top of page

Anbenum Idhazhkal Malarattume! 11

Updated: Apr 1, 2023

அணிமா 11


முந்தைய தின உரசல்களுக்குப் பிறகு கோபத்துடன் சென்றிருந்தாலும் அணிமா மலருடைய நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணிக்குமாறு தமிழை அனுப்பியிருந்தான் ஈஸ்வர்.


‘அதெல்லாம் முடியாது’என்று முதலில் சுணங்கியவன் ஈஸ்வரின் முறைப்பில் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டான்.


அன்று காலை மாம்பலத்திலிருந்து அவளைப் பின் தொடர்ந்தவன் அவள் ஓ.எம்.ஆர். அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அந்த இடத்திற்கு அருகில் பைக்கை நிறுத்தி விட்டு அங்கேயே நின்றிருந்தான், மனதிற்குள்ளேயே மலரை வறுத்து எடுத்தவாறே.


அவள் மதியமே தனியாக வந்து அந்தக் கால் டேக்ஸியில் ஏறியவுடன் அவசரமாக ஈஸ்வரிடம் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான் தமிழ்.


அதுவும் மலர் அந்த இரண்டாம் தர கடற்கரை விடுதியினுள் நுழைந்தவுடன் மிகவும் கடுப்பானவன், அதையும் ஈஸ்வரிடம் சொல்லிவிட்டான்.


ஆனாலும் கூட ஈஸ்வரால் மலரைத் தவறாக எண்ணவே முடியவில்லை. ஏதோ காரணத்தினால் யாருடைய மிரட்டலுக்கோ பயந்துதான் அவள் அங்கே சென்றிருப்பாள் என்பதை மனதார நம்பியவன் படப் பிடிப்பிலிருந்து பாதியிலேயே கிளம்பி அங்கே வந்தான்.


உள்ளே செல்ல அருவருத்து அந்த விடுதியின் அருகிலேயே ஈஸ்வர் வரும் வரை காத்திருந்த தமிழ், அவன் அங்கே வந்தவுடன், "அண்ணா! எனக்கு என்னவோ நீங்க இங்கல்லாம் நுழையறது சரியா படல. உள்ள போகாதீங்க" என்று ஈஸ்வரைத் தடுக்கவும்,


தமிழ் பேசிய எதையும் காதில் வாங்காமல், "ப்ச் ஷூட்டிங்ல பாதில வந்துட்டேன். நீ உடனே போய் பிரச்சன ஆகாம டீல் பண்ணிக்கோ. நான் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன்" என்று அவனை வற்புறுத்தி அங்கிருந்து அனுப்பிவிட்டு அந்த விடுதிக்குள் சென்றான் ஈஸ்வர்.


சரியாக அவன் உள்ளே நுழைய, அந்தப் பெண்கள் இருவரும் மலரை அந்த அறையை நோக்கி இழுத்துச் செல்வதைப் பார்த்தவன், அவர்களைத் தொடர அதற்குள் அவர்கள் மலரை உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டினர்.


அவர்களை நோக்கி அவன் வேகமாக வருவதைக் கவனித்த அந்தப் பெண்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.


அந்த அறையினுள் யாராவது இருப்பார்களோ என்ற எண்ணம் தாக்க அந்த பெண்களைத் துரத்துவதைக் காட்டிலும் மலரைக் காப்பாற்றுவதே முக்கியம் எனக் கருதியவன் அந்த அறையை நோக்கிச் சென்றான்.


அந்த அறை பூட்டப் படவில்லை ஆனால் வெளிப்புறமாகத் தாளிடப்பட்டிருந்து.


கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவன் அங்கே இருந்த சோஃபாவில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மலரை அவளது கையைப் பற்றித் தூக்க முயல, முதலில் அவன் யாரோ ஒருவன் என்ற எண்ணத்தில் அவளது பெண்மை விழித்துக்கொள்ள, தற்காப்பு உணர்ச்சியில் அவனது கையை இறுக்கப் பற்றினாள்.


"மலர்! நான்தான் மா! ஹகூனா மடாட்டா" என்று ஆதரவாக ஒலித்த அவனது குரல் தந்த நிம்மதியில் அடுத்த நொடியே அவளது கைகள் மெதுவாகத் தளர்ந்தன.


மனதினில் பரவிய நிம்மதியுடன் அவளது இடையில் கையைக் கொடுத்து ஈஸ்வர் அவளைத் தூக்க எத்தனிக்க, உடல் விறைக்க அவனைத் தடுத்தவள் குளறலாக, "இட்ஸ் ஓகே மெதுவா நானே வரேன் ப்ளீஸ்!" என்றவாறு மிகவும் முயன்று மலர் எழுந்து நிற்க,


"இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இப்படி தனியா வந்தது உனக்குத் தப்பா தெரியல. இப்படி வந்து மாட்டிகிட்டது பயமா இல்ல. ஆனால் நான் உனக்கு உதவி செய்ய வந்தா, அது உனக்கு அன் கம்ஃபர்ட்டபிளா இருக்கு இல்ல" கோபத்துடன் சொல்லிக்கொண்டே அவளுடைய கையை ஈஸ்வர் பிடிக்க, அவசரமாக அவனிடமிருந்து கையை உருவி துப்பட்டாவினால் மூடிக்கொண்டாள் மலர். கோபம் மறைந்து சிரிப்பே வந்துவிட்டது ஈஸ்வருக்கு.


‘நீ எதை மறைக்க நினைக்கிறயோ அது எனக்கு ஏற்கனவே தெரிஞ்சு போச்சு போடி!’ என்று நினைத்தவன் அந்த நிலையிலும் விழிப்புடன் செயல்படும் அவளது அறிவைக் கண்டு மனதிற்குள் அவளை மெச்சிக் கொண்டான்.


பின்பு அவளைக் கைத் தாங்கலாக அழைத்து வந்து அவனது காரில் உட்கார வைத்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அந்த இடம் முழுதும் வெறிச்சோடிக் கிடந்தது.


இது போன்ற நிலை அங்கே சகஜம் என்பதாலோ இல்லை ஈஸ்வரைக் கண்டுகொண்டதாலோ, அங்கே இருந்த காவலாளி அவனைத் தடுக்க முற்படவில்லை. மாறாக, அவனது அத்தனை பற்களையும் காட்டி ஈயென இளித்து வைத்தான்.


அதுபோன்ற மட்டரகமான இடத்திற்கு வந்ததற்காக மலரை மனதிற்குள்ளேயே கடிந்தவாறு வண்டியைக் கிளப்பிக்கொண்டு முக்கிய சாலையை நோக்கி ஓட்டி வந்தவன் 'இந்த நிலையில் அவளை எங்கே அழைத்துச் செல்வது' என்று குழம்பியவனாக, பின்பு ஒரு முடிவிற்கு வந்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கைப்பேசியில் ஜெய்யை அழைத்தான்.


எதிர்புறம் அவன் அழைப்பை ஏற்றதும், "ஜெய் உன்னால ஈ.ஸீ.ஆர். வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா. ஒரு முக்கியமான விஷயம். இப்ப எதுவும் கேட்காத, நேர்ல சொல்றேன்" என்று அவன் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டு ஈஸ்வர் சொல்ல ஜெய் வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.


அடுத்த அரை மணிநேரத்திற்குள்ளாகவே அங்கே வந்து சேர்ந்த ஜெய் பைக்கை ஓடமாக நிறுத்திவிட்டு வந்தான்.


அதற்குள்ளே முழுவதுமாக மயக்க நிலைக்குச் சென்றிருந்த மலரை, கார் இருக்கையை நன்றாக சாய்த்து, வாகாக அவளது துப்பட்டாவைப் போர்த்தி, படுக்க வைத்திருந்தான் ஈஸ்வர்.


அவனைக் கண்டு காரிலிருந்து ஈஸ்வர் இறங்கி வர, நெருங்கி வந்து உள்ளே மலரைப் பார்த்த நொடி உடலதிர்ந்து போனான் ஜெய். 'இந்த இடத்தில் அதுவும் இப்படி ஒரு நிலையில் இவனுடன் மலர் எப்படி?' எனஅவன் ஈஸ்வரை ஆராய்ச்சியுடன் பார்த்து வைக்க, காரின் உள்ளே வந்து அமருமாறு ஜெய்க்கு ஜாடைக் காட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தவன் இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தான், ஜீவிதா சொன்ன தகவல்கள் உட்பட.


அதுவரை அவன் சொன்னவற்றை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த ஜெய், "கிட்ட தட்ட ஒரு மாசமா நானும் ரொம்பவே பிசி. இவளைக் கொஞ்சம் கவனிச்சு இருக்கணும். தாத்தா பாட்டி கூட என்கிட்ட ஒண்ணுமே சொல்லல. ப்ச்... அவங்களைச் சொல்லியும் பயன் இல்ல! ஏன்னா நான் வீட்டுல இருக்கற நேரம் ரொம்ப குறைஞ்சு போச்சு. இன் ஃபேக்ட் நான் வீட்டுக்குப் போயே மூணு நாள் ஆச்சுண்ணா. நிறைய கேஸஸ் கவனிக்க வேண்டியதா இருக்கு. கொலை கேஸ், குழந்தைங்க கடத்தல் கேஸ்னு எல்லாமே இழுத்துட்டே போகுது. அந்தக் குழந்தைங்களோட அப்பா அம்மாவைப் பார்க்கவே பரிதாபமா இருக்கு! இதுல இவ வேற புரியாம படுத்தி எடுக்கறா”என்று அவனது ஆதங்கம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான்.


“பரவாயில்லை விடு ஜெய். அதுதான் ஆபத்துல இருந்து இப்போதைக்கு இவளைக் காப்பாத்திட்டோமே. இனிமேல என்ன செய்யலாம்னு யோசிப்போம்" என்ற ஈஸ்வர், “இப்போதைக்கு இவள எங்க அழைச்சிட்டுப் போகலாம்? இந்த நிலைமைல் வீட்டுக்குப் போனா, எல்லாரும் கேட்கற கேள்விக்கெல்லாம் எப்படி பதில் சொல்றது? அதனாலதான் உன்னைக் கூப்பிட்டேன்" என்று முடித்தான்.


“நீங்க சொல்றதும் சரிதான் அண்ணா" என்று கைப்பேசியால் நெற்றியில் தட்டிக்கொண்டே சில நொடிகள் யோசித்தவன், "பேசாம மாமி வீட்டுக்கே இவளை அழைச்சிட்டுப் போகலாம். ஏன்னா அவங்கதான் நிலைமையைப் புரிஞ்சுப்பாங்க. எங்க வீட்டுக்கோ இல்ல அத்தை வீட்டுக்கோ போனா அம்மா, அத்தை, பாட்டி மூணு பேரும் ஊரையே கூட்டிருவாங்க" என்ற ஜெய், "மாமி இருக்கற பிளாட்லயே ஒரு டாக்டர் இருக்காங்க. அவங்க்கிட்டயே இவளை ஒரு செக்கப் செஞ்சுடலாம்" என்று முடித்தான்.


உடனே தனது கைப்பேசியில் மாமியை அழைத்த ஜெய் மலருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவளை அங்கே அழைத்து வருவதாகவும் சொன்னான். ஜெய் பைக்கில் வர ஈஸ்வர் மலருடன் மாம்பலம் வந்து சேர்ந்தான்.


மாமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாயில் புறம் இருக்கும் நடை மேடை அருகில் ஜெய் பைக்கை நிறுத்த அவனைப் பின் தொடர்ந்து வந்த ஈஸ்வரும் அவனது காரை அவனுக்கு அருகில் நிறுத்தினான்.


பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்களெல்லாம் ஒவ்வொருவராக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். எதிர் புறம் இருக்கும் தேநீர் விடுதியில் ஓரிருவர் மட்டுமே நின்றுகொண்டிருந்தனர்.


அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெய், ஆள் அரவம் குறைவாக இருக்கும் சமயம் பார்த்து ஜாடை செய்ய, ஈஸ்வர் அந்தப் பகுதியின் வாயிலை மறைத்தவண்ணம் வண்டியை நிறுத்தினான்.


காரின் கதவைத் திறந்து மலரைத் தனது கைகளில் தூக்கிக்கொண்ட ஜெய் ஈஸ்வரைப் பார்க்க, "பரவாயில்லை ஜெய் நான் இங்க இறங்கினா அது சீன் கிரியேட் பண்ணற மாதிரி ஆயிடும். நீ இவளைப் பத்திரமா மாமி வீட்டுல விட்டுடு" என்றவாறு அணிமாமலரைப் பார்த்தான் ஈஸ்வர்.


அந்த நொடி அவனது கண்களில் தெரிந்த வலி ஜெய்யின் பார்வையில் தப்பாமல் பதிந்தது. அதையும் மனதில் குறித்துக்கொண்டே மலரைத் தன் கைகளில் சுமந்தபடி உள்ளே சென்றான் ஜெய்.


சில நிமிடங்கள் பொறுத்து தனது காரைக் கிளப்பிச் சென்றான் ஈஸ்வர்.


வீட்டின் உள்ளே ஜெய் மலருடன் நுழையவும் "ஐயோ இவளுக்கு என்ன ஆச்சு" என்று பதறினார் மாமி.


"சுசீ உள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா ஏண்டி இப்படி பதர்றே? போய் தீர்த்தம் எடுத்துண்டு வா. பொறுமையா எல்லாத்தையும் விஜாரிச்சுக்கலாம்" என்று அவரை அடக்கினார் கோபாலன் மாமா.


உடனே ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தார் சுசீலா மாமி. அதற்குள் அங்கே போடப்பட்டிருந்த திவானில் ஜெய் மலரைப் படுக்க வைத்திருந்தான்.


தண்ணீரை வாங்கி மாமா மலரின் முகத்தில் தெளிக்க, அவளிடம் லேசான அசைவு தெரிந்தது. ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை அவள்.


"ஏண்டாப்பா இவளுக்கு என்ன ஆச்சு?" என்று மாமா கவலையாய் கேட்க,


"ஒண்ணுமில்ல மாமா வீக்னஸ் போல இருக்கு. ஆஃபிஸ்ல மயங்கி விழுந்துட்டா. லாவண்யா தெரியும் இல்ல அவதான் எனக்கு ஃபோன் செஞ்சா. எங்க வீட்டுக்குப் போனா தேவை இல்லாம பதறுவாங்க, அதனாலதான் இங்க அழைச்சிட்டு வந்தேன்" என்று கோர்வையாக அவர்கள் நம்புவதுபோல் சொல்லி முடித்தான் ஜெய்.


"கடங்காரி ஏதாவது சொன்னா கேக்கறாளா. அவ ஒழுங்கா தூங்கி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. தான் பிரச்சனையே தலைக்கு மேல இருக்கறப்ப ஊர் பிரச்சனையெல்லாம் இழுத்து விட்டுண்டு இருக்கா" என்று அங்கலாய்ப்புடன் சொன்னார் மாமி.


நெற்றியைச் சுருக்கி ஜெய் அவரைப் பார்க்கவும் மாமியை நோக்கி வேண்டாம் என்பதுபோல் ஜாடை செய்தார் மாமா.


பின், அந்தக் குடியிருப்பிலேயே இருக்கும் பெண் மருத்துவரிடம் நேரில் சென்று மலரின் உண்மை நிலையை விளக்கி அவரை அங்கே அழைத்து வந்தான் ஜெய்.


அவளைப் பரிசோதித்த அந்த மருத்துவர், பயப்படும் விதமாக ஒன்றும் இல்லை என்றும் சில மணிநேரங்களில் தானாகவே சரியாகிவிடும் என்றும் அவள் கண் விழித்தவுடன் எளிய உணவாகக் கொடுக்குமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்.


மலரைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவளது நிலையை வாட்ஸாப் செய்தியாக ஈஸ்வருக்குத் தெரியப்படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஜெய்.


***


அடுத்த நாள் மதியம் மலரைக் காண அங்கே வந்திருந்தான் ஜெய். அவன் உள்ளே நுழையும் நேரம், மாமி வீட்டு வரவேற்பறையில் சில வாண்டுகள் சூழ மடியில் ஒரு பெண் குழந்தையை இருத்திக் கொண்டு கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள் மலர்.


அவள் அங்கே போடப்பட்டிருந்த திவான் அருகில், அதில் கையை ஊன்றியவாறு உட்கார்ந்திருக்க, அந்தத் திவானில் ஒரு சிறுவன் மலருடைய துப்பட்டாவைப் பிடித்துக்கொண்டு, அவனது வாயில் கட்டைவிரலை வைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்தக் குழந்தைகளைப் பார்த்து அப்படியே நின்றான் ஜெய்.


அவன் போலீஸ் உடையிலேயே அங்கே வந்திருக்கவும் அவனைப் பார்த்து மிரண்டன குழந்தைகள். பிறகுதான் அவன் அங்கே வந்ததையே கவனித்தாள் மலர்.


மெல்லிய குரலில், "நம்ம அங்கிள்தான் குட்டீஸ், பயப்படாதீங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தவள், மேலே போய் பேசலாம் என்று அவனுக்கு ஜாடை செய்ய, மொட்டை மாடிக்கு வந்தனர் இருவரும்.


நிழலாக இருக்கும் இடத்தில் போய் நின்றுகொண்டு, "உன்னோட என்கொயரியை ஸ்டார்ட் பண்ணு ஜெய்" என்று மலர் அழுத்தமாகச் சொல்ல,


"ரொம்ப திமிறுதான்டி உனக்கு" என்று கோபத்துடன் பற்களைக் கடித்தவன், "எதுக்குடி அந்தக் கேவலமாக இடத்துக்குப் போன?" என்று ஆவேசமாகக் கேட்க, "அதை என்னால இப்ப சொல்ல முடியாது ஜெய், தயவு செஞ்சு புரிஞ்சிக்கோ" என்று சொல்லவும், "என்னத்த புரிஞ்சுக்கணும்? உன்னை நானே அரெஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை கிரியேட் ஆகியிருக்குன்னு உனக்குத் தெரியுமா?" என ஜெய் கேட்க, அதிர்ந்தாள் மலர்.


“நான் என்ன தப்பு பண்ணேன் ஜெய்? இன்ஃபேக்ட் நானே அங்கே நடந்ததைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணனும்னு இருக்கேன்" என்று மலர் சொல்லவும், "கிழிச்ச, நீ அங்கே போய் எவ்வளவு பிரச்சனையை இழுத்துட்டு வந்திருக்க தெரியுமா? உன்னை அந்த ரூம்ல அடைச்சாங்களே அந்த பொம்பளைங்க, அவங்க ரெண்டு பேரையும் யாரோ கொன்னு எரிச்சிருக்காங்க. அது தெரியுமா?” என்று ஆவேசம் குறையாமல் சொன்னவன் தொடர்ந்து, "உன்னோட ஹேண்ட் பாக் எங்கடி?" என்று கேட்க அதிர்ந்தாள் மலர்.


உடனே கீழே சென்று சில நிமிடங்களில் அங்கே மறுபடியும் வந்த ஜெய், அவளது கைப்பையை அவளுக்கு அருகில் வீசிவிட்டு, "இது அந்த ரூம்லயே இருந்துது. அது என்னோட ஜூரிடிக்ஷன் கிடையாது. ஆனாலும் உனக்காக விசாரிக்க அங்கே போனேன். நேத்து நைட், அதாவது நான் இதை அங்க இருந்து எடுத்து வந்த பிறகு, அங்க அந்தக் கொலைகள் நடந்திருக்கு. எல்லாத்துக்கும் தயாரா இரு. இல்லனா என்கிட்ட நீ என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு உண்மையைச் சொல்லு" என்று அவன் மிரட்டலாகச் சொல்லி முடிக்க அவளது மௌனம் தொடரவும், "ச்சை!" என்று எரிந்து விழுந்துவிட்டு அங்கிருந்து சென்றான் ஜெய்


***


அடுத்து வந்த இரண்டு தினங்கள் அமைதியாய் கடக்க, இரவு நேரப் பணி முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மலர் அவளுடைய அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்.


உள்ளே வந்த சரோஜா பாட்டி, "கண்ணு, கொஞ்சம் முகம் கழுவிட்டுக் கீழே வாடா" என்று அவளை எழுப்பவும், "ரோசாம்மா ரொம்ப டயர்டா இருக்கு. ப்ளீஸ் கொஞ்ச நேரம் தூங்கறேன், உங்கப் பொண்ணுகிட்ட சொல்லுங்க" என்று கெஞ்சினாள்.


"கண்ணு, ஜீவிதா வீட்டுல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. முக்கியமா நீ வந்துதான் ஆகணும்" என்று பாட்டி சொல்லவும் மொத்த தூக்கமும் பறந்துவிட, “என்ன பாட்டி சொல்றீங்க, முக்கியமா நான் எதுக்கு வரணும்? என்ற மலரின் கேள்விக்கு, "நீயே கீழ வந்து தெரிஞ்சிக்கோ" என்று சொல்லிச் சென்றுவிட்டார் பாட்டி. அவரது முகம் அவ்வளவு கலவரமாகக் காட்சி அளித்தது.


தூக்கமின்றி சிவந்த விழிகளும் களைத்த முகமுமாக கீழே வந்த மலர் அதிர்ந்தாள். அங்கே அவளது குடும்பத்தினர், ஈஸ்வர் குடும்பத்தினர் என அனைவரும் குழுமியிருக்க, இறுகிய முகத்துடன் சோஃபாவில் சாய்ந்து தோரணையாக உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர்.


மலரை அவர்களது அறைக்குள் தனியாக இழுத்துச் சென்ற சூடாமணி, "கண்ணு ஈஸ்வருக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. தயவு செஞ்சு நீ எதுவும் சொல்லி கெடுத்துடாத. பார்த்துப் பேசு”என்று அவளைக் கெஞ்சிக் கொஞ்சி வெளியே அழைத்து வந்தார்.


ஜெகதீஸ்வரனின் பார்வை ஆராய்ச்சியுடன் அணிமா மலரைத் துளைத்துக் கொண்டிருந்து.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page