார்த்தவுடன், "அய்யா, நான் வந்துட்டேன்" என்று ராகம் போட்டுக்கொண்டு அவரை நோக்கி ஓடினாள்.
"வா பாப்பா... வா வா" என அவளை அவர் உற்சாகமாக வரவேற்க, அவளது குரலைக் கேட்டதும் அங்கே இருந்த மாணவர்களின் கவனம் அவள் பக்கம் திரும்ப எல்லோரும் அவளை நோக்கி ஓடி வந்தனர்.
அவள் அவரை நெருங்குவதற்குள்ளாகவே அவளைச் சூழ்ந்து கொண்டவர்கள், "அக்கா, போன தடவ வந்தப்ப நீ என் கூட பயிற்சி எடுக்கல. இன்னைக்கு என்கூடதான் பயிற்சி சரியா" என ஒரு சிறுவன் கேட்க,
"ஏய்... அடுத்த முறை வரும்போது உன் கூடத்தான் பயிற்சி எடுக்கப் போறேன்னு அக்கா சொல்லி இருக்கு" என்ற மற்றொருவன், "அப்படிதானேக்கா" என அவளைத் துணைக்கு அழைத்தான்.
"சண்டை போடாதீங்க ஏட்டையா. ரெண்டு பேருக்கும் பயிற்சிக் கொடுக்கறேன்" என்றவள் அய்யாவின் அருகில் போய் உட்கார்ந்துகொண்டாள். அதற்குள் அவளுக்கு அருகில் வந்த பொடியன் ஒருவன், கையில் வைத்திருந்த நீளமான சிலம்பத்தைச் சுழற்றி, "அக்கா... எனக்கு இந்த வீச்சு சரியா வரலன்னு சொன்னியே, இப்ப பாரு! கரெக்ட்டா செய்ய கத்துக்கிட்டேன்" என்று சொல்ல,
அவன் கன்னத்தைக் கிள்ளி செல்லம் கொஞ்சியவள், "சூப்பர் டார்லிங், கரெக்ட்டா செய்யறீங்க" என்றாள் வாஞ்சையுடன். அனைத்தையும் பார்த்து பெரிதாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தார் சாமிக்கண்ணு அய்யா.
ஒரு பேரரசியைப் போல அவளை ஒரு கூட்டம் கொண்டாடுவதை வியப்புடன் பார்த்துக்கொண்டே அங்கே வந்தான் அக்னிமித்ரன். 'ஐயோ! இவன் ஏன் இப்ப இங்க வந்தான்?' என அதிர்ந்து விழித்தாள் அவள்.
அவளுக்குப் பதில் சொல்வது போல், "பாப்பா, உன்னோட செல்ஃபோன கார்லயே வெச்சிட்டு வந்துட்டியா? அதைக் கொடுக்கணும்னு வந்தாரு பாப்பா இவரு. உங்க ஆஃபிஸ் எம்.டின்னு சொன்னாரு பாப்பா. வாசலோட அனுப்பினா மரியாதையா இருக்குமா? அதான் இங்கக் கூட்டிட்டு வந்தேன்" என்றார் அவனைத் தொடர்ந்து வந்த கண்ணம்மா.
ஒரு நொடி திகைத்துத்தான் போனாள் மாளவிகா. தன் கவனக்குறைவை எண்ணி நோகத்தான் முடிந்தது அவளால். அவர் அவளைப் பாப்பா... பாப்பா... என விளிக்கவும், யாரும் உணராவண்ணம், அவளை ஒரு கிண்டல் பார்வை பார்த்து பதிலாக அவளது பிரத்தியேக முறைப்பைப் பெற்றுக்கொண்டான் அவன்.
அதில் மித்ரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கேள்வியாக மாளவிகாவை பார்த்து வைத்தார் ஐயா.
அவர் பார்வையின் அர்த்தம் புரிய, "அய்யா, இவரைத் தெரியும் இல்ல. அக்னிமித்ரன். நான் கூட அன்னைக்குச் சொன்னேன் இல்ல" என்று கேட்டுவிட்டு, "என்னை ட்ராப் பண்ண வந்தார்" என்றாள் அவள் சிறு பதட்டத்துடன்.
அவர் அதற்குப் பெரிதாக அலட்டிக்கொண்டதுபோல் தெரியவில்லை என்றாலும், அவள் அப்படிச் சொல்லவும், 'தன்னைப் பற்றி எதைச் சொல்லி வைத்தாளோ இவள்?' எனத் தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு.
அலுவலகத்தில் அவனை முதன்முதலில் சந்தித்த அன்றே தன் மனதை மறைக்காமல் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டாள் அவள் என்பதை அறிந்தால் அவன் என்ன ஆவான்?