top of page

Azhage Sugamaa?! 7

Updated: Mar 27, 2023

முகில்நிலவு 7


"என்ன இவ டாக்டரா?” என அதிர்ந்து, பின், “இருந்தாலும் இருக்கலாம் அண்ணா!" என்ற கதிர், "தெரிஞ்சேதான் இந்த டேப்லெட்டை கன்ஸ்யூம் பண்றா போலிருக்கே" என்று முடித்தான்.


"அவ இவன்னு சொல்லாதன்னு சொன்னேன் இல்ல கதிர். எனக்குக் கொடுக்கற ரெஸ்பெக்ட்ட நீ என் வைஃபா வரபோறவளுக்கும் கொடுக்கணும். இட்ஸ் அன் ஆர்டர்!" என்றான் முகிலன் அழுத்தமாக.


முகிலன் நிலாவிடம் இவ்வளவு தீவிரம் காண்பிக்கவும், அது ஆச்சரியமாக இருந்தது கதிருக்கு.


"ஆர் யூ டேக்கிங் திஸ் ரிலேஷன்ஷிப் வெரி சீரியஸ் அண்ணா!?” எனக் கேட்டான் கதிர். கதிருக்கு முகிலனின் வேலையைப் பற்றித் தெரியும். அதில் அவன் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றி நன்றாகவே தெரியும். அதுபோன்ற வேலைக்கு அவனே கூட சற்றுத் தயங்குவான். ஆனால் முகிலன் அதை மனம் விரும்பியே செய்கிறான்.


சென்னையில் இருக்கும் நாட்கள் அவனுக்கு ஒரு சிறு ஓய்வு போலத்தான். அதுவும் இதை அவன் இரசித்து அனுபவிப்பான். அந்த நேரத்திலும் யாரோ ஒருத்திக்காக அவன் இப்படி ஓடிக்கொண்டிருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை கதிருக்கு.


அதனால்தான் தன் மனதில் இருப்பதை மறைக்காமல், “இவ பார்க்க அழகா இருந்தாலும், கேரக்டர் பத்தி யோசிச்சா நாட் அப் டு த மார்க். ஐ திங்க் ஷீ இஸ் நத்திங் பட் அ ட்ரக் அடிக்ட்" என்றான் தன் விளையாட்டை எல்லாம் கைவிட்டவனாக.


"போதும் கதிர்! இதுக்கு மேல எதுவும் பேசிடாத. அது நம்ம ரெண்டு பேரையுமே அஃபக்ட் பண்ணும்" என்றான் முகிலன்.


"அண்ணா ப்ளீஸ்! எனக்கு யாரோ ஒரு பெண்ணை விட நீங்க ரொம்ப முக்கியம். ஸோ, ஐ கான்ட் அலவ் திஸ்!" மிகத் தீவிரமாகச் சொன்னவன், "நீ யார் என்னை அலவ் பண்ணன்னு மட்டும் கேட்டுடாதீங்க? நான் உடைஞ்சிடுவேன்" என்றான் தொடர்ச்சியாக.


"லூசு மாதிரி உளறாத கதிர். எனக்கு உன்னைத் தெரியும். எனக்கு அவ வேணும்தான். அதே போல நீயும் எனக்கு முக்கியம் டா!" என்றவன், "இதுக்குப் பதில் சொல்லு? உன் வாழ்க்கைல வந்த முதல் பெண் யாரு?" எனக் கேட்டான் முகிலன்.


"ஸ்கூல்ல காலேஜ்ல இப்படி நிறைய பேரை க்ராஸ் பண்ணி வந்திருப்போம் இல்ல? பர்டிகுலரா யாரைக் கேக்கறீங்க?" எனக் கேட்டான் கதிர்.


"உன் லைப்ல வந்த, நீ உணர்ந்த முதல் பெண்!"


"ஆப்வியஸ்லி அம்மாதான!"


"எக்ஸாக்ட்லி, பட் அம்மாவை விட உனக்குப் பிடிச்ச ஒருத்தங்கள சொல்லு!"


"ஸ்ரீமணி ஆன்ட்டி! உங்க அம்மா!"


பட்டென்று பதில் வந்தது கதிரிடமிருந்து.


"ஏன்"

முகிலன் கேட்க,


"ஏன்னு உங்களுக்கு தெரியாதாண்ணா? என்ன இருந்தாலும், எங்கம்மாவுக்கு அவங்க ஃப்ரண்ஸ், பார்ட்டீஸ், அவங்களோட சோஷியல் ஸ்டேட்டஸ், பந்தா இதெல்லாம்தான ப்ரிஃபரன்ஸ். நாங்க செகண்டரிதான.


பட் ஸ்ரீ ஆன்ட்டி அப்படி இல்லையே. அவங்கதான் ஒரு பர்ஃபெக்ட் அம்மா பிகர். லவ் அண்ட் கேரிங். உங்களோட சேர்த்து அவங்களோட அன்பு எங்களுக்கும் கிடைச்சுதே. அதை எப்படி நினைக்காம இருக்க முடியும்?" என நெகிழ்ந்தான் கதிர்.


"அதேதான்டா இதுவும்! நிலாவ பார்க்கும்போது எங்க அம்மா மாதிரி ஒரு பொண்ணுங்கற ஃபீல்தான் வருது. நான் அனுபவிச்ச ப்ரிவிலேஜ் என் பிள்ளைகளுக்கு அவளால மட்டும்தான் கொடுக்க முடியும்னு எனக்கு ஒரு உள்ளுணர்வு. சாரி டு சே திஸ், உங்க அம்மா மாதிரி மைன்ட் செட் இருக்கற பொண்ணுங்களதான நாம நிறைய பார்த்துட்டு இருக்கோம்! அது தப்புன்னெல்லாம் சொல்ல மாட்டேன். அவங்கள பொறுத்தவரைக்கும் இதெல்லாம் சரியாகக் கூட இருக்கலாம். பட் நம்ம மனசு எங்க அம்மா மாதிரி ஒருத்தியதான எதிர்பார்த்து ஏங்குது. முதல் முறை அவளை நான் பார்த்த போதே இந்த ஃபீல் எனக்கு வந்துடுச்சு கதிர். எந்தக் காரணத்துக்காகவும் என்னால இதை மாத்திக்க முடியாது" என்று விளக்கமாகச் சொன்னான் முகிலன்.


மனம் கொஞ்சம் தெளிந்தது கதிருக்கு.


"பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா! ஃபிக்ஸ் ஆகிட்டிங்களா அண்ணா! அப்பறம் பொறாமைல இந்த முனியம்மா, குப்பம்மா இவங்கல்லாம் நிலா அண்ணீஈஈஈ கிட்ட சண்டைக்குக் கிளம்பினா என்ன ஆகும்?" எனத் தனது வழக்கமான பாணியில் கிண்டலுடன் முகிலனைக் கேட்டான் கதிர்.


"எல்லாருக்கும் உன்னோட மும்பை அட்ரஸ் கொடுத்து, அங்க அனுப்பி வெச்சுடறேன், நீ கவலைப்படாத!" எனப் பதில் கொடுத்தவன், "ஏய் அரட்டை! நீ ஒரு ஹேக்கர்தான? எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா!" எனக் கேட்டான் முகிலன்.


"அண்ணா ஜஸ்ட், ஹேக்கர்ன்னு சொல்லாதீங்க. எத்திக்கல் ஹேக்கர்னு சொல்லுங்க! ஆல் லீகல் ஆக்டிவிடீஸ் ஒன்லி!" என்றான் கதிர்.


"என் கிட்டயே சும்மா படம் காமிக்காத!" என்றவன், "இவளோட கைரேகை வெச்சு, ஆதார் டீடெயில்ஸ் எடுத்து குடுடா! இப்பவே! ப்ரொசீஜரா போனா கொஞ்சம் டைம் எடுக்கும். எனக்குப் பொறுமை இல்ல!" என்றான் முகிலன்.


வெகு தீவிரமாகச் சொல்லும் பாவனையில், "கேக்கறது நீங்கங்கறதனால செய்யறேன், பட் நான் அவன் இல்லை!" என்றான் கதிர் சிரித்துக்கொண்டே.


அதன் பிறகு, அவனுடைய அதி நவீன தொடு திரை மடிக்கணினியை உயிர்ப்பித்தவன், மயக்க நிலையிலிருந்த நிலாவுடைய கையைப் பற்றி, விரல் ரேகையைத் திரையில் பதிய வைத்து, சில நிமிடங்களுக்குள்ளாகவே அவளுடைய ஆதார் தகவல்களை எடுத்துவிட்டான்.


அவள் ஜீ.கே மாமாவிடம் சொல்லியிருந்தது போல், அவளுடைய நிரந்தர முகவரி, புது தில்லியில் இருந்தது. அவளுடைய தந்தையின் பெயர், 'சிவராமகிருஷ்ணன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


பின்பு, ப்ளூ டூத் இணைப்பு மூலம் கைப்பேசியில் பேசியவாறே வாகனத்தைச் செலுத்தினான் முகிலன்.


ஜெய் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இரவு உணவைக் கதிரை வற்புறுத்திச் சாப்பிட வைத்தவனுக்கு, நிலாவின் நிலையை எண்ணிப் பசி கூட பின்னுக்குச் சென்றிருந்தது.


***


நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் அவர்களது குடியிருப்புக்குள் நுழைந்தது முகிலனின் வாகனம்.


அது வரையிலும் கூட அவளது மயக்கம் தெளிந்தபாடில்லை. அவளது கன்னத்தில் தட்டி எழுப்பியும் கூட கண் விழிக்கவில்லை நிலா.


நிலாவின் கைப்பையிலிருந்து அவள் வீட்டு சாவியை எடுத்து, விரலில் மாட்டிக்கொண்டவன், "கதிர் நீ காரைப் பார்க் பண்ணிட்டு நம்ம வீட்டுக்குப் போ. லக்கேஜ் எல்லாம் காலையில் எடுத்துக்கலாம்!" என்று சொல்லி, வீட்டின் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் நிலாவைக் கைகளில் அள்ளிக்கொண்டு, மின்தூக்கியை நோக்கிப் போக, குளறலாக, உளறலாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.


வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் மிதந்து கொண்டிருக்க, அவள் என்ன சொல்கிறாள் என யோசித்தவாறு அந்த வார்த்தைகளைக் கோர்க்க முயன்றுகொண்டிருந்தான் அவன்.


ஐந்தாவது தளத்தில் அவளுடைய வீடு வந்து சேரும் வரையிலும் அதுவே தொடர்ந்தது. அதற்குள்ளாகவே, 'முசூரி; டேராடூன்’ என்று மூன்று நான்கு முறை சொல்லியிருந்தாள்.


அவளுடைய வீட்டை அடைந்து, அவளை ஏந்தி இருந்த கையாலேயே ஒருவராக முயன்று கதவையும் திறந்தான் முகிலன்.


பின்பு அவளை அவளுடைய அறைக்குள், கட்டிலில் படுக்க வைத்தவன், போர்வையால் போர்த்திவிட்டு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, "நான் உங்களை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கும்போதெல்லாம் வராம, இப்ப வந்து எதுக்காக என்னைக் கொல்றீங்க?" எனக் கோர்வையாகப் பிதற்றினாள் நிலா.


அதுவும், அந்த வார்த்தைகள் அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்படியும் இருக்கவும், 'என்ன சொல்றா இவ? யாரைச் சொல்றா? என்னைத்தானா? முசூரில 'ஃபௌண்டேஷன் ட்ரைனிங்ல இருந்த போதே இவளை நாம பார்த்திருக்கோமா?' என அவன் மனதைத் துளைத்துக் கேள்விகள் முளைக்க, விதிர்விதிர்த்துதான் போனான் முகிலன்.


எவ்வளவு யோசித்தும் அவளை அதற்கு முன்பே பார்த்தது போன்று நினைவில்லை.


அதுவும் ஐ.பி.எஸ் பயிற்சியின் ஆரம்ப நிலையிலிருந்த சமயம், எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், இன்று இருக்கும் அளவிற்கெல்லாம் அவனுக்கு இருந்ததில்லை.


ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த முகத்தை நினைவில் வைப்பது, குரல்களை ஆராய்வது, பிறர் பேசும் வார்த்தைகளை, வார்த்தைகளுக்கு இடைப்பட்ட மௌனங்களை, அந்த மௌனம் நீடிக்கும் நொடிகளைப் படிக்கும் வல்லமை, அன்று அவனுக்கு இருந்ததில்லை.


அவளுடைய உளறல்களை உணர முயன்றவாறு, குழப்பத்துடன் அவளுடைய வீட்டின் கதவைப் பூட்ட, அதே நேரம் அவனுடைய கைப்பேசி ஒலிக்கவும், அழைப்பை ஏற்று, "சொல்லுடா மச்சான்!" என்றவாறு, தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றான் முகிலன்.


எடுத்த எடுப்பில், "நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடா!" என்றான் ஜெய் கோபமாக.


"பாதி இராத்திரி ஃபோன் பண்ணி, கேக்கறான் பாரு கேள்வி! சரக்கடிச்சிருக்கியா எரும!" எனக் கேட்டான் முகிலன், நக்கலுடன்.


"டேய்! எட்டு, ஒம்போது வருஷமா எப்படிடா மாமா உன்னால இதை என் கிட்ட இருந்து மறைக்க முடிஞ்சுது? இன்னைக்குக் கூட நீ ஓப்பனா எதையும் சொல்லலையேடா!" என்றான் ஜெய் வருத்தத்துடன்.


"டேய்! சாத்தியமா முடிலடா மச்சான்! ஏற்கனவே கடுப்புல இருக்கேன். இதே மாதிரி பேசிட்டே போனேன்னு வை! மறுபடியும் மதுரைக்கே வந்து, தூக்கிப்போட்டு மிதிப்பேன் ஜாக்கிரதை!" என எக்கச்சக்க எரிச்சலுடன் முகிலன் கொதிக்க,


"அந்த நிலா பொண்ணு! அதுதாண்டா உன் ஆளு! அவளை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு காலைல இருந்து யோசிச்சிட்டே இருந்தேன்டா மாமா. அவங்க நம்ம கூட லால் பகதூர் சாஸ்த்ரி அகாடமில ட்ரைனிங் எடுத்தவங்கதான? அங்க வெச்சு பார்த்த மாதிரிதாண்டா ஞாபகம்! ஐ.ஏ.எஸ் டி.ஓவா (ட்ரைனி ஆஃபீசர்) இல்ல ஐ.எஃப்.எஸா டா?" எனக் கேட்ட ஜெய், "அப்ப இருந்தே உங்களுக்குள்ள ஸம்திங் ஸம்திங்தான?" என முடித்தான்.


"கொலையே செஞ்சிருவேன் பார்த்துக்கோ! நான் அவளைப் பார்த்து, முழுசா இன்னும் பத்து நாள் கூட ஆகல மச்சான்! உன் மாமியார் மேல சத்தியமா சொல்றேண்டா!" என்றான் முகிலன், அழுதுவிடுபவன் போல.


"ஏய் சீ! சத்தியம் பண்றான் பாரு, அதுவும் என் மாமியார் மேல! என் பொண்டாட்டி மட்டும் கேட்டா, நம்ம ரெண்டு பேரையுமே போட்டுத் தள்ளிருவா!" என்றவன், "அப்ப உண்மையாத்தான் சொல்றியா! நான்தான் குழம்பிட்டேனா?" என ஜெய் கேட்க, "அடங்குடா எரும! நாளைக்குப் பேசறேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் முகிலன்.


அதற்குள் கதிர் வீட்டைத் திறந்து, அங்கே காத்திருக்கவும், பயண களைப்பு தீர வெதுவெதுப்பான நீரில் குளித்து, அவசரகதியில் உடை மாற்றி, அவளுடைய வீட்டிற்கே மறுபடியும் வந்தான் முகிலன்.


அங்கே வரவேற்பறை சோஃபாவில் உடலைக் குறுக்கிப் படுத்தவன், உறங்கியே போனான்.


அடுத்த நாள் காலை, ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த சூரியன் தன் கிரணங்களால் சுளீரெனச் சுட்டுக்கொண்டிருப்பதைக் கூட உணராமல், உறங்கிக்கொண்டிருந்தவனை, வீட்டின் அழைப்பு மணியின் ஒலி எழுப்பியது.


மிகவும் முயன்று அவன் இமைகளைப் பிரிக்க, கதவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள் நிலா.


சீக்கிரமே கண்விழித்துவிட்டாள் போலும். குளித்து, உடை மாற்றி, அவள் கொஞ்சம் தெளிவாகவே இருப்பது போல் தோன்றியது.


அவனது கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்க்க, மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்து.


அவள் சென்று கதவைத் திறக்கவும், எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காண்பிக்காமல், மௌனமாக அவளைக் கடந்து உள்ளே நுழைந்தவரைப் பார்த்து உறைந்துபோய் நின்றாள் நிலா.


நேராக முகிலனை நோக்கி வந்த அந்த மனிதர், "என்ன லவ்வா! கல்யாணமே செஞ்சிட்டீங்களா? ஒரே வீட்டுல ஒண்ணா இருக்கீங்க!" எனக் கேட்டர் அதிர்ச்சியுடன்.


"அப்படி செஞ்சிருந்தா என்ன தப்பு மிஸ்டர் சிவராமகிருஷ்ணன்?" என்றான் முகிலன் கடினமான குரலில்.


"உங்க பொண்ணு எங்க இருக்கா? என்ன மாதிரி நிலைமையில இருக்கா? எதையும் கவனிக்காம, நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்துட்டு இருக்கீங்க?" என அவரிடம் காய்ந்தவன், "நான் மட்டும் இல்லனா, உங்க பொண்ணு செத்து ரெண்டு நாள் ஆகியிருக்கும். அதுவும் அவ செத்த செய்தி கூட உங்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும்!" என்றான் உச்சபட்ச கோபத்துடன்.


அதைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் தொப்பென்று சோஃபாவில் சரிந்தார் அவர். அவரைப் பார்க்க அவனுக்கே கொஞ்சம் பரிதாபமாகிப்போனது.


***


நிலாவின் தில்லி முகவரியைக் கண்டுபிடித்தவுடன், அவளுடைய அப்பாவின் கைப்பேசி எண்ணையும் எளிதாக எடுத்துக் கொடுத்துவிட்டான் கதிர்.


நொடியும் தாமதிக்காமல் அவரை அழைத்தவன், தன் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, "உங்க பொண்ணு இப்ப என் கூடத்தான் இருக்கா! அவளை உருப்படியா பார்க்கணும் எண்ணம் இருந்தா, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கிளம்பி இங்க வாங்க! அட்ரஸ் நான் மெசேஜ் பண்றேன்!" என்றான்.


அவளது உடல்நிலையைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக்கொண்டு அவன் அப்படிச் சொல்ல, எதிர்முனையில் இருந்தவருக்கோ, அவன் ஏதோ அவளைக் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்ற புரிதல் உண்டானது.


"ஐயோ! நீங்க அவளை ஒண்ணும் செஞ்சுடாதீங்க. நான் சீக்கிரம் அங்க வரேன்!" என்று பதறி, சிவராமன் அழைப்பைத் துண்டிக்க,


'நான் அவளை என்ன செய்ய போறேன்! அவதான் என்னை வெச்சு செஞ்சிட்டு இருக்கா' என்றுதான் மனதில் எண்ணிக்கொண்டான் அவர் என்ன மனநிலையில் இருந்து சொல்கிறார் என்பது புரியாமல்.


அந்த நள்ளிரவு நேரத்தில், யாரைத் தொடர்பு கொள்ளுவது என்பது கூட புரியாமல், காவல்துறைக்கும் செல்ல துணிவின்றி அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு வந்துவிட்டார் சிவராமகிருஷ்ணன்.


வெகு இயல்பாக நிலாவை அங்கே காணவும், அதுவும் ஒரே வீட்டிற்குள் அவளுடன் முகிலனும் இருக்கவும், அதுவரை இருந்த மனநிலை மாறி, வேறுவிதமாக எண்ணிவிட்டவர் அவனிடம் அவ்வாறு கேட்கவும் செய்தார்.


மகளை இந்த நிலையில் இப்படி விட்டுவிட்டாரே என்ற மனத்தாங்கலில் பதிலுக்கு அவனும் அப்படி பேசிவிட்டான்.


பின்பு நிலை உணர்ந்து, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவனாக, அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்த நிலாவிடம், "காஃபீ எடுத்துட்டு வா!" என மிரட்டலாகச் சொன்னவன், அவள் அடுக்களைக்குள் சென்றதும், முழுவதையும் சொல்லாமல் அவள் மாத்திரை எடுப்பதை மட்டும் சொல்லி, அவள் தற்கொலைக்கு முயன்றதையும் சொல்லி முடித்தான் முகிலன்.


அதனைக் கேட்ட பிறகு, பேச நாவே எழவில்லை நிலாவின் தந்தைக்கு. நிலா காஃபியைக் கொண்டு வரவும், அந்த நேரத்தில் அவருக்கு அது தேவையாக இருக்க, மௌனமாக வாங்கி அதைப் பருகத்தொடங்கினார்.


தானும் ஒரு கோப்பையை எடுத்து, ஒரு மிடறு காஃபியைப் பருகியவாறு, "இவர் யாருன்னாவது உனக்குத் தெரியுதா! இல்ல அதுவும் இல்லையா?" என அவன் கேட்க, மௌனமாகத் தலையை ஆட்டினாள் நிலா.


"அப்படினா சொல்லு! இந்த வீட்டுல உனக்கு என்ன வேலை?" என அவன் அடுத்த கேள்விக்குத் தாவ, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மணிகள் உருண்டன. அவசரமாக அவளுடைய கைப்பையைத் தேடியவள், அது அங்கே இல்லை என்பது புரிய, அவளுடைய படுக்கை அறை நோக்கிச் செல்ல,


அவளை முந்திக்கொண்டு போய், கதவைத் திறக்க விடாமல் அவளைத் தடுத்தவன், "என்ன மாத்திரை போட்டுக்க போறியா? கொன்னுடுவேன் கொன்னு!" என அவளை மிரட்டினான்.


"ப்ளீஸ்! ப்ளீஸ்! என்னால மாத்திரை போடாம இருக்கவே முடியாது! ப்ளீஸ்!" எனக் கெஞ்சத்தொடங்கினாள் நிலா!


அவனே ஒரு மாத்திரையை எடுத்து, பாதியாக உடைத்து, அவளுக்குக் கொடுத்து வற்புறுத்தி மாமி அனுப்பிய உணவையும் சாப்பிடவைத்தான்.


முடித்ததும் அவளுடைய அறையில் போய் படுத்துவிட்டாள் நிலா. மகளின் அந்த நிலையைப் பார்த்து மனம் வெதும்பினார் சிவராமன்.


***


புது தில்லி ஜனாதிபதி மாளிகையில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் சிவராமகிருஷ்ணன். அவரது மனைவி உமா அங்கேயே ஒரு பிரபல தனியார் பள்ளியில் வேலை செய்கிறார்.


அவர்களுடைய மூத்த மகள் நிலவழகி. அவளுக்கு அடுத்து ஒரு மகன், மதியழகன். அவன் இப்பொழுது வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறான்.


நிலா, மருத்துவம் படிக்க வேண்டும் என்பதைத் தீவிர இலட்சியமாகக் கொண்டிருக்கவும், டேராடூனில் இடம் கிடைக்க, எம்.பி.பி.எஸ் படித்து முடித்தாள்.


அதன் பின் வீட்டில் அவர்கள் திருமணப் பேச்சை எடுக்கவும், முற்றிலுமாக அதை மறுத்துவிட்டு, பிடிவாதம் பிடித்து, எம்.எஸ் ஜெனரல் சர்ஜரியும் முடித்தாள்.


அவள் எம்.எஸ் முடித்ததுமே திருமணம் செய்து விடும் எண்ணத்தில், சிவராமன் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கினார். ஆனால் மேற்கொண்டு நியூரோ சர்ஜரியில் சிறப்பு மேற்படிப்பை முடித்த பின்தான் திருமணம் என்பதில் தீவிரமாக இருந்த நிலா, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பிஹெச் படிப்பிற்கு இடம் கிடைக்கவும், பிடிவாதம் பிடித்து அதிலும் சேர்ந்திருந்தாள்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்களால், தலைநகர் முழுதும் பரபரப்பாக இருந்த நிலையில் சிவராமன் வீட்டிற்குக் கூட செல்ல முடியாமல், வேலையில் மூழ்கி இருந்த சமயம், ஏதோ காரணத்திற்காக நிலா அவரைக் கைப்பேசியில் தொடர்புகொள்ளத் தொடர்ந்து முயன்றிருக்க, அவளிடம் பேசவே இயலாமல் போனது.


மூன்று தினங்களுக்குப் பிறகு நிலைமை சீரானவுடன், மகளைக் கைப்பேசியில் அழைத்து அவர் காரணத்தைக் கேட்கவும், 'பெரிதாக ஒன்றும் இல்லை' என்று சொல்லிவிட்டாள்.


அதன் பின் எப்பொழுதும் போல, தினமும் இரவில் அவரிடமும், அவளுடைய அம்மாவிடமும், வெளிநாட்டில் இருக்கும் அவளுடைய தம்பியிடமும் பேசிக்கொண்டுதான் இருந்தாள். ஆனால், கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாகவே அவள் தானாகத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவர்களாக அழைத்தாலும், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக்கொள்கிறாள்.


பரீட்சை சமயங்களில் சில நேரம் அதுபோல் நடப்பதுண்டு என்பதினால் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


இருந்தாலும் மகளை நேரில் வந்து பார்க்க வேண்டும் என அவர்கள் எண்ணியிருக்க, முகிலன் அழைத்து இப்படிச் சொல்லவும், அவளுடைய அம்மா வேறு பயந்த சுபாவம் என்பதினால், அவருக்குத் தெரிந்தால் கலவரம் ஆவார் என்ற காரணத்தினால், அவர் மட்டும் கிளம்பி வந்திருந்தார்.


அனைத்தையும் முகிலனிடம் சொல்லி முடித்தவர், "அவ ரொம்ப போல்ட் ஆன பொண்ணு தம்பி. ரொம்ப டிசிப்ளின்ட் கூட. அவ போய் இப்படி ட்ரக் அடிக்ட் ஆகி இருக்கான்னா, அவளை ஏதோ பெருசா பாதிச்சிருக்கு." என்றார் அவர்.


'ஒரு ஆக்சிடென்ட்டல் டெத், ஒரு மெச்யூர்ட் டாக்டரைக் கூட இப்படி பர்சனலா பாதிக்குமா?' என்று எண்ணினான் முகிலன்.


எப்படி இருந்தாலும் அவள் தன்னுடைய நிலா. அவளைச் சரி செய்ய வேண்டியது தன்னுடைய பொறுப்பு என எண்ணியவன், "உங்க மகளை, இன்னைக்கே சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம்னு நினைக்கறேன்! நீங்க என்ன சொல்றீங்க?" என அவன் கேட்கவும்,


"இல்ல தம்பி! நீங்க இந்த அளவுக்கு மெனக்கெட்டதே போதும்! நான் அவளை டெல்லிக்கே கூட்டிட்டுப் போறேன் தம்பி!" என அவர் சொல்ல,


"இல்ல! இல்ல! நானே பார்த்துக்கறேன்!" என முகிலன் அதிர்ந்துபோய் சொல்லவும், அவனை விசித்திரமாகப் பார்த்தார் சிவராமன்.


அதை உணர்ந்தவனாக, "இல்ல! நான் நேரடியாவே சொல்றேன்! நிலாவை எனக்குக் கொடுத்துடுங்க! அவளை நான் நல்லாவே பார்த்துப்பேன்! நாளைக்கே எங்க அம்மா அப்பாவை வந்து பேச சொல்றேன்! நான் சென்ட்ரல் கவர்மென்ட்ல உங்களை விட ஹயர் ரேங்க்ல வேலை செய்யறேன். ஸோ, கவலை படாதீங்க." என்றான் முகிலன் அங்கு வந்து நின்ற நிலாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே! அவன் சொன்னவற்றைக் கேட்டதும் அவளுடைய முகத்தில் தோன்றிய கலவையான உணர்வுகளைப் படிக்க முயன்றுகொண்டே!0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page