top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume! 7

Updated: Mar 30, 2023

அணிமா 7


யோசனையில் ஆழ்ந்திருந்த மலரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கைப்பேசியின் அழைப்பைத் துண்டித்த ஈஸ்வர், "ஹை ஜெய்! எப்படி இருக்கீங்க!" என்று கேட்கவும்,


அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பாராததால் ஒரு நொடி திகைத்தவன், "நல்லா இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, "இந்த ..ங்க வை விட்டுடலாமேண்ணா!" என்றான் ஜெய்.


அவனை நோக்கிப் புன்னகைத்த ஈஸ்வர் "விட்டுடலாமே!" என்று, "என்ன க்ரே!" எனத் தொடங்கி, ஜெய் அங்கே இருப்பதை உணர்ந்து தயங்கி, “மலர் எப்படி இருக்க?" என்று முடிக்கவும்,


அது போன்ற தயக்கமெல்லாம் ஏதும் இன்றி இயல்பாக, "எனக்கு என்ன ஹீரோ! நான் சூப்பரா இருக்கேன். நீங்க எப்ப வந்தீங்க?" என்று மலர் ஈஸ்வரை நலம் விசாரிக்க,


"ஷூட்டிங் முடிஞ்சு, காங்கோலயிருந்து நேத்து சென்னை வந்தேன். உங்க வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் ஆகுது! ஃபோன் சிக்னல் கிடைக்காம மாடிக்கு வந்து ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஆகுது. நீ எதைப் பத்தி கேக்கற?" என அவன் விளக்கமாகப் பதில் சொல்லவும், "செம்ம கடி" என்றாள் மலர்.


ஜெய்யோ, "வாவ்! காங்கோ போயிருந்தீங்களாண்ணா! செம்ம!" என்று வியந்து "கீழ வாங்கண்ணா! அத்தை ஸ்பெஷலா ஏதாவது செஞ்சிருப்பாங்க, சாப்பிடலாம்!" என்று ஈஸ்வரை உபசரிக்கும் வண்ணம் சொல்லவும்,


"ஜெய்! நீ கீழ போ, நாங்க ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடறோம்!" என்று மலர் சொல்ல, ‘என்னை ஏன்டீ இப்ப கழட்டி விடற?’ என அவளை விளங்காமல் ஒரு பார்வை பார்த்த ஜெய் கண்களாலேயே. ‘நீ கீழே வா உன்னைக் கவனிச்சுக்கறேன்!’ என்ற செய்தியைச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.


பின்பு ஈஸ்வரை நோக்கி, "இந்த வாரத்துல, ஒருநாள் உங்களால எனக்காக நேரம் ஒதுக்க முடியுமா?" என்று மலர் கேட்க, புருவங்களை உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தவன், "வாட்! புரியல!" என வியப்புடன் சொல்லவும்,


"ஓ மை காட்! பெருசா ஒண்ணுமில்ல. என் ஆஃபிஸ்ல வேலை செய்யற சாஃப்ட்வேர் என்ஜினீர்ஸ் சில பேர் சேர்ந்து செங்கல்பட் தாண்டி, சில ஏக்கர் நிலம் வாங்கி, அதில் கூட்டு விவசாயம் செஞ்சிட்டு இருக்காங்க. அதுக்கு அக்ரோ கன்சல்டன்ட்ஸ் சிலர் ஹெல்ப் பண்றாங்க.


நீங்க ஒரு நாள் அங்கே விசிட் பண்ணிங்கன்னா கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாஸ்ல போடுவோம். இந்த விஷயம் மக்கள் மத்தில கொஞ்சம் பிரபலம் ஆகும் இல்லையா!? அதுக்காகதான் கேட்டேன்!" என்று மலர் விளக்கம் கொடுக்க,


யோசனையுடன் தனது தாடையைத் தேய்த்துக்கொண்டே, "ம்... வரலாம், பிரச்சனை இல்ல. பட் டேட்தான், ம்… நான் எதுக்கும் தமிழ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் ஓகேவா!" என்று சொல்லவும்,


மகிழ்ச்சியுடன், ‘ஹுர்ரே... ச்சோ ச்வீட்’எனக் குதித்தவளின் கரங்கள் அனிச்சையாக அவனது முகம் நோக்கி நீள, பட்டெனத் தன்னைக் கட்டுப்படுத்தியவாறு, "தாங்க்யூ ஹீரோ! தாங்க்யூ சோ மச்! நான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லிட்றேன்" என்று கூறிவிட்டு அவனுடன் பேசிக்கொண்டே கீழே வந்தாள்.


பின்பு பொதுவாக தங்கையிடமும் மற்ற அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சூடாமணியின் வற்புறுத்தலால், அங்கேயே உணவு உண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஈஸ்வர்.


அதுவரை ஜெய் மலரைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருக்க, அவன் அங்கிருந்து கிளம்பி வெளியில் வரவும், அவனுடனேயே தானும் வந்தவள் ஈஸ்வருடன் பேசியவற்றை அவனிடம் சொன்னாள்.


"இத நான் இருக்கும்போதே சொல்லியிருக்கலாமே?' என்ற ஜெய்யின் கேள்விக்கு, "சாரி ஜெய்! உனக்குத் தெரியக்கூடாதுன்னு இல்ல. நான் கேட்டு அவர் முடியாதுன்னு சொல்லியிருந்தா, நான் பல்...பு வாங்கறத நீ பார்க்க வேண்டாமேன்னுதான் உன்னை அங்கிருந்து அனுப்பினேன்" என்று மலர் கொஞ்சம் நீட்டி முழக்கிச் சொல்லவும்,


வாய் விட்டுச் சிரித்தவன், "போனால் போகுதுன்னு விடுறேன் போ!" என்று சொல்லிவிட்டு, "பை! எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு!" என்று அந்தக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு அவளை எச்சரித்துவிட்டு அங்கிருந்தது சென்றான் ஜெய்.


***


இரண்டு நாட்கள் சென்ற நிலையில் மலரை அவளது கைப்பேசியில் அழைத்த ஈஸ்வர், அடுத்த நாளே அவள் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு அவன் வருவதாகச் சொல்லவும், மகிழ்ச்சியுடனே அந்தச் செய்தியை அவளது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினாள்.


சொன்னது போலவே அடுத்த நாள் அவள் குறிப்பிட்ட புத்தாகரம் என்ற அந்தக் கிராமத்திற்கு வந்து இறங்கினான் ஈஸ்வர். ஏற்கனவே அவளது நண்பர்களுடன் அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தாள் மலர்.


ஈஸ்வர் அங்கே வந்ததும் அவனை வரவேற்று, ஆண்கள் பெண்கள் என அவளது நண்பர்கள் இருபத்தி ஐந்து பேர் மற்றும் இரண்டு விவசாய ஆலோசகர்கள், மேலும் அந்தப் பண்ணையில் வேலை செய்யும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் என அனைவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.


அதில் மலருடன் வேலை செய்யும் சஞ்சீவன் என்பவர், "ரொம்ப தேங்ஸ்ஜி! நீங்க எங்க மலரோட ரிலேட்டிவ்னு தெரியும். அதனால நாங்கதான் உங்களை இங்க அழைச்சிடடு வர முடியமான்னு கேட்டோம். நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு,


"உங்க நேரத்தை அதிகம் வேஸ்ட் பண்ண மாட்டோம். ஒரு சில ஃபோட்டோஸ்க்கு மட்டும் நீங்க போஸ் கொடுத்தா போதும். நீங்க இங்க வந்ததே எங்களுக்குப் பெரிய சப்போர்ட்" என்று சொல்லி முடிக்க,


"நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யறது உண்மையிலேயே ரொம்ப பெரிய நல்ல விஷயம். அதனாலதான் நான் உடனே வர சம்மதிச்சேன். அதுவும் இன்னைக்கு நாள் ஃபுல்லாவே மலருக்காகன்னு ஒதுக்கியிருக்கேன். ஸோ! நோ ஹர்ரி" என்று மலரைப் பார்த்துக்கொண்டே ஈஸ்வர் சொல்லவும், புன்னகையில் மலர்ந்தாள் மலர்.


அதன் பிறகு அந்த விவசாயப் பண்ணை முழுவதையும் அவர்கள் ஈஸ்வருக்குச் சுற்றிக் காண்பித்தனர். அங்கே வயல் வரப்போரங்களில் அதிக அளவில் பனைமரங்கள் வளர்ந்திருக்க, நெல், கரும்பு, வேர்க்கடலை, எள் எனப் பயிரிட்டிருந்தனர்.


அவர்கள் ஒவ்வொரு இடமாகச் செல்லச்செல்ல, ஏற்கனவே தயாரகயிருந்த தொழிற்முறைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் அனைத்தையும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.


அணிந்திருந்த ஜீன்ஸை மடக்கிவிட்டு விவசாய வேலைகளில் ஈடுபடுவது போன்று முதலில் புகைப்படத்திற்கு 'போஸ்' மட்டும் கொடுத்துக்கொண்டிருந்த ஈஸ்வர், நேரம் செல்லச்செல்ல முழுமையாக அதில் ஈடுபடத் தொடங்கியிருந்தான் அவனையும் அறியாமலேயே.


அவனது ஒவ்வொரு அசைவையும் மற்றவர்களைப் போலவே முதலில் ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தவள், நேரம் செல்லச் செல்ல, கண்களை வேறுபுறம் திருப்பாமல் அணு அணுவாக அவனை இரசிக்கவே தொடங்கியிருந்தாள் அணிமாமலர் அவளையும் அறியாமலயே.


தொடர்ந்து அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களுக்குச் சொந்தமான ட்ராக்ட்டரில் லாவகமாக ஏறி உட்கார்ந்த ஈஸ்வர் மலரையும் அதில் உட்காரச்சொல்லவும், கொஞ்சமும் தயங்காமல் மலர் அருகில் ஏறி உட்கார்ந்தவுடன் அனாயாசமாக அதைக் கிளப்பிக்கொண்டு, அந்தப் பண்ணையைச் சுற்றி உற்சாகத்துடன் அந்த ட்ராக்ட்டரைச் செலுத்தினான். அனைத்தையும் அந்தப் புகைப்பட கருவி உள்வாங்கிக்கொண்டிருந்து.


கூடவே தனது கைப்பேசியில் மலரும் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு, அந்தப் படங்களை உடனுக்குடன் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள்.


முன்னதாகவே திட்டமிட்டு மதிய உணவை அவர்கள் அங்கேயே ஏற்பாடு செய்திருக்க, அனைவருடனும் சேர்ந்து அங்கேயே வாழை இலைகளை அறுத்து, அங்கே இருக்கும் பம்ப் செட் குழாயில் அவற்றை சுத்தம் செய்து அவர்களுடன் உணவையும் உண்டு முடித்தான் ஈஸ்வர்.


எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஈஸ்வர் அதிக நேரம் அவர்களுடன் செலவு செய்வது, அதுவும் அத்தனை எளிமையாக அவன் அனைவருடனும் பழகுவது என அவனது செய்கைகள் அனைவருக்குமே ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.


ஒவ்வொரு நொடியும் அவன்பால் சரியும் தனது மனதின் நிலையை எண்ணி விடுபட முடியாத திகைப்பில் ஆழ்ந்து போயிருந்தாள் மலர்.


ஏனோ அந்த நேரம் "செம்பு கூட கலக்காத சுத்தத் தங்கம் எங்க ஈஸ்வர்" என்ற ஒரு பெண்ணின் குரல் அவள் செவிகளில் கேட்பதுபோல் தோன்றவும், அவளது உடல் ஒரு நொடி அதிர்ந்தது.


'தான் மிகப்பெரிய தவறு செய்கிறோமோ?' என்ற கேள்வி முதன் முதலாக அவளது மனதில் தோன்றி அடுத்த நொடியே மலைபோல வளந்து நின்றது.


அதற்குள் ஈஸ்வருடைய கைப்பேசி திரும்பத் திரும்ப ஒலிப்பதும் அவன் அதைப் புறக்கணிப்பதுமாக இருக்க, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி அழைப்பை ஏற்று, அங்கிருந்து தனியே சென்றான்.


கிட்டத்தட்ட இருப்பது நிமிடங்கள் கழித்தே அங்கே திரும்ப வந்தவனின் முகமும் கண்களும் ஜிவு ஜிவு என்று சிவந்துபோயிருந்தது. அதன்பின் முன்பு இருந்த உற்சாகம் கொஞ்சமும் இன்றி அமைதியாக மாற்றிப்போனான் ஈஸ்வர்.


அது மற்றவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ மலருக்கு நன்றாகவே புரிந்தது. அவனது அந்த மாற்றமும் மலரின் மனதைப் பாதிக்கவே செய்தது.


அதுபற்றி அவள் ஈஸ்வரிடம் கேட்க எத்தனிக்கையில், அவளது கைப்பேசி ஒலிக்கவும், அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவள், வியப்புடன், “சொல்லுங்க மாம்ஸ்!” என்றவாறு அங்கிருந்து தனியே சென்று பேசிவிட்டு வந்தாள்.


ஆனால் முன்பிருந்த குழப்ப நிலை மாறி அவள் மனம் கொஞ்சம் தெளிவாகி இருந்தது. பிறகு சிறிது நேரத்தில் மலரை அழைத்த ஈஸ்வர், "நீ இங்க வரும்போது எப்படி வந்த கிரேட்டல்!" என்று கேட்க,


"ம்ப்ச் நீங்க என்னை மறுபடியும் கிரேட்டல்னு கூப்பிட்டா நான் பதில் சொல்லவே மாட்டேன்" என்று மலர் சீறவும், லேசாக புன்னகை அரும்ப ஈஸ்வர் "ஓகே உனக்குப் பிடிக்கலன்னா அப்படி கூப்பிடல. இப்ப சொல்லு" எனக்கூற,


"ஃப்ரெண்ட்ஸ் கூட வேன்ல வந்தேன்" என்ற மலரின் பதிலில், "அப்படினா. நான் உன்னை வீட்டுல ட்ராப் பண்ணட்டுமா? எப்படியும் அந்த வழியாதான் போவேன். அங்க வந்தா ஜீவிதாவையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்றான் ஈஸ்வர் ஒருவித எதிர்பார்ப்புடன்.


அது நன்றாகவே புரியவும், மறுக்காமல் அவனுடன் செல்ல ஒப்புக்கொண்டாள் மலர். பின்பு அவளுடைய நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.


காரைச் செலுத்திக்கொண்டே, "ரொம்ப நாளைக்குப் பிறகு இன்னைக்குதான் மலர் நான் ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்! அதுக்கு நீதான் காரணம்! தேங்க்ஸ்!" என்றான் மனதிலிருந்து.


“எனக்குமே இன்னைக்கு எல்லாமே புதுசா இருக்கு!” என்ற மலர், மனதில் ஏதோ எண்ணம் தோன்ற தனது கைப்பையிலிருந்து பேனாவை எடுத்து, ஈஸ்வரிடம் நீட்டியவள், "எனக்கு உங்க ஆட்டோக்ராப் வேணுமே! அதுவும் இங்க" என்று அவளது கையை நீட்ட,


வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அவளது விரல்களைப் பிடித்துக்கொண்டே, வலது கை மணிக்கட்டின் அருகில் கையெழுத்திட்டவன், "பார்த்தியா! எப்படியும் கையை வாஷ் பண்ணும்போது என் ஆட்டோகிராப் காணாம போயிடும். அப்பறம் எதுக்கு உனக்கு இது?" என்று ஈஸ்வர் நக்கலாகக் கேட்க,


"அது… ஜீவன்னு ஒண்ணு இருக்கு. எப்பவுமே அது என்னைத் தொல்லை பண்ணிட்டே இருக்கும். அவனை வெறுப்பேத்ததான்”என்று சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டவள் பிறகு மனதில் ஏதோ யோசனையுடன் தன்னை மறந்து ஒரு பாடலை முணுமுணுக்க,


"ஹேய்! நீ நல்லா பாடுவ இல்ல. ஜீவி கல்யாண ரிசப்ஷன்ல நான் கேட்டிருக்கேன்!" என்று ஈஸ்வர் கேட்கவும், "ம் அது எங்க அண்ணா ரிஸப்ஷனும் கூட, ம்க்கும்" என நொடித்துகொண்டாள்.


"ஆமாம் தாயே! நானும் ஒத்துக்கறேன்" என்றவன், "நீ ஹம் பண்ண இல்ல, அந்தப் பாட்டை ரெண்டு லைன் பாடேன் கேட்கலாம்!" என்று அவன் விருப்பத்துடன் சொல்ல,


"ஆஹான்!” என்றவள் பிகு செய்யாமல் பாடவும் செய்தாள்.


மெல்லிசையே என் உயிர்த்தோடும் மெல்லிசையே!


மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே!


என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே!


கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன்!


சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்! கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்


எனது விழிகளை மூடி கொண்டேன்! சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்!


எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்! உறங்காமல் தவித்திருந்தேன்! விண்மீன்கள் எரித்திரிந்தேன்!


சில வரிகள் பாடியதும், ஏதோ நினைவு வந்தவளாக,


"நீங்க உண்மையாவே முழு திருப்தியோடதான் நடிகனா இருக்கீங்களா ஹீரோ?" என்று கேட்கவும், உணர்வற்ற குரலில், "தெரியல!" என்றவன், "ஆமாம் திடீர்னு ஏன் இந்தக் கேள்வியை கேக்கற?" என்று வினவ,


"ம் ஒண்ணுமில்ல! நான் ஸ்கூல் படிக்கும்போது என் கூட படிச்ச பொண்ணுங்கல்லாம் இந்த கம்ப்யூட்டர் படிப்பை ரொம்பவே தூக்கிப் பேசி, நானும் ஓடிப்போய் அதுல சேர்ந்தேன். ஆனா படிப்பு முடிச்சு வேலைலயும் சேர்ந்த பிறகு, ஏனோ எனக்கு அதுல மனசு ஒட்டல. இது உனக்கானது இல்லன்னு அடிக்கடி உள்ளுக்குள்ள தோணிட்டே இருந்தது. ஒரு ஸ்டேஜ்ல மூச்சு முட்ற மாதிரி தோணவே பேப்பர் போட்டுட்டேன். இன்னும் ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல எப்ப வேணா ரிலீவ் ஆயிடுவேன். மேற்கொண்டு எனக்குன்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்" என்றவள் தொடர்ந்து,


"அதுமாதிரி இந்த வில்லன் வேலையெல்லாம் விட்டுட்டு மக்கள் உங்களை ஒர்ஷிப் செய்யற மாதிரி, உங்களுக்கு முழு திருப்திக் கொடுக்கற வகைல உங்க லைனை நீங்க ஏன் மாத்திக்க கூடாது?" என்று மலர் கேட்கவும்,


சிரித்துக்கொண்டே, "என்ன? என்ன வில்லன்ல இருந்து ஹீரோவா மாற சொல்றியா?" என்று ஈஸ்வர் கேட்க, தோளைக் குலுக்கியவள், "அப்படியும் சொல்லலாம்!" என்று முடித்தாள்.


பின்பு நினைவு வந்தவனாக, "அந்தப் பாட்டை பாதியிலேயே நிறுத்திட்டியே. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நீ அதை கம்ப்ளீட் பண்ணலாமே" என்று அவன் சொல்லவும், "சாரி! எனக்கு மூட் மாறிப்போச்சு. இன்னொருநாள் பாடறேன். இப்ப விட்டுடுங்க ப்ளீஸ்!" என்றாள் மலர். அதற்குள் அவளது கைப்பேசியில் அழைப்பு வரவும் அதை ஏற்றவள், "நான் அப்புறம் பேசறேன் டார்லிங்!? கொஞ்சம் பிஸி ப்ளீஸ்!" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


அவளது டார்லிங் என்ற விளிப்பில், ஆராய்ச்சியுடன் ஈஸ்வர் அவளைப் பார்க்க, அவள் முகத்திலிருந்து அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் அவர்கள் வீடு வந்து சேர்ந்துவிட இருவரும் உள்ளே நுழைந்தனர்.


"வாங்க தம்பி! எப்படி இருக்கீங்க? உங்ககூடத்தான் வந்துட்டு இருக்குறதா மலர் சொன்னா" என்ற சூடாமணி, "ஜீவிம்மா உங்க அண்ணா வந்திருக்காரு பாரு" என்று மருமகளை அழைத்தார்.


ஜீவிதாவுடன் பேசிக்கொண்டே, தாத்தா பாட்டி இருக்கும் அறை நோக்கி ஈஸ்வர் செல்ல, அதே நேரம் அங்கே புயலென நுழைந்த ஜெய், "அத்தை உங்கப் பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் முக்கியமா பேசணும்" என்றவன் அவரது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மலரின் கையைப் பற்றி அவளை மாடியை நோக்கி இழுத்துக்கொண்டு செல்ல, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரின் முகம் கறுத்துப் போனது.


அவர்கள் வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் வரவேற்பறைக்குள் நுழைந்து ஜெய் அவளுடைய கையை விடவும், கோபமாக அவனை முறைத்துக்கொண்டே, "என்ன ஜெய்! இப்ப என்னை இப்படி இழுத்துட்டு வர அளவுக்கு என்ன அவசரம்" என்று கேட்க,


"ஏய் மறுபடியும் இன்னைக்கு அதே மாதிரி ஒரு கொலை அவுட்டர் ரிங் ரோட்ல நடந்திருக்கு. இந்தத் தடவை செத்துப்போனது ஒரு ஆளு. ஐம்பது வயசு இருக்கும். அவனோட ஒரு புது செல்ஃ போன் கிடைச்சிருக்கு. அதுல உன்னைப் பத்தின எல்லா டீட்டைல்சும் பக்கா பிடிஎஃப் காப்பியா இருக்கு. அந்த ஃபோன்ல வேற எந்த டேட்டாசும் இல்ல. ஏன் சிம் கார்ட் கூட இல்ல" என்றவன்,


கைப்பேசியில் அரைகுறையாக எரிந்துபோன அவனது உடலைக் காண்பித்து, "இவனை நீ எங்கயாவது பார்த்திருக்கியா?" என்று கேட்டான் ஜெய்.


அவனது தோரணையே சொல்லாமல் சொல்லியது அவன் அங்கே வந்திருப்பது ஒரு காவல்துறை அதிகாரியாக மட்டுமே என்று.

0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page