top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume! 9

Updated: Mar 31, 2023

அணிமா 9


தாய் மாமனாகப்போகும் செய்தி அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் ஈஸ்வர்.


அடுத்த நாள் காலையே, பழங்கள் இனிப்புகள் என்று அள்ளிக்கொண்டு அம்மா மற்றும் பாட்டியுடன் தங்கையின் வீட்டிற்கு அவளை நேரில் காணவென வந்துவிட்டான்.


வழக்கம் போல மலரின் தாத்தா பாட்டி அங்கேயிருக்க, அவளது அச்சுதன் மாமாவும் மாமியும் கூட வந்திருந்தனர், பிரபாவையும் ஜீவிதாவையும் வாழ்த்த.


சூடாமணி குதூகலத்துடன் அனைவரையும் உபசரித்துக்கொண்டிருந்தார்.


"ஏய் சரோஜா நாம ரெண்டு பேரும் கொள்ளுப் பாட்டி ஆகப்போறோமாடி?” என்ற செங்கமலம் பாட்டியின் குரலில் உற்சாகம் துள்ளிக் குதித்தது. "ஆமாக்கா ஆமாம்!" என்ற சரோஜா பாட்டியும் அதே நிலையில்தான் இருந்தார்.


தங்கை மற்றும் மருமகன் இருவருடமும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு வெங்கடேசனுடன் பேசிக்கொண்டிருந்தான் ஈஸ்வர். ஆனால் அவனது கண்களோ சுற்றிச் சுற்றி அங்கே மலரைத்தான் தேடிக்கொண்டிருந்தன.


அவளைப் பற்றி அங்கே எப்படி விசாரிப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அதற்கு அவசியமே இல்லாத வகையில், "என்ன சூடாம்மா மலரை இங்கக் காணும்?" என்று ஈஸ்வரின் பாட்டி கேள்வி எழுப்ப,


ஒரு நொடி சூடாமணியின் உற்சாக முகம் மாறிப்போனது. உடனே தன்னைச் சமாளித்துக்கொண்டு, "இல்ல பெரியம்மா, மலர் வேலைல இருந்து சீக்கிரம் ரிலீவ் ஆகப்போறால்ல, அதான் இராப்பகலா வேல செஞ்சிட்டு இருக்கா. இப்ப வர நேரம்தான்" என்றார்.


அடுத்த நாளே படப்பிடிப்பிற்காக வெளி நாடு செல்ல இருந்ததால் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைக் காரணமாகத்தான் ஒரு முறை தங்கையை நேரில் பார்த்துவிட்டு போகவேண்டும் எனக் காலை சீக்கிரமாகவே கிளம்பி அங்கே வந்திருந்தான் ஈஸ்வர்.


அம்மா மற்றும் பாட்டி இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பும் நேரம் சரியாகக் கை நிறைய பரிசுப்பொருட்களுடன் உள்ளே நுழைந்தாள் மலர்.


அனைவரிடமும் நலம் விசாரித்தவள், "கங்க்ராட்ஸ் அண்ணி, கங்கிராட்ஸ்ணா!" என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, வாங்கி வந்திருந்த பரிசுகளை ஜீவிதாவிடம் கொடுக்க, பதிலுக்கு ஒரு புன்னகை கூட இன்றி ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக்கொண்டாள் ஜீவிதா.


அதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் ஈஸ்வர்.


பிரபா எதையும் கண்டுகொள்ளாமல் அவள் கொடுத்தப் பரிசுகளைப் பிரிக்க, ஒரு பெட்டி நிறைய விதவிதமாக சாக்கலெட்கள் இருக்க அத்துடன் மகளிருக்கான பிரசவகால ஆலோசனைகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு போன்ற சில புத்தகங்களும், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய புடவை ஒன்றும் இருந்து.


"பார்றா! இங்க அண்ணனுக்கு ஒண்ணுமே இல்ல. எல்லாத்தையும் அண்ணிக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருக்கா" என்று பிரபா குறைப்பட,


"அண்ணா! நீ இப்படியேதான் இருப்ப. மசக்கை அது இதுன்னு ஜீவிதான் கஷ்ட படுவா. அதனாலதான் அவளுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்தேன், ஓகே வா?" என்று மலர் பதில் கொடுக்க, "ஓக்கே ஆஃபீசர்! ஆனா சாக்லெட்ல எனக்கும் ஒரு ஷேர் உண்டு" என்று அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டான் பிரபா.


சாக்லெட்கள் எல்லாமே ஜீவிதாவிற்கு மிகவும் பிடித்தமானதாகப் பார்த்து வாங்கி வந்திருந்தாள். புடவையின் நிறமும் அவளுக்கு விருப்பமானதே!


தங்கை இங்கே வாழ வந்த சில நாட்களிலேயே அவளது விருப்பங்களைப் புரிந்து வைத்திருக்கிறாள் மலர் என்பதை உணர்ந்த ஈஸ்வரின் பார்வையில் ஒரு மெச்சுதல் வந்திருந்தது. ஆனால் அதை அவள் யார் மூலம் அறிந்திருப்பாள் என அவனுக்குத் தெரிந்தால் எப்படி உணருவான் ஈஸ்வர்?


அவன் மனதில் நினைத்ததை ஈஸ்வரின் அம்மா சாருமதி வாய் விட்டே சொல்ல, சூடாமணி மகளைப் பெருமையுடன் பார்த்து வைத்தார். ஜீவிதாவுமே வியந்துதான் போனாள்.


ஈஸ்வர் வீட்டை விட்டு வெளியில் வரவும் அவனைப் பின்தொடர்ந்து வந்த மலர், "முதல் முதலா தாய் மாமாவாக ஆகப்போற செய்தி உங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு இல்ல" என்று புன்னகை முகமாய் கேட்கவும்,


"இருக்காதா பின்ன? உனக்கு மட்டும் அத்தையா ஆகப்போறதுல சந்தோசம்தான. நீ ஜீவிக்கு வாங்கிட்டு வந்திருக்கற கிஃப்டையெல்லாம் பார்க்கும்போதே தெரியுதே" என்று ஈஸ்வர் பதில் கொடுக்கவும்,


"ம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான். அதுவும் உங்களோட இந்த எக்ஸைட்மென்ட்ட பார்க்கும் போது என்னோட சந்தோஷம் இன்னும் அதிகமாகுது. உங்க மருமகனை நீங்க நேரில் பார்க்கும்போது எப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு பார்க்க இப்பவே வெயிட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா பார்த்துக்கோங்க!" என்று மலர் விழி விரித்துச் சொல்லவும் அவளது முகத்தையே சில நொடிகள் ரடனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன்,


'நான் யூரோப் போறதுக்கு முன்னாடி ஜீவியை மட்டும் இல்ல உன்னையும் ஒரு தடவ நேர்ல பார்க்கணும்னுதான் இங்க வந்ததே. நீ இப்படி பேசிட்டே இருந்தன்னு வை, என் வேலை எல்லாம் கெட்டுப் போயிடும். திரும்ப வந்த உடனே உன்மேல என் மனசுல வந்திருக்கிற விருப்பத்த நேரடியா உங்கிட்ட சொன்னாதான் சரியா வரும்!' என்று நினைக்க,


அவனுடைய பார்வையில் முகம் சிவந்து, இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என்பதுபோல் மலர் கேட்கவும், அவளது நாணச் சிவப்பு அவனிடம் சொன்ன செய்தியில் குதூகலமானவன், 'ஒன்றுமில்லை' என்பதுபோல் தோளைக் குலுக்கி, "நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் பை!" என்று மட்டும் சொல்லிவிட்டு காரைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.


அவன் சென்ற திசையையே கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர் விழிகள் நிறைந்த காதலுடன்.


***


அந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஒரு முறை விசாரணைக்காக ஜெய்யுடன் அவனது அலுவலகத்திற்குச் சென்று வந்தாள் மலர். மேற்கொண்டு அவளை அதில் இழுக்காமல் விசாரணையைக் கொண்டு சென்றான் ஜெய்.


மேலும் குழந்தைகள் காணாமல் போன வழக்குகளும் இழுத்துக்கொண்டே போக, ஜெய் மொத்தமாகப் பணியில் மூழ்கிவிட அதற்குப் பிறகு அவனால் மலரைச் சந்திக்க முடியாமல் போனது. இருவரும் எப்பொழுதாவது கைப்பேசியில் பேசுவதுடன் சரி.


***


இடையில் ஒரு நாள் மலர் வீட்டில் இருக்கும் சமயம் அவளை அழைத்திருந்த அவளுடைய அலுவலகத் தோழி லாவண்யா, "ஹேய்! உன்னோட ஹீரோ! அதான் அந்த வில்லன் ஜெகதீஸ்வர் ஒரு பாட்டுப் பாடியிருக்கான் யா. அது செம்மையா வைரல் ஆகியிருக்கு. உனக்கு வாட்ஸாப்ல அனுப்பறேன் பாரு!" என்று சொல்ல, "அப்படியா நான் இப்பவே பாக்கறேன், தாங்ஸ்!" என்ற மலர் தொடர்ந்து, "சொன்னதெல்லாம் ஓகே தான், ஆனா அது என்ன அவரை அவன் இவன்னு சொல்ற. பிச்சுடுவேன் பிச்சு!" என்று சொல்ல,


"ஓய் நீ எங்க ஹீரோவை தேவாங்குன்னு சொல்லுவ, அவன் இவன்னு திட்டுவ, நாங்க உன்னை ஏதாவது சொன்னோமா? நீ மட்டும் ஏன் இப்படி பொங்கற?" என்று லாவண்யா பதிலுக்குக் கேட்க,


"ஓய் அந்த தேவாங்கு சினிமாலதான் ஹீரோ, நிஜத்துல சரியான வில்லன். ஈஸ்வர் நிஜத்துலேயும் ஹீரோதான். அது இன்னுமா உனக்குப் புரியல? அதோட அவர் எங்க அண்ணியோட அண்ணன், அதனால... அவரை இப்படி மரியாதை இல்லாம பேசறத நீ நிறுத்திக்கோ! தேங் யூ ஃபார் ஷேரிங் திஸ் இன்பர்மேஷன்" என்று முடித்தாள் மலர் சிரித்துக்கொண்டே. விளையாட்டாக சொல்வதுபோல்தான் சொன்னாள், ஆனால் தோழிக்கான மறைமுக எச்சரிக்கையும் அதில் அடங்கித்தான் இருந்தது.


பின்பு வாட்ஸாப்பில் லாவண்யா அனுப்பியிருந்த லிங்க்கில் சென்று பார்க்க ஸ்வீதிகா என்ற நடிகை 'அஸ்டாநிஷ்ட் வித் த மெஸ்மரைசிங் வாய்ஸ் ஆஃப் டஃப் அண்ட் ஹாண்ட்சம் வில்லன் ஜீஷ்!!!’ என்று ட்வீட் செய்திருந்தாள். கூடவே அந்தக் காணொலி இணைக்கப்பட்டிருந்தது.


மலர் அதை ஓடவிட்டுப் பார்க்க, படப்பிடிப்பிற்காக அவர்கள் சென்றிருந்த செர்பியா நாட்டின் ஒரு வனப்பகுதியில் இரவு வேளையில் அந்தக் காணொலி பதிவு செய்யப்பட்டிருந்தது. நெருப்பு மூட்டிச் சுற்றிலும் அவர்கள் குழுவினர் சிலர் உட்கார்ந்திருக்க, ஈஸ்வருக்குப் பின்புறமாக நின்றுகொண்டு தமிழ் இல்லாத சேட்டைகளையும் செய்துகொண்டிருந்தான்.


புன்னகை முகமாக இரசனையுடன் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான் ஈஸ்வர்.


முழுமதி அவளது முகமாகும்!


மல்லிகை அவளது மணமாகும்!


மின்னல்கள் அவளது விழியாகும்!


மௌனங்கள் அவளது மொழியாகும்!


மார்கழி மாதத்துப் பனித்துளி அவளது குரலாகும்!


மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்!


அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்!


இதயம் கொடு என வரம் கேட்டேன்!


அது கொடுத்தாள்… உடனே எடுத்தே சென்றுவிட்டாள்!!!


அந்தக் காணொலி முழுவதுமாக முடியும் வரை பார்துக்கொண்டிருந்தவளின் மனதில், ‘நம்ம ஹீரோ அப்படி யாரை நினைச்சு இந்தப் பாட்டை இவ்ளோ ஃபீலிங்ஸோட பாடியிருப்பார்?’ என்ற கேள்வி எழ, யாரோ ஒருத்தியின் நினைவில் அவனது கண்களில் வழிந்த காதலைக் கண்டு ஏனோ அவளது மனதில் பாரமேறிப் போனது.


தலையைக் குலுக்கி தன் நினைவைப் புறம் தள்ளி அந்த லிங்க்கை அப்படியே வேறு எண்ணிற்கு ‘பார்வேர்ட்’செய்துவிட்டு, அவளது அறையில் இருந்து வெளியில் வந்தவள் பிரபாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்று அந்தக் காணொலியை ஜீவிதா மற்றும் பிரபா இருவரிடமும் காண்பித்தாள்.


அதை கண்டவுடன் மகிழ்ச்சியில் ஜீவிதாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட அவசரமாக அவளது அம்மாவின் கைப்பேசிக்கு அழைத்து அந்தச் செய்தியைச் சொன்னாள். அவளது குரல் மிகவும் தழுதழுப்பாக ஒலித்தது.


***


சரியாகப் படப்பிடிப்பிற்கென அவன் கிளம்பிச்சென்று ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னை திரும்பியிருந்தான் ஈஸ்வர். அவன் அங்கே வரும்பொழுது சில நாட்களுக்கெனப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள் ஜீவிதா.


குளித்து முடித்து ஈஸ்வர் சாப்பிட வரவும் மகனுக்காகவும் மகளுக்காகவும் வித விதமாக சமைத்துவைத்திருந்தார் சாருமதி. தங்கையிடம் அவளுடைய குடும்பத்தினரைப் பற்றி நலம் விசாரித்த ஈஸ்வர் பொதுவாகப் பேசிக்கொண்டே சாப்பிட, ஜீவிதாவின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும், "என்னம்மா இவ்ளோ டல்லா இருக்க ஏதாவது பிரச்சினையா? இல்ல உடம்பு சரியில்லையா?" என்று அக்கறையுடன் விசாரித்தான்.


அதற்குச் செங்கமலம் பாட்டி சிரித்துக்கொண்டே, "டேய் மாசமா இருக்கா இல்ல, அதனால இப்படி இருக்கா. நீ ரொம்ப அதிகமா எல்லாம் யோசிக்காத" என்று சொல்லவும் அதற்குள் சரியாகக்கூட சாப்பிடாமல் அங்கிருந்து சென்று தனது அறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவிதா.


சிறிது நேரம் சென்ற பின் கையில் பழச்சாறுடன் அவளைத் தேடி அவளது அறைக்குள் வந்தவன், "பாட்டி சொன்னதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்லு உங்க வீட்டுல உனக்கு என்ன பிரச்சன?" என்று ஈஸ்வர் கேட்க,


அவன் அப்படிக் கேட்பதற்காகவே காத்திருந்த ஜீவிதா தனது மனதில் இருப்பதையெல்லாம் அண்ணனிடம் கொட்டத் தொடங்கினாள்.


கிட்டத்தட்ட பிரபாவுடன் அவளது திருமணம் முடிந்து அவள் அங்கே சென்றது முதலே மலர் வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை.


அதுவும் அவளுடைய வேலையை விடுவது குறித்து முடிவெடுத்தப் பிறகு அதிக நேரம் அலுவலகத்திலேயே செலவு செய்யத் தொடங்கியிருந்தாள்.


மீதமுள்ள நேரமும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு மாம்பலத்தில் சுசீலா மாமி வீட்டிற்குச் சென்றுவிடுவாள். ஜீவிதவைப் பொறுத்தவரை அவள் அண்ணனை மணந்துகொண்டது மலருக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அவளுடைய மனதில் ஆழப் பதிந்துவிட்டது.


மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவுப்பணி என்று சென்றுவிடுவதும் பகலெல்லாம் மாமியின் வீட்டில் இருப்பதுமாக இருக்கிறாள் மலர்.


இதை எல்லாம் வெளிப்படையாகக் காண்பிக்கவில்லை என்றாலும் சூடாமணிக்கும் மனதளவில் பாதிப்பு இருக்கிறது. பிரபா மற்றும் வெங்கடேசன் இருவரும் மறைமுகமாகவும், சூடாமணி நேரடியாகவும் பேசிப் பார்த்தும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.


"ஜஸ்ட் ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல எல்லாம் பழைய படி மாறிடும், கவலைப்படாதீங்க!" என்பதுதான் அவளது ஒரே பதிலாக இருக்கிறது.


எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார்போன்று "முக்கியமான செலவு, என் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்துக்கறேன்" என்று வெறும் தகவலாகச் சொல்லிவிட்டு கிட்டத்தட்ட ஐந்து லட்சங்களுக்கு மேல் எடுத்து செலவு செய்திருக்கிறாள் மலர்.


சூடாமணி எவ்வளவு கேட்டும் சரியான பதிலோ கணக்கோ கிடைக்கவில்லை. மருத்துவரான பிரபாவின் நண்பன் ஒருவனுக்காக மலரைப் பெண் கேட்டிருந்தனர். திட்டவட்டமாகத் திருமணத்தை மறுத்துவிட்டாள் மலர்.


மேலும் வற்புறுத்தினால் தற்காலிகமாகத் திருமணம் வேண்டாம் என்று அவள் எடுத்திருக்கும் முடிவு நிரந்தரமாக மாறிவிடும் என்ற பயமுறுத்தல் வேறு.


தாத்தா பாட்டி இருவரும் அச்சுதன் வீட்டில் இருப்பதால் பேத்தி அடிக்கடி தங்களை வந்து பார்க்கவில்லை என்ற குறையைத் தாண்டி அவர்களுக்கு இந்தக் குளறுபடிகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.


வீட்டிலிருக்கும் சமயம் கூட தனிமையில் சென்று அடிக்கடி கைப்பேசியில் யாருடனோ பேசியவண்ணம் இருந்திருக்கிறாள் மலர்.


அவள் பேசும்பொழுது ஜீவன் என்ற பெயரை ஓரிரு முறை கேட்டிருக்கிறாள் ஜீவிதா.


ஒருமுறை மலர் கைப்பேசியை வரவேற்பறையில் வைத்துவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றுவிட, அது ஒலிக்கவும் அவளிடம் கொடுக்க எண்ணி அந்தக் கைப்பேசியை எதார்த்தமாக ஜீவிதா எடுக்கவும் அதில் 'பாய் ஃப்ரண்ட்" என்ற பெயர் ஒளிர்வதைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள்.


அதற்குள் அங்கே வந்த மலர் அதிர்ந்து போய் ஜீவிதாவின் கையிலிருந்து அதைப் பறிக்காத குறையாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.


இதை வீட்டில் யாரிடமும் சொல்லதி துணிவில்லாமல் அங்கே இருக்கவும் பிடிக்காமல்தான் ஜீவிதா பிறந்த வீடு வந்ததே.


இங்கே மலரைப் பற்றிய பேச்சைத் தொடங்கினாலே, "கல்யாணம் ஆகி வேறு வீட்டுக்குப் போக வேண்டிய பொண்ணு. அவளைப் பத்தி நீ எதுவும் பேசாதே" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார் செங்கமலம் பாட்டி. அண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள் ஜீவிதா!


"அண்ணா! எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. என்னோட ராசியே இப்படிதானா? ஏற்கனவே நம்ம வீட்டுல நாம பட்டதெல்லாம் போறாதா? இன்னும் அங்க வேற இதே கதையே தொடருதே! உங்க நிலைமை என் வீட்டுக்காருக்கும் வரவேண்டாம் அண்ணா, ஏதாவது செய்ங்கண்ணா ப்ளீஸ்!" என்று முடித்தாள் ஜீவிதா.


"நீ ஒண்ணும் கவலைபடாதம்மா. மலரைப் பத்தி உனக்கு சரியா தெரியல. அதான் கவலைப் பட்டுட்டு இருக்க. அவ ரொம்பவே தெளிவான பொண்ணு. எதுக்கும் நான் என்னன்னு பார்க்கறேன். நீ உன்னோட ஹெல்த்தையும் குழந்தையோட ஹெல்த்தையும் மட்டும் பார்த்துக்கோ ஓகே! இப்ப இந்த ஜுஸைக் குடித்து முடி" என்று சொல்லி அவளை அதைப் பருகவைத்துவிட்டே அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.


அவள் சொன்ன அனைத்தையும் கேட்டு அவன் மனம் சொல்லொணா வேதனையில் சிக்கித் தவித்தது. அதுவும் ஜீவிதா சொன்ன அந்த 'பாய் ஃப்ரண்ட்' யாராக இருக்கும் என்ற கேள்வி அவனைத் துளைத்தெடுத்தது.


நிச்சயம் அது ஜெய் இல்லை என்பதும் அவனுக்குத் திண்ணம். இதே யோசனைகளுடன் அறைக்கு வந்து உடனே மலரைக் கைப்பேசியில் அழைத்தான்.


"ஹாய் ஹீரோ! எப்ப வந்தீங்க? உங்க வீடியோ பார்த்தேன், சூப்பரா பாடியிருக்கீங்க!" என்று உற்சாகமாய் பேசிக்கொண்டே போனாள் மலர்.


தங்கை தொடுத்த குற்றச்சாட்டுகளுக்குக் கொஞ்சமும் பொருந்தாமல் இருக்கிறதே அவளது இந்தப் பேச்சு என்ற எண்ணத்தில் அவன் சில நொடிகள் அமைதியாக இருக்க, "ஹலோ ஹலோ! ஹீரோ லைன்ல இருக்கீங்களா?" என்று கூவத்தொடங்கினாள் மலர்.


"ம்.. நான் உங்கிட்ட முக்கியமா கொஞ்சம் பேசணும்!" என்று தன்னையும் மீறி ஈஸ்வர் கடுமையாகச் சொல்லிவிட, அதற்கு "ம்ம்... பேசலாமே! என்னனு சொல்லுங்க" என்றாள்.


"ஃபோன்ல இல்ல, நேர்ல பேசணும், அதுவும் இப்பவே" என்று ஈஸ்வர் கட்டளை போல சொல்லவும்,


"ஆஹான் என்னை யாராவது இப்படி மிரட்டினா என்னோட பதிலே வேற மாதிரி இருக்கும். நீங்க எங்க ஹீரோல்ல, அதனால நான் உங்களை விடறேன்" என்றவள்,


"எங்க மீட் பண்ணலாம்?" என்று இலகுவாகவே தொடற,


'அடங்கவே மாட்டாளா இவ?' என்று மனதில் எண்ணியபடி, "நீ இப்ப எங்க இருக்க?" என்று கேட்கவும், கொஞ்சமும் தயங்காமல் "மாம்பலத்துல" என்றாள்.


"ஷார்ப்பா ஆறுமணிக்கு பாண்டி பஜார்ல இருக்கற...” என பிரபல நட்சத்திர விடுதியின் பெயரைச் சொல்லிவிட்டு, “வந்துடு”என அழைப்பைத் துண்டித்தான்.


சொன்னது போலவே சரியாக ஆறு மணிக்கு அவன் அந்த விடுதிக்குள் நுழைய வரவேற்பு பகுதியில் உட்கார்ந்திருந்த மலர் அவனைக் கண்டு எழுந்து வந்தாள்.


ஒரே மாதத்திற்குள் உடல் இளைத்து, கொஞ்சம் கருத்துப்போய் தூக்கமின்மையாலோ என்னவோ கண்களில் கருவளையம் ஏற்பட்டு ஆளே அடையாளமே தெரியாத வண்ணம் மாறிப்போயிருந்தாள் அணிமாமலர்.


அவளை அந்தக் கோலத்தில் கண்ட ஜெகதீஸ்வரனின் உள்ளம் கொதித்துதான் போனது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page